அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
விடமும் அமுதமும்
(திருவருணை)
திருவருணை முருகா!
அடியேன் மெய்யுணர்வு பெறும்
திருநாளை அருள்
தனன
தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
விடமு
மமுதமு மிளிர்வன இணைவிழி
வனச மலதழல் முழுகிய சரமென
விரைசெய் ம்ருகமத அளகமு முகிலல ....வொருஞான
விழியின்
வழிகெட இருள்வதொ ரிருளென
மொழியு மமுதல வுயிர்கவர் வலையென
விழையு மிளநகை தளவல களவென ......
வியனாபித்
தடமு
மடுவல படுகுழி யெனஇடை
துடியு மலமத னுருவென வனமுலை
சயில மலகொலை யமனென முலைமிசை.....புரள்கோவை
தரள
மணியல யமன்விடு கயிறென
மகளிர் மகளிரு மலபல வினைகொடு
சமையு முருவென வுணர்வொடு புணர்வது
......மொருநாளே
அடவி
வனிதையர் தனதிரு பரிபுர
சரண மலரடி மலர்கொடு வழிபட
அசல மிசைவிளை புனமதி லினிதுறை ......தனிமானும்
அமர
ரரிவையு மிருபுடை யினும்வர
முகர முகபட கவளத வளகர
அசல மிசைவரு மபிநவ கலவியும் ......
விளையாடுங்
கடக
புளகித புயகிரி சமுகவி
கடக கசரத துரகத நிசிசரர்
கடக பயிரவ கயிரவ மலர்களும் ......
எரிதீயுங்
கருக வொளிவிடு தனுபர கவுதம
புனித முனிதொழ அருணையி லறம்வளர்
கருணை யுமைதரு சரவண சுரபதி ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
விடமும்
அமுதமும் மிளிர்வன இணைவிழி,
வனசம் அல, தழல் முழுகிய சரம் என,
விரைசெய் ம்ருகமத அளகமும் முகில்அல,......ஒருஞான
விழியின்
வழிகெட இருள்வதொர் இருள் என,
மொழியும் அமுது அல, உயிர்கவர் வலை என,
விழையும் இளநகை தளவு அல, களவுஎன, ...... வியன்
நாபித்
தடமும்
மடு அல, படுகுழி என, இடை
துடியும் அல, மதன் உரு என, வனமுலை
சயிலம் அல, கொலை யமன் என, முலைமிசை.....புரள்கோவை
தரள
மணி அல, யமன்விடு கயிறு என,
மகளிர் மகளிரும் அல, பல வினைகொடு
சமையும் உரு என, உணர்வொடு புணர்வதும்
......ஒருநாளே?
அடவி
வனிதையர் தனது அரு பரிபுர
சரண மலர்அடி மலர் கொடு வழிபட,
அசலம் மிசை விளை புனம் அதில் இனிது
உறை.....தனிமானும்,
அமரர்
அரிவையும் இருபுடையினும் வர,
முகர முகபட கவள தவள கர
அசலம் மிசைவரும் அபிநவ
கலவியும்....விளையாடும்
கடக
புளகித புயகிரி சமுக!
விகட கக சரத துரகத நிசிசரர்
கடக பயிரவ! கயிரவ மலர்களும், ...... எரி தீயும்
கருக, ஒளி விடு தனு பர!
கவுதம
புனித முனி தொழ அருணையில் அறம் வளர்
கருணை உமை தரு சரவண! சுரபதி ......
பெருமாளே.
