திருவண்ணாமலை - 0584. முழுகிவட
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முழுகிவட (திருவருணை)

திருவருணை முருகா!
உன்னை நினைந்து வாடும் இந்தப்
பெண்ணைத் தழுவிக் கொள்ள
மயில் மீது வந்து அருள்.

தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான


முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு
     முழுமதிநி லாவி னுக்கும் ...... வசையாலும்

மொழியுமட மாத ருக்கு மினியதனி வேயி சைக்கு
     முதியமத ராஜ னுக்கு ...... மழியாதே

புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ராநி ரைத்த
     புதுமையினி லாறி ரட்டி ...... புயமீதே

புணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ர
     பொருமயிலி லேறி நித்தம் ...... வரவேணும்

எழுமகர வாவி சுற்று பொழிலருணை மாந கர்க்கு
     ளெழுதரிய கோபு ரத்தி ...... லுறைவோனே

இடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்த
     இளமுலைவி டாத சித்ர ...... மணிமார்பா

செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த
     சிவனைமுத லோது வித்த ...... குருநாதா

திசைமுகன்மு ராரி மற்று மரியபல தேவ ருற்ற
     சிறையடைய மீள விட்ட ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


முழுகி வடவா முகத்தின் எழு கனலிலே பிறக்கும்
     முழுமதி நிலாவினுக்கும், ...... வசையாலும்

மொழியும் மட மாதருக்கும், இனிய தனி வேய் இசைக்கும்,
     முதிய மத ராஜனுக்கும் ......   அழியாதே,

புழுகு திகழ் நீபம், அத்தில் அழகிய குரா நிரைத்த
     புதுமையினில் ஆறு இரட்டி ...... புயம் மீதே,

புணரும்வகை தான், நினைத்தது உணரும் வகை, நீல சித்ர
     பொரு மயிலில் ஏறி நித்தம் ...... வரவேணும்.

எழு மகர வாவி சுற்று பொழில் அருணை மாநகர்க்குள்
     எழுத அரிய கோபுரத்தில் ...... உறைவோனே!

இடை துவள, வேடுவச்சி படம் அசையவே, கனத்த
     இளமுலை விடாத சித்ர ...... மணிமார்பா!

செழு மகுட நாகம் மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த
     சிவனை முதல் ஓதுவித்த ...... குருநாதா!

திசைமுகன் முராரி மற்றும் அரிய பல தேவர் உற்ற
     சிறை அடைய மீள விட்ட ...... பெருமாளே.


பதவுரை


      எழு மகர வாவி சுற்று பொழில் --- சுறா மீன்கள் எழுந்து துள்ளி விளையாடுகின்ற குளங்களும், பூஞ்சோலைகளும் சூழ்ந்துள்ள

     அருணை மாநகர்க்குள் --- திருவண்ணாமலை என்னும் மகிமையில் பெரிய திருத்தலத்திற்குள்ளே

     எழுத அரிய கோபுரத்தில் உறைவோனே --- எழுதுதற்கு அரிதான சித்திரங்கள் அமைந்து திருக்கோபுர வாசலில் எழுந்தருளி இருப்பவரே!

      இடை துவள வேடுவச்சி படம் அசையவே --- வேடல் மகளான வள்ளி பிராட்டியின் நூல்போன்ற இடை துவண்டு வாடவும், ஆடை அசையவும்,

     கனத்த இளமுலை விடாத சித்ர மணிமார்பா -  பாரம் பொருந்திய இளமையான முலைகளை விடாத அலங்காரத்துடன் கூடிய இரத்தினமணிகளை அணிந்த திருமார்பை உடையவரே!

      செழு மகுட நாகம் மொய்த்த --- செழுமை வாய்ந்த மாணிக்கத்துடன் கூடிய பணாமகுடம் உடைய பாம்புகள் ஆபரணமாக நெருங்கித் திகழ,

     ஒழுகு புனல் வேணி வைத்த சிவனை --- மேல் வழிந்து ஒழுகுகின்ற கங்கையை சடைமுடியில் வைத்தவராகிய சிவபெருமானை

     முதல் ஓதுவித்த குருநாதா ---- முதலாவதாகிய பிரணவத்தை ஓதும்படி செய்த குருமூர்த்தியே!

