திருவண்ணாமலை - 0582. முகிலை இகல்பொரு

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முகிலை இகல்பொரு (திருவருணை)

திருவருணை முருகா!
பொதுமாதர் மயலில் மகிழாமல்,
உனது மயில் வாகனக் காட்சியில் மகிழ அருள்.


தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன ...... தனதான


முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென
     முதிய மதியது முகமென நுதலிணை
     முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி ...... எனமூவா

முளரி தனின்முகு ளிதமலர் முலையென
     முறுவல் தனையிரு குழைதனை மொழிதனை
     மொழிய வரியதொர் தெரிவையர் வினையென ...... மொழிகூறிப்

பகலு மிரவினு மிகமன மருள்கொடு
     பதியி லவர்வடி வுளதழ கெனவொரு
     பழுது மறஅவர் பரிவுற இதமது ...... பகராதே

பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட
     விகட முடனடை பயில்மயில் மிசைவரு
     பவனி தனையநு தினநினை யெனஅருள் .....பகர்வாயே

புகல வரியது பொருளிது எனவொரு
     புதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு
     பொதுவை யிதுவென தவமுடை முநிவர்கள்.....புடைசூழப்

புரமு மெரியெழ நகையது புரிபவர்
     புனலும் வளர்மதி புனைசடை யினரவர்
     புடவி வழிபட புதை பொருள் விரகொடு ...... புகல்வோனே

அகில கலைகளு மறநெறி முறைமையு
     மகில மொழிதரு புலவரு முலகினி
     லறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை ...... அதனாலே

அறுவர் முலையுணு மறுமுக னிவனென
     அரிய நடமிடு மடியவ ரடிதொழ
     அருணை நகர்தனி லழகுடன் மருவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


முகிலை இகல்பொரு முழு இருள் குழல் என,
     முதிய மதி அது முகம் என, நுதல் இணை
     முரணர் வரிசிலை, முடுகிடு கணைவிழி ...... என,மூவா

முளரி தனில் முகுளித மலர் முலை என,
     முறுவல் தனை, இரு குழைதனை, மொழிதனை,
     மொழிய அரியதொர் தெரிவையர் வினை என ...... மொழிகூறி,

பகலும் இரவினும் மிகமன மருள்கொடு
     பதி இல் அவர் வடிவு உளது அழகு என, ஒரு
     பழுதும் அற, அவர் பரிவு உற, இதம்அது ...... பகராதே,

பகைகொடு எதிர்பொரும் அசுரர்கள் துகைபட,
     விகடம் உடன் அடை பயில் மயில் மிசைவரு
     பவனி தனை, அநுதினம் நினை என அருள் .....பகர்வாயே.

புகல அரியது பொருள் இது என, ஒரு
     புதுமை இட அரியது முதல் எனும் ஒரு
     பொதுவை இது என தவம் உடை முநிவர்கள்.....புடைசூழப்

புரமும் எரி எழ நகையது புரிபவர்,
     புனலும் வளர்மதி புனை சடையினர், அவர்
     புடவி வழிபட, புதை பொருள் விரகொடு ...... புகல்வோனே!

அகில கலைகளும், அறநெறி முறைமையும்,
     அகிலம் மொழிதரு புலவரும், உலகினில்
     அறிஞர், தவம் முயல்பவர்களும், இயல்இசை......அதனாலே,

அறுவர் முலை உணும் அறுமுகன் இவன் என,
     அரிய நடம் இடும் அடியவர் அடிதொழ
     அருணை நகர்தனில் அழகுடன் மருவிய ...... பெருமாளே.


