சிதம்பரம் - 0628. சந்திர ஓலை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சந்திர ஓலை (சிதம்பரம்)

                 சிதம்பர முருகா!  
விலைமாதர் கலவியின் முழுகினும் உன்னை மறவேன்.
  
தந்தன தானன தான தந்தன
     தந்தன தானன தான தந்தன
          தந்தன தானன தான தந்தன ...... தந்ததான


சந்திர வோலைகு லாவ கொங்கைகள்
     மந்தர மாலந னீர்த தும்பநல்
          சண்பக மாலைகு லாவி ளங்குழல் ...... மஞ்சுபோலத்

தண்கயல் வாளிக ணாரி ளம்பிறை
     விண்புரு வாரிதழ் கோவை யின்கனி
          தன்செய லார்நகை சோதி யின்கதிர் ...... சங்குமேவுங்

கந்தரர் தேமலு மார்ப ரம்பநல்
     சந்தன சேறுட னார்க வின்பெறு
          கஞ்சுக மாமிட றோதை கொஞ்சிய ...... ரம்பையாரைக்

கண்களி கூரவெ காசை கொண்டவர்
     பஞ்சணை மீதுகு லாவி னுந்திரு
          கண்களி ராறுமி ராறு திண்புய ...... முங்கொள்வேனே

இந்திர லோகமு ளாரி தம்பெற
     சந்திர சூரியர் தேர்ந டந்திட
          எண்கிரி சூரர்கு ழாமி றந்திட ...... கண்டவேலா

இந்திரை கேள்வர்பி தாம கன்கதி
     ரிந்துச டாதரன் வாச வன்தொழு
          தின்புற வேமனு நூல்வி ளம்பிய ...... கந்தவேளே

சிந்துர மால்குவ டார்த னஞ்சிறு
     பெண்கள்சி காமணி மோக வஞ்சியர்
          செந்தினை வாழ்வளி நாய கொண்குக ...... அன்பரோது

செந்தமிழ் ஞானத டாக மென்சிவ
     கங்கைய ளாவும காசி தம்பர
          திண்சபை மேவும னாச வுந்தர ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


சந்திர ஓலை குலாவ, கொங்கைகள்
     மந்தரம் ஆல, நல் நீர் ததும்ப, நல்
          சண்பக மாலை குலாவிளங்கு, குழல் ...... மஞ்சுபோல,

தண்கயல் வாளி கணார், இளம்பிறை
     விண் புருவார், தழ் கோவையின் கனி,
          தன்செயலார், நகை சோதியின் கதிர், ...... சங்குமேவும்

கந்தரர், தேமலு மார் பரம்ப, நல்
     சந்தன சேறுடன் ஆர் கவின் பெறு
          கஞ்சுகமா, மிடறு ஓதை கொஞ்சிய ...... ரம்பையாரைக்

கண்களி கூர, வெகு ஆசை கொண்டு, வர்
     பஞ்சணை மீது குலாவினும், திரு
          கண்கள் இராறும் இராறு திண்புய ......மும் கொள்வேனே.

இந்திர லோகம் உளார் இதம் பெற,
     சந்திர சூரியர் தேர் நடந்திட,
          எண்கிரி சூரர் குழாம் இறந்திட ...... கண்ட வேலா!

இந்திரை கேள்வர், பிதாமகன் கதிர்
     இந்து சடாதரன், வாசவன் தொழுது
          இன்புறவே மனு நூல் விளம்பிய ...... கந்த வேளே!

சிந்துர மால் குவடு ஆர் தனம், சிறு
     பெண்கள் சிகாமணி, மோக வஞ்சியர்,
          செந்தினை வாழ்வளி நாயக! ஒண்குக! ...... அன்பர் ஓது

செந்தமிழ் ஞான தடாகம் என்சிவ
     கங்கை அளாவும் மகா சிதம்பர
          திண்சபை மேவு மனா! சவுந்தர! ...... தம்பிரானே!


பதவுரை

      இந்திர லோகம் உளார் இதம் பெற --- இந்திர லோகத்தில் இருக்கும் தேவர்கள் இன்பம் பெறவும்,

     சந்திர சூரியர் தேர் நடந்திட --- சந்திர சூரியர்களுடைய தேர்கள் நன்கு உலாவி வரவும்,

     எண்கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா --- எட்டு மலைகளிலும் இருந்த அசுரர் கூட்டங்கள் இறந்து ஒழியக் கண்ட வேலவரே!