      திசைமுகன் முராரி --- திசைகள் தோறும் முகங்களை உடைய பிரமதேவரும், முரன் என்ற அசுரனைக் கொன்றவரும் ஆகிய திருமாலும்,

     மற்றும் அரிய பல தேவர் உற்ற --- மற்றும் உள்ள சிறந்த இந்திரன் முதலிய இமையவரும், சூரபன்மனால் அடைந்த

     சிறை அடைய மீள விட்ட பெருமாளே --- சிறைத் துன்பத்தை ஒழித்து மீட்டு அவரவர்கள் உலகில் அரசாளுமாறு அருள் புரிந்த பெருமையின் மிக்கவரே!

      முழுகி வடவாமுகத்தின் எழு கனலிலே பிறக்கும் முழுமதி நிலாவினுக்கும் ---- வடவாமுக அக்கினியில் முழுகி, அக்கனலின் மயமாக பிறந்து எழுகின்றதாகிய பதினாறு கலைகளுடன் கூடிய சந்திரனுக்கும்,

      வசையாலும் --- ஊரவர் கூறும் வசையினாலும்,

     மொழியும் மடமாதருக்கும் --- என்னைக் கண்டு பழிமொழி கூறுகின்ற மடமை பொருந்திய மகளிர்கட்கும்,

     இனிய தனி வேய் இசைக்கும் --- ஒப்பற்ற இனிமை உடைய குழல் இசைக்கும்,

     முதிய மதராஜனுக்கும் அழியாதே --- மயக்குவதில் முற்பட்டவனாகிய மன்மதனுக்கும், பெண்கொடியாகிய நான் அழிந்து போகாமல்,

      புழுகு திகழ் நீபம் --- புழுகு மணமும், விளங்குகின்ற கடப்பமலர் மாலையும்,

     அத்தில் அழகிய குரா நிரைத்த புதுமையினில் ஆறு இரட்டி புயமீதே ---- சிவப்பு நிறத்தினால் அழகு செய்கின்ற குரா மலர்களும், வரிசையாக விளங்குகின்றதும், அதிசயத்தை விளைப்பதும் ஆகிய பன்னிரு புயங்களின் மீது

       புணரும் வகை தான் நினைத்தது --- தழுவும் வகையையே என் மனதில் எண்ணிய நலத்தினை

     உணரும் வகை --- உலகம் உணரும் பொருட்டு,

     நீல சித்ர பொரு மயிலில் ஏறி --- கழுத்தில் நீலநிறமும், பலவகையான நிறத்தால் அழகும், போர்த்திறமும் உடைய மயில் வாகனத்தின் மீது ஆரோகணித்து

     நித்தம் வரவேணும் --- நாள்தோறும் வந்து அருள வேண்டும்.

பொழிப்புரை


         சுறா மீன்கள் எழுந்து துள்ளி விளையாடுகின்ற குளங்களும், பூஞ்சோலைகளும் சூழ்ந்துள்ள திருவண்ணாமலை என்னும் மகிமையில் பெரிய திருத்தலத்திற்குள்ளே எழுதுதற்கு அரிதான சித்திரங்கள் அமைந்து திருக்கோபுர வாசலில் எழுந்தருளி இருப்பவரே!

         நூல்போன்ற இடை துவண்டு வாடவும், ஆடை அசையவும், பாரம் பொருந்திய இளமையான முலைகளை விடாத அலங்காரத்துடன் கூடிய இரத்தினமணிகளை அணிந்த திருமார்பை உடையவரே!

         செழுமை வாயந்த மாணிக்கத்துடன் கூடிய பணாமகுடம் உடைய பாம்புகள் ஆபரணமாக நெருங்கித் திகழ, மேல் வழிந்து ஒழுகுகின்ற கங்கையை சடைமுடியில் வைத்தவராகிய சிவபெருமானை முதலாவதாகிய பிரணவத்தை ஓதும்படி செய்த குருமூர்த்தியே!