பதவுரை

      புகல அரியது பொருள் இது என --- இத் தன்மையது என்று எடுத்துச் சொல்லுதற்கு அரியதான பொருள் இதுதான் என்றும்,

     ஒரு புதுமை இட அரியது முதல் எனும் --- ஒரு புதுமையாம் தன்மையில் கற்பனை செய்ய அரியதான முதன்மையது என்றும்,

     ஒரு பொதுவை இது என --- ஒப்பற்ற பொதுவாம் தன்மை கொண்டது இது என்றும் கூறும்படி,

     தவம் உடை முநிவர்கள் புடைசூழ --– தவநிலையில் உள்ள முனிவர்கள் பக்கத்தில் சூழ்ந்து நிற்க,

      புரமும் எரி எழ நகை அது புரிபவர் --- முப்புரங்கள் எரியால் அழியும்படி புன்னகை புரிந்தவரும்,

     புனலும் வளர்மதி புனை சடையினர் --- கங்கை நதியும், வளரும் பிறை மதியையும் அணிந்துள்ள சடை முடியை உடையவரும் ஆகிய சிவபெருமான்

     அவர் புடவி வழிபட --- பூதலத்தில் தேவரீரை வழிபாடு செய்ய

     புதை பொருள் விரகொடு  புகல்வோனே --- இரகசியப் பொருளை சாமர்த்தியத்துடன் உபதேசித்தவரே!

      அகில கலைகளும் --- எல்லாக் கலைகளும்,

     அறநெறி முறைமையும் --- தருமநெறியைக் கூறும் ஒழுக்க நூல்களும்,

     அகில பொழி தரு புலவரும் --- எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல வல்ல புலவர்களும்,

     உலகினில் அறிஞர் --- உலகில் உள்ள அறிஞர்களும்,

     தவ முயல்பவர்களும் --- தவநிலையைச் சார்ந்து முயல்பவர்களும்,

     இயல் இசை அதனாலே --- இயல் தமிழாலும், இசைத் தமிழாலும்,

      அறுவர் முலை உணும் அறுமுகன் இவன் என --- கார்த்திகைப் பெண்களாகிய அறுவர்களின் முலைப்பால் உண்ணும் ஆறுமுகப் பெருமான் இவன் என்று தியானித்துப் புகழ்ந்து கூறி,

     அரிய நடமிடும் அடியவர் அடி தொழ --- அருமையான ஆனந்தக் கூத்தாடும் அடியவர்களாய் உமது திருவடிகளைத் தொழுது நிற்க,

     அருணை நகர்தனில் அழகுடன் மருவிய பெருமாளே --- திருவண்ணாமலையில் அழகாக வீற்றிருக்கும் பெருமையில் மிகுந்தவரே!

      முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என --- மேகத்துடன் மாறுபட்டுப் போர் புரியும் முற்றிய இருள் போன்ற கூந்தல் என்றும்,

     முதிய மதி அது முகம் என --- பூரண சந்திரனே முகம் என்றும்,

     நுதல் இணை முரணர் வரிசிலை --- புருவங்கள் இரண்டும் பகைவர்களின் கட்டப்பட்ட வில் என்றும்,

     முடுகிடு கணை விழி என --–  கண்கள் விரைந்து பாயும் அம்பு போன்றவை என்றும்,

       மூவா முளரி தனில் முகுளித மலர் முலை என --- மூப்பில்லாத தாமரையின் அரும்பாக உள்ள மலர் போன்றது முலை என்றும்,

     முறுவல் தனை, --- பற்களையும்,

     இரு குழைதனை --- இரு குழைகளையும்,

     மொழி தனை --- மொழியையும்,

     மொழிய அரியதொர் தெரிவையர் வினை என மொழி கூறி --- உவமை சொல்லுதற்கு அரியவாம் மாதர்களின் கருவிகளாம் என்று கூறி,

      பகலும் இரவினும் மிகமன மருள் கொடு --- பகலும் இரவும் மிக்க மன மயக்கம் கொண்டு

     பதி இல் அவர் வடிவு உளது அழகு என --- கணவனில்லாத போது, மாதர்களிடம் அழகு இருப்பிடம் கொண்டுள்ளது என்று நினைந்து,

