அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சகுடம் உந்தும்
(சிதம்பரம்)
சிதம்பர முருகா!
அடியேன் பொதுமாதர் மீது
வைத்த மயலை நீக்கி,
உனது திருத்தொண்டுக்கு ஆக்கி, ஆண்டு அருள்.
தனனதந்தம்
தனனதந்தம்
தனனதந்தம் தானந்தம்
தனனதந்தம் தனனதந்தம்
தனனதந்தம்
தானந்தம்
தனனதந்தம் தனனதந்தம்
தனனதந்தம் தானந்தம் ...... தனதான
சகுடமுந்துங்
கடலடைந்துங்
குளமகிழ்ந்துந் தோய்சங்கங்
கமுகடைந்தண் டமுதகண்டந்
தரளகந்தந்
தேர்கஞ்சஞ்
சரமெனுங்கண் குமிழதுண்டம்
புருவெனுஞ்செஞ் சாபம்பொன் ......
திகழ்மாதர்
சலசகெந்தம்
புழுகுடன்சண்
பகமணங்கொண் டேய்ரண்டந்
தனகனம்பொன் கிரிவணங்கும்
பொறிபடுஞ்செம்
பேர்வந்தண்
சலனசம்பொன் றிடைபணங்கின்
கடிதடங்கொண் டாரம்பொன் ...... தொடர்பார்வை
புகலல்கண்டஞ்
சரிகரம்பொன்
சரணபந்தந் தோதிந்தம்
புரமுடன்கிண் கிணிசிலம்பும்
பொலியலம்புந்
தாள்ரங்கம்
புணர்வணைந்தண் டுவரொடுந்தொண்
டிடர்கிடந்துண் டேர்கொஞ்சுங் ......
கடைநாயேன்
புகழடைந்துன்
கழல்பணிந்தொண்
பொடியணிந்தங் காநந்தம்
புனல்படிந்துண் டவசமிஞ்சுந்
தவசர்சந்தம் போலுந்திண்
புவனிகண்டின் றடிவணங்குஞ்
செயல்கொளஞ்செஞ் சீர்செம்பொன் ......
கழல்தாராய்
திகுடதிந்திந்
தகுடதந்தந்
திகுடதிந்திந் தோதிந்தம்
டகுடடண்டண் டிகுடடிண்டிண்
டகுடடண்டண் டோடிண்டிண்
டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண்
டிமுடடிண்டென் றேசங்கம் ...... பலபேரி
செககணஞ்சஞ்
சலிகைபஞ்சம்
பறைமுழங்கும் போரண்டஞ்
சிலையிடிந்துங் கடல்வடிந்தும்
பொடிபறந்துண் டோர்சங்கஞ்
சிரமுடைந்தண் டவுணரங்கம்
பிணமலைந்தன் றாடுஞ்செங் ......
கதிர்வேலா
அகிலஅண்டஞ்
சுழலஎங்கும்
பவுரிகொண்டங் காடுங்கொன்
புகழ்விளங்குங் கவுரிபங்கன்
குருவெனுஞ்சிங்
காரங்கொண்
டறுமுகம்பொன் சதிதுலங்குந்
திருபதங்கந் தாஎன்றென் ......
றமரோர்பால்
அலர்பொழிந்தங்
கரமுகிழ்ந்தொண்
சரணமுங்கொண் டோதந்தம்
புனைகுறம்பெண் சிறுமியங்கம்
புணர்செயங்கொண்
டேயம்பொன்
அமைவிளங்கும் புலிசரம்பொன்
திருநடஙகொண் டார்கந்தம் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
சகுடம்
உந்தும் கடல் அடைந்து உங்கு
உளமகிழ்ந்தும், தோய் சங்கம்
கமுகு அடைந்த அண்டு அமுது கண்டம்,
தரள
கந்தம் தேர் கஞ்சம்
சரம் எனும் கண் குமிழ், துண்டம்
புரு எனுஞ்செம் சாபம், பொன் ...... திகழ்மாதர்
சலச
கெந்தம் புழுகுடன் சண்-
பக மணம் கொண்டு ஏய், ரண்டுஅம்
தன கனம் பொன் கிரி, வணங்கும்
பொறி
படும் செம் பேர் வந்து அண்
சலன சம்பு ஒன்று இடை, பணங்கின்
கடிதடம் கொண்டு, ஆரம் பொன் ...... தொடர் பார்வை
புகலல்
கண்டு அம் சரிகரம், பொன்
சரண பந்தம் தோதிந்தம்,
புரமுடன் கிண்கிணி சிலம்பும்
பொலி
அலம்பும் தாள், ரங்கம்
புணர்வு அணைந்து அண்டு வரொடும் தொண்டு
இடர் கிடந்து உண்டு ஏர்கொஞ்சும்
...... கடைநாயேன்
புகழ்
அடைந்து, உன் கழல்பணிந்து, ஒண்
பொடி அணிந்து, அங்கு ஆநந்தம்
புனல்படிந்து, உண்டு, அவசம் மிஞ்சும்
தவசர்
சந்தம் போலும் திண்
புவனி கண்டு, இன்று அடிவணங்கும்
செயல்கொள அம்செம் சீர்செம்பொன்
...... கழல்தாராய்.
திகுடதிந்திந்
தகுடதந்தந்
திகுடதிந்திந் தோதிந்தம்
டகுடடண்டண் டிகுடடிண்டிண்
டகுடடண்டண் டோடிண்டிண்
டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண்
டிமுடடிண்டு என்றே சங்கம் ......
பலபேரி
செககணஞ்சஞ்
சலிகை பஞ்சம்
பறை முழங்கும் போர் அண்டம்
சிலை இடிந்தும், கடல் வடிந்தும்,
பொடி
பறந்து உண்டோர் சங்கம்
சிரம் உடைந்து, அண்டு அவுணர் அங்கம்
பிணம் அலைந்து அன்று ஆடும் செங் ......
கதிர்வேலா!
அகில
அண்டம் சுழல, எங்கும்
பவுரி கொண்டு அங்கு ஆடும் கொன்,
புகழ் விளங்கும் கவுரி பங்கன்,
குரு
எனும் சிங்காரம் கொண்டு,
அறுமுகம் பொன் சதி துலங்கும்
திருபதம் கந்தா என்று என்று ...... அமரோர்பால்
அலர் பொழிந்து, அம் கரம் முகிழ்ந்து, ஒண்
சரணமும் கொண்டு ஓத, அந்தம்
புனை குறம்பெண் சிறுமி அங்கம்
புணர்செயம் கொண்டே, அம் பொன்
அமை விளங்கும் புலிசரம், பொன்
திருநடம் கொண்டார் கந்த! அம் ......
பெருமாளே!
பதவுரை
திகுட திந்திந் தகுட
தந்தந் திகுட திந்திந் தோதிந்தம் டகுட டண்டண் டிகுட டிண்டிண் டகுட டண்டண் டோடிண்டிண் டிமுட டிண்டிண் டுமுட டுண்டுண் டிமுட டிண்டு என்றே சங்கம் பல பேரி --- திகுட திந்திந்
தகுட தந்தந் திகுட திந்திந் தோதிந்தம் டகுட டண்டண் டிகுட டிண்டிண் டகுட டண்டண் டோடிண்டிண் டிமுட டிண்டிண் டுமுட டுண்டுண் டிமுட டிண்டு என்று ஒலிக்கும் சங்கமும்
பல பேரிகைகளும்,
செக கணம்
சஞ்ச(ல்)லிகை பஞ்சம் பறை முழங்கும் போர் --- செககணம்சம் என
ஒலி எழுப்பும் சல்லிகை என்ற பெரும் பறையும், ஐந்து வகையான பறைகளும் முழங்குகின்ற போர்க்களத்தில்,
அண்டம் சிலை
இடிந்தும்
--- பூமியும் மலைகளும் பொடிபடவும்,
கடல் வடிந்தும் --- கடல் வற்றவும்,
பொடி பறந்து உண்டோர் சங்கம் சிரம்
உடைந்து --- தூள் பறக்கவும்,
அங்கு
இருந்த அசுர கூட்டத்தினரின் தலைகள் உடையவும்,
அண்டு அவுணர் அங்கம் --- நெருங்கி
வந்த அசுரர்களின் உடல்
பிணம் அலைந்து --- பிணமாகும்படி
எதிர்த்துப் போர் புரிந்தும்,
அன்று ஆடும் செம் கதிர் வேலா --- அன்று
திருவிளையாடல் புரிந்த செவ்விய ஒளி பொருந்திய வேலாயுதத்தை ஏந்தியவரே!
