திருவண்ணாமலை - 0585. மேகம் ஒத்த குழலார்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மேகம் ஒத்த குழலார் (திருவருணை)

திருவருணை முருகா!
பொதுமாதர் உறவு நீங்க அருள்.

தான தத்ததன தான தத்ததன
     தான தத்ததன தான தத்ததன
          தான தத்ததன தான தத்ததன ...... தனதான


மேக மொத்தகுழ லார்சி லைப்புருவ
     வாளி யொத்தவிழி யார்மு கக்கமல
          மீது பொட்டிடழ கார்க ளத்திலணி ...... வடமாட

மேரு வொத்தமுலை யார்ப ளப்பளென
     மார்பு துத்திபுய வார்வ ளைக்கடகம்
          வீறி டத்துவளு நூலொ டொத்தஇடை ...... யுடைமாதர்

தோகை பட்சிநடை யார்ப தத்திலிடு
     நூபு ரக்குரல்கள் பாட கத்துகில்கள்
          சோர நற்றெருவு டேந டித்துமுலை ...... விலைகூறிச்

சூத கச்சரச மோடெ யெத்திவரு
     வோரை நத்திவிழி யால்ம ருட்டிமயல்
          தூள்ம ருத்திடுயி ரேப றிப்பவர்க ...... ளுறவாமோ

சேக ணச்செகண தோதி மித்திகுட
     டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி
          தீத கத்திமித தோவு டுக்கைமணி ...... முரசோதை

தேச முட்கவர ஆயி ரச்சிரமு
     மூளி பட்டுமக மேரு வுக்கவுணர்
          தீவு கெட்டுமுறை யோவெ னக்கதற ...... விடும்வேலா

ஆக மத்திபல கார ணத்தியெனை
     யீண சத்திஅரி ஆச னத்திசிவ
          னாக முற்றசிவ காமி பத்தினியின் ...... முருகோனே

ஆர ணற்குமறை தேடி யிட்டதிரு
     மால்ம கட்சிறுமி மோக சித்ரவளி
          ஆசை பற்றிஅரு ணாச லத்தின்மகிழ் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மேகம் ஒத்த குழலார், சிலைப் புருவ,
     வாளி ஒத்த விழியார், முகக் கமலம்
          மீது பொட்டுஇடு, அழகார் களத்தில் அணி......வடம்ஆட

மேரு ஒத்த முலையார், பளப்பள என
     மார்பு துத்தி புயவார், வளைக் கடகம்
          வீறு இடத் துவளும் நூலொடு ஒத்த இடை ......உடை மாதர்,

தோகை பட்சி நடையார், பதத்தில் இடு
     நூபுரக் குரல்கள் பாட, அகத் துகில்கள்
          சோர, நல் தெருவுடே நடித்து, முலை ......விலைகூறி,

சூதகச் சரசமோடெ எத்தி, வரு-
     வோரை நத்தி, விழியால் மருட்டி, மயல்
          தூள் மருத்து இடு உயிரே பறிப்பவர்கள்......உறவுஆமோ?

சேக ணச்செகண தோதி மித்திகுட
     டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி
          தீத கத்திமிததோ உடுக்கை,மணி ...... முரசு ஓதை

தேசம் உட்க வர ஆயிரச் சிரமும்
     மூளி பட்டு, மக மேரு உக்க, உணர்
          தீவு கெட்டு,முறையோ எனக் கதற ......விடும்வேலா!

ஆகமத்தி, பல காரணத்தி, எனை
     ஈண சத்தி, அரி ஆசனத்தி, சிவன்
          ஆகம் உற்ற சிவகாமி, பத்தினியின் ......முருகோனே!

ஆரணற்கு மறை தேடி இட்ட திரு-
     மால் மகள் சிறுமி, மோக சித்ர வளி,
          ஆசை பற்றி அருணாசலத்தில் மகிழ் ...... பெருமாளே.


பதவுரை

       சேகணச் செகண தோதி மித்திகுட டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி தீதகத் திமிததோ --- சேகணச் செகண தோதி மித்திகுட டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி தீதகத் திமிததோ என்ற ஒலியுடன்

     உடுக்கை, மணி, முரசு ஓதை --- உடுக்கையும், மணியும், முரசு வாத்தியமும் முழங்கும் ஓசையால்

       தேசம் உட்க --- தேசமெல்லாம் அஞ்ச,

     அர ஆயிரச் சிரமும் மூளி பட்டு --- ஆதிசேடனுடைய ஆயிரத் தலைகளும் சேதப்பட்டு,

     மகமேரு உக்க --- மகாமேரு மலை சிதறுண்டு,

     அவுணர் தீவு கெட்டு --- அசுரர்கள் வாழ்ந்த தீவுகள் அழிவுற்று,

     முறையோ எனக் கதற விடும் வேலா --- எல்லோரும் முறையோ என்று கதறுமாறு செலுத்திய வேலாயுதரே!

      ஆகமத்தி --- ஆகமங்களுக்கு உரியவளும்,

     பல காரணத்தி --- பற்பல காரணங்களுக்கு மூலப் பொருள் ஆனவளும்,

     எனை ஈண சத்தி --- அடியேனை ஈன்ற சத்தியும்,  

     அரி ஆசனத்தி --- சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவளும்,

     சிவன் ஆகம் உற்ற சிவகாமி பத்தினியின் முருகோனே --- சிவபெருமானுடைய உடம்பில் இடம் கொண்ட சிவகாமியும், பதிவிரதையும் ஆகிய உமாதேவி பெற்ற இளம் பாலகரே!

