சிதம்பரம் - 0605. இருவினையின் மதிமயங்கி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இருவினையின் மதி (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
உனது திருவடிக் காட்சியைத் தந்து அருள்


தனதனன தனன தந்தத் ...... தனதானா
     தனதனன தனன தந்தத் ...... தனதானா


இருவினையின் மதிம யங்கித் ...... திரியாதே
     எழுநரகி லுழலு நெஞ்சுற் ...... றலையாதே

பரமகுரு அருள்நி னைந்திட் ...... டுணர்வாலே
     பரவுதரி சனையை யென்றெற் ...... கருள்வாயே

தெரிதமிழை யுதவு சங்கப் ...... புலவோனே
     சிவனருளு முருக செம்பொற் ...... கழலோனே

கருணைநெறி புரியு மன்பர்க் ...... கெளியோனே
     கனகசபை மருவு கந்தப் பெருமாளே.


பதம் பிரித்தல்


இருவினையின் மதி மயங்கித் ...... திரியாதே,
     எழுநரகில் உழலும் நெஞ்சு உற்று...... அலையாதே,

பரமகுரு அருள் நினைந்திட்டு, ...... உணர்வாலே
     பரவு தரிசனையை என்று எற்கு ...... அருள்வாயே.

தெரிதமிழை உதவு சங்கப் ...... புலவோனே!
     சிவன்அருளும் முருக! செம்பொன் ...... கழலோனே!

கருணைநெறி புரியும் அன்பர்க்கு ...... எளியோனே!
     கனகசபை மருவு கந்த! ...... பெருமாளே!


பதவுரை

      தெரி தமிழை உதவு சங்கப் புலவோனே --- அனைவரும் தெரிந்து இன்புறத்தக்க தமிழை ஆய்ந்து உதவிய சங்கப் புலவராய் விளங்கியவரே!

      சிவன் அருளும் முருக --- சிவபெருமான் பெற்றருளிய முருகக் கடவுளே!

      செம்பொன் கழலோனே --- செவ்விய பொன்னாலான வீரக் கழலை அணிந்தவரே!


      கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே --- அருள் நெறியை அனுசரிக்கும் அடியார்களாம் அன்புடையார்க்கு எளியவரே!

      கனகசபை மருவு கந்த --- பொற்சபையில் வீற்றிருக்கும் கந்தக் கடவுளே!
    
     பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!

       இருவினையின் மதி மயங்கித் திரியாதே --- நல்வினை, தீவினை என்ற இரு வினைகளினால் அறிவு மிக மயக்கம் அடைந்து அடியேன் அலைந்து திரியாமல்,

      எழு நரகில் உழலும் நெஞ்சு உற்று அலையாதே --- ஏழு நரகங்களிலும் உழலுதற்குறிய நெஞ்சத்தை அடைந்து சிறியேன் அலையாமல்,

      பரமகுரு அருள் நினைந்திட்டு --- சிறந்த குருமூர்த்தியின்  திருவருளை நினைவில் வைத்து,

      உணர்வாலே பரவு தரிசனையை --- ஞானத்தெளிவு பெற்று, போற்றுதற்குரிய உமது காட்சியை

         என்று எற்கு அருள்வாயே --- எந்த நாள் அடியேனுக்கு அருள புரிவீர்.


பொழிப்புரை


         அனைவரும் தெரிந்து இன்புறத்தக்க தமிழை ஆய்ந்து உதவிய சங்கப் புலவராய் விளங்கியவரே!

         சிவபெருமான் பெற்றருளிய முருகக் கடவுளே!

         செவ்விய பொன்னாலான வீரக் கழலை அணிந்தவரே!

         அருள் நெறியை அனுசரிக்கும் அடியார்களாம் அன்புடையார்க்கு எளியவரே!

         பொற்சபையில் வீற்றிருக்கும் கந்தக் கடவுளே!

       பெருமையில் சிறந்தவரே!

         நல்வினை, தீவினை என்ற இரு வினைகளினால் அறிவு மிக மயக்கமடைந்து அடியேன் அலைந்து திரியாமல், ஏழு நரகங்களிலும் உழலுதற்குறிய நெஞ்சத்தை அடைந்து சிறியேன் அலையாமல், சிறந்த குருமூர்த்தியின்  திருவருளை நினைவில் வைத்து, ஞானத்தெளிவு பெற்று, போற்றுதற்குரிய உமது காட்சியை எந்த நாள் அடியேனுக்கு அருள புரிவீர்.


