இழிவான பேய்கள்




23. இழித்துப் பேசப்படும் பேய்கள்

கடன்உதவு வோர்வந்து கேட்கும்வே ளையில்முகம்
     கடுகடுக் கின்றபேயும்,
கனம்மருவு பெரியதனம் வந்தவுடன் இறுமாந்து
     கண்விழிக் காதபேயும்,

அடைவுடன் சத்துருவின் பேச்சைவிசு வாசித்து
     அகப்பட்டு உழன் றபேயும்,
ஆசைமனை யாளுக்கு நேசமாய் உண்மைமொழி
     ஆனதை உரைத்தபேயும்,

இடர் இலா நல்லோர்கள் பெரியோர்க ளைச்சற்றும்
     எண்ணாது உரைத்தபேயும்,
இனியபரி தானத்தில் ஆசைகொண்டு ஒருவற்கு
     இடுக்கண்செய் திட்டபேயும்,

மடமனை இருக்கப் பரத்தையைப் புணர்பேயும்,
     வசைபெற்ற பேய்கள் அன்றோ?
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     கடன் உதவு பேர்வந்து கேட்கும் வேளையில் முகம் கடுகடுக்கின்ற பேயும் --- இடுக்கு வந்த காலத்தில் கடன் கொடுத்து உதவியவர் வந்து தாம் முன்னே கொடுத்த கடனைக் கேட்கும்போது முகத்தைச் சுளிக்கின்ற பேய்க் குணம் பொருந்தியவர்களும்,

     கனம் மருவு பெரிய தனம் வந்தவுடன் இறுமாந்து கண்விழிக்காத பேயும் --- மேன்மையைத் தரும் பெரும் செல்வம் கிடைத்தவுடன் செருக்குக் கொண்டு, தன்னைக் காண வந்தவர்களைப் பார்த்தும் பாராதது இருக்கின்ற பேய்க் குணம் படைத்தவர்களும்,

     அடைவுடன் சத்துருவின் பேச்சை விசுவாசித்து அகப்பட்டு உழன்ற பேயும் --- பகைவன் சொல்லை ஒழுங்காக நம்பி, பின்னர் சிக்கி வருந்துகின்ற பேய்க் குணம் படைத்தவர்களும்,

     ஆசை மனையாளுக்கு நேசமாய் உண்மை மொழியானதை உரைத்த பேயும் --- காதல் மனைவியின் மேலுள்ள அன்பு காரணமா, உண்மைச் செய்தியை  அவளிடம் உரைத்த பேய்க் குணம் கொண்டவர்களும்,

     இடர் இலா நல்லோர்கள் பெரியோர்களை சற்றும் எண்ணாது உரைத்த பேயும் --- பிறருக்குத் துன்பம் புரியாத நல்லோர்களையும் பெரியோர்களையும் சிறிதும் மதியாமல் இகழ்ந்து பேசிய பேய்க் குணம் படைத்தவர்களும்,

     இனிய பரிதானத்தில் ஆசை கொண்டு ஒருவற்கு இடுக்கண் செய்திட்ட பேயும் --- இனியதாகத் தோன்றும் இலஞ்சப் பொருளின் மேல் ஆசைப்பட்டு, ஒருவனுக்குத் தீமையைச் செய்யும் பேய்க் குணம் படைத்தவர்களும்,

     மடமனை இருக்கப் பரத்தையைப் புணர் பேயும் --- இளமைப் பருவம் உடைய மனைவி இருக்கவும், விலைமாதைக் கூடுகின்ற பேய்க் குணம் படைத்தவர்களும்,

     வசைபெற்ற பேய்கள் அன்றோ --- பிறரால் இழிவாகப் பேசப்படுகின்ற பேய்கள் அல்லவா?

     கருத்து --- எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இல்லாமல் தான் நினைத்தபடியே இருப்பவனைப் பேய் என்று உலகத்தார் சொல்லுவர். பேய்களில் எல்லாம் இழிந்த பேய்கள் என்று சிலரை இந்தப் பாட்டில் காட்டினார் ஆசிரியர். 
 
    கடன் கொடுத்தவனிடம், நன்றி உணர்வோடு திருப்பிக் கொடுக்கவேண்டும். முடியாத போது இனிமையாகப் பேசவேண்டும். செல்வம் வந்தாலும் மற்றவருடன் பணிவுடன் நடந்து கொள்ளல் வேண்டும். "செல்வம் வந்து உற்ற காலை, தெய்வமும் சிறிது பேணார்" என்பார் விவேக சிந்தாமணி ஆசிரியர். அப்படிப்பட்டவருக்கு எதிரில் வருபவர் யார் என்று தெரியாது. செருக்கு அவ்வளவுக்கு மிஞ்சி நிற்கும்.  
 
    பகைவர் பேச்சிலே மறந்தும் நம்பிக்கை வைத்துப் பின்னர் ஏமாறல் ஆகாது. நல்லோரையும் பெரியோரையும் இகழ்தல் கூடாது.  
 
    இலஞ்சம் வாங்கிக்கொண்டு பிறருக்குத் தீமை செய்தல் ஆகாது. விலைமாதர் நட்புக்கூடாது. 

     ஆசை மனைவியிடம் உண்மையை உரைக்கக் கூடாது என்றார். மனைவியாய் இருந்தும், அதற்கேற்ப நடவாதவர்களும் உண்டு என்பதால், இவ்வாறு கூறினார் எனக் கொள்ளல் பொருந்தும்.                         

எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி; - அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ் பேய்; - இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.             --- நாலடியார்.

     தவறு செய்துவிட்ட மனைவியைத் தண்டிக்க வரும் கணவன் எதிர் நின்று, அவனை எதிர்த்துப் பேசுபவள் அவனுக்கு மனைவி அல்ல, எமன். காலையில் அவனுக்கு உணவு சமைத்து வைக்காதவள் மனைவி அல்ல, தீராத நோய். சமைத்த உணவை அவன் உண்ண அன்புடன் பரிமாறி உதவாதவள், மனைவி அல்ல, வீட்டில் இருக்கும் பேய். கணவனை உயிரோடு கொல்ல இந்த மூன்று வகைப் பெண்களை போதும். வேறு படைக் கருவி தேவை இல்லை.

No comments:

Post a Comment

பொது --- 1080. கலந்த மாதும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கலந்த மாதும் (பொது) தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங...