சிதம்பரம் - 0639. தியங்கும் சஞ்சலம்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தியங்கும் சஞ்சலம் (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
கீழோன் ஆகிய அடியேனுக்கும் திருவடி இன்பத்தைத் தந்து,
எனது குறை தீர அருள்.


தனந்தந்தம் தனந்தந்தம்
     தனந்தந்தம் தனந்தந்தம்
          தனந்தந்தம் தனந்தந்தம் ...... தனதான


தியங்குஞ்சஞ் சலந்துன்பங்
     கடந்தொந்தஞ் செறிந்தைந்திந்
          த்ரியம்பந்தந் தருந்துன்பம் ...... படுமேழை

திதம்பண்பொன் றிலன்பண்டன்
     தலன்குண்டன் சலன்கண்டன்
          தெளிந்துன்றன் பழந்தொண்டென் ...... றுயர்வாகப்

புயங்கந்திங் களின்துண்டங்
     குருந்தின்கொந் தயன்றன்கம்
          பொருந்துங்கங் கலந்தஞ்செஞ் ...... சடைசூடி

புகழ்ந்துங்கண் டுகந்துங்கும்
     பிடுஞ்செம்பொன் சிலம்பென்றும்
          புலம்பும்பங் கயந்தந்தென் ...... குறைதீராய்

இயம்புஞ்சம் புகந்துன்றுஞ்
     சுணங்கன்செம் பருந்தங்கங்
          கிணங்குஞ்செந் தடங்கண்டுங் ...... களிகூர

இடும்பைங்கண் சிரங்கண்டம்
     பதந்தந்தங் கரஞ்சந்தொன்
          றெலும்புஞ்சிந் திடும்பங்கஞ் ...... செயும்வேலா

தயங்கும்பைஞ் சுரும்பெங்குந்
     தனந்தந்தந் தனந்தந்தந்
          தடந்தண்பங் கயங்கொஞ்சுஞ் ...... சிறுகூரா

தவங்கொண்டுஞ் செபங்கொண்டுஞ்
     சிவங்கொண்டும் ப்ரியங்கொண்டுந்
          தலந்துன்றம் பலந்தங்கும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தியங்கும் சஞ்சலம், துன்பம்
     கடம், தொந்தம் செறிந்து ஐந்து, ந்-
          த்ரியம் பந்தம் தரும் துன்பம் ...... படும் ஏழை

திதம் பண்பு ஒன்று இலன், பண்டன்
     தலன் குண்டன் சலன் கண்டன்
          தெளிந்து உன்தன் பழம் தொண்டு என்று ......உயர்வாகப்

புயங்கம் திங்களின் துண்டம்
     குருந்தின் கொந்து, யன் தன் கம்
          பொருந்தும் கம் கலந்த அம்செம் ...... சடைசூடி

புகழ்ந்தும், கண்டு உகந்தும், கும்-
     பிடும் செம்பொன் சிலம்பு என்றும்
          புலம்பும் பங்கயம் தந்து, ன் ...... குறைதீராய்.

இயம்பும் சம்புகம், துன்றும்
     சுணங்கன், செம் பருந்து அங்குஅங்கு
          இணங்கும் செந் தடங்கண்டும் ...... களிகூர

இடும்பைங்கண் சிரம் கண்டம்
     பதம் தம்தம் கரம் சந்துஒன்று
          எலும்பும் சிந்திடும் பங்கம் ...... செயும்வேலா

தயங்கும் பைஞ் சுரும்பு எங்கும்
     தனந்தந்தந் தனந்தந்தந்
          தடம் தண் பங்கயம் கொஞ்சும் ...... சிறுகூரா!

தவம் கொண்டும், செபம் கொண்டும்
     சிவம் கொண்டும், ப்ரியம் கொண்டும்,
          தலம் துன்று அம்பலம் தங்கும் ...... பெருமாளே.