அகில அண்டம் சுழல --- எல்லா
உலகங்களும் சுழலும்படி
எங்கும் பவுரி கொண்டு அங்கு ஆடும் கொன்
--- எங்கும் பவுரிக் கூத்தை இயற்றுகின்ற தலைவரே! ("கோன்" என்னும் சொல் சந்தத்தை நோக்கி, "கொன்" எனக் குறுகி வந்தது)
புகழ் விளங்கும் கவுரி பங்கன் குரு எனும்
சிங்காரம் கொண்டு --- புகழ் விளங்குகின்ற உமாதேவியைப் இடப் பக்கத்தில் கொண்ட
சிவபெருமானுக்கு குருமூர்த்தி என்கின்ற அழகிய பெருமையோடு,
அறுமுகம் ---
ஆறுதிருமுகங்களையும்,
பொன் சதி துலங்கும் திரு பதம் கந்தா
--- தாள ஒத்துடன் திருநடனம் புரிகின்ற அழகிய திருவடிகளை உடைய கந்தப் பெருமானே
என்று என்று அமரோர் பால் அலர் பொழிந்து
--- என்று போற்றி தேவர்கள் மலர்களைச் சொரிந்து
அம் கரம் முகிழ்ந்து --- அழமிய தமது
கரங்களைக் கூப்பி,
ஒண் சரணமும் கொண்டு ஓத --- ஒளி
பொருந்திய தேவரீரது திருவடிகளை மனத்துள் கொண்டு புகழ,
அந்தம் புனை
குறம்பெண் சிறுமி அங்கம் புணர் செயம் கொண்டே --- அழகினைக் கொண்ட
குறச் சிறுமியாகிய வள்ளிபிராட்டியரைத் தழுவி, வெற்றியைக் கொண்டு,
அம்பொன் அமை விளங்கும் புலிசரம் பொன்
திருநடம் கொண்டார் கந்த --- அழகிய பொன்னம்பலம் விளங்கும் திருப்புலீச்சுரம்
என்னும் சிதம்பரத்தில் ஆனந்த்த் திருநடம் புரியும் சிவபெருமான் அருளிய கந்தப்
பெருமானே!
அம் பெருமாளே --- அழகிலும் பெருமையிலும் மிக்கவரே!
சகுடம் உந்தும் கடல்
அடைந்து உங்கு உ(ள்)ள மகிழ்ந்தும் --- நீர்ப் பாசிகள் மேற்பட்டுக்
கிடக்கும் கடல் போன்ற வாழ்க்கையைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தும்,
தோய் சங்கம் கமுகு
அடைந்து அண்டு அமுது கண்டம் --- சங்கு போலவும் கமுகு போலவும் பொருந்தி நெருங்கி, அமுதம் பொதித்த
கழுத்து,
தரள கந்தம் தேர் --- முத்து மாலைகளை
அணிந்துள்ளது,
கஞ்சம் சரம் எனும் கண் --- தாமரை, அம்பு இவைகளுக்கு ஒப்பான கண்கள்,
குமிழ துண்டம் --- குமிழம் பூவைப் போன்ற
நாசி,
புரு எனும் செம் சாபம் --- வில் போலும் வளைந்துள்ள அழகிய புருவம்,
பொன் திகழ் மாதர் --- அழகு விளங்கும்
விலைமாதர்கள்
சலச கெந்தம் புழுகு
உடன் சண்பக மணம் கொண்டு ஏய் --- தாமரை மொட்டுப் போன்றதும், நறு மணமுள்ள புனுகு சட்டம் சண்பகம்
இவற்றின் நறுமணம் கொண்டுள்ள
ரண்டு அம் தன கனம் பொன் கிரி வணங்கும் பொறி படும் --- பொன் மலையாகிய மேருவையும் கீழ்ப்படச் செய்யும் தேமல் பரந்த
இரண்டு கனத்த மார்பகங்கள்,
செம் பேர் வந்து அண்
சலன சம்பை ஒன்று இடை --- பலரும் நெருங்க ஆசைப்படும், அசைவு கொண்டுள்ள மின்னலுக்கு ஒப்பான
இடை,
பணங்கின் கடி தடம் கொண்டார் --- பாம்புப்
படம் போன்ற பெண்குறி கொண்டவர்கள்.
அம் பொன் தொடர் பார்வை --- பொருளைத்
தேடுவதிலேயே நாட்டம் செலுத்தும் பார்வை கொண்டவர்கள்,
புகலல் கண்டு அம் சரி
கரம் பொன் சரண பந்தம் தோதிந்தம் --- சொல்லுவது போல் வெளிப்படுத்த
அழகிய கையில் உள்ள பொன் வளையலும்,
காலில்
கட்டப்பட்டுள்ள தோதிந்தம் என ஒலிப்பதுமான
புரம் உடன் கிண்கிணி சிலம்பும் பொலி
அலம்பும் தாள் ரங்கம் புணர்வு அணைந்து அண்டுவர் ஒடும் --- நூபுரத்துடன்
கிண்கிணியும் சிலம்பும் விளங்கி ஒலிக்கின்ற பாதங்களுடன் அசைந்து நடந்து வந்து பொருந்துபவருக்கு
தொண்டு இடர்
கிடந்துண்டு ஏர் கொஞ்சும் கடை நாயேன் --- தொண்டு செய்யும் வேதனையில்
பட்டுக் கிடந்து, அவர் அழகில் ஈடுபட்டுக் கொஞ்சுகின்ற நாயில் கடையவனான அடியேன்
புகழ் அடைந்து உன்
கழல் பணிந்து
--- புகழ் பெற்று, தேவரீரது திருவடியைப்
பணிந்து,
ஒண் பொடி அணிந்து --- ஒள்ளிய திருநீற்றை
அணிந்து,
அங்கு ஆநந்தம் புனல் படிந்துண்டு --- ஆனந்தக்
கண்ணீரில் படிந்து,
அவச(ம்) மிஞ்சும் தவசர் சந்தம் போலும்
திண் புவனி கண்டு --- பரவசம் மேம்படும் தவசிகளுடைய சுகம் போன்று, வலிய இப்பூமியின் நிலையாமையை அறிந்து,
இன்று அடி வணங்கும் செயல் கொள --- இப்பொழுதே
உனது திருவடியை வணங்கும் பணியை மேற் கொள்ள
அம் செம் சீர் செம் பொன் கழல் தாராய்
--- அழகிய செவ்விய சீரான செம் பொன்னாலாகிய கழல்கள் அணிந்த திருவடியைத் தந்து
அருளுக.
பொழிப்புரை
திகுட திந்திந் தகுட தந்தந் திகுட திந்திந் தோதிந்தம் டகுட டண்டண் டிகுட டிண்டிண் டகுட டண்டண் டோடிண்டிண் டிமுட டிண்டிண்
டுமுட டுண்டுண் டிமுட டிண்டு என்று ஒலிக்கும் சங்கமும் பல பேரிகைகளும், செககணம்சம் என ஒலி எழுப்பும் சல்லிகை
என்ற பெரும் பறையும், ஐந்து வகையான பறைகளும்
முழங்குகின்ற போர்க்களத்தில், பூமியும் மலைகளும் பொடிபடவும், கடல் வற்றவும், தூள் பறக்கவும், அங்கு இருந்த அசுர கூட்டத்தினரின்
தலைகள் உடையவும், நெருங்கி வந்த
அசுரர்களின் உடல் பிணமாகும்படி எதிர்த்துப் போர் புரிந்தும், அன்று திருவிளையாடல் புரிந்த செவ்விய
ஒளி பொருந்திய வேலாயுதத்தை ஏந்தியவரே!