      இந்திரை கேள்வர் --- இலக்குமியின் கணவராகிய திருமாலும்

     பிதாமகன் --- பிரமதேவனும்,

     கதிர் இந்து சடாதரன் --- ஒளி வீசும் சந்திரனைச் சடையில் தரித்த சிவபெருமானும்,

     வாசவன் --- இந்திரனும்,

     தொழுது இன்புறவே --- தொழுது வழிபட்டு மகிழுமாறு,

     மனுநூல் விளம்பிய கந்தவேளே ---  அறம், பொருள் இன்பத்தை எடுத்து ஓதிய கந்தவேளே!

      சிந்துர(ம்) மால் குவடு ஆர் தனம் சிறுபெண்கள் சிகாமணி --- செங் குங்குமம் அணிந்து, பெரிய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட சிறு பெண்களுக்கு எல்லாம் முதன்மையானவளாய்,

     மோக வஞ்சியர் --- மோக உணர்வைத் தரும் வஞ்சிக் கொடி போன்றவளாய்,

     செம்தினை வாழ் வ(ள்)ளி நாயக --- செவ்விய தினைப் புனத்தில் வாழ்ந்த வள்ளிக்கு நாயகரே!

      ஒண் குக --- ஒளி மிக்க குக!

     அன்பர் ஓது செந்தமிழ் ஞான தடாகம் என் சிவகங்கை அளாவும் --- அன்பர்கள் ஓதுகின்ற செந்தமிழ்ப் பாடல்கள் என்னும் ஞானத் தீர்த்தமாகிய சிவகங்கை என்னும் தடாகம் விளங்கும்

     மகா சிதம்பர திண்சபை மேவும் ம(ன்)னா --- சிறந்த சிதம்பரம் என்னும் தலத்தில், திண்ணிய கனக சபையில் எழுந்தருளிய மன்னவரே!

     சவுந்தர --- அழகு மிக்கவரே!

     தம்பிரானே --- தனிப்பெரும் தலைவரே!

      சந்திர ஓலை குலாவ --- சந்திரனைப் போல் குளிர்ந்த ஒளியைத் தரும் காதோலைகள் விளங்க,

     கொங்கைகள் மந்தரம் ஆல --- மார்புகள் மந்தர மலையைப் போல் அசைய,

     நல் நீர் ததும்ப நல் சண்பக மாலை குலாவு இளம் குழல் மஞ்சு போல --- நல்ல குளிர்ச்சி ததும்பும் அழகிய சண்பக மாலை விளங்கும் மெல்லிய கூந்தல் மேகம் போல் விளங்க,

      தண் கயல் வாளி க(ண்)ணார் --- குளிர்ந்த மீன் போன்றதும் அம்பு போன்றதுமான கண்களை உடையவர்கள்.

     இளம்பிறை விண் புருவர் --- இளம் பிறைச் சந்திரன் போன்ற வளைந்த புருவத்தை உடையவர்கள்.

      இதழ் கோவையின் கனி --- கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயிதழை உடையவர்கள்

     தன் செயலார் --- பொது மகளிர்களுக்கே உரிய சாகசச் செயல்களைப் புரிபவர்கள்,

     நகை சோதியின் கதிர் சங்கு மேவும் கந்தரர் --- சூரிய ஒளி போன்ற பல்வரிசையும், சங்கு போன்ற கழுத்தையும் உடையவர்கள்.

      தேமலு(ம்) மார் பரம்ப --- தேமல் மார்பில் பரவ,

     நல் சந்தன சேறு உடன் ஆர் கவின் பெறு கஞ்சுகமாம் --- நல்ல சந்தனக் கலவையின் நிறைந்த அழகைப் பெற்ற மார்பின் மேல் ரவிக்கை அணிந்த,

     மிடறு ஓதை கொஞ்சிய ரம்பையாரை --- அழகிய தொண்டையினின்றும் உண்டான ஒலி கொஞ்சுகின்ற, ரம்பை போன்ற விலைமாதர்களை,

      கண் களிகூர வெகு ஆசை கொண்டு --- கண்கள் மகிழக் கண்டு, மிக்க ஆசை கொண்டு,

     அவர் பஞ்சணை மீது குலாவினும் --- அவர்களுடன் மெத்தை மீது குலவி விளையாடினும்,

     திருக்கண்கள் இராறும் இராறு திண்புயமும் கொள்வேனே --- தேவரீரது அழகிய பன்னிரண்டு திருக் கண்களும், பன்னிரண்டு வலிய திருப்புயங்களும் மனதில் கொண்டு தியானிப்பேன்.


பொழிப்புரை


         இந்திர லோகத்தில் இருக்கும் தேவர்கள் இன்பம் பெறவும், சந்திர சூரியர்களுடைய தேர்கள் நன்கு உலாவி வரவும், எட்டு மலைகளில் இருந்த அசுரர் கூட்டங்கள் அழியும்படியாகக் கண்ட வேலவரே!

         இலக்குமியின் கணவராகிய திருமாலும், பிரமதேவனும், ஒளி வீசும் சந்திரனைச் சடையில் தரித்த சிவபெருமானும், இந்திரனும்,தொழுது வழிபட்டு மகிழுமாறு, அறம், பொருள் இன்பத்தை எடுத்து ஓதிய கந்தவேளே!

         செங் குங்குமம் அணிந்து பெரிய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட சிறு பெண்களுக்கு எல்லாம் முதன்மையானவளாய், மோக உணர்வைத் தரும் வஞ்சிக் கொடி போன்றவளாய், செவ்விய தினைப் புனத்தில் வாழ்ந்த வள்ளிக்கு நாயகரே!

     ஒளி மிக்க குக!

     செந்தமிழ் ஞானத் தீர்த்தமாகிய சிவகங்கை என்னும் தடாகம் விளங்கும் சிறந்த சிதம்பரம் என்னும் தலத்தில், திண்ணிய கனக சபையில் எழுந்தருளிய மன்னவரே!

     அழகு மிக்கவரே!

     தனிப்பெரும் தலைவரே!

      சந்திரனைப் போல் குளிர்ந்த ஒளியைத் தரும் காதோலைகள் விளங்க, மார்புகள் மந்தர மலையைப் போல் அசைய, நல்ல குளிர்ச்சி ததும்பும் அழகிய சண்பக மாலை விளங்கும் மெல்லிய கூந்தல் மேகம் போல் விளங்க, குளிர்ந்த மீன் போன்றதும் அம்பு போன்றதுமான கண்களை உடையவர்கள். இளம் பிறைச் சந்திரன் போன்ற புருவத்தை உடையவர்கள். கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயிதழை உடையவர்கள், பொது மகளிர்களுக்கே உரிய காம லீலைகளைச் செய்பவர்கள். சூரிய ஒளி போன்ற பல்வரிசையும், சங்கு போன்ற கழுத்தையும் உடையவர்கள். தேமல் மார்பில் பரவ, நல்ல சந்தனக் கலவையின் நிறைந்த அழகைப் பெற்ற மார்பின் மேல் ரவிக்கை அணிந்த, அழகிய தொண்டையினின்றும் உண்டான ஒலி கொஞ்சுகின்ற, ரம்பை போன்ற விலைமாதர்களைக் கண்கள் மகிழக் கண்டு, மிக்க ஆசை கொண்டு அவர்களுடன் மெத்தை மீது குலவி விளையாடினும், தேவரீரது அழகிய பன்னிரண்டு திருக் கண்களும், பன்னிரண்டு வலிய திருப்புயங்களும் மனதில் கொண்டு தியானிப்பேன்.


விரிவுரை

இத் திருப்புகழின் முதற்பகுதியில் விலைமாதரின் இயல்புகளைக் கூறுகின்றார் அடிகளார்.

அவர் பஞ்சணை மீது குலாவினும் திருக்கண்கள் இராறும் இராறு திண்புயமும் கொள்வேனே ---

விலைமாதர்களுடன் மெத்தை மீது குலவி விளையாடினும், தேவரீரது அழகிய பன்னிரண்டு திருக் கண்களும், பன்னிரண்டு வலிய திருப்புயங்களும் மனதில் கொண்டு தியானிப்பேன் என்கின்றார் அடிகளார்.

கண்டு உண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டு உண்டு அயர்கினும் வேல் மறவேன், முதுகூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண்டு எனக்கொட்டி ஆட வெம் சூர்க்கொன்ற ராவுத்தனே.
                                                                              --- கந்தர் அலங்காரம்.

இருள் அளகம் அவிழ, மதி போத முத்து அரும்ப,
     இலகு கயல் புரள, இரு பார பொன் தனங்கள்
     இளக, இடை துவள, வளை பூசல் இட்டு இரங்க, ...எவராலும்

எழுத அரிய கலை நெகிழ, ஆசை மெத்த, உந்தி
     இனிய சுழி மடுவின் இடை மூழ்கி, நட்பொடு அந்த
     இதழ் அமுது பருகி, உயிர் தேகம் ஒத்து இருந்து ..... முனிவு ஆறி,

முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து,
     முக வனச மலர் குவிய, மோகம் உற்று அழிந்து,
     மொழி பதற, வசம் அழிய, ஆசையில் கவிழ்ந்து ......விடுபோதும்,

முழுது உணர உடைய முது மாதவத்து உயர்ந்த
     பழுதில் மறை பயிலுவ என ஆதரித்து நின்று
     முநிவர் சுரர் தொழுது உருகு பாத பத்மம் என்றும் ...... மறவேனே.  --- திருப்புகழ்.


இந்திரை கேள்வர் ---

இந்திரை - திருமகள். திருமகளின் கணவராகிய திருமால்

பிதாமகன் ---

பிரமதேவன் பிதாமகன் எனப்படுவான்.

கதிர் இந்து சடாதரன் ---

ஒளி வீசும் சந்திரனைச் சடையில் தரித்த சிவபெருமான்.

வாசவன் ---

நேவர்கள் தலைவனான இந்திரன்

தொழுது இன்புறவே ---

ஆகிய இவர்கள் யாவரும் முருகப்பெருமானை வழிபட்டு மகிழ்ந்தனர்.

மனுநூல் விளம்பிய கந்தவேளே --- 

திருமால், பிரமன், இந்திரன், சிவபெருமான் முதலியோருக்கு முருகப் பெருமான் அறம், பொருள் இன்பம் முத்திறத்து உறுதிப் பொருள்கை விளக்கும் மனு நூலை ஓதிய பெருமையை உடையவர் முருகப் பெருமான்.

சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் கூறுமாறு காண்க.

திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினர்.

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,

அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்” என்றனர்.

கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந் தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர் வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.
                                                                             --- தணிகைப் புராணம்.

நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ
 ஞான வார்த்தை அருளிய பெருமாளே”               --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

நாதா குமரா நம என்று அரனார்
 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி

தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”
                                                                   --- (கொடியனைய) திருப்புகழ்.

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த மதியாளா....               --- (விறல்மாரன்) திருப்புகழ்.

சிவனார் மனம் குளி, உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர்செய் குருநாதா...      --- திருப்புகழ்.

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.
                                                           --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.

உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.   ---  தணிகைப் புராணம்.

மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
         வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
         எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
         தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
     பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியப் படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

திருக்கோவையாரிலும்,

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.           --- திருமந்திரம்.

கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்....           --- குமரகுருபரர்.

பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே. --- அபிராமி அந்தாதி.
 
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை, மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.
                                                                   --- அபிராமி அந்தாதி.
  
சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, ங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே. --- சிவஞான சித்தியார்.
  
திருமால் சிவஞானம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணத்தில் இராமன் அருள் பெற்ற வரலாற்றினில் காண்க.

இந்திரன் திருத்தணிகை மலையிலும், திருவேரகத்திலும் முருகப் பெருமானைப் பூசித்து, உபதேசம் பெற்றான்.

அன்பர் ஓது செந்தமிழ் ஞான தடாகம் என் சிவகங்கை அளாவும் ---

அன்பர்கள் ஓதுகின்ற செந்தமிழ்ப் பாடல்கள் என்னும் ஞானத் தீர்த்தமாகிய சிவகங்கை என்னும் தடாகம் விளங்குவதாக அடிகளார் அருளிச் செய்கின்றார்.

"சித்தம் மால் தீர ஈசன் சிவகங்கை வடிவாய் நின்றான்" என்கின்றது சிதம்பர புராணம்.

தீர்த்தம் என்பது சிவகங்கையே,
ஏத்த அரும் தலம் எழில் புலியூரே
மூர்த்தி அம்பலக் கூத்தனது உருவே

என மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூவகைச் சிறப்பும் பொருந்திய திருத்தலம் தில்லை என்று சிதம்பர செய்யுள் கோவை கூறுகின்றது.

மார்கழித் திருவாதிரையில் இந்த தீர்த்தத்தில் படிவது சிறப்பு என்று கோயில் புராணம் கூறுகின்றது.

மகா சிதம்பர திண்சபை மேவும் (ன்)னா ---

பெருமைக்கு உரிய சிதம்பரம் என்னும் திருத்தலத்தில், திண்ணிய கனக சபையில் எழுந்தருளிய மன்னவரே என்று முருகப் பெருமானைப் போற்றுகின்றார் அடிகளார். அம்பலவாணப் பெருமான் வேறு, அறுமுகப் பெருமான் வேறு என்று எண்ணல் ஆகாது என்பதைக் காட்ட, "திரிபுரம் எரி செய்த கோவே" என்று வேறு ஒரு திருப்புகழிலும் அடிகளார் பாடியருளினார்.

கருத்துரை

முருகா! விலைமாதர் கலவியின் போதும் உன்னை மறவேன்.






No comments:

Post a Comment

பொது --- 1080. கலந்த மாதும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கலந்த மாதும் (பொது) தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங...