அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சரக்கு ஏறிஇத்த
(திருக்காளத்தி)
முருகா!
சிவஞானம் ஆகிய திருவடியைத்
தந்து அருள்
தனத்தா
தத்தத் தனனா தந்தத்
தனத்தா தத்தத் தனனா தந்தத்
தனத்தா தத்தத் தனனா தந்தத் ......
தனதான
சரக்கே
றித்தப் பதிவாழ் தொந்தப்
பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச்
சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச்
...... செயல்மேவிச்
சலித்தே
மெத்தச் சமுசா ரம்பொற்
சுகித்தே சுற்றத் தவரோ டின்பத்
தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் ...... குடிபேணிக்
குரக்கோ
ணத்திற் கழுநா யுண்பக்
குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப்
...... படுவேனைக்
குறித்தே
முத்திக் குமறா வின்பத்
தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க்
குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் ......
கழல்தாராய்
புரக்கா
டற்றுப் பொடியாய் மங்கக்
கழைச்சா பத்தைச் சடலா னுங்கப்
புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் ...... றருள்வோனே
புடைத்தே
யெட்டுத் திசையோ ரஞ்சத்
தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப்
புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத்
...... தருள்வோனே
திருக்கா
னத்திற் பரிவோ டந்தக்
குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத்
திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப்
...... புணர்வோனே
சிவப்பே
றுக்குக் கடையேன் வந்துட்
புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற்
றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப்
...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சரக்கு
ஏறு இத்தப் பதிவாழ் தொந்தப்
பரி, காயத்தில் பரிவோடு, ஐந்துச்
சதிக்காரர் புக்கு, உலை மேவு, இந்தச் ....செயல்மேவிச்
சலித்தே, மெத்தச் சமுசாரம், பொன்
சுகித்தே, சுற்றத்தவரோடு இன்பத்
தழைத்தே, மெச்சத் தயவோடு இந்தக் ......
குடிபேணி,
குரக் கோணத்தில் கழு நாய் உண்ப,
குழிக்கே வைத்து, சவமாய் நந்து, இக்
குடிற்கே நத்தி, பழுதாய் மங்கப் ...... படுவேனை,
குறித்தே
முத்திக்கு, மறா இன்பத்
தடத்தே பற்றி, சக மாயம் பொய்க்
குலக் கால் வற்ற, சிவஞானம் பொன்...... கழல்தாராய்.
புரக்
காடு அற்று, பொடியாய் மங்க,
கழைச் சாபத்து ஐச் சடலான் நுங்க,
புகைத் தீ பற்று அப்
புகலோர் அன்பு உற்று...... அருள்வோனே!
புடைத்தே
எட்டுத் திசையோர் அஞ்ச,
தனிக் கோலத்துப் புகு சூர் மங்க,
புகழ்ப் போர் சத்திக்கு இரை ஆனந்தத்து
.....அருள்வோனே
திருக்
கானத்தில் பரிவோடு அந்தக்
குறக் கோலத்துச் செயலாள் அஞ்ச,
திகழ்ச் சீர் அத்திக்கு அழல் வா என்பப்
.....புணர்வோனே!
சிவப்
பேறுக்குக் கடையேன் வந்து, உள்
புகச், சீர் வைத்துக் கொளு ஞானம் பொன்
திருக்காளத்திப் பதி வாழ் கந்தப்
...... பெருமாளே.
பதவுரை
புரக் காடு அற்றுப் பொடியாய் மங்க --- திரி புரம் என்னும்
காடு அழிந்து பொடியாய் மறையவும்,
கழைச் சாபத்து ஐச்
சடலான் நுங்க
--- கரும்பு வில்லை ஏந்தியவனும் அழகிய உடலை
உடையவனுமான மன்மதன் அழியவும்,
புகைத் தீ பற்றுஅப்
புகலோர்
--- புகை கொண்ட தீயை (நெற்றிக் கண்ணால்) பற்றச் செய்த அந்த வெற்றியாளராகிய
சிவபிரானால்
அன்பு உற்று
அருள்வோனே --- அன்பு கொண்டு அருளப் பெற்றவரே!
புடைத்தே எட்டுத்
திசையோர் அஞ்ச --- எல்லோரையும் அடித்து வீழ்த்தியே எட்டுத் திசைகளிலும்
உள்ளோர்கள் பயப்படும்படி,
தனிக் கோலத்துப் புகு சூர் மங்க --- ஒப்பற்ற
பயங்கர வடிவத்துடன் புகுந்த சூரன் அழிந்துபோகுமாறு
புகழ்ப் போர்
சத்திக்கு இரையா --- போரில் புகழ் பெற்ற சக்தி வேலாயுதத்துக்கு உணவாக
ஆனந்தத்து அருள்வோனே --- மகிழ்ச்சியுடன்
அருளியவரே!
திருக் கானத்தில் --- அழகிய காட்டில்
பரிவோடு --- அன்புடன்,
அந்தக் குறக் கோலத்துச் செயலாள் அஞ்ச
--- அந்தக் குறக்கோலம் பூண்டிருந்த செய்கையளாகிய வள்ளியம்மை அஞ்சியபோது,
திகழ்ச்சீர் அத்திக்கு அழல் வா என்பப்
புணர்வோனே --- "விளங்கும் சீருடைய இந்த யானைக்கு பயந்து அழாதே, வா" என்று சொல்லி, அப் பெருமாட்டியை அணைந்தவரே!
சிவப் பேறுக்குக்
கடையேன் வந்து உள் புக --- சிவகதி அடையும் பேற்றுக்கு, கடையவனாகிய அடியேன் வந்து உட்புகுமாறு,
சீர் வைத்துக் கொ(ள்)ளு --- வேண்டிய
சிறப்பினை எனக்கு வைத்து என்னை ஏற்றுக் கொள்ளும்,
ஞானம் பொன் --- ஞானமும் அழகும்
நிறைந்த
திருக்காளத்திப் பதி வாழ் கந்தப் பெருமாளே
--- திருக்காளத்தி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் கந்தவேளாகிய பெருமையில்
சிறந்தவரே!
சரக்கு ஏறு இத்தப்
பதி வாழ் தொந்தப் பரிக் காயத்தில் --- பொருள் மிகுந்த இந்தப் பூமியில்
வாழ்கின்ற சம்பந்தத்தை வகிக்கின்ற இந்த உடலில்
பரிவோடு ஐந்து
சதிகாரர் புக்கு --- அன்பு பூண்டவர் போன்ற ஐந்து பொறிகளாகிய மோசக்காரர்கள்
புகுந்து,
உலை மேவு இந்தச்
செயல் மேவி ---
உலைந்து அழிவதற்குக் காரணமான இத்தகைய தொழில்களை விரும்பி மேற்கொண்டு,
சலித்தே மெத்தச்
சமுசாரம், பொன் சுகித்தே --- சஞ்சலப்பட்டு, மிகவும் சமுசாரம், செல்வம் ஆகியவற்றைச் சுகத்துடன்
அனுபவித்து,
சுற்றத்தவரோடு
இன்பம் தழைத்தே மெச்ச --- சுற்றத்தாருடன் மகிழ்ச்சி மிகுந்து
புகழும்படி
தயவோடு இந்தக் குடி
பேணி ---
அன்புடனே இந்த வாழ்விடத்தை விரும்பி, (இறுதியில்)
குரக் கோணத்தில் கழு
நாய் உண்ப குழிக்கே வைத்து ---குளம்பு போன்ற பிளவுபட்ட கூர்மையான
மூக்கை உடைய கழுகும், நாயும் உண்ணும்படி
குழியில் வைத்து
சவமாய் நந்து இக்
குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் படுவேனை --- பிணமாய்க்
கெடுகின்ற இந்தக் குடிசையாகிய உடலையே பற்று வைத்து, பழுதுபட்டு அழிகின்ற அடியேனை,
குறித்தே --- குறிக் கொண்டு,
முத்திக்கு மறா இன்பத் தடத்தே பற்றி ---
முக்திக்கு மாறுபடாத இன்ப வழியைக் கைப்பற்றி,
சகமாயம் பொய்க்
குலம் கால் வற்ற --- உலக மாயை, பொய், குலம், குடி என்கின்ற பற்றுக்கள் வற்றிப்போக,
சிவஞானம் பொன் கழல்
தாராய்
--- சிவஞானமாகிய தேவரீரது அழகிய திருவடியைத் தந்து அருளுவீராக.
பொழிப்புரை
திரி புரம் என்னும் காடு அழிந்து பொடியாய் மறையவும், கரும்பு
வில்லை ஏந்தியவனும் அழகிய உடலை உடையவனுமான மன்மதன் அழியவும், புகை கொண்ட தீயை
(நெற்றிக் கண்ணால்) பற்றச் செய்த அந்த வெற்றியாளராகிய சிவபிரானால் அன்பு கொண்டு
அருளப் பெற்றவரே!
எல்லோரையும் அடித்து வீழ்த்தியே எட்டுத்
திசைகளிலும் உள்ளோர்கள் பயப்படும்படி, ஒப்பற்ற பயங்கர
வடிவத்துடன் புகுந்த சூரன் அழிந்துபோகுமாறு போரில் புகழ் பெற்ற சக்தி
வேலாயுதத்துக்கு உணவாக மகிழ்ச்சியுடன் அருளியவரே!
அழகிய காட்டில் அன்புடன் அந்தக்
குறக்கோலம் பூண்டிருந்த செய்கையளாகிய வள்ளியம்மை அஞ்சியபோது "விளங்கும் சீருடைய இந்த யானைக்கு பயந்து
அழாதே, வா" என்று சொல்லி, அப் பெருமாட்டியை அணைந்தவரே!
சிவகதி அடையும் பேற்றுக்கு, கடையவனாகிய அடியேன் வந்து உட்புகுமாறு, வேண்டிய சிறப்பினை எனக்கு வைத்து என்னை
ஏற்றுக் கொள்ளும், ஞானமும் அழகும்
நிறைந்த திருக்காளத்தி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் கந்தவேளாகிய
பெருமையில் சிறந்தவரே!
பொருள் மிகுந்த இந்தப் பூமியில்
வாழ்கின்ற சம்பந்தத்தை வகிக்கின்ற இந்த உடலில் அன்பு பூண்டவர் போன்ற ஐந்து பொறிகளாகிய மோசக்காரர்கள் புகுந்து, உலைந்து
அழிவதற்குக் காரணமான இத்தகைய தொழில்களை விரும்பி மேற்கொண்டு, சஞ்சலப்பட்டு, மிகவும் சமுசாரம், செல்வம் ஆகியவற்றைச் சுகத்துடன்
அனுபவித்து, சுற்றத்தாருடன்
மகிழ்ச்சி மிகுந்து புகழும்படி அன்புடனே இந்த வாழ்விடத்தை விரும்பி, (இறுதியில்) குளம்பு
பேன்ற பிளவுபட்ட கூர்மையான மூக்கை உடைய கழுகும், நாயும் உண்ணும்படி குழியில் வைத்து
பிணமாய்க் கெடுகின்ற இந்தக் குடிசையாகிய உடலையே பற்று வைத்து, பழுதுபட்டு அழிகின்ற அடியேனை, குறிக் கொண்டு, முக்திக்கு மாறுபடாத இன்ப வழியைக்
கைப்பற்றி, உலக மாயை, பொய், குலம், குடி என்கின்ற பற்றுக்கள் வற்றிப்போக, சிவஞானமாகிய தேவரீரது அழகிய திருவடியைத்
தந்து அருளுவீராக.
விரிவுரை
சரக்கு
ஏறு இத்தப் பதிவாழ் ---
சரக்கு
- தன தான்யம் முதலியவைகள். இந்த என்ற சொல்
இத்த என வந்தது.
ஐந்துச்
சதிக்காரர் புக்கு ---
சதிகாரர்
- மோசம் செய்பவர்கள். மெய் வாய் கண்
மூக்கு செவி என்ற ஐம்பொறிகள்.
இந்தப்
பஞ்சேந்திரியங்கள், அருள் நெறியில்
ஈடுபடாத வண்ணம் நம்மைத் தடுத்துக் கெடுத்து அலக்கழிக்கின்றன.
மூள்வாய
தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் ---
அப்பர்.
ஓரஒட்டார்
ஒன்றை உன்னஒட்டார் மலர்இட்டு உனதாள்
சேரஒட்டார்
ஐவர், செய்வது என் யான் … --- கந்தர் அலங்காரம்.
ஐம்பொறிகளின்
சேட்டைகள் ஒன்றா? இரண்டா? அம்மம்ம! எண்ணில் அடங்கா. பலப்பல கொடுமைகளை
விளைக்கின்றார்கள்.
மெத்தச்
சமுசாரம் பொற் சுகித்தே ---
நிலையில்லாத
இந்த சமுசார வாழ்க்கையை நிலைத்ததாக நினைந்து, இதல் நெடுங்காலமாக மாந்தர் அலைந்து
உலைந்து அவலமுறுகின்றார்கள்.