பதவுரை
அடவி வனிதையர் --- வனதேவதைகள்
தனது இரு பரிபுர சரண மலர் அடி --- தன்னுடைய
சிலம்பணிந்த அடைக்கலம் புகத் தக்க மலர் போன்ற இரண்டு திருவடிகளை
மலர் கொடு வழிபட --- மலர்களைக் கொண்டு
வழிபாடு செய்ய,
அசலம் மிசை விளை --- மலைமீது
விளைந்துள்ள
புனம் அதில் இனிது உறை தனிமானும் --- தினைப்புனத்தில்
இனிது அமர்ந்திருந்த ஒப்பற்ற மான் போன்ற வள்ளிப் பிராட்டியும்,
அமரர் அரிவையும் --- தேவர் வளர்த்த
புதல்வியாம் தெய்வயானை அம்மையும்
இரு புடையினும் வர --- இரண்டு
பக்கங்களிலும் வர,
முகர --- ஒலி செய்வதும்,
முகபட --- முகபடாம் உடையதும்,
கவள --- கவளமாக உணவு கொள்வதும்,
தவள --- வெண் நிறம் உடையதும்,
கர அசலம் மிசைவரும் அபிநவ --- துதிக்கை
உடையதும், மலை போன்றதுமான யானை
மீதி எழுந்தருளி வரும் புதுமை வாய்ந்தவரே!
கலவியும் விளையாடும் --- சேர்க்கை
இன்பத்தில் விளையாடுகின்ற
கடக புளகித புயகிரி சமுக --– கங்கணம்
அணிந்தனவும், புளகம் கொண்டு
உள்ளனவும் ஆகிய புயங்களாகிய மலைக் கூட்டத்தை உடையவரே!
விகட அக --– அழகு வாய்ந்த
உள்ளம் உடையவரே!
கச ரத துரகத நிசிசரர்
கடக பயிரவ
--– யானை, தேர், குதிரைகளுடன் கூடிய அசுர சேனைகட்கு
பயத்தைச் செய்பவரே!
கயிரவ மலர்களும் --- செவ்வாம்பல்
மலர்களும்,
எரி தீயும் கருக --- எரிகின்ற தீயும்
கருகும்படி,
ஒளி விடு தனு பர --– ஒளி வீசுகின்ற திருவுருவை
உடைய கடவுளே!
கவுதம புனித முனி தொழ
--- கவுதமர் என்னும் தூய முனிவர் வழிபட,
அருணையில் அறம் வளர் கருணை உமை தரு சரவண
-– திருவண்ணாமலையில் அறநெறியை வளர்த்த கருணை வடிவினராம் உமாதேவியார் பெற்ற சரவண
மூர்த்தியே!
சுரபதி பெருமாளே --- இந்திரன் போற்றும்
பெருமை வாய்ந்தவரே!
விடமும் அமுதமும்
மிளிர்வன இணைவிழி வனசம் அல --- நஞ்சும் அமுதமும் இரண்டும் கொண்டு
விளங்குகின்ற இரண்டு கண்களும் தாமரை மலர்கள் அல்ல,
தழல் முழுகிய சரம் என --– நெருப்பில்
தோய்ந்த அம்புகளாம் என்றும்,
விரைசெய் ம்ருகமத
அளகமும் முகில் அல --- நறுமணம் கமழும் கத்தூரி வாசனையை உடைய
கூந்தலும் மேகம் அல்ல,
ஒரு ஞான விழியின் வழிகெட இருள்வதொர்
இருள் என --– ஒப்பற்ற ஞானக்கண்ணால் நாடும் வழியை மறைக்கும் இருளைத் தருகின்ற
தனி இருளாம் என்றும்,
மொழியும் அமுது அல --- பேசுகின்ற பேச்சும்
அமுதம் அல்ல,
உயிர் கவர் வலை என --– உயிரையே கவரும்
வலை என்றும்,
விழையும் இளநகை தளவு
அல
--- விரும்பும் இளம் பற்கள் முல்லை அரும்பு அல்ல,
களவு என --– திருட்டுத் தனத்தை உடையது
என்றும்,
வியன் நாபித் தடமும்
மடு அல
--- வியப்பைத் தருகின்ற தொப்புள் என்னும் இடமும் மடு அல்ல,
படுகுழி என --– படுகுழியாகும் என்றும்,
இடை துடியும் அல --- இடையானது
உடுக்கை அல்ல,
மதன் உரு என --– மன்மதனுடைய உருவம்
ஆகும் என்றும்,
வனமுலை சயிலம் அல --- அழகிய முலைகள்
மலைகள் அல்ல,
கொலை யமன் என --– கொலை புரிகின்ற
யமனே என்றும்,
முலைமிசை புரள் கோவை
தரள மணி அல
--- முலைகளின் மேல் புரளுகின்ற வடமானது முத்து மணி அல்ல,
யமன் விடு கயிறு என --– யமன் விடுகின்ற
பாசக்கயிறே ஆகும் என்றும்,
மகளிர் மகளிரும் அல --- பொதுமாதர்கள்
பெண்கள் அல்ல,
பல வினை கொடு சமையும் உரு என --– பல
வினைகள் சேர்ந்து அமைந்த வடிவங்களே என்றும்,
உணர்வொடு புணர்வதும்
ஒருநாளே
--- உணர்கின்ற ஞான உணர்ச்சியுடன் அடியேன் கூடுகின்ற ஒருநாள் சிறியேனுக்குக்
கிடைக்குமோ?
