சிதம்பரம் - 0614. கனகசபை மேவும்
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கனகசபை மேவும் (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
எல்லாமும் நீயே


தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதானா


கனகசபை மேவு மெனதுகுரு நாத
     கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண்

கனகநிற வேத னபயமிட மோது
     கரகமல சோதிப் ...... பெருமாள்காண்

வினவுமடி யாரை மருவிவிளை யாடு
     விரகுரச மோகப் ...... பெருமாள்காண்

விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர்
     விமலசர சோதிப் ...... பெருமாள்காண்

சனகிமண வாளன் மருகனென வேத
     சதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண்

சரணசிவ காமி யிரணகுல காரி
     தருமுருக நாமப் ...... பெருமாள்காண்

இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ
     டியல்பரவு காதற் ...... பெருமாள்காண்

இணையிலிப தோகை மதியின்மக ளோடு
     மியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கனக சபை மேவும் எனது குருநாத
     கருணை முருகேசப் ...... பெருமாள் காண்

கனக நிற வேதன் அபயம்இட மோதும்
     கர கமல சோதிப் ...... பெருமாள் காண்

வினவும் அடியாரை மருவி விளையாடு
     விரகு ரச மோகப் ...... பெருமாள் காண்

விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர்
     விமல சர சோதிப் ...... பெருமாள் காண்

சனகி மணவாளன் மருகன் என, வேத
     சத மகிழ் குமாரப் ...... பெருமாள் காண்

சரண சிவகாமி, இரண குலகாரி
     தரு முருக நாமப் ...... பெருமாள் காண்

இனிது வனம் மேவும் அமிர்த குற மாதொடு
     இயல் பரவு காதல் ...... பெருமாள் காண்

இணை இல் இப தோகை மதியின் மகளோடும்
     இயல் புலியுர் வாழ்பொன் ...... பெருமாளே.


பதவுரை

         கனக சபை மேவும் எனது குருநாத --- பொற்சபையில் நடனம் செய்யும் அடியேனுடைய குருநாதராகிய

         கருணை முருகேசப் பெருமாள் காண் --- கருணை நிறைந்த முருகேசப் பெருமாள் நீதான்.

         கனக நிற வேதன் அபயம் இட மோது --- பொன்னிறம் படைத்த பிரமன் ஓ என்று ஓலமிடுமாறு அவன் தலையில் குட்டிய

         கர கமல சோதிப் பெருமாள் காண் --- தாமரை போன்ற கையையுடைய ஒளிமயமான பெருமாள் நீதான்.

         வினவும் அடியாரை மருவி விளையாடு --- தேவரீரை ஆய்ந்து துதிக்கும் அடியார்களிடம் பொருந்தி அவர்களிடம் ஆடல் புரிகின்ற

         விரகு ரச மோகப் பெருமாள் காண் --- ஊக்கம், இன்பம், ஆசை அத்தனையும் உள்ள பெருமாள் நீதான்.

         விதி, முநிவர், தேவர், அருணகிரிநாதர் --- பிரமதேவன், முனிவர்கள், தேவர்கள், அருணாசலேசுவரர்,

         விமல சர சோதிப் பெருமாள் காண் --- மற்றும் தூய்மையாய் என் மூச்சுக்காற்றில் விளங்கும் ஒளி ஆகிய எல்லாம் பெருமாள் நீதான்.

         சனகி மணவாளன் மருகன் என --- ஜானகியின் மணவாளனாகிய சீராமனின் மருமகன் என்று

         வேத சதமகிழ் குமாரப் பெருமாள் காண் --- நூற்றுக் கணக்கான வேதங்கள் சொல்லி மகிழும் குமாரப் பெருமாள் நீதான்.

         சரண சிவகாமி இரணகுல காரி தரு --- அடைக்கலம் அளிக்கும் சிவகாமி, போர் செய்யும் அசுர குலத்தைச் சங்கரித்தவள் ஈன்றருளிய

         முருக நாமப் பெருமாள் காண் --- முருகன் என்னும் திருநாமம் உடைய பெருமாள் நீதான்.