விரிவுரை

இருவினையின் மதிமயங்கித் திரியாதே ---

பிறப்புக்குக் காரணம் நல்வினை தீவினை என்ற இருவினைகளுமே ஆகும்.

நல்வினை பொன் விலங்கோடு ஒக்கும். தீவினை இரும்பு விலங்கோடு ஒக்கும். ஆகவே, இருவினையும் பிறவியை நல்கும்.

நல்வினையைப் பயன் கருதாமல் புரிதல் வேண்டும். தீவினையை மறந்தும் செய்தல் கூடாது. இருவினைகள் விலகினால் மும்மலம் விலகும். மும்மலம் விலக சத்தி பதியும். சிவாத்துவிதம் உண்டாகும்.

இருவினை மும்மலமும் அற இறவியொடு பிறவிஅற
ஏகபோகமாய் நீயும் நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனைஅருள் இடைமருதில்
ஏகநாயகா, லோக நாயகா....                      ---  (அறுகுநுனி) திருப்புகழ்.
   
எழு நரகில் உழலு நெஞ்சு உற்று அலையாதே ---

ஏழு நரகங்கள். கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து என்பன.

மிகுந்த பாவம் செய்தவர்கள் ஏழு நரகங்களில் தள்ளப்பட்டு பெரிய வேதனையை நுகர்வார்கள்.

எரிவாய் நரகில் புகுதாத படிக்கு
இருபாதம் எனக்கு அருள்வாயே....        ---  (அருமா) திருப்புகழ்.

பரமகுரு அருள் நினைந்திட்டு ---

அருணகிரிநாதருக்கு முருகவேளே பரம குருநாதனாக எழுந்தருளி உபதேசித்து அருளினார். அங்ஙனம் உபதேசித்த அருள் திறத்தை மறவாது நினைத்தல் வேண்டும் என்கின்றார்.

உணர்வாலே ---

உபதேச மொழியை சதா இடையறாது நினைப்பதனால் பொய்யுணர்வு நீங்கி, மெய்யுணர்வு தோன்றும். நித்தம் இது, அநித்தம் இது என்று பகுத்து உணர்தலே மெய்யுணர்வாகும்.  இந்த உணர்வு கற்ற அறிவால் எய்தாது. குருவருளாலே மட்டுமே உண்டாகும்.

பரவு தரிசனையை என்று எற்கு அருள்வாயே ---

உலகம் யாவும் போற்றிப் புகழ்கின்ற முருகப் பெருமானுடைய தரிசனையை விரும்பி அருணகிரியார் அப் பெருமானை வேண்டுகின்றார். 

சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து, உரைஒழித்து,
என்செயல் அழிந்துஅழிந்து அழிய,மெய்ச்
சிந்தைவர, என்றுநின் தெரிசனைப் படுவேனோ..        ---  (அந்தகன்) திருப்புகழ்.
  
தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே ---

உக்கிரப் பெருவழுதியை முருகவேள் அதிட்டித்து சங்கத்தில் இருந்ததை இது விளக்குகின்றது.

காலக் கோட்பாட்டினால் தமிழில் இருந்த பொருள் இலக்கணம் சிதைந்து மறைந்தது. அது கண்டு பாண்டியன் வருந்தினான். சோமசுந்தரக் கடவுள் அவனுடைய அலக்கண் தீர்ப்பான் வேண்டி பொருள் இலக்கணமாக இறையனார் அகப்பொருள் என்ற அறுபது சூத்திரங்கள் அடங்கிய அரிய நூலை அருளிச்செய்து வழங்கினார்.

அந்நூலுக்குச் சங்கப் புலவர்கள் வேறு வேறு உரைகள் செய்தார்கள். தாம் தாம் செய்த உரையே உயர்ந்தது என அவர்கட்குள்ளேயே கலகம் பிறந்தது. எல்லோரும் சோமசுந்தரப் பெருமான் திருமுன் சென்று “ஐயனே! எங்கள் கலகந் தீர்த்து உலகம் உய்ய அருள் செய்வாய்” என்று வேண்டி நின்றார்கள்.

சொக்கலிங்கத்தினின்று இறைவன் ஒரு புலவர் வடிவில் தோன்றி, ” புலவர்களே! நீவிர் வருந்தற்க. இம்மதுரை மாநகரில் வணிகர் குலத்தில் தனபதி என்பானுக்கும் குணசாலினிக்கும் தவத்தால் தோன்றிய ஒரு தெய்வப் புதல்வன் இருக்கின்றான். அவன் ஊமை. அத் திருமகன்பால் உமது உரைகளை உரைமின்; அவன் எது உயர்ந்தது என உறுதியாக அறுதியிட்டு அறிவிப்பான்” என்று அருளிச் செய்தனர்.