பொழிப்புரை
வனதேவதைகள் தன்னுடைய சிலம்பணிந்த
அடைக்கலம் புகத் தக்க மலர் போன்ற இரண்டு திருவடிகளை மலர்களைக் கொண்டு வழிபாடு
செய்ய, மலைமீது விளைந்துள்ள
தினைப்புனத்தில் இனிது அமர்ந்திருந்த ஒப்பற்ற மான் போன்ற வள்ளிப் பிராட்டியும், தேவர் வளர்த்த புதல்வியாம் தெய்வயானை
அம்மையும் இரண்டு பக்கங்களிலும் வர,
ஒலி
செய்வதும், முகபடாம் உடையதும், கவளமாக உணவு கொள்வதும், வெண் நிறம் உடையதும், துதிக்கை உடையதும், மலை போன்றதுமான யானை மீதி எழுந்தருளி
வரும் புதுமை வாய்ந்தவரே!
சேர்க்கை இன்பத்தில் விளையாடுகின்ற கங்கணம்
அணிந்தனவும், புளகம் கொண்டு
உள்ளனவும் ஆகிய புயங்களாகிய மலைக் கூட்டத்தை உடையவரே!
அழகு வாய்ந்த உள்ளம் உடையவரே!
யானை, தேர், குதிரைகளுடன் கூடிய அசுர சேனைகட்கு
பயத்தைச் செய்பவரே!
செவ்வாம்பல் மலர்களும், எரிகின்ற தீயும் கருகும்படி ஒளி
வீசுகின்ற திருவுருவை உடைய கடவுளே!
கவுதமர் என்னும் தூய முனிவர் வழிபட, திருவண்ணாமலையில் அறநெறியை வளர்த்த
கருணை வடிவினராம் உமாதேவியார் பெற்ற சரவண மூர்த்தியே!
இந்திரன் போற்றும் பெருமை வாய்ந்தவரே!
நஞ்சும் அமுதமும் இரண்டும் கொண்டு
விளங்குகின்ற இரண்டு கண்களும் தாமரை மலர்கள் அல்ல, நெருப்பில் தோய்ந்த அம்புகளாம் என்றும்,
நறுமணம் கமழும் கத்தூரி வாசனையை உடைய
கூந்தலும் மேகம் அல்ல, ஒப்பற்ற ஞானக்கண்ணால்
நாடும் வழியை மறைக்கும் இருளைத் தருகின்ற தனி இருளாம் என்றும்,
பேசுகின்ற பேச்சும் அமுதம் அல்ல, உயிரையே கவரும் வலை என்றும்,
விரும்பும் இளம் பற்கள் முல்லை அரும்பு
அல்ல, திருட்டுத் தனத்தை
உடையது என்றும்,
வியப்பைத் தருகின்ற தொப்புள் என்னும்
இடமும் மடு அல்ல, படுகுழியாகும்
என்றும்,
இடையானது உடுக்கை அல்ல, மன்மதனுடைய உருவம் ஆகும் என்றும்,
அழகிய முலைகள் மலைகள் அல்ல, கொலை புரிகின்ற யமனே என்றும்,
முலைகளின் மேல்
புரளுகின்ற வடமானது முத்து மணி அல்ல, யமன்
விடுகின்ற பாசக்கயிறே ஆகும் என்றும்,
பொதுமாதர்கள் பெண்கள் அல்ல, பல வினைகள் சேர்ந்து அமைந்த வடிவங்களே
என்றும்,
உணர்கின்ற ஞான உணர்ச்சியுடன் அடியேன்
கூடுகின்ற ஒருநாள் சிறியேனுக்குக் கிடைக்குமோ?