     ஒரு பழுதும் அற --- சிறிதும் குறைவில்லாமல்,

     அவர் பரிவு உற --- அம் மாதர் என்பால் அன்பு கொள்ளும்படி

     இதம் அது பகராதே --- இதமொழிகளை அவர்களிடம் சொல்லித் திரியாதே,

      பகைகொடு எதிர்பொரும் அசுரர்கள் துகைபட --- பகைமை கொண்டு எதிர்த்துப் போர் புரிந்த அசுரர்கள் தூளாகுமாறு,

     விகடமுடன் நடை பயில் மயில் மிசை வரு பவனி தனை --- விநோதமாக நடனம் இடுகின்ற மயிலின் மீது வரும் திருவுலாக் காட்சியை

     அநுதினம் நினை என அருள் பகர்வாயே ---- நாள்தோறும் நீ நினைப்பாயாக என்று அருள்மொழி கூறி அருள்வீராக.


பொழிப்புரை


         இத் தன்மையது என்று எடுத்துச் சொல்லுதற்கு அரியதான பொருள் இதுதான் என்றும், ஒரு புதுமையாம் தன்மையில் கற்பனை செய்ய அரியதான முதன்மையது என்றும், ஒப்பற்ற பொதுவாம் தன்மை கொண்டது இது என்றும் கூறும்படி, தவநிலையில் உள்ள முனிவர்கள் பக்கத்தில் சூழ்ந்து நிற்க, முப்புரங்கள் எரியால் அழியும்படி புன்னகை புரிந்தவரும், கங்கை நதியும், வளரும் பிறை மதியையும் அணிந்துள்ள சடை முடியை உடையவரும் ஆகிய சிவபெருமான்  பூதலத்தில் தேவரீரை வழிபாடு செய்ய இரகசியப் பொருளை சாமர்த்தியத்துடன் உபதேசித்தவரே!

         எல்லாக் கலைகளும், தருமநெறியைக் கூறும் ஒழுக்க நூல்களும், எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல வல்ல புலவர்களும், உலகில் உள்ள அறிஞர்களும், தவநிலையைச் சார்ந்து முயல்பவர்களும், இயல் தமிழாலும், இசைத் தமிழாலும், கார்த்திகைப் பெண்களாகிய இருவர்களின் முலைப்பால் உண்ணும் ஆறுமுகப் பெருமான் இவன் என்று தியானித்துப் புகழ்ந்து கூறி, அருமையான ஆனந்தக் கூத்தாடும் அடியவர்களாய் உமது திருவடிகளைத் தொழுது நிற்க, திருவண்ணாமலையில் அழகாக வீற்றிருக்கும் பெருமையில் மிகுந்தவரே!

         மேகத்துடன் மாறுபட்டுப் போர் புரியும் முற்றிய இருள் போன்ற கூந்தல் என்றும்,  பூரண சந்திரனே முகம் என்றும், புருவங்கள் இரண்டும் பகைவர்களின் கட்டப்பட்ட வில் என்றும், கண்கள் விரைந்து பாயும் அம்பு போன்றவை என்றும், மூப்பில்லாத தாமரையின் அரும்பாக உள்ள மலர் போன்றது முலை என்றும், பற்களையும், இரு குழைகளையும்,  மொழியையும், உவமை சொல்லுதற்கு அரியவாம் மாதர்களின் கருவிகளாம் என்று கூறி, பகலும் இரவும் மிக்க மன மயக்கம் கொண்டு கணவனில்லாத போது, மாதர்களிடம் அழகு இருப்பிடம் கொண்டுள்ளது என்று நினைந்து, சிறிதும் குறைவில்லாமல், அம் மாதர் என்பால் அன்பு கொள்ளும்படி இதமொழிகளை அவர்களிடம் சொல்லித் திரியாதே,

         பகைமை கொண்டு எதிர்த்துப் போர் புரிந்த அசுரர்கள் தூளாகுமாறு, விநோதமாக நடனம் இடுகின்ற மயிலின் மீது வரும் திருவுலாக் காட்சியை நாள்தோறும் நீ நினைப்பாயாக என்று அருள்மொழி கூறி அருள்வீராக.