பதவுரை

      இயம்பும் சம்புகம் --- சொல்லப்படுகின்ற நரிகள்,

     துன்றும் சுணங்கன் --- நெருங்கும் நாய்கள்,

     செம்பருந்து --- சிவந்த கழுகுகள்,

      அங்கு அங்கு இணங்கும் செம்தடம் கண்டும் களிகூர --- ஆங்காங்கே கூடி நிற்கும் ரண களத்தைப் பார்த்து மகிழ்ச்சி மிகும்படி,

      இடும்பை --- அசுரர்களுக்குத் துன்பம் உண்டாக

     கண் சிரம் கண்டம் பதம் தம்தம் கரம் --- அவர்களின் கண், தலை, கழுத்து, கால், அவரவர்களுடைய கைகள்,

     சந்து ஒன்று எலும்பும் சிந்திடும் --- ஒன்றுக்கொன்று பிணைந்திருந்த எலும்புகள், இவை எல்லாம் அழிவுபடும்படி

     பங்கம் செய்யும் வேலா --- துண்டு செய்த வேலவரே!

      தயங்கும் --- ஒளி கொண்ட

     பைம் சுரும்பு எங்கும் --- பசுமையான வண்டுகள் எல்லா இடத்திலும்

     தனந் தந்தந் தனந்  தந்தம் --- தனம் தந்தம் தனம் தந்தம் என்ற ஒலியுடன்

      தடம் தண் பங்கயம் கொஞ்சும் --- குளங்களில் உள்ள குளிர்ந்த தாமரை மலர்களில் கொஞ்சுகின்ற

     சிறு கூரா --- சிறுகூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவரே!

      தவம் கொண்டும் --- தவ நெறியை மேற்கொண்டவர்களும்,

     செபம் கொண்டும் --- மந்திர ஜெபத்தை மேற்கொண்டவர்களும்,

     சிவம் கொண்டும் --- சிவத்தை நாடும் அடியார்களும்,

     ப்ரியம் கொண்டும் --- அன்பு கொண்டும்,

      துன்றும் தலம் --- நாடி அடைகின்ற திருத்தலமாகிய

     அம்பலம் தங்கும் பெருமாளே --- சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

      தியங்கும் சஞ்சலம் துன்பம் --- அறிவைக் கலக்கும் மனக் கவலையும், துன்பமும் கொண்ட

      கடம் தொந்தம் செறிந்து --- இந்த உடலில் சம்பந்தப்பட்டு நெருங்கியுள்ள

     ஐந்து இந்த்ரியம் பந்தம் தரும் --- மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐம்பொறிகளின் தொடர்பினால் உண்டாகும்

     துன்பம் படும் ஏழை --- துன்பத்தில் வேதனைப்படும் அறிவிலியாகிய நான்.

      திதம் பண்பு ஒன்று இலன் --- நிலைத்த நற்குணம் ஒன்றும் இல்லாதவன்,

     பண்டன் --- ஆண்மை இல்லாதவன்,

      தலன் --- கீழானவன்,

     குண்டன் --- இழிந்தவன்,

     சலன் கண்டன் --- கோபம் மிகுந்தவன் ஆகிய நான்,

      தெளிந்து --- அறிவு தெளியப் பெற்று,

     உன்தன் பழம் தொண்டு என்று உயர்வாக --- தேவரீருடைய பழைய அடியவன் என்னும் உயர் நிலையை அடையும்படி,

      புயங்கம் --- பாம்பு,

     திங்களின் துண்டம் --- பிறைச் சந்திரன்,

     குருந்தின் கொந்து --- குருந்த மலரின் கொத்து,

     அயன் தன் கம் --- பிரமனுடைய கபாலம்,

      பொருந்தும் கம் --- பொருந்திய கங்கை நீர்

     கலந்த அம் --- இவை சேர்ந்த அழகிய

     செம் சடை சூடி --- செஞ்சடையரான சிவபெருமான்

     புகழ்ந்தும் கண்டு உகந்தும் கும்பிடும் --- புகழ்ந்தும், பார்த்து மகிழ்ந்தும் கும்பிடுகின்ற உமது,

      செம்பொன் சிலம்பு என்றும் புலம்பும் --- செம்பொன்னாலாகிய சிலம்புகள் எப்போதும் ஒலி செய்கின்ற

     பங்கயம் தந்து என் குறை தீராய் --- தாமரைமலர் போன்ற திருவடிகளைத் தந்தருளி, என்னுடைய குறைகளைத் தீர்த்து அருளுவாய்.