விரிவுரை
விடமும்
அமுதமும் மிளிர்வன இணைவிழி வனசம் அல, தழல் முழுகிய சரம் என ---
இத்
திருப்புகழானது மிகுந்த சுவை உள்ளது. இனிய கனியமுதம் போன்ற சொல்லமைப்பு உள்ளது.
முதலில்
உள்ள நான்கு அடிகளும் விலக்கு அணி ஆகும். இது அன்று, இது ஆகும் என்று சதுரப் பாடாகக் கூறி
மயக்கக் கடலில் அழுந்தும் மாந்தரைக் கைதூக்கி விடுகின்றார் அருணகிரிநாதர்.
பெண்களின்
கண்கள் துன்பம் இன்பம் இரண்டும் செய்யும் இயல்புடையன. ஆதலால், விடமுமமுதமும் மிளிர்வன இணை விழி
என்றார்.
கடுவும்
அமிர்தமும் விரவிய விழியினர் --- (களபமொழுகிய) திருப்புகழ்.
மாதரது
கண் பார்வை நோயும் செய்யும். அந்நோய்க்கு மருந்தும் ஆகும் என்கின்றார்
திருவள்ளுவர்.
இருநோக்கு
இவள் உண்கண் உள்ளது, ஒருநோக்கு
நோய்நோக்கு
ஒன்றுஅந் நோய்க்கு மருந்து.
குளிர்ந்து
தேன் பொழிவது தாமரை. பெண்களின் கம்கள் தாமரைக்குச் சமானம் என்று கூறுவது மரபு. அது
குளிர்ந்த தாமரை அன்று. திகு திகு என்று எரிகின்ற தீயில் காய்ந்த அம்பு ஆகும். அத்துணை
கொடியது என்கின்றார்.
விரைசெய்
ம்ருகமத அளகமும் முகில் அல, ஒரு
ஞான விழியின் வழிகெட இருள்வதொர் இருள் என ---
ம்ருகமதம்
- மான்மதமான கஸ்தூரி. நறுமணம் கமழும் கஸ்தூரி தடவிய கூந்தல் மேகம் போன்று கரியது
என்று புலவர் கூறுவர். அது மேகம் அன்று.
ஒப்பற்ற ஞானக் கண்ணால் காண்கின்ற அருள் வழியை அடியுடன் மறைக்கவல்ல பேரிருளைத்
தரும் அடர்ந்த இருளே ஆகும் என்கின்றார்.
மொழியும்
அமுது அல, உயிர்கவர் வலை என –--
மாதர்கள்
பேசும் வார்த்தையை அமுதம் போன்றது என்பர்.
அம்மொழி அமுதமன்று. உயிரையே
பறிக்கின்ற வலை என உணர்க.
விழையும்
இளநகை தளவு அல களவு என –--
விருப்பத்தை
விளைவிக்கும் அவர்களது இள நகையான பர்களை முல்லை அரும்பு என்று வியந்து கூறுவர்.
அது முல்லை அரும்பு அல்ல. திருட்டுத்தனத்தை இருப்பிடமாகக் கொண்டது என்கின்றார்.
வியன்
நாபித் தடமும் மடு அல படுகுழி என ---
வியன்
- வியப்பு. வியப்பைத் தருகின்ற நாபி என்னும் தொப்புள் ஆற்றிடைப் பள்ளமாகிய மடு
என்று பாராட்டிப் புகழ்ந்து கூறுவர். அது
மடு அன்று. யானைகளைப் பிடிக்க அமைத்த பெரும் குழி ஆகும் என்கின்றார்.
இடை
துடியும் அல, மதன் உரு என –--
துடி
- உடுக்கை. மாதரின் இடையை உடுக்கை போன்றது.
துடி இடை என்று உயர்த்தி உரைப்பர். அது துடி அல்ல. மயக்கத்தைச் செய்யும் மன்மதனுடைய வடிவமாகும்
என்கின்றார்.