         திசைகள் தோறும் முகங்களை உடைய பிரமதேவரும், முரன் என்ற அசுரனைக் கொன்றவரும் ஆகிய திருமாலும், மற்றும் உள்ள சிறந்த இந்திரன் முதலிய இமையவரும், சூரபன்மனால் அடைந்த சிறைத் துன்பத்தைஒழித்து மீட்டு அவரவர்கள் உலகில் அரசாளுமாறு அருள் புரிந்த பெருமையின் மிக்கவரே!

         வடவாமுக அக்கினியில் முழுகி, அக்கனலின் மயமாக பிறந்து எழுகின்றதாகிய பதினாறு கலைகளுடன் கூடிய சந்திரனுக்கும், ஊரவர் கூறும் வசையினாலும், என்னைக் கண்டு பழிமொழி கூறுகின்ற மடமை பொருந்திய மகளிர்கட்கும், ஒப்பற்ற இனிமை உடைய குழல் இசைக்கும், மயக்குவதில் முற்பட்டவனாகிய மன்மதனுக்கும், பெண்கொடியாகிய நான் அழிந்து போகாமல்,

     புழுகு மணமும், விளங்குகின்ற கடப்பமலர் மாலையும், சிவப்பு நிறத்தினால் அழகு செய்கின்ற குரா மலர்களும், வரிசையாக விளங்குகின்றதும், அதிசயத்தை விளைப்பதும் ஆகிய பன்னிரு புயங்களின் மீது தழுவும் வகையையே என் மனதில் எண்ணிய நலத்தினை உலகம் உணரும் பொருட்டு, கழுத்தில் நீலநிறமும், பலவகையான நிறத்தால் அழகும், போர்த்திறமும் உடைய மயில் வாகனத்தின் மீது ஆரோகணித்து நாள்தோறும் வந்து அருள வேண்டும்.
  
விரிவுரை
 

முழுகி வடவாமுகத்தின் எழு கனலிலே பிறக்கும் முழுமதி நிலாவினுக்கும் ---

எல்லோர்க்கும் குளிர்ந்து இனிமை செய்கின்ற பூரண சந்திரன் காமுகர்க்கு மட்டும் வெப்பம் செய்து துன்பம் செய்பவன்.  சந்திரனைக் கண்டு தனித்துள்ள ஆடவர் அல்லது மகளிர் விரக வேதனையால் வெதும்புவர்.  சந்திரன் பொழிகின்ற தண்ணிய அமுத கிரணங்கள் அவர்கட்கு அனல் பிழம்பு போல் தோன்றும்.

தூயபனித் திங்கள்கண்டு சுடுவதுஎனப் பித்துஏற்று
மாயமடவார் மயக்கு ஒழிவது எந்நாளோ..     --- தாயுமானார்.

சந்திரன் வடவாமுக அக்கினியில் குளித்து அத்தீயின் மயமாக எழுந்து கொதித்து வதைக்கின்றான் என்று கூறுகின்றனர்.

இத் திருப்புகழ் நாயகீ நாயக பாவத்தில் அமைந்தது.  இறைவனை நாயகனாகக் கொண்டு ஆன்மா அவ் இறைவனைக் கலந்து இன்புறுதற்கு உள்ளம் விழைந்து காதல் கொண்டு, அளவற்ற காதலால் துடித்து நிற்கின்ற நிலையைப் பற்றி இவ் அழகிய திருப்புகழ் எடுத்து இனிமையாக இயம்புகின்றது.

முழைவாய் திறந்து தெழித்துஅடரும்
         மூரி எருமைப் பெரும்பகடு ஊர்ந்து
ஒழியாது உவரி கூழ்கடந்த
         உலகில் வாழ்பல் உயிர் கவர்ந்து
பழிகூர் வெய்ய கரும்கூற்றைத்
         தருமன்எனப் பேர்பகர்ந்திடுவோர்க்கு
அழல்மா மதியைத் தண்மதி என்று
         உரைக்கும் மாற்றம் அரிதேயோ.

"பொல்லாத எருமைக் கடாவின் மீது வந்து ஒழியாமல் கடல் சூழ்ந்த உலகிலுள்ள உயிர்களை எல்லாம் கவர்ந்து, பல காதலரையும் பிரித்து பலர்க்கு இடுக்கண் புரியும் பழியை உடைய வெய்ய கூற்றுவனை தருமன் என்று உலகம் கூறுவது போல், தழல் மதியைத் தண்மதி என்று உலகம் கூறுகின்றது" என்று அதிவீரராம பாண்டியர் கூறுமாறு காண்க.

