நாய் அறியாது




23. நாய் அறியாது...

தாய் அறிவாள் மகள் அருமை! தண்டலைநீள்
     நெறிநாதர் தாமே தந்தை
ஆய் அறிவார் எமது அருமை! பரவையிடம்
     தூதுசென்றது அறிந்தி டாரோ?
பேய் அறிவார் முழுமூடர்! தமிழ்அருமை
     அறிவாரோ? பேசு வாரோ?
நாய்அறியாது ஒருசந்திச் சட்டிப்பா
     னையின் அந்த நியாயம் தானே!

             இதன் பொருள் ---

     மகள் அருமை தாய் அறிவாள் --- தனது மகளின் அருமையை ஈன்ற தாயே அறிவாள்,

     எமது அருமை தண்டலை நீள்நெறி நாதர் தாமே தந்தை ஆய் அறிவார் --- தனக்கு அடியவரான எங்கள் அருமையைத் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள
நீள்நெறி நாதரே தந்தையாக இருந்து அறிவார்,

     பரவையிடம் தூது சென்றது அறிந்திடாரோ ---
சிவபெருமான் தனது அடியவரான சுந்தரர் வேண்ட, பரவை நாச்சியாரிடம் தூது  நடந்ததை உலகத்தவர் அறியமாட்டாரோ?,

     முழு மூடர் பேய் அறிவார் --- முற்றிலும் அறிவு இல்லாத பேதையர் பேய்த் தன்மையையே அறிவார்,

     தமிழ் அருமை அறிவாரோ --- தமிழின் அருமையை அவர் உணர்வாரோ?,

     பேசுவாரோ --- தமிழைப் பற்றி ஏதாவது அவர் பேசுவாரோ?  

     ஒரு சந்திச் சட்டிப்பானையின் அந்த நியாயம் நாய் அறியாது --- ஒருபோதுக்குச் சமைக்கும் சட்டிப்பானையின் உயர்வை நாய் அறியாது.

      விளக்கம் --- உலகுக்கு எல்லாம் தந்தை  இறைவரே ஆகையால் தண்டலை நீள்நெறி நாதர் எமது அருமை அறிவார் என்றார். சுந்தரமூர்த்தி நாயனாரின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பரவையின் ஊடலைத் தவிர்க்க அவர்பால் தூது சென்றது அடியவரின் அருமையையும் தமிழின் அருமையையும் உணர்ந்தே. "பாவலான் ஒருவன் சொல் தமிழ்க்கு இரங்கி, பரவையார் ஊடலை மாற்ற, ஏவல் ஆள் ஆகி, இரவு எலாம் உழன்ற இறைவனே" என்றார் பட்டினத்து அடிகள். ஆகையால் ‘அறிந்திடாரோ?'  என்றார். அறிந்து தெளிந்தவர்கள் அறிவார் என்பது விளங்கும். தான் உணர்ந்ததையே அறிந்து இருக்கும் பேய்த் தன்மை கொண்டவர்,
தாம் கொண்டதையே அறிவார். அவருக்குத் தழியின் அருமை தெரியாது. தெரியாததால் அவர் தமிழைப் பேசவும் மாட்டார்.

     ஒருசந்தி - ஒருபோது, விரத நாள். நோன்பு நாள். ஒரு சந்திப் பானை --- முற்காலத்தில் நோன்புக்குச் சமைப்பதற்கு என்று, தனியே வைத்திருக்கும் சமையல் பானை. நோன்பு முடிந்த பிறகு, அந்தப் பானையை மற்றப் பானைகளோடு வைக்காமல், தனியாகப் பரண் மீது வைத்து விடுவர். அந்தப் பானையின் அருமை அதை வைத்திருப்பவருக்குத் தான் தெரியும்.

     நாய்க்கு எல்லாப் பானையும் ஒரே மாதிரியாகத் தான் தெரியும். அது எந்தப் பானையிலும் வாயை வைக்கும். அதைப் போலவே, மூடர்கள் எல்லோரையும் ஒரு தன்மையராகவே கருதுவர். இதைக் காட்டத்தான், ‘நாய் அறியுமோ ஒரு சந்திப் பானையை?'  என்றும், பெற்றவள் அறிவாள் பிள்ளை அருமை' என்றும் வழங்கும் பழமொழிகளுக்கு விளக்கமாக இந்தப் பாடல் அமைந்தது.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...