அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முருகு செறிகுழல் (திருவருணை)
திருவருணை முருகா!
நீ எனக்கு அருளிய மோன
ஞான உபதேசத்தையும்,
உனது திருவடிகளையும் ஒருபோதும்
மறவேன்.
தனன
தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
முருகு
செறிகுழல் சொருகிய விரகிகள்
முலைக ளளவிடு முகபட பகடிகள்
முதலு முயிர்களு மளவிடு களவியர் ...... முழுநீல
முழுகு
புழுககில் குழைவடி வழகியர்
முதிர வளர்கனி யதுகவ ரிதழியர்
முனைகொ ளயிலென விழியெறி கடைசிய ......
ரநுராகம்
மருவி
யமளியி னலமிடு கலவியர்
மனது திரவிய மளவள வளவியர்
வசன மொருநொடி நிலைமையில் கபடியர் ......
வழியேநான்
மருளு
மறிவின னடிமுடி யறிகிலன்
அருணை நகர்மிசை கருணையொ டருளிய
மவுன வசனமு மிருபெரு சரணமு ...... மறவேனே
கருதி
யிருபது கரமுடி யொருபது
கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது
கடிய வியனகர் புகவரு கனபதி ...... கனல்மூழ்கக்
கவச
அநுமனொ டெழுபது கவிவிழ
அணையி லலையெறி யெதிரமர் பொருதிடு
களரி தனிலொரு கணைவிடு மடலரி ...... மருகோனே
சருவு
மவுணர்கள் தளமொடு பெருவலி
யகல நிலைபெறு சயிலமு மிடிசெய்து
தரும னவர்பதி குடிவிடு பதனிசை ...... மயில்வீரா
தருண
மணியவை பலபல செருகிய
தலையள் துகிலிடை யழகிய குறமகள்
தனது தனமது பரிவொடு தழுவிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
முருகு
செறிகுழல் சொருகிய விரகிகள்,
முலைகள் அளவிடும் முகபட பகடிகள்,
முதலும் உயிர்களும் அளவிடு களவியர், ...... முழுநீல
முழுகு
புழுகு அகில் குழை வடிவு அழகியர்,
முதிர வளர்கனி அது கவர் இதழியர்,
முனைகொள் அயில்என விழிஎறி கடைசியர், ....அநுராகம்
மருவி,
அமளியில் நலம் இடு கலவியர்,
மனது திரவியம் அளவு அளவளவியர்,
வசனம் ஒருநொடி நிலைமையில் கபடியர் ......வழியே,நான்
மருளும்
அறிவினன், அடிமுடி அறிகிலன்,
அருணை நகர்மிசை கருணையொடு அருளிய
மவுன வசனமும், இருபெரு சரணமும் ...... மறவேனே.
கருதி
இருபது கரம், முடி ஒரு பது,
கனக மவுலி கொள் புரிசை செய் பழையது
கடிய வியன் நகர் புக அரு கன பதி ...... கனல்மூழ்க,
கவச
அநுமனொடு, எழுபது கவி விழ
அணையில் அலை எறி, எதிர் அமர் பொருதிடு,
களரி தனில் ஒரு கணைவிடும் அடல்அரி ......மருகோனே!
சருவும்
அவுணர்கள் தளமொடு, பெருவலி
அகல, நிலைபெறு சயிலமும் இடிசெய்து,
தரு மன் அவர் பதி குடிவிடு பதன் இசை ......மயில்வீரா!
தருண
மணி அவை பலபல செருகிய
தலையள், துகில்இடை அழகிய குறமகள்
தனது தனம் அது பரிவொடு தழுவிய ...... பெருமாளே.
பதவுரை
கருதி இருபது கரம்,
முடி ஒருபது கனக மவுலி கொள் புரிசை செய் --- இருபது
கரங்களும், பொன்முடி ஒரு பத்துத்
தலைகளும் உடைய இராவணன் ஆராய்ந்து அமைத்த
பழையது கடிய வியன் நகர் --- காவலுடன்
கூடியதும், அற்புதமானதும்,
புக அரு கன பதி கனல் மூழ்க –-- அயலார்
புகுவதற்கு அரியதும் ஆன இலங்கை நகரானது எரியில் முழுக,
கவச அநுமனொடு --- கவசம் போல்
விளங்கிய அனுமனுடன்
எழுபது கவி விழ அணையில் அலை எறி --- எழுபது
வெள்ளம் வாநரங்கள் மலைகளையிட்ட கடலில் அணைகட்டிச் சென்று
எதிர் அமர் பொருதிடு களரி தனில் ---
எதிர்த்துப் போர் செய்த போர்க்களத்தில்
ஒரு கணைவிடும் அடல் அரி மருகோனே --- ஒப்பற்ற
அம்பை விட்ட ஆற்றலுடைய திருமாலின் திருமருகரே!