புலவர்கள், “பெருமானே! ஊமை மகன் எங்ஙனம் உரைப்பான்?” என்று ஐயுற்று வினவினார்கள். இறைவன், “புலவீர்காள்! நீவிர் சென்று கேண்மின் அவன் சொல்லாழமும் பொருளாழமும் நன்கு உணர்ந்து, நிறுத்து, நுனித்து உணர்த்துவான்” என்று அருளிச் செய்தனர். சங்கப் புலவர்கள் மேளம் தாளம் குடை விருது சாமரை பல்லக்கு முதலிய வரிசைப் பொருள்களுடன் சென்று உருத்திரசன்மர் என்ற அந்த செட்டிக் குமரனைப் பணிந்து, செஞ்சந்தனம் பூசி, செம்பட்டு ஆடையும், செம்மலர் மாலையும் புனைவித்து, பல்லக்கில் ஏற்றிக் கொணர்ந்து சங்கப் பலகைமீது எழுந்தருளச் செய்து, சுற்றிலும் அமர்ந்து, தத்தம் உரைகளை உரைப்பாராயினார்கள்.

சிலர் கூறும் உரைகளைக் கேட்டு அந்த ஊமைச் சிறுவன் முகத்தைச் சுளித்தனன்; சிலர் கூறும் உரைகளைக் கேட்டு உதட்டை அசைத்தனன்; சிலர் கூறும் உரைகளைச் சில இடத்தில் ஆமோதிப்பான் போல் சிறிது தலையை அசைத்தான்; சிலர் கூறும் உரைகளைக் கேட்டு கண் மலர்ந்து பார்த்தனன்.

நக்கீரன், கபிலன், பரணன் என்ற முப்பெரும் புலவர்களது உரைகளைக் கேட்டு அடி முதல் முடி வரை உடல் புளகிதமுற்று, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, சிரம் அசைத்து கரந்தட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்து ஆமோதித்தானன்.

நுழைந்தான்பொருள் தொறும் சொல்தொறும் நுண் தீஞ்சுவை உண்டே
தழைந்தான் உடல், புலன் ஐந்தினும் தனித்தான்,சிரம் பணித்தான்,
குழைந்தான்விழி, வழிவேலையுள் குளித்தான்,தனை அளித்தான்,
விழைந்தான் தவபேற்றினை விளைத்தான்,களி திளைத்தான்.

இவ்வாறு அப் புலவர்கள்பால் விளைந்த கலகந் தீர்த்து உலகம் உய்ய அருள் புரிந்தான். முருகவேள் பிறப்பும் இறப்பும் இல்லாத பெருந்தகை, `பெம்மான் முருகன் பிறவான் இறவான்ழு என்கின்றார் அருணகிரிநாதர்.

சுப்பிரமணிய சாரூபம் பெற்றவர்கள் பலர்; அவர்கள் அபர சுப்ரமண்யர் எனப்படுவர். அவருள் ஒருவர் உருத்திரன்மராக வந்தனர். முருகவேளது அருள் தாங்கி வந்தபடியால் முருகனே வந்ததாக அருணகிரியார் கூறுகின்றார் எனத்தெளிக.

    ஏழேழு பேர்கள் கூற வருபொருள் அதிகாரம்
    ஈடு ஆய, ஊமர்போல வணிகரில்
    ஊடு ஆடி, ஆலவாயில் விதிசெய்த
    லீலா விசார தீர வரதர              குருநாதா”           ---  (சீரான) திருப்புகழ்

கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே ---

மூவருக்கும் தேவருக்கும் மற்று யாவருக்கும் அரியனான முருகன், கருணை நெறி நின்ற அன்பர்க்கு எளியனாய் வந்து தண்ணருள் புரிகின்றான். ஆதலின், கருணை நெறி நிற்க வேண்டும்.

கருத்துரை

பொற்சபை மேவும் கந்தவேளே, உன் காட்சியைத் தந்து அருள்.

No comments:

Post a Comment

திருவொற்றியூர்

  "ஐயும் தொடர்ந்து, விழியும் செருகி, அறிவு அழிந்து, மெய்யும் பொய்யாகி விடுகின்ற போது ஒன்று வேண்டுவன் யான், செய்யும் திருவொற்றியூர் உடைய...