திருவண்ணாமலை - 0590. விடுமத வேள்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

விடுமத வேள் (திருவருணை)

திருவருணை முருகா!
அடியேனை அடியாருடன் சேர்த்து அருள்

தனதன தானாதன தனதன தானாதன
     தனதன தானாதன ...... தனதான


விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல
     விழிகொடு வாபோவென ...... வுரையாடும்

விரகுட னூறாயிர மனமுடை மாபாவிகள்
     ம்ருகமத கோலாகல ...... முலைதோய

அடையவு மாசாபர வசமுறு கோமாளியை
     அவனியு மாகாசமும் ...... வசைபேசும்

அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை
     அடியவ ரோடாள்வது ...... மொருநாளே

வடகுல கோபாலர்த மொருபதி னாறாயிரம்
     வனிதையர் தோள்தோய்தரு ...... மபிராம

மரகத நாராயணன் மருமக சோணாசல
     மகிபச தாகாலமு ...... மிளையோனே

உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற
     உலகுய வாரார்கலி ...... வறிதாக

உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழ
     ஒருதனி வேலேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


விடுமத வேள் வாளியின் விசைபெறும் ஆலாகல
     விழிகொடு, "வா போ" என, ...... உரையாடும்

விரகுடன், நூறு ஆயிர மனம் உடை மாபாவிகள்,
     ம்ருகமத கோலாகல ...... முலை தோய,

அடையவும் ஆசா பரவசம் உறு கோமாளியை,
     அவனியும் ஆகாசமும் ...... வசைபேசும்

அசட அநாசாரனை, அவலனை, ஆபாசனை,
     அடியவரோடு ஆள்வதும் ...... ஒருநாளே?

வடகுல கோபாலர் தம் ஒரு பதினாறு ஆயிரம்
     வனிதையர் தோள் தோய்தரும், ...... அபிராம

மரகத நாராயணன் மருமக! சோணாசல
     மகிப! சதா காலமும் ...... இளையோனே!

உடுபதி, சாயாபதி, சுரபதி, மாயாது உற,
     உலகு உய வார் ஆர்கலி ...... வறிதாக,

உயரிய மாநாகமும், நிருதரும் நீறாய்விழ,
     ஒருதனி வேல் ஏவிய ...... பெருமாளே.


பதவுரை


      வட குல கோபாலர் தம் --- வடக்கே உள்ள ஆயர் குலத்தவர்களான

     ஒரு பதினாறாயிரம் வனிதையர் தோள்தோய் தரும் அபிராம ---ஒரு பதினாறாயிரம் மாதர்களின் தோள்களைத் தழுவிய அழகியவரும்,

     மரகத நாராயணன் மருமக --– பச்சை வண்ணரும் ஆகிய நாராயணமூர்த்தியின் திருமருகரே!

       சோணாசல மகிப --– திருவண்ணாமலைக்கு அரசே!

      சதா காலமும் இளையோனே --- என்றும் இளையவரே!

      உடுபதி சாயாபதி சுரபதி மாயாது உற --- நட்சத்திரங்களுக்குத் தலைவனான சந்திரனும், சாயாதேவிக்குக் கணவனான சூரியனும், தேவர்களின் தலைவனான இந்திரனும் இறந்துபடாது வாழவும்,
      
     உலகு உய --- உலகம் பிழைத்திருக்கவும்,

     வார் ஆர்கலி வறிதாக --– நீண்ட கடல் வற்றிப் போகவும்,

      உயரிய மாநாகமும் நிருதரும் நீறாய் விழ --- உயர்ந்த மேரு மலையும், அசுரர்களும் பொடியாகி விழவும்,

     ஒரு தனி வேல் ஏவிய பெருமாளே --- ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்திய பெருமையில் சிறந்தவரே!

         விடு மதவேள் வாளியின் விசைபெறும் ஆலாகல விழி கொடு --- செருக்குள்ள மன்மதன் விடுகின்ற வேகமுள்ள அம்புகள் போன்றவையும், ஆலகால நஞ்சை ஒத்ததும் ஆன கண்கள் கொண்டு,

     வா போ என உரையாடும் விரகுடன் ---- "வா" "போ" என்று பேசுகின்ற சாமர்த்தியத்துடன்

       நூறு ஆயிர மனம் உடை மாபாவிகள் --- இலட்சக் கணக்கான மனத்தைக் கொண்ட பெரிய பாவிகளின்

     ம்ருகமத கோலாகல முலை தோய அடையவும் --- கஸ்தூரி அணிந்துள்ள ஆடம்பரமான முலைகளில் அணைந்து சேரும் பொருட்டு,

     ஆசா பரவசம் உறு கோமாளியை --- ஆசைப் பிரமை கொண்ட கோணங்கியை
    
       அவனியும் ஆகாசமும் வசைபேசும் அசட, அநாசாரனை --- மண்ணுலகத்தவரும், விண்ணுலகத்தவரும் பழித்துப் பேசும் மூடனாகிய ஆசாரம் இல்லாதவனை,

      அவலனை ---  துன்பப்படுகின்றவனை,

     ஆபாசனை --- அசுத்தனை,

     அடியவரோடு ஆள்வதும் ஒரு நாளே --- அடியார்களோடு சேர்த்து ஆண்டருளும் பெருவாய்ப்பு கிடைக்கும் ஒரு நாள் அடியேனுக்குக் கிடைக்குமா?



