38. ஈனர்கள் - அவரில் உயர்ந்தவன்.
இரப்பவன்
புவிமீதில் ஈனன்; அவனுக்கு இல்லை
என்னும் அவன் அவனின் ஈனன்;
ஈகின்ற பேர்தம்மை ஈயாமலே கலைத்
திடும்மூடன் அவனில் ஈனன்!
உரைக்கின்ற
பேச்சிலே பலன்உண்டு எனக்காட்டி
உதவிடான் அவனில் ஈனன்!
உதவவே வாக்குஉரைத்து இல்லை என்றே சொலும்
உலுத்தனோ அவனில் ஈனன்!
பரக்கின்ற
யாசகர்க்கு ஆசைவார்த் தைகள்சொலிப்
பலகால் அலைந்து திரியப்
பண்ணியே இல்லைஎன் றிடுகொடிய பாவியே
பாரில்எல் லோர்க்கும் ஈனன்!
அரக்கு
இதழ்க் குமுதவாய் உமைநேச னே! எளியர்
அமுதனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
அரக்கு இதழ் குமுதம் வாய் உமை நேசனே ---
சிவந்த
இதழும், குமுத மலர் போன்ற
வாயும் உடைய உமையம்மையார் பால் அன்பு மிக்கவனே!
எளியர் அமுதனே --- மெலிந்தவர்க்கு
அமுதம் போன்றவனே!
அருமை மதவேள் --- அருமை மதவேள்
என்பான்,
அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும்
உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே ---
சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
புவி மீதில் இரப்பவன் ஈனன் ---
உலகத்தில் இல்லை என்று பிச்சை எடுப்பவன்
இழிந்தவன்,
அவனுக்கு இல்லை என்னும் அவன், அவனில் ஈனன் --- அவ்வாறு
இரப்பவனுக்கு (பொருளைத் தன் பால் வைத்துக் கொண்டு) இல்லை என்று சொல்பவன் அவனை விடவும் இழிந்தவன்,
ஈகின்ற பேர் தமை ஈயாமலே தடுத்திடும் மூடன்
அவனில் ஈனன் --- கொடுப்போரைக் கொடுக்காமல் படிக்குத் தடுத்துவிடும் அறிவிலியானவன், ஈயாதவனிலும் இழிந்தவன்!
உரைக்கின்ற பேச்சில் பலன் உண்டு
எனக்காட்டி உதவிடான் அவனில் ஈனன் --- சொல்லும் சொல்லிலே நன்மை உண்டு என்று
நம்பும்படி சொல்லி, பிறகு உதவி செய்யாதவன்
அவனை விடவும் இழிந்தவன்,
உதவவே வாக்கு உரைத்து இல்லை என்றே சொலும் உலுத்தனோ
அவனில் ஈனன்
--- கொடுப்பதாகவே வாக்குறுதி கூறி,
பிறகு
இல்லை என்றே கூறிவிடும் கஞ்சத்தனம் உள்ளவனோ எனின் அவனினும் இழிந்தவன்,
பரக்கின்ற யாசகர்க்கு ஆசை வார்த்தைகள்
சொலி --- எங்கும் பரந்து திரிந்து
பிச்சைக்கு வரும் இரவலர்க்கு, தாம் இரந்தது
கிடைக்கும் என்ற நம்பிக்கை
உண்டாகும்படி ஆசைமொழிகள் கூறி,
பலகால் அலைந்து திரியப் பண்ணியே ---
பலதடவை அலைந்து திரியும்படி செய்துவிட்ட பிறகு,
இல்லை என்றிடு கொடிய பாவியே பாரில்
எல்லோர்க்கும் ஈனன் --- இல்லை என்று சொல்லும் கொடிய பாவியே
உலகத்தில்
எல்லோரினும் இழிந்தவன்.
விளக்கம் --- ‘ஏற்பது இகழ்ச்சி', ‘இயல்வது கரவேல்’ ‘ஈவது விலக்கேல்' என்பவை இங்கு உணரத்தக்கவை. அரக்கு -
சிவப்பு நிறம்.
கருத்து --- இரப்பதை விட
இல்லையென்பது இழிவு; அதனினும் ஈவதை
விலக்குதல் இழிவு; அதனினும் பேச்சிலே
பயன் உண்டென நம்பும்படி சொல்லி ஏமாற்றுவது இழிவு; நாளை வா என்று, வந்தபின், இல்லை எனல்
அதனினும் இழிவு; அதனினும் பலமுறை
அலைவித்து இல்லை எனல் இழிவு.
ஈயென்
கிளவி இழிந்தோன் கூற்றே
தாவென்
கிளவி ஒப்போன் கூற்றே
கொடுவென்
கிளவி உயர்ந்தோன்கூற்றே. --- தொல்காப்பியம்.
ஈ
என இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயேன்
என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்
என கொடுத்தல் உயர்ந்தன்று, அதன் எதிர்
கொள்ளேன்
என்றல் அதனினும் உயர்ந்தன்று.... --- புறநானூறு.
நச்சிநீர்
பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்
உச்சிவம்
எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம்
பிச்சர்
நச்சு அரவு அரைப் பெரியசோதி, பேணுவார்
இச்சைசெய்யும்
எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே. --- திருஞானசம்பந்தர்.
No comments:
Post a Comment