சருவும் அவுணர்கள்
தளமொடு
--- போராடிய அவுணர்களின் படையுடன்
பெருவலி அகல --- அவர்களின் மிகுந்த
வலி அனைத்தும் அழிய,
நிலைபெறு சயிலமும் இடிசெய்து --- நிலை
பெற்று இருந்த கிரவுஞ்ச மலையை இடியுமாறு செய்து,
தரு மன் அவர்பதி குடிவிடு --- கற்பக
மரத்தின் கீழ் வாழ்ந்த தேவர்களை அவர்கள் ஊரில் குடியேறச் செய்த,
பதன் இசை மயில்வீரா --- அழகிய மயிலின்
மீது வரும் வீரமூர்த்தியே!
தருண மணி அவை பலபல
செருகிய தலையள் --- புதிய மணிகள் பலப்பல செருகி உள்ள தலையினை உடையவளும்,
துகிலிடை அழகிய குறமகள் தனது தனம் அது
--- இடையில் அழகாக ஆடை உடுத்தவளும் ஆகிய வள்ளி பிராட்டியின் கொங்கையை
பரிவொடு தழுவிய பெருமாளே --- அன்புடன்
தழுவிய பெருமையில் மிகுந்தவரே!
முருகு செறிகுழல் சொருகிய விரகிகள் --- நறுமணம் வீசும் கூந்தலைச் சொருகி முடித்துள்ள
தந்திரசாலிகள்,
முலைகள் அளவிடு முகபட பகடிகள் ---
முலைகளை அளவிட்டுக் காட்டும் மேலாடை தரித்துள்ள வெளிவேஷக்காரிகள்,
முதலும் உயிர்களும் அளவிடு களவியர் ----
தம்பால் வருபவருடைய மூலதனத்தையும்,
அவர்களது
தன்மைகளையும் அளந்திட வல்ல திருடிகள்,
முழுநீல முழுகு
புழுகு
--- நீலநிறம் நிரம்ப உடைய, புனுகு சட்டமும்
அகில் குழை வடிவு அழகியர் --- அகிலும்
நிரம்பப் பூசப்பட்டு மணம் கமழும் அழகிய உருவம் உடையவர்கள்,
முதிர வளர்கனி அது கவர் இதழியர் --- நன்கு பழுத்த கொவ்வைக் கனியின்
தன்மையைக் கவர்ந்துள்ள சிவந்த வாயிதழை உடையவர்கள்,
முனை கொள் அயில் என விழி எறி கடைசியர்
---- கூர்மையான வேல் போன்ற கண் பார்வையை
வீசும் இழிந்தோர்கள்,
அநுராகம் மருவி
அமளியில் நலம் இடு கலவியர் --- காம இன்பம் பொருந்தி படுக்கையில்
உடல் நலத்தைத் தரும் புணர்ச்சியாளர்கள்,
மனது திரவியம் அளவு அளவு அளவியர் --- தங்கள்
மனத்தைத் தாம் பெற்ற பொருளின் அளவில் அளந்து பார்க்கும் திருடிகள்,
வசனம் ஒரு நொடி நிலைமை இல் கபடியர் வழியே
--- பேசும் பேச்சில் ஒரு நொடிப் பொழுதில் வஞ்சனை செய்பவர்களாகிய பொது மாதர்களின்
வழியில்
நான் மருளும்
அறிவினன் ---
அடியேன் மயங்குகின்ற அறிவை உடையவன்,
அடிமுடி அறிகிலன் --- தலைகால்
தெரியாதவன்.
இத்தகைய அடியேனுக்கு
அருணை நகர்மிசை கருணையொடு அருளிய ---
திருவண்ணாமலையில் கருணையுடன் தேவரீர் அருள் புரிந்த
மவுன வசனமும் இருபெரு சரணமும் மறவேனே
--- மௌனஞான உபதேசத்தையும், பெருமை வாய்ந்த இரு
திருவடிகளையும் ஒரு போதும் மறக்கமாட்டேன்.
பொழிப்புரை
இருபது கரங்களும், பொன்முடி ஒரு பத்துத் தலைகளும் உடைய
இராவணன் ஆராய்ந்து அமைத்த காவலுடன் கூடியதும், அற்புதமானதும், அயலார் புகுவதற்கு அரியதும் ஆன இலங்கை
நகரானது எரியில் முழுக, கவசம் போல் விளங்கிய
அனுமனுடன் எழுபது வெள்ளம் வாநரங்கள் மலைகளையிட்ட கடலில் அணைகட்டிச் சென்று
எதிர்த்துப் போர் செய்த போர்க்களத்தில் ஒரு அம்பை விட்ட ஆற்றலுடைய திருமாலின்
திருமருகரே!