பொழிப்புரை


         வடக்கே உள்ள ஆயர் குலத்தவர்களான ஒரு பதினாறாயிடரம் மாதர்களின் தோள்களைத் தழுவிய அழகியவரும், பச்சை வண்ணரும் ஆகிய நாராயணமூர்த்தியின் திருமருகரே!

         திருவண்ணாமலைக்கு அரசே!

         என்றும் இளையவரே!

         நட்சத்திரங்களுக்குத் தலைவனான சந்திரனும், சாயாதேவிக்குக் கணவனான சூரியனும், தேவர்களின் தலைவனான இந்திரனும் இறந்துபடாது வாழவும், உலகம் பிழைத்திருக்கவும், நீண்ட கடல் வற்றிப் போகவும், உயர்ந்த மேரு மலையும், அசுரர்களும் பொடியாகி விழவும், ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்திய பெருமையில் சிறந்தவரே!

         செருக்குள்ள மன்மதன் விடுகின்ற வேகமுள்ள அம்புகள் போன்றவையும், ஆலகால நஞ்சை ஒத்ததும் ஆன கண்கள் கொண்டு, "வா" "போ" என்று பேசுகின்ற சாமர்த்தியத்துடன் இலட்சக் கணக்கான மனத்தைக் கொண்ட பெரிய பாவிகளின் கஸ்தூரி அணிந்துள்ள ஆடம்பரமான முலைகளில் அணைந்து சேரும் பொருட்டு, ஆசைப் பிரமை கொண்ட கோணங்கியை மண்ணுலகத்தவரும், விண்ணுலகத்தவரும் பழித்துப் பேசும் மூடனாகிய ஆசாரம் இல்லாதவனை, துன்பப்படுகின்றவனை, அசுத்தனை, அடியார்களோடு சேர்த்து ஆண்டருளும் பெருவாய்ப்பு கிடைக்கும் ஒரு நாள் அடியேனுக்குக் கிடைக்குமா?


விரிவுரை


விடுமதவேள் வாளியின் விசைபெறு ---

மதவேள் விடு விசைபெறு வாளி எனக் கூட்டுக.

நூறு ஆயிர மனம் உடை மாபாவிகள் ---

கணத்துக்குக் கணம் மாறுபடுகின்ற மனம் உடையவர்கள் கணிகையர்கள்.

அடியவரோடு ஆள்வதும் ஒருநாளே ---

சகல தீவினைகளும் அடியார் உறவால் தீயில் பட்ட பஞ்சு போல் அழியும்.  ஆன்மாக்கள் எளிதில் உய்யும் நெறி சத்சங்கமே ஆகும்.

முருக,ம யூரச் சேவக, சரவண, ஏனல் பூதரி
     முகுளப டீரக் கோமள ...... முலைமீதே
முழுகிய காதற் காமுக, பதிபசு பாசத் தீர்வினை
     முதியபு ராரிக்கு ஓதிய ...... குருவே,என்று

உருகியும் ஆடிப் பாடியும், இருகழல் நாடிச் சூடியும்,
     உணர்வினோடு ஊடிக் கூடியும் ...... வழிபாடுற்று,
உலகினொர் ஆசைப் பாடுஅற, நிலைபெறு ஞானத் தால்இனி
     உனதுஅடி யாரைச் சேர்வதும் ...... ஒருநாளே...          --- திருப்புகழ்.

அடியார் திருக்கூட்டத்தில் இருப்பது பெறும் பேறு என்பதை, சுவாமிகள் இப்படிக் காட்டினார்.

அடியார் திருக்கூட்டத்தில் இறைவன் தன்னைக் கூட்டியது அதிசயம் என்கின்றார் மணிவாசகப் பெருமான்...

எண்ணி லேன்திரு நாமஅஞ் செழுத்தும்என் ஏழைமை அதனாலே,
நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடும் நல்வினை நயவாதே,
மண்ணி லேபிறந்து இறந்து,மண் ஆவதற்கு ஒருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.     --- திருவாசகம்.

கொழுமணி ஏர்நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்று, குன்றி
விழும் அடியேனை விடுதி கண்டாய்,"மெய்ம் முழுதுங்கம்பித்து
அழும் அடியார் இடை ஆர்த்து வைத்து, ஆட்கொண்டு அருளி"என்னைக்
கழுமணியே, இன்னும் காட்டு கண்டாய் நின் புலன்கழலே.   --- திருவாசகம்.
             
ஆயாய் பலகலை, "ஆய்ந்திடும் தூய அருந்தவர்பால்
போய்ஆகிலும் உண்மையைத் தெரிந்தாய் இல்லை"பூதலத்தில்
வேய்ஆர்ந்த தோளியர் காமவிகாரத்தில் வீழ்ந்து அழுந்திப்
பேய்ஆகி விழிக்கின்றனை, மனமே! என்ன பித்து உனக்கே.    --- பட்டினத்தார்.



உடுபதி ---

உடு - நட்சத்திரம்.  உடுபதி - சந்திரன்.  உடுபதி பூசித்த தலம் இன்று உடுப்பி என வழங்குகின்றது.

சாயாபதி ---

சாயை - சூரியன் மனைவியருள் ஒருத்தி.

உயரிய மாநாகமும் ---

நாகம் - மலை.  பெரிய மலை மேருமலை.  கிரவுஞ்ச மலை என்றும் பொருள்படும்.

கருத்துரை 

திருவண்ணாமலைக்கு அரசே, அடியேனை அடியாருடன் சேர்த்து ஆட்கொள்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...