         இனிது வனம் மேவும் அமிர்த குற மாதொடு --- சுகமாக வள்ளிமலைக் காட்டில் வாழ்ந்த அமுதை ஒத்த குறப்பெண் ஆகிய வள்ளியுடன்

         இயல் பரவு காதல் பெருமாள் காண் --- அன்பு விரிந்த காதல் பூண்ட பெருமாள் நீதான்.

         இணை இல் இப தோகை மதியின் மகளோடு --- ஒப்பற்ற யானை வளர்த்த மயில் போன்ற தேவயானையாம் அறிவு நிறைந்த பெண்ணுடன்

         இயல் புலியுர் வாழ் பொன் பெருமாளே --- தகுதி பெற்ற புலியூரில் (சிதம்பரத்தில்) வாழும் அழகிய பெருமையில் சிறந்தவரே.பொழிப்புரை

         பொற்சபையில் நடனம் செய்யும் அடியேனுடைய குருநாதராகிய கருணை நிறைந்த முருகேசப் பெருமாள் நீதான்.

         பொன்னிறம் படைத்த பிரமன் ஓ என்று ஓலமிடுமாறு அவன் தலையில் குட்டிய  தாமரை போன்ற கையையுடைய ஒளிமயமான பெருமாள் நீதான்.

         தேவரீரை ஆய்ந்து துதிக்கும் அடியார்களிடம் பொருந்தி அவர்களிடம் ஆடல் புரிகின்ற ஊக்கம், இன்பம், ஆசை அத்தனையும் உள்ள பெருமாள் நீதான்.

         பிரமன், முனிவர்கள், தேவர்கள், அருணாசலேசுவரர், மற்றும் தூய்மையாய் என் மூச்சுக்காற்றில் விளங்கும் ஒளி ஆகிய எல்லாம் பெருமாள் நீதான்.

         ஜானகியின் மணவாளனாகிய சீராமனின் மருமகன் என்று நூற்றுக் கணக்கான வேதங்கள் சொல்லி மகிழும் குமாரப் பெருமாள் நீதான்.

         அடைக்கலம் அளிக்கும் சிவகாமி, போர் செய்யும் அசுர குலத்தைச் சங்கரித்தவள்,  ஈன்றருளிய முருகன் என்னும் திருநாமம் உடைய பெருமாள் நீதான்.

         சுகமாக வள்ளிமலைக் காட்டில் வாழ்ந்த அமுதை ஒத்த குறப்பெண் ஆகிய வள்ளியுடன் அன்பு விரிந்த காதல் பூண்ட பெருமாள் நீதான்.

         ஒப்பற்ற யானை வளர்த்த மயில் போன்ற தேவயானை என்னும் அறிவு நிறைந்த பெண்ணுடன் தகுதிபெற்ற புலியூரில்  வாழும் அழகிய பெருமையில் சிறந்தவரே.


விரிவுரை


இத் திருப்புகழ் வேண்டுகோள் ஒன்றும் இன்றி, துதிமயமாக அமைந்தது.

கனகசபை மேவு ---

இறைவன் திருநடனம் புரிகின்ற சபைகள் ஐந்து. 

இரத்தின சபை - திருவாலங்காடு,
கனக சபை - சிதம்பரம்,
ரசத சபை - மதுரை,
தாமிர சபை - திருநெல்வேலி,
சித்திர சபை - குற்றாலம்.

கனக சபையில் திருநடனம் புரிகின்ற எனது குருநாதன் கருணை முருகேசன் என்று அடிகளார் துதிக்கின்றார்.  நடராஜ மூர்த்தியும் முருகவேளும் ஒன்றுதான் என்று கூறுகின்றார்.

கனகநிற வேதன் அபயமிட மோது கரகமல ---

பிரணவ மொழிக்குப் பொருள் தெரியாது விழித்த பிரமதேவனுடைய தலையில் குட்டிய திருவிளையாடல் கந்தபுராணத்தில் விரிவாகப் பேசப்படுகின்றது.

நாலுமுகன் ஆதி "அரி ஓம்" என அதாரம்உறை
யாதபிர மாவைவிழ மோதி"பொருள் ஓதுக"என
நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடும் இளையோனே.  --- (வாலவய) திருப்புகழ்

 
வினவும் அடியாரை மருவி விளையாடும் ---

அடியார்கள் முருகப் பெருமானை ஞானநூல்கள் மூலம் ஆராய்ந்து அப் பரமனையே ஓதுவார்கள். அவ்வாறு அன்பு நெறியில் ஈடுபட்ட அடியார்கள் இருக்கும் இடத்தை முருகப் பெருமான் தேடிச் சென்று அவர்களுடன் குழந்தைபோல் ஓடியாடி விளையாடுவான்.

மருவும் அடியார்கள் மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள்கான்...                          --- (திருமகள்) திருப்புகழ்.

மாசில்அடியார்கள் வாழ்கின்ற ஊர்சென்று
தேடி விளையாடியே, அங்ஙனே நின்று
வாழும் மயில் வீரனே! செந்தில் வாழ்கின்ற பெருமாளே..  ---  (மூளும்வினை) திருப்புகழ்.

விமல சர சோதி ---

சரம் - சுவாசம்.  இறைவன் நம்முள் உயிர்ப்பாய் நின்று அருள் புரிகின்றான்.

என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என்னுளே உயிர்ப்பாய் புறம்போந்து புக்கு
என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே.                    ---  அப்பர்.

மலம் இல்லாதவராகவும், உயிர்க்கு உயிராகியும் ஒளி மயமாகியும் முருகன் நின்று அருள் புரிகின்றான்.

சனகி மணவாளன் மருகன் என வேத சதமகிழ் குமார ---

சீதாதேவிக்கு அமைந்த பெருமைகள் அநந்தம். அவற்றுள் தலையாயது ஜனகருடைய புதல்வி என்பது. ஜனகர் பரமஞானி.  அரசாண்டு கொண்டே பற்றற்றவராக விளங்கினார். சுகருக்கே உபதேசம் புரிந்தார்.

ஜானகி என்ற பேர், ஜனகராஜ குமாரி என்று பொருள்படும். தத்திதாந்த நாமம்.

இராகவனுடைய திருமருகன் முருகன் என்று வேதங்கள் வியந்து நயந்து விளம்புகின்றன.

இவ்வாறே இராமேசுரம் திருப்புகழிலும் அருணகிரிநாதர் இயம்புகின்றார்...

ஓலமிடு தாரகை சுவாகுவளர் ஏழுமரம்
வாலியொடு நீலிபக னோடொரு விராதனெழு
மோதகட லோடுவிறல் ராவண கூழாமமரில் பொடியாக

ஓகைதழல் வாளிவிடு முரிதநு நேமிவளை
பாணிதிரு மார்பன்அரி கேசன்மரு காஎனவே
ஓதமறை ராமெசு மேவுகுமரா அமரர் பெருமாளே..    ---  (வாலவய) திருப்புகழ்.

சரண சிவகாமி ---

சிதம்பரத்தில் எழுந்தருளி உள்ள அம்பிகை சிவகாமி.  சரணடைந்தோரைக் காப்பவள்.

இரணகுல காரி ---

இரணம் - போர்.  "குலஹரி" என்ற சொல் "குலகாரி" என வந்தது.  போர் புரியும் அவுணர் குலத்தை அழிப்பவள்.

தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள்
தடமணி முடிபொடி தான்ஆம்படி
செங்கையில் வாள்வாங்கிய சங்கரி  –-- தேவேந்திர சங்க வகுப்பு.

அமிர்த குறமாது ---

அமிர்தம் - மரணத்தைத் தவிர்ப்பது.  வள்ளியம்மை அடியார்களின் மரணத்தை அகற்றுபவள்.

இணையில் இபதோகை மதியின் மகள் ---

இப தோகை - தெய்வயானை.  இவர் முத்தி மாது எனப்படும் கிரியா சத்தி.  ஆதலால், இணை இல்லாதவர் என்றார்.  அறிவு மிகுந்தவர் என்றும் கூறினார்.

புலியூர் ---

புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் வழிபட்ட தலம்.  ஆதலின் சிதம்பரம், புலியூர் எனப் பேர் பெற்றது. 

கருத்துரை

சிதம்பரம் மேவிய செவ்வேளே, அகிலமும் நீயே ஆகும்.


No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...