போராடிய அவுணர்களின் படையுடன் அவர்களின்
மிகுந்த வலி அனைத்தும் அழிய, நிலை பெற்று இருந்த
கிரவுஞ்ச மலையை இடியுமாறு செய்து,
கற்பக
மரத்தின் கீழ் வாழ்ந்த தேவர்களை அவர்கள் ஊரில் குடியேறச் செய்த, அழகிய மயிலின் மீது வரும்
வீரமூர்த்தியே!
புதிய மணிகள் பலப்பல செருகி உள்ள
தலையினை உடையவளும், இடையில் அழகாக ஆடை
உடுத்தவளும் ஆகிய வள்ளி பிராட்டியின் கொங்கையை அன்புடன் தழுவிய பெருமையில்
மிகுந்தவரே!
நறுமணம் வீசும் கூந்தலைச் சொருகி முடித்துள்ள
தந்திரசாலிகள், முலைகளை அளவிட்டுக்
காட்டும் மேலாடை தரித்துள்ள வெளிவேஷக்காரிகள், தம்பால் வருபவருடைய மூலதனத்தையும், அவர்களது தன்மைகளையும் அளந்திட வல்ல
திருடிகள், நீலநிறம் நிரம்ப உடைய, புனுகு சட்டமும் அகிலும் நிரம்பப்
பூசப்பட்டு மணம் கமழும் அழகிய உருவம் உடையவர்கள், நன்கு பழுத்த கொவ்வைக் கனியின்
தன்மையைக் கவர்ந்துள்ள சிவந்த வாயிதழை உடையவர்கள், கூர்மையான வேல் போன்ற கண் பார்வையை
வீசும் இழிந்தோர்கள், காம இன்பம் பொருந்தி
படுக்கையில் உடல் நலத்தைத் தரும் புணர்ச்சியாளர்கள், தங்கள் மனத்தைத் தாம் பெற்ற பொருளின்
அளவில் அளந்து பார்க்கும் திருடிகள், பேசும்
பேச்சில் ஒரு நொடிப் பொழுதில் வஞ்சனை செய்பவர்களாகிய பொது மாதர்களின் வழியில்
அடியேன் மயங்குகின்ற அறிவை உடையவன்,
தலைகால்
தெரியாதவன். இத்தகைய அடியேனுக்கு
திருவண்ணாமலையில் கருணையுடன் தேவரீர் அருள் புரிந்த மௌனஞான உபதேசத்தையும், பெருமை வாய்ந்த இரு திருவடிகளையும் ஒரு
போதும் மறக்கமாட்டேன்.
விரிவுரை
இத்
திருப்புகழில் ஒன்பது வரிகள் விலைமாதர்களின் சாகசங்களைப் பற்றிக் கூறுகின்றன.
மருளும்
அறிவினன்
---
மருள்
- மயக்கம். மாதருடைய ஆசையினால் அறிவு மயங்கும்.
நன்மை தீமையாகவும், தீமை நன்மையாகவும்
அறிவில் தோன்றும். மாதர் மயக்கு உற்றோருக்கு இரவு பகலாகும். பகல் இரவாகும்.
"பகல்
இரவு எனாது கலவிதனில் மூழ்கி வறிதாய கயவன்" என்பார், "விடமடைசு வேலை" எனத் தொடங்கும் திருப்புகழில்.
அடி
முடி அறிகிலன்
---
முதலும்
முடிவும் தெரியாதவன். ஆன்மா எப்படிப் பிறப்பெடுத்தது. எங்கே போய் முடிய வேண்டும்
என்ற இயல்பினை அறியாதவன். உலக வழக்கில் தலைகால் தெரியாமல் அலைகின்றான் என்பர்.
அருணை
நகர் மிசை கருணையொடு அருளிய மவுன வசனமும் இருபெரு சரணமும் மறவேனே ---
இது
அருணகிரிநாதருக்குத் திருவண்ணாமலையில் முருகன் குருநாதராக வெளிப்பட்டு
உபதேசித்தருளிய வரலாற்றைக் குறிக்கின்றது.
மவுன
வசனம் என்பது சும்மா இல் சொல்லற என்று இறைவன் உபதேசித்த மொழி.
சும்மாஇரு
சொல்லற என்றலுமே
அம்மா
பொருள்ஒன்றும் அறிந்திலனே --- கந்தர்
அநுபூதி.
இருபெரு
சரணம்
---
பெரு
சரணம் என்பதற்கு பெரிய திருவடி என்று பொருள் கொள்ளக் கூடாது. இறைவன் திருவடியை அருணகிரியார் சிற்றடி என்றே
குறிக்கின்றார்.
சிற்றடியும்
முற்றிய பன்னிரு தோளும் --- (பக்கரை)
திருப்புகழ்.
மணநாறு
சீறடியே --- சீர்பாத
வகுப்பு.
இறைவன்
தாரகனுக்கும் சூரபன்மனுக்கும் முன்னே காட்சி அளித்தபோது, தண்டை அணிந்த திருவடியுடன் தான் காட்சி
அறித்தார்.
ஆதலின், "பெரு சரணம்" என்ற
சொற்றொடருக்கு "பெருமை தங்கிய திருவடி" எனக் கொள்ளவும். கிரியாசத்தி, ஞானசத்தி என்ற இரண்டும் இறைவனுடைய
திருவடிகளாகும்.
புகவரு
கனபதி
---
புக
அரு கன பதி. இலங்கை பகைவரும் மற்றவரும்
புகுவதற்கு அரியது.
கறங்கு
கால்புகா கார்புகா கதிர்புகா மறலி
மறம்புகாது, இனி வானவர் புகார் என்கை வம்பே
திறம்பு
காலத்துள் யாவையும் சிதையினும் சிதையா
அறம்புகாது
இந்த அரண்மதிள் கிடக்கை நின்றகத்தின். ---
கம்பராமாயணம்.
கவச
அனுமனொடு எழுபது கவி ---
கவி
- குரங்கு. கவசம் - காப்பு. ரட்சை.
இராவணப்
போரில் இராம இலட்சுமணருக்கு அனுமார் கவசம் போல இருந்து காத்தனர். அனுமாருடைய போர்த் திறமும், அறிவாற்றலும் அளவிடற்கரியன.
தரு
மன் அவர் பதி குடிவிடு ---
தரு
மன் அவர் பதி. தரு - கற்பகத் தரு. மன் - நிலைபெற்ற, கற்பகத் தரு
நிலைபெற்ற தேவர்களின் உலகத்தில் அமரர்களைக் குடியேறச் செய்தருளினார் முருகர்.
அன்றி
தருமன் அவர் பதி எனக் கொண்டு அவுணர்களை தருமராஜனுடைய நரக லோகத்தில் குடியேற
விட்டருளினார் எனினும் பொருந்தும்.
தரு
மன் அவர் பதி என்பது ஒருமை பன்மை மயக்கம் எனக் கொள்ளவேண்டும்.
தேவர்களை
தேவருலகில் குடியேற்றினார் என்ற பொருளில், கீழ்வரும் பாடலில் வருவது காண்க.
இமையவர்
நாட்டினில் நிறைகுடி ஏற்றிய
எழுகரை
நாட்டவர் தம் பிரானே. --- (விரகற) திருப்புகழ்.
தருணமணி
அவை பலபல சொருகிய தலையள் துகிலிடை அழகிய குறமகள் ---
கானகத்தில்
யானையின் தந்தத்தில் விளைந்த முத்துக்களும் மூங்கிலில் விளைந்த முத்துக்களும், மேகத்திலிருந்த வரும் முத்துக்களும்
மலிந்து கிடப்பன. ஆதலின் வள்ளி
பிராட்டியார் தமது கூந்தலில் முத்தாரங்களை
நிரம்ப அணிந்திருக்கின்றார் என்றார்.
இடையில்
அழகிய உடை உடுத்திருக்கின்றார். இந்தக்
கருத்தை, "தூசா மணியும்
துகிலும் புனைவாள் நேசா முருகா" என்று அநுபூதியிலும் கூறுகின்றார்.
தனம்
அது பரிவொடு தழுவிய ---
வள்ளிபிராட்டி
இச்சா சத்தி. அவருடைய இரு தனங்கள் அபரஞானம், பரஞானம் என்பன. முருகன்
ஞானபண்டிதன். எனவே அபர பரஞானங்களை
அன்புடன் தழுவுகின்றார் என உணர்க.
இருதன
விநோதப் பெருமாளே --- (திருமகள்) திருப்புகழ்.
சுந்தர
ஞான மென் குறமாது
தன் திருமார்பில்
அணைவோனே --- (விந்ததின்) திருப்புகழ்.
அறிவும்
அறியாமையும் கடந்த
அறிவு
திருமேனி என்றுணர்ந்து உன்
அருண
சரணாரவிந்தம் என்று பெறுவேனோ. ---
(குகையில்)
திருப்புகழ்.
முருகப்
பெருமானை உபாசனை செய்வோர் ஞானம் பெறுவர்.
கருத்துரை
முருகா, உன் உபதேச மொழியையும், இரு சரண அரவிந்தங்களையும் ஒரு போதும்
மறவேன்.
No comments:
Post a Comment