எல்லா உலகங்களும் சுழலும்படி எங்கும் பவுரிக்
கூத்தை இயற்றுகின்ற தலைவரே!
புகழ் விளங்குகின்ற உமாதேவியைப் இடப் பக்கத்தில் கொண்ட சிவபெருமானுக்கு குரு மூர்த்தி என்கின்ற அழகிய பெருமையோடு, ஆறுதிருமுகங்களையும், தாள ஒத்துடன் திருநடனம் புரிகின்ற அழகிய
திருவடிகளை உடைய கந்தப் பெருமானே என்று போற்றி தேவர்கள் மலர்களைச் சொரிந்து, அழகிய தமது கரங்களைக் கூப்பி, ஒளி பொருந்திய தேவரீரது திருவடிகளை மனத்துள்
கொண்டு புகழ, அழகினைக் கொண்ட
குறச் சிறுமியாகிய வள்ளிபிராட்டியரைத் தழுவி, வெற்றியைக் கொண்டு, அழகிய பொன்னம்பலம் விளங்கும் திருப்புலீச்சுரம்
என்னும் சிதம்பரத்தில் ஆனந்தத் திருநடம் புரியும் சிவபெருமான் அருளிய கந்தப்
பெருமானே!
அழகிலும்
பெருமையிலும் மிக்கவரே!
நீர்ப்பாசிகள் மேற்பட்டுக் கிடக்கும் கடல் போன்ற வாழ்க்கையைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தும்,சங்கு போலவும் கமுகு போலவும் பொருந்தி நெருங்கி, அமுதம் பொதித்த
கழுத்து, முத்து மாலைகளை
அணிந்துள்ளது, தாமரை, அம்பு இவைகளுக்கு ஒப்பான கண்கள், குமிழம் பூவைப் போன்ற நாசி, வில் போலும் வளைந்துள்ள அழகிய புருவம் இவைகளால் அழகு விளங்கும் விலைமாதர்கள். தாமரை மொட்டுப் போன்றதும், நறு மணமுள்ள புனுகு
சட்டம் சண்பகம் இவற்றின் நறுமணம் கொண்டுள்ள
பொன்
மலையாகிய மேருவையும் கீழ்ப்படச் செய்யும் தேமல் பரந்த இரண்டு கனத்த மார்பகங்கள், பலரும் நெருங்க ஆசைப்படும், அசைவு கொண்டுள்ள மின்னலுக்கு ஒப்பான
இடை, பாம்புப் படம் போன்ற
பெண்குறி கொண்டவர்கள். பொருளைத் தேடுவதிலேயே
நாட்டம் செலுத்தும் பார்வை கொண்டவர்கள், சொல்லுவது போல் வெளிப்படுத்த அழகிய கையில் உள்ள பொன் வளையலும், காலில் கட்டப்பட்டுள்ள தோதிந்தம் என
ஒலிப்பதுமான நூபுரத்துடன் கிண்கிணியும் சிலம்பும்
விளங்கி ஒலிக்கின்ற பாதங்களுடன் அசைந்து நடந்து வந்து பொருந்துபவருக்கு தொண்டு செய்யும் வேதனையில் பட்டுக்
கிடந்து, அவர் அழகில் ஈடுபட்டுக் கொஞ்சுகின்ற நாயில் கடையவனான அடியேன், புகழ்
பெற்று, தேவரீரது திருவடியைப்
பணிந்து, ஒள்ளிய திருநீற்றை
அணிந்து, ஆனந்தக் கண்ணீரில்
படிந்து, பரவசம் மேம்படும் தவசிகளுடைய சுகம் போன்று, வலிய இப்பூமியின்
நிலையாமையை அறிந்து, இப்பொழுதே உனது
திருவடியை வணங்கும் பணியை மேற்கொள்ள, அழகிய
செவ்விய சீரான செம் பொன்னாலாகிய கழல்கள் அணிந்த திருவடியைத் தந்து அருளுக.
விரிவுரை
இந்த
அருமையான திருப்புகழ்ப் பாடலை, வள்ளிமலை
திருப்புகழ் சச்சிதானந்த சுவமிகள், "தவள சங்கப் பாடல்" என்று பொயரிட்டு, சங்கத் தொனி
புலப்படும்படியாக அருமையாக பந்துவராளி இராகத்தில் பாடக் கேட்டு உள்ளதாக அருளாளர்
செங்கல்வராய பிள்ளை அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.
சகுடம்
உந்தும் கடல் அடைந்து உங்கு உ(ள்)ள மகிழ்ந்தும் ---
சகுடம்
- சேம்பு. நீர்ச் சேம்பு. ஒருவகையான கடல்
பூண்டு. கடல் பாசி. கடல் பாசிகள் பின்னிக் கிடக்கும் நீர்போல, பல துன்பங்களும்
நிறைந்து இருக்கும் வாழ்க்கை. கடல் பாசிகள் பின்னிக் கடப்பதைப் போல, காமம், வெகுளி, மயக்கம் என்னும்
முக்குற்றங்களும் பின்னிக் கிடக்கின்றது வாழ்க்கை என்னும் கடல். கடலில் நீர்
நிறைந்து இருந்தாலும், அது தாகத்தைத் தணிக்க உதவாது. அதுபோல, உலக வாழ்க்கையிலும்
அனுபவிக்கும் சிற்றின்பங்களை என்றும் ஆரா இயற்கை உடையன. அவை, பிறவிக் கடலில்
சிக்குண்டு இடர்ப்படும் ஆன்மாவுக்கு, உண்டாகும் அருள் தாகத்தைத் தீர்க்காது.
அருள் தாகம் உண்டாகாதவாறு முக்குற்றங்களும் தடுப்பதால், உலக வாழ்வில் உண்டாகும்
சிற்றின்பங்களால் உள்ளமானது மகிழ்கின்றது.
இதுவே சரதம் என்று நினைக்கின்றது.
"இருவினைப்
பிறவிக் கடல்" என்றார் அடிகள்.
சகுடம்
- நீர் நாய். நீர் நாய்கள் மிகுந்து இருக்கும் கடல். நாய்க் குணங்கள் மேம்பட்டுக்
கிடக்கும் நிலையாத சமுத்திரம் ஆன சமுசார துறை.
வாழ்வைக்
கடலுக்கு ஒப்பிட்டு, "நிலையாத சமுத்திரமான சமுசார துறைகளில் மூழ்கி, நிலையானது எனப்
பல பேசி" என்று அருணை வள்ளல்
திருத்தணிகைத் திருப்புகழில் பாடி உள்ளார்.
தனியனேன்
பெரும்பிறவிப் பௌவத்து எவ்வத்
தடந்திரையால்
எற்றுண்டு, பற்று ஒன்று இன்றி,
கனியைநேர்
துவர்வாயார் என்னும் காலாற்
கலக்குண்டு,
காமவான் சுறவின் வாய்ப்பட்டு,
இனி என்னே
உய்யுமாற் என்றென்று எண்ணி,
அஞ்செழுத்தின்
புணைபிடித்துக் கிடக்கின் றேனை,
முனைவனே!
முதல் அந்தம் இல்லா மல்லல்
கரைகாட்டி
ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே. ---
திருவாசகம்.
கடலில்
வீழ்ந்தோர் கரை ஏறுதல் அரிது; பிறவியில்
வீழ்ந்தோறும் முத்திக்கரையில் ஏறுதல் அரிது. கடலில் அலை ஒன்றன்பின் ஒன்றாக
வந்துகொண்டிருக்கும், ஓயாது. அது போல, வாழ்வில் துன்பம் ஒன்றன் பின் ஒன்றாக
வந்துகொண்டிருக்கும், ஓயாது. புயல்காற்று, கலக்கத்தைச் செய்யும், விலைமகளிரின் தோற்றமும்
கண்டாரைக் கலங்கச் செய்யும். சுறாமீன், தன் வாயில் பட்டாரை உள்ளே விழுங்கும்; ஆசை வயப்பட்டோரும் அல்லலில் அழுந்துவர். தெப்பத்தைக் கொண்டு கடலைக் கடக்கலாம்; திருவைந்தெழுத்தாகிய மந்திரத்தைக்கொண்டு
பிறவியைக் கடக்கலாம். 'வருபவக் கடலில் வீழ்
மாக்கள் ஏறிட அருளுமெய் அஞ்செழுத்து' என்றார்
சேக்கிழார் சுவாமிகள்.