விரிவுரை


முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என ---

கரிய நிறம் உடையது மேகம்.கரிய பெரிய இருள் அம் மேகத்துடன் மாறுபட்டுப் போர் புரிகின்றதாம். அத்துணைக் கருமை உடையது இருள். அந்த இருள் போன்றது கூந்தல்.

முதிய மதி அது முகம் என ---

பெண்கள் முகமானது முழுநிலாவைப் போன்ற அழகும் குளிர்ச்சியும் உடையது.

நுதல் இணை முரணர் வரிசிலை ---

நுதல் - புருவம்.  இணை - இரண்டு.  முரணர் - பகைவர். வரிசிலை - கட்டப்பட்ட வில்.

பெண்கள் புருவம் பகைவர் வரிந்து கட்டிய வில்லைப் போன்றது. வளைந்திருப்பது.

முடுகிடு கணை விழி ---

வேகமாகப் பாயவல்ல கணை போன்றது கண்கள்.  காமுகர் உள்ளத்தைப் பிளக்கவல்லது.

மூவா முளரி தனின் முகுளித மலர் முலை –--

மூவா - முப்பில்லாத இளமையான தாமரை மலரின் அரும்பு போன்றது பெண்களின் முலை.

பதிஇல் அவர் --- 

பொதுமாதர்கள் கணவனில்லாதவர்கள்.  அதனால் பதியிலார் எனப்பட்டனர்.

விகடமுடன் நடை பயில் மயில் மிசை வரு பவனிதனை ---

விநோதநாக நடனம் புரிகின்ற மயிலின் மீது உலா வருகின்ற முருகவேளின் திருவுலாக் காட்சியை எப்போதும் தியானிக்க வேண்டும்.

அவ்வாறு தியானித்தால் காம மயக்கம் விலகும்.  மயில் நஞ்சுடைய பாம்பை அடக்க வல்லது. மயில் உலாக் காட்சியால் ஆசை மயக்கமான நஞ்சு அடங்கும்.

புகல அரியது பொருள் இது என ---

முனிவர்கள் புரியும் தவநிலை இத் தன்மைத்து என்று எடுத்துச் சொல்ல இயலாதது.  இதுதான் மெய்ப்பொருள் என்று கூறத் தக்கது அத்தவம்.

அறுபவர் முலை உணும் அறுமுகன் இவன் என ---

சரவணப் பொய்கையில் முருகன் கார்த்திகை மாதர்கள் அறுவரின் முலைப்பால் உண்டு திருவிளையாடல் புரிந்தருளினார். அக் கருணைத் திறத்தை நினைந்து, அறுவர் முலை உண்ட ஆறுமுகத் தெய்வமே என்று புகழ்ந்து போற்றுகின்றார்கள்.

அறுவர் முலை நுகரும் அறுமுக குமர
சரணம் என அருள் பாடி.......              --- சீர்பாத வகுப்பு.

அரிய நடம் இடும் அடியவர் அடிதொழ ---

அடியவர்கள் முருகனைப் பாடி ஆனந்த மிகுதியால் கூத்தாடி அப் பெருமானது திருவடிகளைத் தொழுகின்றார்கள்.  இத்தகைய அடியார்கள் வாழும் தலம் திருவண்ணாமலை.

கருத்துரை


அருணை மேவும் ஆறுமுகப் பெருமானே, உன் மயில் வாகனக் காட்சியை நினை என எனக்கு அருள் செய்.

No comments:

Post a Comment

சும்மா இரு மனமே

  சும்மா இருப்பாய் மனமே -----   "வேதாகம சித்ர வேலாயுதன் ,  வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்தம் அரணாக ,    அல்லும் பகலும் இல்லாச்  சூதானத...