வசையாலும் ---

"முருகா! நான் நின்மீது காதல் கொண்டு சதா நின்னைக் கலந்து இன்புற வேண்டுமென்று ஏங்குகின்றேன். உன்னை நான் கூடும் நாள் என்று கொலோ? இரவிலே தூக்கம் வரவில்லை. உணவும் ஏற்றுக் கொள்ளவில்லை. உலக இன்பமும் எனக்குக் கசப்பாக இருக்கின்றது. என் காதலை நீ அறியாயோ? நான் இங்ஙனம் பித்துப் பிடித்தவள் போல் இருப்பது கண்டு, ஊரில் உள்ளோர் 'இவள் ஒரு பிச்சு, சித்தப்ரமை, இவளா முருகனை அடையத் தக்கவள்? வீண் முயற்சி. மால்கொண்டு அலைகின்றனள்' என்று என்னை வசை கூறி ஏசுகின்றனர்.  எம்பெருமானே! இவ்வசை தீரவும், இசை கூறவும் என்னை வந்து தழுவுவாய்" என்று சுவாமிகள் புலம்புகின்றனர்.

மண்உறங்கும், விண்உறங்கும், மற்றுஉள எலாம் உறங்கும்,
கண்உறங்கேன் எம்இறைவர் காதலால், பைங்கிளியே.

விண்ணவர்தம் பால்அமுதம் வேப்பங்காய் ஆக, என்பால்
பண்ணியது என் அண்ணல் மயல், பார்த்தாயே பைங்கிளியே.
 
நானே கருதின் வர நாடார், சும்மா இருந்தால்
தானே அணைவர், அவர் தன்மை என்னோ பைங்கிளியே.

என்று தாயுமானார் தன் காதல் பெருக்கால் கழறுமாறு காண்க.

இனிய தனி வேயிசைக்கும் ---

காதல் மீதூர்ந்தவர்க்கு வேய்ங்குழலோசை அக் காதலை அதிகப்படுத்தி வருத்தும். இன்னும் கடலோசை, குயிலோசை, விடைமணி ஓசை இவைகளும் காதலை வளர்க்கும்.

"எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி" எனப் பழநிப் பாடலிலும்,

துள்ளுமத வேள்கைக் கணையாலே
தொல்லை நெடுநீலக் கடலாலே
மெள்ள வருசோலைக் குயிலாலே
மெய்யுருகு மானைத் தழுவாயே....

எனப் பொதுப் பாடலிலும் கூறுமாறு காண்க.

"கருமை விழியாய் நான் அவர்மேல் காதல் ஒழியேன் கனவிலுமே" என்ற வடலூர் வள்ளலார் திருவாக்கு எந்தக் கல்மனத்தைத் தான் உருக்காது.

முதியமத ராஜனுக்கும் ---

முதிய என்ற அடை மன்மதனுடைய மயக்கும் திறத்தினைத் தெரிவிக்கின்றது. முதுமை - முதிர்ச்சி.  மலர்க் கணை ஏவி உயிர்களை மயக்குவதில் வல்லவன். 

குரா நிறைத்த ---

முருகவேளுக்கு குராமலர் மிகவும் உகந்ததாகும்.  திருவிடைக்கழி என்ற திருத்தலத்தில் குராமர நிழலில் பெருமான் எழுந்தருளி இருக்கின்றனர்.

சிறக்கு மாதவர் முனிவரர் மகபதி
இருக்கு வேதனும் இமையவர் பரவிய
திருக்கு ராவடி நிழல்தனில் உலவிய  பெருமாளே.... --- பெருக்கமாகிய (திருப்புகழ்)
        
மொகுமொகென மதுபமுரல் குரவு விளவினதுகுறு
முறிய மலர் வகுளதள முழுநீல தீவரமும்..   ---  சீர்பாத வகுப்பு.