இப்பிறவி என்னும் ஓர் இருட்கடலில்
மூழ்கி, நான்
என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு,
இருவினை எனும் திரையின் எற்றுண்டு, புற்புதம்
எனக்கொங்கை வரிசைகாட்டும்
துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்ட மாருதச்
சுழல் வந்து வந்து அடிப்ப,
சோராத ஆசையாம் கான்ஆறு வான்நதி
சுரந்தது என மேலும் ஆர்ப்ப,
கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமும்
கைவிட்டு, மதிமயங்கி,
கள்ள வங்கக் காலர் வருவர் என்று அஞ்சியே
கண்ணருவி காட்டும் எளியேன்,
செப்பரிய முத்தியாம் கரை சேரவும் கருணை
செய்வையோ? சத்தாகி என்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. --- தாயுமானார்.
துன்பக்
கடல்இடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக்
கரைமுகந்து ஏற்றும் திறத்தன, மாற்று அயலே
பொன்பட்டு
ஒழுகப் பொருந்து ஒளி செய்யும், அப்பொய் பொருந்தா
அன்பர்க்கு
அணியன காண்க ஐயாறன் அடித்தலமே. --- அப்பர்.
அறிவுஇல்
ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும்,
கடும்பிணித்
தொகையும், இடும்பை ஈட்டமும்,
இனையன
பலசரக்கு ஏற்றி, வினை எனும்
தொல்
மீகாமன் உய்ப்ப, அந்நிலைக்
கருவெனும்
நெடுநகர் ஒருதுறை நீத்தத்து,
புலன்
எனும் கோள்மீன் அலமந்து தொடர,
பிறப்பு
எனும் பெருங்கடல் உறப்புகுந்து அலைக்கும்
துயர்த்
திரை உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்து,
குடும்பம்
என்னும் நெடுங்கல் வீழ்த்து,
நிறை
எனும் கூம்பு முரிந்து, குறையா
உணர்வெனும்
நெடும்பாய் கீறி, புணரும்
மாயப்
பெயர்படு காயச் சிறைக்கலம்,
கலங்குபு
கவிழா முன்னம், அலங்கல்
மதியுடன்
அணிந்த பொதிஅவிழ் சடிலத்துப்
பை
அரவு அணிந்த தெய்வ நாயக!
தொல்எயில்
உடுத்த தில்லை காவல!
வம்பு
அலர் தும்பை அம்பலவாண! நின்
அருள்
எனும் நலத்தார் பூட்டித்
திருவடி
நெடுங்கரை சேர்த்துமா செய்யே. --- கோயில் நான்மணிமாலை.
பின்னுள்ள
அடிகளிலே விலைமாதரின் அங்க அழகைக் கண்டு காமுகர் மயங்கித் திரியும் நிலையை அடிகள்
எடுத்து இயம்புகின்றார்.
இதனை
அருளாளர்கள் பலரும் வலியுறுத்தி எள்ளார்கள்.
நெறிதரு
குழலை அறல் என்பர்கள்,
நிழல்
எழு மதியம் நுதல் என்பர்கள்,
நிலவினும்
வெளிது நகை என்பர்கள்,
நிறம்வரு
கலசம் முலை என்பர்கள்,
அறிகுவது
அரிது இவ் இடை என்பர்கள்,
அடியிணை
கமல மலர் என்பர்கள்,
அவயவம்
இனைய மடமங்கையர்
அழகியர்
அமையும், அவர் என்செய;
மறிமழு
உடைய கரன் என்கிலர்,
மறலியை
முனியும் அரன் என்கிலர்,
மதிபொதி
சடில தரன் என்கிலர்,
மலைமகள்
மருவு புயன் என்கிலர்,
செறிபொழில்
நிலவு தி(ல்)லை என்கிலர்,
திருநடம்
நவிலும் இறை என்கிலர்,
சிவகதி
அருளும் அரசு என்கிலர்,
சிலர்
நரகு உறுவர் அறிவு இன்றியே. --- கோயில்
நான்மணிமாலை.
மலராலும்
சாந்தாலும் புலால் நாற்றத்தை மறைத்து, ஆடையாலும்
அணிகலனாலும் முன்னோர் அமைத்த, வஞ்சத்தைத் தெரிந்து
கொள்வாய் என்கிறது மணிமேகலை.
முள்ளும்
கல்லும் முயன்று நடக்கும்
உள்ளங்
காலைப் பஞ்சு என உரைத்தும்,
வெள்
எலும்பாலே மேவிய கணைக்கால்
துள்ளும்
வரால் எனச் சொல்லித் திரிந்தும்,
தசையும்
எலும்பும் தக்க புன் குறங்கை
இசையும்
கதலித் தண்டு என இயம்பியும்,
நெடும்
உடல் தாங்கி நின்றிடும் இடையைத்
துடிபிடி
என்று சொல்லித் துதித்தும்,
மலமும், சலமும், வழும்பும், திரையும்
அலையும்
வயிற்றை ஆல் இலை என்றும்,
சிலந்தி
போலக் கிளைத்து முன் எழுந்து
திரண்டு
விம்மிச் சீ பாய்ந்து ஏறி,
உகிரால்
கீற உலர்ந்து உள் உருகி,
நகுவார்க்கு
இடமாய் நான்று வற்றும்
முலையைப்
பார்த்து முளரி மொட்டு என்றும்
குலையும், காமக்
குருடர்க்கு ஒன்று உரைப்பேன்,
நீட்டவும்
முடங்கவும் நெடும் பொருள் வாங்கவும்
ஊட்டவும்
பிசையவும் உதவி இங்கு இயற்றும்
அம்
கையைப் பார்த்துக் காந்தள் என்று உரைத்தும்,
வேர்வையும்
அழுக்கும் மேவிய கழுத்தை
பாரினில்
இனிய கமுகு எனப் பகர்ந்தும்,
வெப்பும்
ஊத்தையும் மேவிய வாயைத்
துப்பு
முருக்கின் தூய்மலர் என்றும்,
அன்னமும்
கறியும் அசைவு இட்டு இறக்கும்
முன்னிய
பல்லை முத்து என மொழிந்தும்,
நீரும்
சளியும் நின்று நின்று ஒழுகும்
கூரிய
மூக்கைக் குமிழ் எனக் கூறியும்,
தண்ணீர்
பீளை தவிராது ஒழுகும்
கண்ணைப்
பார்த்துக் கழுநீர் என்றும்,
உள்ளும்
குறும்பியும் ஒழுகும் காதை
வள்ளத்
தண்டின் வளம் என வாழ்த்தியும்,
கையும்
எண்ணெயும் கலவாது ஒழியில்
வெய்ய
வதரும் பேனும் விளையத்
தக்க
தலை ஓட்டின் முளைத்து எழுந்த
சிக்கின்
மயிரைத் திரள் முகில் என்றும்,
சொல்பல
பேசித் துதித்து நீங்கள்
நச்சிச்
செல்லும் நரக வாயில்;
தோலும்
இறைச்சியும் துதைந்து சீ பாயும்
காமப்
பாழி,
கருவிளை
கழனி,
தூமைக்
கட வழி,
தொளை
பெறு வாயில்,
எண்சாண்
உடம்பும் இழியும் பெருவழி;
மண்பால்
காமம் கழிக்கும் மறைவு இடம்,
நச்சிக்
காமுக நாய்தான் என்றும்
இச்சித்து
இருக்கும் இடை கழி வாயில்,
திங்கள்
சடையோன் திருவருள் இல்லார்
தங்கித்
திரியும் சவலைப் பெருவழி,
புண்
இது என்று புடவையை மூடி
உள்நீர்
பாயும் ஓசைச் செழும்புண்
மால்
கொண்டு அறியா மாந்தர் புகும் வழி,
நோய்
கொண்டு ஓழியா நுண்ணியர் போம்வழி,
தருக்கிய
காமுகர் சாரும் படுகுழி,
செருக்கிய
காமுகர் சேரும் சிறுகுழி,
பெண்ணும்
ஆணும் பிறக்கும் பெருவழி,
மலம்
சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்
சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்,
இத்தை
நீங்கள் இனிது என வேண்டா,
பச்சிலை
இடினும் பத்தர்க்கு இரங்கி,
மெச்சிச்
சிவபத வீடு அருள்பவனை,
முத்தி
நாதனை,
மூவா
முதல்வனை,
அண்டர்
அண்டமும் அனைத்து உள புவனமும்
கண்ட
அண்ணலை,
கச்சியில்
கடவுளை,
ஏக
நாதனை,
இணைஅடி
இறைஞ்சுமின்,
போக
மாதரைப் போற்றுதல் ஒழிந்தே.