மன்மதன்
அநங்கன். அவன் உருவம் கண்ணுக்குத் தெரியாது. அது போல் மாதர் இடையும் நுண்மையானது. மென்மையானது என்று புலவர் கூறுவர்.
வனமுலை
சயிலம் அல, கொலை யமன் என –--
அரிவையரது
அழகிய முலைகள் மலை போன்றது என்று கூறுவர்.
அது மலை அல்ல. கொலை செய்யும் யமனே தான் என்கின்றார்.
முலைமிசை
புரள் கோவை தரள மணி அல, யமன் விடு
கயிறு என
–--
மாதரது
முலைகளில் புரளுகின்ற முத்து மாலையானது, மாலை
அல்ல. மயன் எறிகின்ற பாசக்கயிறு ஆகும் என்கின்றார்.
மகளிர்
மகளிரும் அல, பல வினைகொடு
சமையும் உரு என –--
அந்த
விலைமாதர் உண்மையில் மாதர்கள் அல்லர். அநேக தீவினைகள் கவிந்து வடிவங்களாக
நடமாடுகின்றன.
மாதர் யமன்
ஆகும்,அவர் மைவிழியே
வன்பாசம்,
பீதிதரும்
அல்குல் பெருநரகம், - ஓதஅதில்
வீழ்ந்தோர்க்கும்
ஏற விரகு இல்லை, போரூரைத்
தாழ்ந்தோர்க்கும்
இல்லை தவறு. --- திருப்போரூர்ச்
சந்நிதிமுறை.
சீரும்
வினை அது, பெண் உரு ஆகி, திரண்டு உருண்டு
கூறும்
முலையும்,
இறைச்சியும்
ஆகி,
கொடுமையினால்,
பீறும்
மலமும்,
உதிரமும்
சாயும் பெரும் குழி விட்டு,
ஏறும்
கரை கண்டிலேன்,
இறைவா!
கச்சிஏகம்பனே!. --- பட்டினத்தார்.
உணர்வொடு
புணர்வதும் ஒருநாளே ---
உணர்வு
- மெய்யுணர்வு.
மெய்யுணர்வு தான் ஆன்மாவை ஈடேற வைக்கும். அதனால்
திருவள்ளுவர் மெய்யுணர்தல் என்று ஒரு அதிகாரத்தைக் கூறியருளினார்.
திருக்குறளாகிய
திருமாளிகைக்குக் கோபுரம் போன்றது பாயிரம். அம்மாளிகையின் படுக்கை வீடு போன்றது வாழ்க்கைத்துணை நலம் என்ற அதிகாரம். கொலு
மண்டபம் போன்றது இறைமாட்சி என்னும் அதிகாரம். உணவு விடுதி போன்றது விருந்தோம்பல்
என்ற அதிகாரம். அத் திருமாளிகையின் பூசையறை போன்றது மெய்யுணர்தல் அதிகாரம். பயபக்தியுடன்
வழிபாட்டு அறைக்குள் செல்லவேண்டும். அதுபோல் மிகுந்த அன்புடனும் தூய்மையுடனும்
படிக்க வேண்டிய அதிகாரம் மெய்யுணர்தல்.
ஐயுணர்வு
எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு
இல்லாத வர்க்கு.
ஓர்த்துள்ளம்
உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துஉள்ள
வேண்டா பிறப்பு.
என்பன
மிக உயர்ந்த வாக்குகள்.
ஆதலின்
உணர்வுடன் புணர வேண்டும். அந்நாள் எந்நாள்
வரும் என்று சுவாமிகள் முருகனிடம் முறையிடுகின்றார்.
அடவி
வனிதையர் தனது இரு பரிபுர சரண மலரடி மலர்கொடு வழிபட ---
அடவி
வனிதையர் - வன தேவதைகள்.
கானகத்தில்
தினைப்புனத்தில் வாழ்ந்த வள்ளியம்மையாரை வனத்தில் வாழும் பெண்தெய்வங்கள், அடைக்கலம் என்று கூறி அன்புடன் நறுமலர்களைக் கொண்டு வழிபட்டனவாம்.