 
எழு மகர வாவி........ கோபுரத்தில்....... உறைவோனே ---

மகரம் - சுறாமீன்.  முதலை என்றாலும் இழுக்கில்லை.  மகர மீன் கடலிலேதான் வாழும்.  அதனால் கடலுக்கு மகராலயம் என்று பேர்.  திருவண்ணாமலையில் உள்ள தடாகங்கள் கடல்போல் பரந்து மகர மீன்களுக்கு உறைவிடமாகத் திகழ்கின்றன என்று வாவியின் சிறப்பைக் கூறினார்.

கோபுரத்தினின்றும் விழுந்தபோது குருமூர்த்தமாகத் தோன்றி, தன்னை ஆட்கொண்ட ஞானபண்டிதன் திருவருணைக் கோபுரத்தின் வடபுறத்தில் வீற்றிருக்கின்றனர்.

"அருணைநகர் கோபுர விருப்பனே போற்றி" என்றார் பெரியமடத் திருப்புகழில்.


இடைதுவள வேடுவச்சி ….....  மணிமார்பா ---

வேடுவச்சி என்றது ஜீவான்மா. 
இடை என்றது அஞ்ஞானம். 
தனம் என்றது ஞானம். 

ஞானம் மிகவும் வளர்ந்து பூரணத்துவம் பெறும்போது அறியாமையாகிய அஞ்ஞானம் தோய்கின்றது.  ஒளி உண்டானால் இருள் தானே போவது போல.  ஞானமாகிய தனம் வளர்ந்தால் அஞ்ஞானமாகிய இடை துவண்டது.  ஞானபண்டிதன் ஞானத்தை விடாது அணைந்து நிற்பன் என்ற அருட்குறிப்பை நுனித்து உணர்க.

சிவனை முதல் ஓதுவித்த குருநாதா ---

"அயன் அறியாத தனிமொழிக்குப் பொருள் நீ உணர்வையோ" என்று சிவபெருமான் கேட்க, "உணர்வோம்" என முருகவேள் மொழிந்தனர். "ஆயின் சொல்லப்பா" என்றார் அரனார்.  ஆறுமுகனார், "மாணவ முறையில் நில்லப்பா" என்றனர்.  உடனே சிவமூர்த்தி சீடபாவகமாக எழுந்து தொழுது நிற்க, குருமூர்த்தியாக இருந்து குமாரக் கடவுள் "ஓம்" என்ற ஒருமொழியின் உட்பொருளை உபதேசித்து அருளினார்.  அதனால் "புத்ரகுரு" என்றும், "தகப்பன் சுவாமி" என்றும் "குழந்தைக் குருநாதன்" என்றும் முருகவேள் அழைக்கப்படுகின்றார்.

நாதா குமரா நம! என்று அரனார்
ஓதாய் என, ஓதியது எப்பொருள்தான்...    --- கந்தர் அநுபூதி.
  
அரவு புனைதரு புனிதரும் வழிபட
மழலை மொழிகொடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருள்என அருளிய  பெருமாளே... 
                                                          --- குமரகுருபரகுணதர(திருப்புகழ்.)

இமையோரை....
ஓதுவித்த நாதர் கற்க ஓதுவித்த முனிநாண
ஓர்எழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே...   --- வேதவெற்பிலே (திருப்புகழ்)

என்பன ஆதி அமுத வாக்குகளையும் ஈண்டு உய்த்து உணர்க.

திசைமுகன் முராரி …...  சிறை அடைய மீளவிட்ட ---

சூரபன்மன் மாலயனாதி வானவர்களை விலங்கிட்டுச் சிறைப்படுத்தி ஏவல்கொண்டு துன்புறுத்தினான்.  பல யுகங்கள் பண்ணவர்கள் பருவரல் உற்றனர்.  எந்தை கந்தவேள் வேற்படையால் சூராதியவுணரை வாட்டி, தேவர் சிறை மீட்டு ஆட்கொண்டனர்.

கருத்துரை
 

திருவருணையில் மேவிய தேவாதி தேவ! குறமகள் கொழுந! சிவகுருநாத! தேவர் சிறைமீட்ட தெய்வசிகாமணியே! நின்மீது காதல் கொண்டு வாடும் என்னைத் தழுவ மயில்பரி மீது வந்து அருள்வீர்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...