என்று
மாதர் மேல் வைத்த ஆசையை மாற்றி, இறைவன் மேல்
ஆசை
வைக்குமாறு பட்டினத்தடிகள் வேண்டுகின்றார்.
தொண்டு
இடர் கிடந்துண்டு ஏர் கொஞ்சும் கடை நாயேன் ---
விலைமாதர்
அழகில் மயங்கி, அவர் தரும்
இன்பத்தைப் பெரிதாக மதித்து, அவர்களுக்குத் தொண்டு பட்டு
வேதனையை அடைகின்றனர் மாந்தர்கள். உண்டதைக் கக்கி மீளவும் அதனையே உண்கின்ற நாய் போல
இழிந்த தன்மையை அடைகின்றனர்.
நாயானது
நல்ல பால் உணவைத் தந்தாலும், அது எச்சில்
சோற்றுக்கே மிகவும் ஆசைப்பட்டு அலையும்.
பொற்கலத்து
ஊட்டிப் புறந்தரினும், நாய் பிறர்
எச்சிற்கு
இமையாது பார்த்து இருக்கும்; - அச்சீர்
பெருமை
உடைத்தாக் கொளினும், கீழ் செய்யுங்
கருமங்கள்
வேறு படும்.
என்று
நாயின் இழிதகையை விளக்குகின்றது நாலடியார்.
"செனித்த
குகையே உறுதி கருது அசுழமாம் இந்த மட்டை
தனை ஆள உனது அருள் தாராய்" என்று பழநித் திருப்புகழில் அருணை வள்ளல் அருளி இருப்பதையும்
அறிக.
நாயின்
தன்மை போலத்தான் நமது நிலையும் உள்ளது. இதுவே உண்மை. எனவே தான் அருளாளர்கள் எல்லோரும், நாயின் தன்மை கொண்டுள்ளதையும், நாயினும் இழிந்த
தன்மை கொண்டுள்ளதையும் விரிவாகப் பாடி வைத்தார்கள்.
ஒண் பொடி அணிந்து
---
ஒளி
பொருந்திய திருநீற்றை அணிந்து. உயிர்க்கு
இயல்பாகவே உள்ள ஆணவ இருளை நீக்கி, அருள் ஒளியைத் தருகின்ற திருநீறு.
"நீறு
அணிந்தார் அகத்து இருளும், நிறை கங்குல் புறத்து இருளும் மாற வரும்
திருப்பள்ளியெழுச்சி" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.
மாசு
இலாத மணிதிகழ் மேனிமேல்
பூசு
நீறுபோல் உள்ளும் புனிதர்கள்,
தேசினால்
எத் திசையும் விளக்கினார்,
பேச
ஒண்ணாப் பெருமை பிறங்கினார்.
என்றார்
தெய்வச் சேக்கிழார் பெருமான்.
"சுத்தம்
அது ஆவது நீறு" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.
அடியார்களுக்கு
உரிய சாதனங்களில் திருநீறு தலைசிறந்த ஒன்று.
"தூய
திருநீற்று நெறி எண்திசையும் தனி நடப்ப" என்றும், "எல்லை இல்லா நீற்று நெறி" என்றும் தெய்வச்
சேக்கிழார் பெருமான் கூறுமாறு காண்க.
எல்லை இல்லாதது என்றால், எக்காலத்தும்
அழியாத இயல்பு உடையது என்றும், இன்ன காலத்தில் தோன்றியது என்று அறிய முடியாத
இயல்பு உடையது என்றும் பொருள் கண்டனர் பெரியோர்.
நவநாகரீகம்
தாண்டவமிடும் இக்காலத்தில் “திருநீறு அணிவது அவசியமா? அணிவதனால் வரும் பயன் யாது?” என்றெல்லாம் வினவுகின்றனர். அதற்கு விடை
நாம் கூறவேண்டியதில்லை; அதன் பேரே விடை
தருகிறது. “திருநீறு” திரு - தெய்வத்தன்மை, நீறு - வினைகளை நீறாக்குவது என்பதாம்.
எனவே, வினைகளை எரித்து நீறாக்கித் தெய்வத் தன்மையைக் கொடுக்க வல்லதனால் அதற்குத்
திருநீறு என்னும் அழகிய திருநாமம் அமைந்துள்ளது. மேலான ஐஸ்வரியத்தைத் தரும் தகைமை
உடையதால் “விபூதி” எனப்பெயர் பெற்றது. இம்மையில் பெருந்திருவைக் கொடுத்து
மறுமையில் முத்தியையும் கொடுக்கும் இத்திருநீறு.
முத்தி
தருவது நீறு, முனிவர் அணிவது நீறு,
சத்தியம் ஆவது நீறு, தக்கோர் புகழ்வது நீறு,
பத்தி
தருவது நீறு, பரவ இனியது நீறு,
சித்தி
தருவது நீறு, திரு ஆலவாயான் திருநீறே. --- திருஞானசம்பந்தர்.
எல்லா
நிலையினரும் அவசியமாகத் திருநீறு தரித்தல் வேண்டும்.
போதுவார்
நீறு அணிந்து, பொய்யாத ஐந்தெழுத்தை
ஓதுவார்
உள்ளம் என உரைப்பாம்-நீதியார்
பெம்மான்
அமரர் பெருமான் ஒருமான்கை
அம்மான்
நின்(று) ஆடும் அரங்கு.
யாது
பாதகம் புரிந்தவ ராயினும் இகழும்
பாதகங்களிற்
பஞ்சமா பாதக ரெனினும்
பூதி
போற்றிடில் செல்வராய் உலகெலாம் போற்றத்
தீது
தீர்ந்தனர் பவித்திர ராகியே திகழ்வார். --- உபதேசகாண்டம்
ஆதலால்
சைவப்பெருமக்களாகப் பிறக்கும் பெருந்தவம் புரிந்த யாவரும் திருநீற்றை அன்புடன்
தரித்து, அதனை ஒரு பையில் உடன்
வைத்திருந்து, தமது மக்களையும்
தரிக்கச் செய்து, எல்லா நலன்களையும்
பெறுவார்களாக. “திருவெண்ணீறு அணிகிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே” என்ற
தமிழ் மறையாம் திருவாசகத்தின் உண்மையையும் ஓர்க.
போற்றி
நீறு இடாப் புலையரைக் கண்டால்
போக போகநீர் புலம் இழந்து அவமே,
நீற்றின்
மேனியர் தங்களைக் கண்டால்
நிற்க நிற்க, அந் நிமலரைக் காண்க,
சாற்றின்
நன்னெறி ஈதுகாண் கண்காள்
தமனி யப்பெரும் தனுஎடுத் தெயிலைக்
காற்றி
நின்றநம் கண்நுதற் கரும்பைக்
கைலை ஆளனைக் காணுதற் பொருட்டே. --- திருவருட்பா
திருநீறு
அணியாது செய்யும் தான தருமங்களாலும், விரதங்களாலும், தவங்களாலும், ஒருபோதும் பலன் அடையார். ஆதலால்
திருநீற்றை ஒவ்வொருவரும் அன்புடன் அணிதல் வேண்டும்.
சிவநாமத்தைக்
கூறி திருநீறு இட்டார், நிச்சயமாக சிவகதி
பெறுவர். “திருவாய்ப் பொலிய சிவாயம வென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி” என்று
அப்பமூர்த்திகள் கூறுகின்ற அருமையை உன்னுமின். “சுந்தரமாவது நீறு” “கவினைத் தருவது
நீறு” என்ற திருவாக்குகளையும் உய்த்து உணர்மின்; மேல் நாட்டாரும் இன்று அழகு செய்ய வெண்
பொடியை முகத்திற் பூசி உவக்கின்றனர் அன்றோ? சிவப்பொடி பூசிற் பவப்பொடியாகும்.
சிவநாமத்தை கூறி, திருநீறு இட்டார்க்கு
பேய் பில்லி பூதங்களாலும், நோய்களாலும், துன்பம் நேராது என்பதை இன்றைக்கும்
கண்கூடாகக் காண்கின்றோம். “நீறில்லா நெற்றி பாழ்” என்ற தமிழன்னையின் அமிழ்த உரையையும்
நினைமின். அன்பர்கள் அனைவரும் அன்புடன் அரன் நாமம் கூறி திருநீறிட்டு வினைகளை வேரோடு
களைந்து இருமை நலன்களை எளிதில் பெறுவார்களாக.
வெண்மையை
உலகம் விரும்பும், வெள்ளையாக உடுப்பது
சிறப்பு. “வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை” என்பது கொன்றை வேந்தன். சூதுவாது இல்லாதவர்களைப்
பார்த்து, “வெள்ளை உள்ளம்” என்று
கூறுவர்.
வெண்மையான
துணி, வெண்மையான கடிதம்
இவைகளை நெருப்பில் இட்டால், கருமையாகிவிடும்.
வெண்மையான பொருள்கள் யாவற்றையும் கருமையாக்கும் அக்கினி கருமையான சாணத்தை மட்டும்
வெண்மையாக்கி விடுகின்றது. ஆகவே நமது அஞ்ஞானமான கருமையை ஞானமாகச் செய்வது
திருநீறு.
சாணத்தால்
நீற்ற சாம்பல் அவரைச் செடியில் வரும் கருங் கிருமிகளைக் கொல்லும் ஆற்றலுடையது.
விதிப்படி சாணத்தால் நீற்ற வெண்ணீறு நம் உடம்பில் உள்ள நச்சுக் கிருமிகளைக்
கொல்லும் ஆற்றல் உடையது என உணர்க.
“அருள் செய்நீறு இடார்
அமுது உனக்கு இடினும்
அம்மலத்தினை அருந்துதல் ஒழிக” --- திருஅருட்பா.
சைவ
சமயமாம் நமது தெய்வச் சமயத்தின் சின்னங்கள் மூன்று. திருநீறு, உரத்திராக்கம், திருவைந்தெழுத்து. நெற்றியில் நீறும், மார்பில் உருத்திராக்கமும், உள்ளத்தில் திருவைந்தெழுத்தும் திகழ
வேண்டும். “நீறில்லா நெற்றி பாழ்” என்கின்றார் ஒளவையார்.
தீட்சை
பெறாதார் இடுகின்ற மலர், முகவரி எழுதாத கடிதம்
உரியவரிடம் சேராததுபோல், இறைவன்பால் சேராது
அதனால் கண்ணபிரான் உபமன்யு முனிவரிடம் தீட்சைபற்று சிவபூசை செய்தார்.
அங்ஙனம்
தீட்சை பெற்றுக்கொண்டோர், திருநீற்றை எடுத்து
இட உள்ளங்கையில் வைத்து ஓம் என்ற பிரணவத்தை வலக்கை மோதிர விரலால் எழுதி, பஞ்சகலா மந்திரம், பஞ்சப் பிரம்ம மந்திரம், ஷடங்க மந்திரம் கூறியணிய வேண்டும், அதனால் அது மந்திர
விபூதியாக ஆகின்றது.
இதனை
“மந்திரமாவது நீறு” என்ற தமிழ் மறையால் அறிக. நீர் இட்டுக் குழைத்து சிரசு, நெற்றி, மார்பு, நாபி, இரு முழந்தாள்கள், இரு முழங்கைகள், இரு மணிக்கட்டுகள், இரு தோள்கள், இரு விலா, முதுகு, கழுத்து ஆக இந்த பதினாறு அங்கங்களில்
அணிந்து கையலம்பி, அந்த நீரை இடக்கையில்
கும்ப முத்திரையாகப் பிடித்து, சிந்தும் நீரை, சம்மிதா மந்திரம் கூறி சிரசில்
தெளித்துக் கொள்ள வேண்டும். இது மந்திர ஸ்னானமாகும்.
“பிணியெலாம்வரினும்
அஞ்சேன், பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்
துணிநிலா
அணியினான்றதன் தொழும்பரோடு அழுந்தி, அம்மால்
திணிநிலம்
பிளந்து காணாச் சேவடிபரவி, வெண்ணீ(று)
அணிகிலாதவரைக்
கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே”
என்று
மாணிக்கவாசக சுவாமிகள் கூறுகின்றார். நோய்கட்கும், பிறப்பு இறப்பு என்ற பெருந் துயருக்கும்
அஞ்சாத அப்பெருவீரர் வெண்ணீறணியாத பேதைகட்கு அஞ்சுகின்றார். “திருவெணீறிடாமூடர்”
என்கிறார் அருணகிரிநாதர்.
திருநீறு
இடாஉருத் தீண்டேன் என்னும்,
திருநீறு மெய்திரு முண்டம் தீட்டிப்
பெருநீல
கண்டன் திறங்கொண்டுஇவள்
பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்,
வருநீ
ரருவி மகேந்திரப்பொன்
மலையில் மலைமக ளுக்குஅருளும்
குருநீ
என்னும், குணக் குன்றே என்னும்,
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. --- திருவிசைப்பா.
திருநீறு
வாங்கும் முறை, திருநீற்றைத்
தரிக்கும் முறை குறித்து, குமரேச சதகம் கூறுவதைக் காண்க.
திருநீறு வாங்கும்
முறை
பரிதனில்
இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர்
பலகையில் இருந்தும்மிகவே
பாங்கான
அம்பலந் தனிலே இருந்தும்
பருத்ததிண் ணையிலிருந்தும்
தெரிவொடு
கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
திருநீறு வாங்கியிடினும்
செங்கையொன்றாலும்விரல்
மூன்றாலும் வாங்கினும்
திகழ்தம் பலத்தினோடும்
அரியதொரு
பாதையில் நடக்கின்ற போதினும்
அசுத்தநில மான அதினும்
அங்கே
தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
அவர்க்குநர கென்பர்கண்டாய்
வரிவிழி
மடந்தைகுற வள்ளிநா யகிதனை
மணந்துமகிழ் சகநாதனே
மயிலேறி
விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
குதிரைமீது
அமர்ந்தும், அழகிய பல்லக்கில்
அமர்ந்தும், உயரமான மணைமீது
அமர்ந்தும், அழகிய பொதுவிடத்திலே நன்றாக அமர்ந்தும், பெரிய திண்ணைகளில் அமர்ந்தும், திருநீறு
அளிப்போர்கள் கீழேயிருக்க (வாங்குவோர்) மேலிடத்திலிருந்து வாங்கி அணிந்தாலும், ஒரு கையாலும் மூன்று விரல்களாலும்
ஏற்றாலும், (வாயில்) தரித்த
தாம்பூலத்தோடும், அருமையான வழியொன்றிற்
செல்லும்பொழுதும், அழுக்கு நிலத்திலும், (ஆகிய) அந்த இடங்களிலே அணிந்தாலும், அளித்தபோது மறுத்தாலும், அவர்கட்கு நரகம் கிடைக்கும் என்று
அறிஞர் கூறுவர்.