தனிமானும்
அமரர் அரிவையும் இருபுடையினும் வர ---
முருகப்
பெருமானுடைய இரு புறங்களில் வள்ளியும் தேவசேனையும் எழுந்தருளி
வருகின்றார்கள். ஒன்று இச்சாசத்தி. மற்றொன்று கிரியாசத்தி. வள்ளிபிபாட்டியைக் கொண்டு இகலோக நலன்களையும், தேவசேனை மூலம் பரலோக நலன்களையும்
முருகப் பெருமான் அடியார்கட்கு வழங்கி அருள்கின்றான்.
வானக
மங்கையும் தேன்வரை வள்ளியும்
இருபுறம்
தழைத்த.....
குஞ்சரக்
கோதையும் குறமகட் பேதையும்
இருந்தன
இருபுறத்து எந்தை என்அமுதம்.... --- கல்லாடம்.
முகர
முகபட கவள தவள கர அசல மிசைவரும் அபிவந ---
முகரம்
- ஒலி. யானையின் முதுகில் இருந்து
இருமணிகள் தொங்கும். யானை நடக்கும்போது
அவை கணீர் கணீர் என்று ஒலி செய்யும்.
முகபடம்
- யானையின் முகத்தில் தங்கம் இரத்தினம் பதித்த அலங்காரத் துணியைத் தொங்க
விடுவார்கள். அதற்கு முபடாம் என்று பெயர்.
யானை
துதிக்கையால் எடுத்து உண்ணும் உணவு கவளம் எனப்பட்டது.
தவளம்
- வெம்மை. முருகன் வெள்ளானை மீது உலா
வருவர். அந்த யானை பிணிமுகம் என்ற பேருடையது.
வேழம்
மேல் கொண்டு ---
ஓடாப்
பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி ---
திருமுருகாற்றுப்படை.
அபிநவம்
- புதுமை. முருகன் புதுமைக்கும்
புதுமையானவன்.
புயகிரி
சமுகம்
---
சமுகம்
- கூட்டம். மலைபோன்ற பன்னிரு புயங்களை
உடையவன் முருகன்.
விகடக ---
விகட
அக. விகடம் - அழகு. அழகிய திருவுள்ளம்
உடைய மூர்த்தி முருகவேள்.
நிசிசரர்
கடக பயிரவ
---
இரவில்
உலாவுகின்ற அசுரர்களின் சேனைகட்கு பயத்தைச் செய்பவன். நிசி - இரவு.
கடகம் - சேனை. பயிரவன் - பயத்தைச்
செய்பவன்.
கயிரவ
மலர்களும் எரி தீயும் கருக ஒளி விடு தனு பர ---
கயிரவம்
- செவ்வாம்பல் மலர். மிகவும் சிவந்த
மலர். இது இரவில் மலர்வது.
முருகப்
பெருமானுடைய திருமேனி மிகவும் சிவந்தது.
செவ்வான்
உருவில் திகழ் வேலவன் --- கந்தர் அனுபூதி.
கையோ
அயிலோ கழலோ முழுதும்
செய்யோய்
மயில்ஏறிய சேவகனே. ---
கந்தர் அனுபூதி.
செய்யன், சிவந்த ஆடையன் --- திருமுருகாற்றுப்படை.
முருகனுடைய
சிவந்த வடிவைக் கண்டு சிவந்த செவ்வாம்பலும் சிவந்த நெருப்பும் கருகி
விடுகின்றனவாம்.
தனு
- உடம்பு. பர – மேலானவன்.
கவுதம
புனித முனி தொழ ---
சிவபெருமானுடைய
இடப் பாகத்தைப் பெற விரும்பிய பார்வதி தேவி, இறைவன் ஆணைப்படி திருவண்ணாமலைக்கு
எழுந்தருளிய போது, கவுதம முனிவருடைய
ஆச்சிரமத்தில் தங்கினார்.
அறம்
வளர் கருணை உமை ---
அம்பிகை
முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்தவள்.
கருணை வடிவானவள்.
கருத்துரை
திருமுருகா, மெய்யுணர்வுடன் புணர்கின்ற நன்னாளை
அருள் புரிவாய்.
No comments:
Post a Comment