நிலையாத
சமுத்திரமான
சமுசார
துறைக் கணின்மூழ்கி
நிசமானது
எனப்பல பேசி, அதன்ஊடே
நெடுநாளும்
உழைப்பு உளது ஆகி
பெரியோர்கள்
இடைக் கரவு ஆகி
நினைவால்
நின்அடித் தொழில்பேணித் துதியாமல்....
--- திருப்புகழ்.
குரக்கோணத்தில்
கழுநாய் உண்ப
---
குரம்
- குளம்பு. விலங்கின் குளம்பு. கோணம் - மூக்கு.
தமர
குரங்களும் என்ற திருப்புகழிலும் இந்தப் பிரயோகம் வருவதைக் காண்க.
குளம்பு
போன்ற கெட்டித் தன்மையுடன் வளைந்த மூக்கை உடைய கழுகும், நாயும் இந்த உடம்பை உண்டு உவக்கும்.
குழிக்கே
வைத்துச் சவமாய் நந்திக் குடில் ---
மயானத்தில்
குழியில் வைக்குமாறு பிணமாகி அழவது இந்த உடம்பு.
குடில் - சிறு குடிசை. சவமாய்
நந்து இக் குடில்.
குறித்தே
முத்திக்குமறா இன்பத் தடத்தே பற்றி ---
அவமே
அழிகின்ற அடியேனைத் தேவரீர் குறிக்கொண்டு முத்திக்கு மாறுபாடில்லாத இன்ப வழியைக்
கைப்பற்றி உய்யுமாறு அருளவேண்டும் என்று வேண்டுகின்றார்.
மாறா
என்ற சொல் மறா என வந்தது.
சிவஞானம்
பொற்கழல் தாராய் ---
இறைவனுடைய
திருவடி ஞானமே ஆகும். திருவடி தாராய், திருவடி
சேர்ப்பாய் என்று அடியார்கள் வேண்டுவது ஞானத்தில் சேர்தலே ஆகும்.
திருவடியே
சிவம் ஆவது தேரில்
திருவடியே
சிவலோகம் சிந்திக்கில்
திருவடியே
செல் கதியது செப்பில்
திருவடியே
தஞ்சம் உள் தெளிவார்க்கே. --- திருமூலர்.
மந்திரம்
ஆவதும் மாமருந்து ஆவதும்
தந்திரம்
ஆவதும் தானங்கள் ஆவதும்
சுந்தரம்
ஆவதும் தூய்நெறி ஆவதும்
எந்தை
பிரான்தன் இணையடி தானே. --- திருமூலர்.
புரக்காடு
அற்றுப் பொடியாய் மங்க ---
காட்டில்
தீ புகுந்தால் வெந்து சாம்பலாய் அழியும்.
திரிபுரங்கள் சிவபெருமானுடைய புன்னகையால் பொடியாய்ப் போயின.
கழைச்
சாபத்தைச் சடலான் ---
கழை
சாபத்து ஐ சடலான். கரும்பை வில்லாக ஏந்திய
அழகிய உடம்பினன் - மன்மதன்.
சீரத்திக்
கழல்வா என்ப ---
சீர்
அத்திக்கு அழல், வா என்ப. காட்டில்
யானையைக் கண்டு வள்ளிநாயகி அஞ்சிய பொழுது, முருகன், "வள்ளீ, நீ இந்த யானையைக் கண்டு அஞ்சி அழாதே, வா" என்று கூறி அருள் புரிந்தார். அழேல்
என்ற சொல் அழல் என வந்தது.
சிவப்பேறுக்குக்
கடையேன் வந்து உள் புகச் சீர்வைத்துக் கொளு ---
இருவினை
ஒப்பு, மலபரிபாகம் உற்று, சத்திநிபாதம் பதிய, சிவாத்துவிதம் எய்தும் பேறு, சிவப்பேறு ஆகும். இந்தச் சிவமாம் தன்மையை அடியேன் பெற்று உய்ய, முருகா, நீ எனக்கு அருள்க என்று சுவாமிகள்
வேண்டுகின்றார்.
ஞானம்
பொன் திருக்காளத்தி ---
ஞான
மயமான அழகிய திருப்பதி, திருக்காளத்தி. இத்தலம் மகா புனிதம் உடையது.
கருத்துரை
திருக்காளத்தி
மேவிய கந்தவேளே, சிவஞானமாகிய
திருவடியைத் தந்து அருள்வீர்.
No comments:
Post a Comment