திருநீறு அணியும்
முறை
பத்தியொடு
சிவசிவா என்றுதிரு நீற்றைப்
பரிந்துகை யாலெடுத்தும்
பாரினில்
விழாதபடி அண்ணாந்து செவியொடு
பருத்தபுய மீதுஒழுக
நித்தம்மூ
விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடுவினை
அணுகாது தேகபரி சுத்தமாம்
நீங்காமல் நிமலன் அங்கே
சத்தியொடு
நித்தம்விளை யாடுவன் முகத்திலே
தாண்டவம் செய்யுந்திரு
சஞ்சலம்
வராதுபர கதியுதவும் இவரையே
சத்தியும் சிவனுமென்னலாம்
மத்தினிய
மேருஎன வைத்தமு தினைக்கடையும்
மால்மருகன் ஆனமுருகா
மயிலேறி
விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
பேரன்புடன் சிவசிவா என்று துதித்து
விருப்பத்துடன் திருநீற்றைக் கையினால் அள்ளி, நிலத்தில் சிந்தாதவாறு மேல்நோக்கியவாறு
காதுகளின் மீதும் தோள்களின்மீதும் படியும்வண்ணம், நெற்றியில் பதியும்படி மூன்று
விரல்களால் ஒவ்வொரு நாளும் (சிவ) நினைவுடன் அணிபவர்க்கு, நீண்ட
நாளைய பழவினை நெருங்காது; உடம்பு தூயது ஆகும். அவர்களிடமிருந்து
பரம்பொருள் விலகாமல் உமையம்மையாருடன் எப்போதும் விளையாடுவான்; முகத்திலே திருமகள்
நடம்புரிவாள்; மனக்கலக்கம்
உண்டாகாது; மேலான வீடு தரும்; இவர்களையே சத்தியும் சிவனும் என விளம்பலாம்.
திருநீற்றின்
பெருமை குறித்து வள்ளல் பெருமான் அருளி உள்ள திருப்பதிகங்களையும் அன்பர்கள் ஓதி
உணர்ந்து தெளிக.
திவசங்கள்
தொறும்கொண்டிடு தீமைப்பிணி தீரும்,
பவசங்கடம்
அறும்,இவ்விக பரமும்புகழ் பரவும்,
கவசங்கள்
எனச் சூழ்ந்துஉறு கண்ணேறு அது தவிரும்,
சிவசண்முக
எனவே அருள் திருநீறு அணிந்திடிலே.
மால்ஏந்திய
சூழலார்தரு மயல்போம்,இடர் அயல்போம்,
கோல்ஏந்திய
அரசாட்சியும் கூடும்,புகழ் நீடும்,
மேல்ஏந்திய
வானாடர்கள் மெலியாவிதம், ஒருசெவ்
வேல்ஏந்திய
முருகா! என வெண்ணீறு அணிந்திடிலே.
தவம்உண்மையொடு
உறும்,வஞ்சகர் தம்சார்வு
அது தவிரும்,
நவம்அண்மிய
அடியாரிடம் நல்கும்,திறன் மல்கும்,
பவனன்புனல்
கனல்மண்வெளி பலவாகிய பொருளாம்
சிவசண்முக!
எனவேஅருள் திருநீறு அணிந்திடிலே.
துயில்ஏறிய
சோர்வும்கெடும், துயரம்கெடும், நடுவன்
கையில்ஏறிய
பாசம்துணி கண்டேமுறித் திடுமால்,
குயில்ஏறிய
பொழில்சூழ்திருக் குன்று ஏறி நடக்கும்
மயில்ஏறிய
மணியே! என வளர்நீறு அணிந்திடிலே.
தேறாப்பெரு
மனமானது தேறும், துயர் மாறும்,
மாறாப்பிணி
மாயும்,திரு மருவும்,கரு ஓருவும்,
வீறாப்பொடு
வருசூர்முடி வேறாக்கிட வரும் ஓர்
ஆறுஅக்கரப்
பொருளே! என அருள்நீறு அணிந்திடிலே.
அமராவதி
இறையோடுநல் அயனுந்திரு மாலும்
தமர்
ஆகுவர், சிவஞானமும் தழைக்கும், கதி சாரும்,
எமராஜனை
வெல்லுந்திறல் எய்தும், புகழ் எய்தும்,
குமரா!
சிவ குருவே! எனக் குளிர்நீறு அணிந்திடிலே.
மேலாகிய
உலகத்தவர் மேவித்தொழும் வண்ணம்
மாலாகிய
இருள்நீங்கி, நல் வாழ்வைப்பெறு வார்காண்,
சீலா!
சிவ லீலா!பர தேவா!உமை யவள்தன்
பாலா!கதிர்
வேலா! எனப் பதிநீறுஅணிந்திடிலே.
அகமாறிய
நெறிசார்குவர், அறிவாம்உரு அடைவார்,
மிகமாறிய
பொறியின்வழி மேவாநலம் மிகுவார்,
சகமு
மாறினும் உயர்வானிலை தாம்மாறினும் அழியார்,
முகம்
ஆறுஉடை முதல்வா! என முதிர்நீறு அணிந்திடிலே.
சிந்தாமணி
நிதி, ஐந்தரு செழிக்கும் புவனமும், ஓர்
நந்தா எழில்
உருவும்,பெரு நலனும்,கதி நலனும்,
இந்தா
எனத் தருவார் தமை இரந்தார்களுக்கு எல்லாம்,
கந்தா!
சிவன் மைந்தா! எனக் கனநீறு அணிந்திடிலே.
எண்ணார்புரம்
எரித்தார்அருள் எய்தும்,திரு நெடுமால்
நண்ணாததோர்
அடிநீழலில் நண்ணும்படி பண்ணும்,
பண்ணார்மொழி
மலையாள்அருள் பாலா!பனி ரண்டு
கண்ணா!
எமது அண்ணா! எனக் கனநீறு அணிந்திடிலே.
பாடற்கு
இனிய வாக்கு அளிக்கும், பாலும் சோறும் பரிந்து அளிக்கும்.
கூடற்கு
இனிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும், குணம்அளிக்கும்,
ஆடற்கு
இனிய நெஞ்சே! நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்,
தேடற்கு
இனிய சீர் அளிக்கும் சிவாயநம என்று இடுநீறே.
கருமால்
அகற்றும், இறப்பதனைக் களையும் நெறியும் காட்டுவிக்கும்,
பெருமால்
அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசை அறுக்கும்,
அருமால்
உழந்த நெஞ்சே! நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்,
திருமால்
அயனும் தொழுது ஏத்தும் சிவாயநம என்று இடுநீறே.
வெய்ய
வினையின் வேர்அறுக்கும், மெய்ம்மை ஞான வீட்டில் அடைந்து
உய்ய
அமல நெறி காட்டும், உன்னற்கு அரிய உணர்வு அளிக்கும்,
ஐயம்
அடைந்த நெஞ்சே! நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்,
செய்ய
மலர்க்கண் மால் போற்றும் சிவாயநம என்று இடுநீறே.
கோல
மலர்த்தாள் துணை வழுத்தும் குலத்தொண்டு அடையக் கூட்டுவிக்கும்,
நீல
மணிகண்டப் பெருமான் நிலையை அறிவித்து அருள் அளிக்கும்,
ஆல
வினையால் நெஞ்சே! நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சீலம்
அளிக்கும், திரு அளிக்கும், சிவாயநம என்று இடுநீறே.
வஞ்சப்
புலக்காடு எறிய அருள் வாளும் அளிக்கும், மகிழ்வு அளிக்கும்,
கஞ்சத்
தவனும் கரியவனும் காணற்கு அரிய கழல் அளிக்கும்,
அஞ்சில்
புகுந்த நெஞ்சே! நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செஞ்சொல்
புலவர் புகழ்ந்து ஏத்தும் சிவாயநம என்று இடுநீறே.
கண்கொள்
மணியை, முக்கனியை, கரும்பை, கரும்பின் கட்டிதனை,
விண்கொள்
அமுதை, நம்அரசை, விடைமேல் நமக்குத் தோற்றுவிக்கும்,
அண்கொள்
வினையால் நெஞ்சே! நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்கொள்
முனிவர் சுரர் புகழும் சிவாயநம என்று இடுநீறே.
நோயை
அறுக்கும் பெருமருந்தை, நோக்கற்கு அரிய நுண்மைதனை,
தூய
விடைமேல் வரும் நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்,
ஆய
வினையால் நெஞ்சே! நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சேய
அயன்மால் நாட அரிதாம் சிவாயநம என்று இடுநீறே.
