கொடுப்பதைத் தடுப்பது பாவம்




இடுக்கினால் வறுமையாகி ஏற்றவர்க்கு, இசைந்த எல்லாம்
கொடுப்பதே மிகவும் நன்று; குற்றமே இன்றி வாழ்வார்;
தடுத்து அதை விலக்கினோர்க்குத் தக்கநோய் பிணிகள் ஆகி,
உடுக்கஓர் உடையும் இன்றி, உண்சோறும் அருமையாமே.

இதன் பொருள் ---

     வறுமையாகி இடுக்கினால் ஏற்றவர்க்கு --- வறுமை வந்து, அந்தத் துன்பம் காரணமாக இரந்து நிற்பவர்க்கு,

     இசைந்த எல்லாம் கொடுப்பதே மிகவும் நன்று ---  தன்னால் முடிந்த எதையும் கொடுப்பதே, இரந்தவருக்கும், கொடுத்தவருக்கும் மிகவும் நன்மையைத் தரும்.

     குற்றமே இன்றி வாழ்வார் --- அவ்வாறு கொடுத்தவர் யாதொரு குற்றம் குறையும் இல்லாமல் வாழ்வார்கள்.

     அதைத் தடுத்து --- ஒருவர் செய்யப் புகுந்த தருமத்தைத் தடை செய்து,

     விலக்கினோர்க்கு --- நீக்கியவருக்கு,

     தக்க நோய் பிணிகள் ஆகி --- அவரது பாவச் செயலுக்குத் தகுந்த மன வருத்தங்களும், உடல் நோய்களும் உண்டாகி,

     உடுக்கஓர் உடையும் இன்றி --- உடுத்துவதற்கு ஒர் உடை கூட இல்லாமல்,

     உண்சோறும் அருமையாமே --- உண்ணுவதற்குச் சோறும் கூடக் கிடைப்பதற்கு அருமை ஆகி விடும்.

     விளக்கம் --- வறுமை காரணமாக இல்லை என்று வந்து இரந்தோருக்கு, இல்லை என்று சொல்லாமல், தன்னால் முடிந்த உதவியைத் தனது செல்வ நிலைக்கு ஏற்பச் செய்வதே நல்லோருடைய இயல்பு. அந்த நல்லியல்பு காரணமாக அவர்கள் வாழ்வில் யாதொரு குற்றம் குறை நேராது.  தருமம் தலை காக்கும். உழில் இரக்கம் கொண்ட நல்லோர் பிறர் உதவுவதையும் தடுக்க மாட்டார்கள். தாமும் ஈயாது இருக்கும் கருமிகள், பிறர் செய்யும் அறத்தைத் தடுப்பார்கள். அப்படித் தடுப்பவர்களுக்கு மன வருத்தமும் உடல் நோயும் மிகும். உடுத்த உடை கிடைக்காது. உண்ண உணவும் கிடைப்பது அருமை ஆகிவிடும்.

திருவள்ளுவ நாயனார், ஒரு படி மேலே சென்று, கொடுப்பதைத் தடுத்தவன் அழிவதோடு அவனுடைய சுற்றமும் அழியும் என்றார்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம், உடுப்பதும்
உண்பதும் இன்றிக் கெடும்.

இச் செய்தியை, கம்ப நாட்டாழ்வார், வாமானாவதார வரலாற்றின் மூலம் கூறுமாறு காண்க.

மாவலி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான். அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான். திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்து, பொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர். மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.

அத் தருணத்தில், திருமால் வாமன அவதாரம் கொண்டு, முச்சிப்புல் முடிந்த முப்புரி நூலும், வேதம் நவின்ற நாவும் ஆக, சிறிய வடிவுடன் சென்றனர். வந்தவரை மாவலி எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்" என்று கேட்டான்.  வாமனர், "மாவலியே! உனது கொடைத் திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டு, செவியும் சிந்தையும் குளிர்வுற்றேன். மிக்க மகிழ்ச்சி உறுகின்றேன். உன்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை. என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.

அருகிலிருந்த அசுர குரு ஆகிய வெள்ளிபகவான் என்னும் சுக்கிராச்சாரியார், "மாவலியே! மாயவன் மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான். அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் வாமனன். ஆதலினால், இவன் ஏற்பதைத் தருவது நல்லது அல்ல" என்று தடுத்தனர்

மாவலி, "சுக்கிர பகவானே! உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்து, என் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது ஒன்று உண்டோ? கொள்ளுதல் தீது. கொடுப்பது நல்லது. இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கள் ஆகார். ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவராம். இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கண், மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்,
வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவரேனும்
ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே.

எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது நினக்கு அழகிதோ, தகைவுஇல் வெள்ளி,
கொடுப்பது விலக்கு கொடியோய், உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.

"கொடுப்பதைத் தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர். ஆதலின், யான் ஈந்து உவப்பேன்" என்று மாவலி வாமனரது கரத்தில் நீர் வார்த்து, "மூவடி மண் தந்தேன்" என்றான்.

உடனே வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல், அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம வடிவம் கொண்டார். மண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும், விண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும் அளந்தார். "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி. வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது.  அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும் பதமும் மாவலி பெற்றனன்.


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...