அறிவுளோர்
தமக்கு நாளும்
அரசரும் தொழுது வாழ்வார்,
நிறையொடு
புவியில் உள்ளோர்
நேசமாய் வணக்கம் செய்வார்,
அறிவுளோர்
தமக்கு யாதோர்
அசடது வருமே ஆகில்,
வெறியரென்று
இகழார் என்றும்
மேதினி உள்ளோர் தாமே.
இதன்
பொருள் ---
அறிவுளோர் தமக்கு --- அறிவு உடைய
நல்லோருக்கு
நாளும் அரசரும் தொழுது வாழ்வார் --- நாள்தோறும், யாரையும் வணங்காத
மன்னரும் வணக்கம் செய்து வாழ்வார்கள்.
நிறையொடு புவியில் உள்ளோர் நேசமாய் வணக்கம்
செய்வார் --- நிறையுள்ள உலகத்தாரும் அவர்களிடத்திலே அன்புடன் வணக்கம்
செய்வார்கள்,
அறிவுளோர் தமக்கு --- அத்தகைய அறிவு உடைய பெரியார்களின் செயலிலே
யாது ஓர் அசடு அது வருமே ஆகில் --- ஏதேனும் ஒரு தாழ்வு வந்து விட்டால்,
என்றும் --- எக்காலத்தும்,
மேதினி உள்ளோர் தாம் --- உலகத்தில் உள்ளோர்
வெறியர் என்று இகழார் --- அவரைப் பித்தர் என்றும்
வெறியர் என்றும் என்று இகழ்ந்து கூற மாட்டார்கள்.
விளக்கம் --- பின் வரும் ஔவையார் அருளிய
மூதுரைப் பாடல்களை எண்ணுக.
சீரியர்
கெட்டாலும் சீரியரே, சீரியர்மற்று
அல்லாதார்
கெட்டால் அங்கு என்ஆகும் - சீரிய
பொன்னின்
குடம் உடைந்தால் பொன் ஆகும், என்ஆம்
மண்ணின்
குடம் உடைந்தக் கால்
மன்னனும்
மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்,
மன்னனில்
கற்றோன் சிறப்பு உடையன் - மன்னற்குத்
தன்
தேசம் அல்லால் சிறப்பு இல்லை, கற்றோற்குச்
சென்ற
இடம் எல்லாம் சிறப்பு.
ஆகவே, கற்றறிவு உடையோர் யாராலும் மதிக்கப்படுவர்.
வினை வயத்தால் அவர்களிடத்திலே யாதானும் ஒரு தாழ்வு காணப்படுமானால், அறிவு உடைய நல்லோர்
இகழ மாட்டார்கள். அறிவில்லாதவர்களே
இகழ்ந்து கூறுவார்கள்.
No comments:
Post a Comment