எண்ண
இனிய இன்அமுதை, இன்பக் கருணைப் பெருங்கடலை,
உண்ண
முடியாச் செழுந்தேனை, ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
அண்ண
வினையால் நெஞ்சே! நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்ணம்
அளிக்கும், திறம்அளிக்கும், சிவாயநம என்று இடுநீறே.
சிந்தா
மணியை, நாம்பலநாள் தேடி எடுத்த செல்வம்அதை,
இந்துஆர்
வேணி முடிக்கனியை, இன்றே விடைமேல் வரச்செயும்காண்,
அந்தோ!
வினையால் நெஞ்சே! நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செந்தா
மரையோன் தொழுது ஏத்தும் சிவாயநம என்று இடுநீறே.
உள்ளத்து
எழுந்த மகிழ்வை, நமக்கு உற்ற துணையை, உள்உறவை,
கொள்ளக்
கிடையா மாணிக்கக் கொழுந்தை, விடைமேல் கூட்டுவிக்கும்,
அள்ளல்
துயரால் நெஞ்சே! நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தெள்ளக்
கடலான் புகழ்ந்து ஏத்தும் சிவாயநம என்று இடுநீறே.
உற்ற
இடத்தில் உதவ, நமக்கு உடையோர் வைத்த வைப்புஅதனை,
கற்ற
மனத்தில் புகுங்கருணைக் கனியை விடைமேல் காட்டுவிக்கும்,
அற்றம்
அடைந்த நெஞ்சே! நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செற்றம்
அகற்றித் திறல் அளிக்கும், சிவாயநம என்று இடுநீறே.
பவுரி ---
ஒரு வகையான கூத்து.
சாடுஞ் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே
ஓடுல் கருத்தை இருத்த வல்லார்க்கு,உகம் போய்,சகம்போய்,
பாடும் கவுரி பவுரி கொண்டு ஆடு அப்
பசுபதிநின்று
ஆடும் பொழுது பரமாய் இருக்கும் அதீதத்திலே. --- கந்தரலங்காரம்.
புகழ்
விளங்கும் கவுரி பங்கன் குரு எனும் சிங்காரம் கொண்டு ---
புகழ்
விளங்குகின்ற உமாதேவியைப் இடப் பக்கத்தில் கொண்ட சிவபெருமானுக்கு குருமூர்த்தி
என்கின்ற அழகிய பெருமையோடு முருகப் பெருமான் விளங்குகின்றார். குருவுக்கும்
குருவாக விளங்கியவர். தனக்கென்று ஒரு குரு இல்லாதவர்.
திருக்கயிலைமலையின்
கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது,
சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த அமரர்கள் அனைவரும் குகக் கடவுளை வனங்கிச் சென்றனர்.
அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை யழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுகனார்
சிறைப்படுத்தி முத்தொழிலும் புரிந்து தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை
வைத்த மணி விளக்கென வெளிப்படுத்தினர்.
பின்னர்
ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள் தந்தையாராகிய தழல்மேனியாரைத்
தெரிசிக்கச் சென்றனர். பொன்னார் மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று
எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகுதைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு
அறியும்? மறைகளால் மனத்தால்
வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து அதனை விளக்குவான் உன்னி
எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டும் என்பதையும்
உலகிற்கு உணர்த்துமாறு திருவுள்ளம் கொண்டு, புன்முறுவல்
பூத்த முகத்தினராய் ஆறுமுகப் பரம்பொருளை நோக்கி,
“அமரர் வணங்குங் குமர
நாயக! அறியாமையான் ஆதல், உரிமைக் குறித்து ஆதல்
நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு
பிழையும் செய்கிலர். அறிவில் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர்.
அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார்.
ஆதலால் நான்முகனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன்.
அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினை. எல்லார்க்கும் செய்யும் வணக்கமும்
நினக்கே எய்துந் தகையது; அறு சமயத்தார்க்கும்
நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர். எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு
“தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும்
வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம்
அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.
சிவபெருமான்
“மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே!
எந்தப் பொருளையும் உபதேச முறையினாலன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்” என்றனர்.
அரனார்
கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத
உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமரும்
தணிகை வெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச்
சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப்பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம்
தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகம் கண்டு தெளிந்து உய்யுமாறு தவம்
புரிய ஆரம்பித்தனர். ஞானசத்தி தரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச்
சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு
கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம்
செய்ததாலேயே அத்தணிகைமலை "கணிகவெற்பு" எனப் பெயர் பெற்றதென்பர்.
கண்ணுதற்
கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற,
கதிர் வேல் அண்ணல் தோன்றலும், ஆலமுண்ட அண்ணல்
எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும்
பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து பிரணவோபதேசம் பெற்றனர்.
எதிர்
உறும் குமரனை இருந்தவிசு ஏற்றி,
அங்கு
அதிர்கழல்
வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட
வைகுபு, தாவரும் பிரணவ
முதுபொருள்
செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன். --- தணிகைப் புராணம்.
“நாத போற்றி எனமுது
தாதை கேட்க அநுபவ
ஞான வார்த்தை அருளிய பெருமாளே” --- (ஆலமேற்ற) திருப்புகழ்.
“நாதா குமரா நம என்று
அரனார்
ஓதாய்
என ஓதியது எப் பொருள்தான்” --- கந்தர்அநுபூதி
“தமிழ்விரக! உயர்பரம
சங்கரன் கும்பிடுந் தம்பிரானே” --- (கொடியனைய) திருப்புகழ்.
தேவதேவன்
அத்தகைய பெருமான். சீட பாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே
உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.
உண்மையிலே
சிவபெருமான் உணர முருகன் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.
தனக்குத்
தானே மகனாகிய தத்துவன்
தனக்குத்
தானே ஒருதாவரு குருவுமாய்
தனக்குத்
தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத்
தான் நிகரினான் தழங்கி நின்றாடினான். --- தணிகைப் புராணம்.
இறையருளாகிய
திருவருளைப் பெறவேண்டுமானால், குருவருள் இன்றி இயலாது. என்பதால் தான்,
எந்த வழிபாட்டு நிகழ்வின்போதும், குருவைத்
துதித்த பிறகு தான் நிகழும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதனைப்
பட்டினத்தடிகள் தமது நெஞ்சினுக்கு மிகவும் வலியுறுத்திப் புலம்புமாறு காண்க.
ஊன்பொதிந்த
காயம், உளைந்த புழுக்கூட்டைத்
தான்
சுமந்தது அல்லால்,
நீ சற்குருவைப் போற்றாமல்
கான்
பரந்த வெள்ளம் கரைபுரளக் கண்டு ஏகி,
மீன்
பறந்தால் போலே விசாரம் உற்றாய் நெஞ்சமே!
அற்புதமாய்
இந்த உடல் ஆவி அடங்கு முன்னே
சற்குருவைப்
போற்றித் தவம் பெற்று வாழாமல்,
உற்பத்தி,
செம்பொன் உடைமை, பெரு வாழ்வை நம்பி,
சற்பத்தின்
வாயில் தவளை போல் ஆனேனே.
முன்னம்
நீ செய்த தவம் முப்பாலும் சேரும் அன்றி,
பொன்னும்
பணிதிகளும் பூவையும் அங்கே வருமோ?
தன்னைச்
சதமாகச் சற்குருவைப் போற்றாமல்,
கண்
அற்ற அந்தகன் போல் காட்சி உற்றாய் நெஞ்சமே!
கருத்துரை
முருகா! பொதுமாதர் அழகில் ஈடுபட்டுக்
கொஞ்சுகின்ற நாயில் கடையவனான அடியேன், புகழ்
பெற்று, தேவரீரது திருவடியைப்
பணிந்து, ஒள்ளிய திருநீற்றை
அணிந்து, ஆனந்தக் கண்ணீரில்
படிந்து, உனது திருவடியை
வணங்கும் பணியை மேற் கொள்ள, திருவடியைத் தந்து
அருளுக.
No comments:
Post a Comment