பொழிப்புரை

         சொல்லப்படுகின்ற நரிகள், நெருங்கும் நாய்கள், சிவந்த கழுகுகள்,  ஆங்காங்கே கூடி நிற்கும் ரண களத்தைப் பார்த்து மகிழ்ச்சி மிகும்படி, அசுரர்களுக்குத் துன்பம் உண்டாக அவர்களின் கண், தலை, கழுத்து, கால், அவரவர்களுடைய கைகள், ஒன்றுக்கொன்று பிணைந்திருந்த எலும்புகள், இவை எல்லாம் அழிவுபடும்படி துண்டு செய்த வேலவரே!

         ஒளி கொண்ட பசுமையான வண்டுகள் எல்லா இடத்திலும் தனந்தந்தந் தனந்தந்தம் என்ற ஒலியுடன்  குளங்களில் உள்ள குளிர்ந்த தாமரை மலர்களில் கொஞ்சுகின்ற சிறுகூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவரே!

     தவ நெறியை மேற்கொண்டவர்களும், மந்திர ஜெபத்தை மேற்கொண்டவர்களும், சிவத்தை நாடும் அடியார்களும், அன்பு கொண்டு நாடி அடைகின்ற திருத்தலமாகிய சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         அறிவைக் கலக்கும் மனக் கவலையும், துன்பமும் கொண்ட இந்த உடலில் சம்பந்தப்பட்டு நெருங்கியுள்ள மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐம்பொறிகளின் தொடர்பினால் உண்டாகும் துன்பத்தில் வேதனைப்படும் அறிவிலியாகிய நான். நிலைத்த நற்குணம் ஒன்றும் இல்லாதவன்,  ஆண்மையில்லாதவன், கீழானவன், இழிந்தவன், கோபம் மிகுந்தவன் ஆகிய நான், அறிவு தெளியப் பெற்று, தேவரீருடைய பழைய அடியவன் என்னும் உயர் நிலையை அடையும்படி, பாம்பு பிறைச் சந்திரன் குருந்த மலரின் கொத்து பிரமனுடைய கபாலம், பொருந்திய கங்கை நீர்  ஆகியவை சேர்ந்த அழகிய செஞ்சடையரான சிவபெருமான் புகழ்ந்தும், பார்த்து மகிழ்ந்தும் கும்பிடுகின்ற உமது, செம்பொன்னாலாகிய சிலம்புகள் எப்போதும் ஒலி செய்கின்ற தாமரை மலர் போன்ற திருவடிகளைத் தந்தருளி, என்னுடைய குறைகளைத் தீர்த்து அருளுவாய்.

விரிவுரை

தியங்கும் சஞ்சலம் ---

அறிவைத் தியங்க வைக்கும் மனக்கவலை.

துன்பம் ---

உடம்புக்கு வருகின்ற பனி மழை குளிர் வெயில் நோய் பசி முதலியவற்றால் துன்பங்கள்.

முன்னையது உள்ளக் கவலை.  பின்னையது உடல் கவலை.  இந்த இரண்டையும் சுவாமிகள், கந்தரலங்காரத்தில், புந்திக் கிலேசமும், காயக் கிலேசமும் போக்குதற்கே என்று கூறுகின்றார்.


கடம் தொந்தம் செறிந்த ஐந்து இந்திரியம் பந்தம் தருந் துன்பம் ---

கடம் - உடம்பு.  இந்த உடம்புடன் தொடர்புடைய மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐந்து இந்திரியங்களால் பல துன்பங்கள் விளைகின்றன.

இந்த்ரிய தாப சபலம்அற வந்து, நின்கழல் பெறுவேனோ...
                                                                        --- (ஓலமறை) திருப்புகழ்.

ஏழை ---

ஏழை என்ற சொல்லுக்கு அறிவற்றவன் என்பது பொருள்.  பணம் இல்லாதவன் என்ற பொருளில் இன்று உலகம் பேசுகின்றது.

ஆனால், இலக்கியங்களில் ஏழை என்ற சொல் அறிவற்றவன் என்ற பொருளிலேயே பேசப் பெறுகின்றது.

திதம் பண்பு ஒன்று இலன் ---

திதம் - நிலைபேறு.  நிலைத்த நற்குணம் ஒன்றேனும் இல்லாதவன்.

பண்டன் ---

ஆண்மை இல்லாதவன். மனிதனுக்கு ஆண்மை இருக்க வேண்டும். ஆண்மை உடையவன் பொறிபுலன்களை அடக்கி நன்னெறியில் நிற்பான்.

தலன் ---

தலன் - கீழானவன்.

உள்ளத்தைக் கீழ்நெறியில் போகவிட்டு சிறுநெறி நிற்பவன்.

குண்டன் ---

குண்டன் - இழிந்தோன்.

சலன் கண்டன் ---

சலம் - கோபம்.  கண்டன் - வீரன்ய கோபிப்பதில் வீரன். கோபமே பாவத்தை விளைக்கும்.

தெளிந்து உன்றன் பழந் தொண்டு என்று உயர்வாக ---

அறிவு தெளிந்து, முருகா, உனது பழமையான அடியான் என்னும் உயர்நிலையை அடியேன் பெறவேண்டும் என்று வேண்டுகின்றார்.

அயன் தன் கம் ---

கம் - தலை.

பிரமனது தலையைக் கிள்ளி, சிவபெருமான் அதை மற்றவர்கள் அறிந்து அகந்தை கொள்ளாதிருக்கும் பொருட்டு அணிந்து கொண்டார்.

பொருந்தும் கம் ---

கம் - கங்கை.

அரவு, மதி, தலைமாலை, குருந்தமலர், நதி, இவைகளைச் சென்னியில் சூடிக் கொண்டவர் சிவபெருமான். இதனால் பிஞ்ஞகன் என்று பேர் பெற்றார்.

கங்கையைத் தரித்த வரலாறு

முன்னொரு காலத்தில் உமாதேவியார், திருக்கயிலாய மலையிலுள்ள சோலையிலே ஒரு விளையாட்டாக ஒன்றும் பேசாதவராய்ச் சிவபெருமானுக்குப் பின்புறத்தில் வந்து அவருடைய இரு கண்களையும்  தமது திருக்கரங்களாற் பொத்தினார். அதனால் எல்லா உயிர்களும் வருத்தமடையும்படி புவனங்கள் எங்கும் இருள் பரந்தது. சிவபெருமானுடைய திருக்கண்களினாலேயே எல்லாச் சோதியும் தழைத்த தன்மையினால், சூரியன் சந்திரன் அக்கினி ஆகிய இவர்களின் சுடர்களும் மற்றைத்தேவர்களின் ஒளிகளும் அழிந்து எல்லாம் இருள்மயமாயின. அம்மையார் அரனாரது திருக்கண்களைப் பொத்திய அக் கணமொன்றில் உயிர்கட்கெல்லாம் எல்லையில்லாத ஊழிக்காலங்களாயின. அதனை நீலகண்டப்பெருமான் நோக்கி, ஆன்மாக்களுக்குத் திருவருள் செய்யத் திருவுளங்கொண்டு, தம்முடைய நெற்றியிலே ஒரு திருக்கண்ணையுண்டாக்கி, அதனால் அருளொடு நோக்கி, எங்கும் வியாபித்த பேரிருளை மாற்றி, சூரியன் முதலாயினோர்க்கும் சிறந்த பேரொளியை யீந்தார். புவனங்களிலுள்ள பேரிருள் முழுதும் நீங்கினமையால் ஆன்மகோடிகள் உவகை மேற்கொண்டு சிறப்புற்றன. சிவபெருமானுடைய செய்கையை உமாதேவியார் நோக்கி அச்சமெய்தி அவருடைய திருக்கண்மலர்களை மூடிய இருகர மலர்களையும் துண்ணென்று எடுத்தார், எடுக்கும் பொழுது தமது பத்துத் திருவிரல்களிலும் அச்சத்தினாலே வியர்வைத் தோன்ற, அதனை உமாதேவியார் நோக்கி திருக்கரங்களை யுதறினார். அவ்வியர்வைப் பத்துக் கங்கைகளாய் ஆயிர நூறுகோடி முகங்களைப் பொருந்திச் சமுத்திரங்கள்போல் எங்கும் பரந்தன. அவற்றை அரியரி பிரமாதி தேவர்களும் பிறருங் கண்டு திருக்கயிலையில் எழுந்தருளிய தேவதேவன்பால் சென்று, வணங்கித் துதித்து, “எம்பொருமானே! இஃதோர் நீர்ப்பெருக்கு எங்கும் கல்லென்று ஒலித்து யாவரும் அழியும்படி அண்டங்கள் முழுவதையும் கவர்ந்தது; முன்னாளில் விடத்தையுண்டு அடியேங்களைக் காத்தருளியதுபோல் இதனையுந் தாங்கி எங்களைக் காத்தருளுவீர்” என்று வேண்டினார்கள். மறைகளுங் காணாக் கறைமிடற்றண்ணல் அந்நதியின் வரலாற்றை அவர்களுக்குச் சொல்லி, அதனை அங்கே அழைத்து, தமது திருச் சடையிலுள்ள ஓர் உரோமத்தின் மீது விடுத்தார்.

அதனைக் கண்டு மகிழ்ந்து நான்முகனும் நாராயணனும் இந்திரனும் “எம்மை ஆட்கொண்ட எந்தையே! இவ்வண்டங்களை யெல்லாம் விழுங்கிய கங்கை உமது அருட்சத்தியாகிய அம்பிகையாரது திருக்கரத்தில் தோன்றினமையாலும், உமது திருச்சடையில் சேர்ந்தமையாலும் நிருமலமுடையதாகும். அதில் எமது நகரந்தோறும் இருக்கும்படி சிறிது தந்தருளல் வேண்டும்” என்று வேண்டினார்கள். சிவபெருமான் திருச்சடையிற் புகுந்திருந்த கங்கையிற் சிறிதை அள்ளி அம்மூவர்களுடைய கைகளிலுங் கொடுத்தார். அவர்கள் வாங்கி மெய்யன்போடு வணங்கி, விடைபெற்றுக் கொண்டு தத்தம் நகர்களை யடைந்து அங்கே அவற்றை விடுத்தார்கள். அந்த மூன்று நதிகளுள் பிரமலோகத்தை யடைந்த கங்கை பகீரத மன்னனுடைய தவத்தினாற் பூமியில் மீண்டும் வர, சிவபெருமான் பின்னும் அதனைத் திருமுடிமேல் தாங்கி, பின் இந்த நிலவுலகிற் செல்லும்படி விடுத்தார். அந்நதி சகரர்கள் அனைவரும் மேற்கதி பெற்றுய்யும்படி அவர்கள் எலும்பிற் பாய்ந்து சமுத்திரத்திற் பெருகியது. இதனையொழிந்த மற்றை இரு நதிகளும் தாம்புகுந்த இடங்களில் இருந்தன. தமது அருட் சத்தியாகிய உமையம்மையாருடைய திருக்கரத்திற்றோன்றிய கங்கா நதி உலகங்களை அழிக்காவண்ணம் திருவருண் மேலீட்டால் சிவபெருமான் அதனைத் திருமுடியில் தரித்த வரலாறு இதுவேயாம்.

மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே, மற்றுஒருத்தி
சலமுகத்தால் அவன்சடையில் பாயும்அது என்னேடீ,
சலமுகத்தால் அவன்சடையில் பாய்ந்திலளேல், தரணி எல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடு ஆம் சாழலோ.            --- திருவாசகம்.


புகழ்ந்துங்கண் முகந்துங் கும்பிடும் ---

சிவபெருமான் முருகப் பெருமானைப் புகழ்ந்தும், கண்டு மகிழ்ந்தும், கும்பிட்டும் சிஷ்யபாவத்தை உலகுக்குக் காட்டி அருளினார்.

பங்கயம் தந்து என் குறை தீராய் ---

பங்கயம் - உவம ஆகுபெயராகத் திருவடியைக் குறிக்கின்றது.   திருவடியைத் தந்தால் எல்லாக் குறைகளும் நீங்கும்.

இயம்பும் சம்புகம் ---

சொல்லப்படுகின்ற நரிகள்.  இந்தப் பாடலில் ஐந்தாவது அடியும் ஆறாவது அடியும் போர்க்கள வர்ணனை.

தவங் கொண்டும், செபம் கொண்டும், சிவம் கொண்டும்  ---

தவநெறியை மேற்கொண்ட ஞானிகள் --- சதா மந்திர செபம் புரியும் மந்திரயோகிகள் ---சிவத்தையே நாடும் அடியார்கள்.  இவர்கள் யாவரும் நாடி அடைகின்ற திருத்தலம் சிதம்பரம்.

கருத்துரை

அம்பலநாதா, உன் பதமலர் தந்து குறை தீர்த்து அருள்.


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...