      ஆரணற்கு மறை தேடியிட்ட திருமால் மகள் --- பிரமதேவனுக்கு வேதத்தைத் தேடித் தந்த நாராயணருடைய புதல்வியாகிய

     சிறுமி ---  இளம் பெண்மணியும்,

     மோக சித்ர வளி ஆசை பற்றி --- தேவரீரிடம் அன்பு வைத்தவளும், அழகுள்ளவளும் ஆகிய வள்ளியம்மை மீது அன்பு வைத்து,

     அருணாசலத்தின் மகிழ் பெருமாளே --- திருவண்ணாமலையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

      மேகம் ஒத்த குழலார் --- மேகம் போன்ற கருத்த கூந்தலை உடையவர்களும்,

     சிலைப் புருவ --- நீண்ட வில்லைப் போன்ற புருவத்தை உடையவர்களும்,

     வாளி ஒத்த விழியார் --- அம்பு போன்ற கண்களை உடையவர்களும்,

     முகக் கமல மீது பொட்டு இடு அழகார் --- தாமரை போன்ற முகத்தில் பொட்டு வைத்துள்ள அழகியவர்களும்,

     களத்தில் அணிவடம் ஆட --– கழுத்தில் அணிகின்ற மணிமாலை அசைந்தாட,

      மேரு ஒத்த முலையார் --- மேருமலை போன்ற முலைகளை உடையவர்களும்,

     பளப்பள என மார்பு துத்தி புயவார் --- பளபள என்று ஒளிதரும் மார்பில் தேம்பல் உடையவர்களும்,  தோள்கள் படைத்தவர்களும்,

    வளைக் கடகம் வீறிடத் துவளும் --- வரிசையான வளையல்களும் கங்கணமும் மேம்பட்டு விளங்க துவளுகின்ற

     நூலொடு ஒத்த இடை உடை மாதர் ---- நூல் போன்ற இடையை உடையவர்களும் ஆகிய பெண்கள்,

      தோகை பட்சி நடையார் --- தோகையை உடைய மயில் போன்ற நடையினை உடையவர்களும்,

     பதத்தில் இடு நூபுரக் குரல்கள் பாட --- காலில் அணிந்துள்ள சிலம்புகளின் இனிய ஓசைகள் ஒலிக்க,

     அகத் துகில்கள் சோர --- உடம்பின் மீதுள்ள ஆடைகள் நெகிழ,

     நல் தெருவுடே நடித்து ---  தெருக்களின் நடுவில் நடனம் செய்து,

     முலை விலை கூறி --- முலைகளை விலைக்கு விற்று,

      சூதகச் சரசமோடெ எத்தி --- உள்ளத்தில் வஞ்சனை வைத்து காமலீலைகளைக் காட்டி ஏமாற்றி,

     வருவோரை நத்தி --- தம்பால் வருபவர்களை விரும்பி,

     விழியால் மருட்டி --- கண்களால் அவர்களை மயக்கி,

     மயல் தூள் மருத்து இடு --- மயக்கத்தைத் தரும் தூள் மருந்தை இட்டு,

     உயிரே பறிப்பவர்கள் உறவு ஆமோ --- உயிரையே பறிப்பவர்கள் ஆகிய பொதுமாதர்களின் உறவு ஆகுமோ? (கூடாது).


பொழிப்புரை


         சேகணச் செகண தோதி மித்திகுட டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி தீதகத் திமிததோ என்ற ஒலியுடன் உடுக்கையும், மணியும், முரசு வாத்தியமும் முழங்கும் ஓசையால் தேசமெல்லாம் அஞ்ச, ஆதிசேடனுடைய ஆயிரத் தலைகளும் சேதப்பட்டு, மகாமேரு மலை சிதறுண்டு, அசுரர்கள் வாழ்ந்த தீவுகள் அழிவுற்று, எல்லோரும் முறையோ என்று கதறுமாறு செலுத்திய வேலாயுதரே!

         ஆகமங்களுக்கு உரியவளும், பற்பல காரணங்களுக்கு மூலப் பொருள் ஆனவளும், அடியேனை ஈன்ற சத்தியும், சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவளும், சிவபெருமானுடைய உடம்பில் இடம் கொண்ட சிவகாமியும், பதிவிரதையும் ஆகிய உமாதேவி பெற்ற இளம் பாலகரே!

         பிரமதேவனுக்கு வேதத்தைத் தேடித் தந்த நாராயணருடைய புதல்வியாகிய இளம் பெண்மணியும், தேவரீரிடம் அன்பு வைத்தவளும், அழகு உள்ளவளும் ஆகிய வள்ளியம்மை மீது அன்பு வைத்து, திருவண்ணாமலையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         மேகம் போன்ற கருத்த கூந்தலை உடையவர்களும், நீண்ட வில்லைப் போன்ற புருவத்தை உடையவர்களும், அம்பு போன்ற கண்களை உடையவர்களும், தாமரை போன்ற முகத்தில் பொட்டு வைத்துள்ள அழகியவர்களும், கழுத்தில் அணிகின்ற மணிமாலை அசைந்தாட, மேருமலை போன்ற முலைகளை உடையவர்களும், பளபள என்று ஒளிதரும் மார்பில் தேம்பல் உடையவர்களும்,  தோள்கள் படைத்தவர்களும், வரிசையான வளையல்களும் கங்கணமும் மேம்பட்டு விளங்க துவளுகின்ற நூல் போன்ற இடையை உடையவர்களும் ஆகிய பெண்கள், தோகையை உடைய மயில் போன்ற நடையினை உடையவர்களும், காலில் அணிந்துள்ள சிலம்புகளின் இனிய ஓசைகள் ஒலிக்க, உடம்பின் மீதுள்ள ஆடைகள் நெகிழ,  தெருக்களின் நடுவில் நடனம் செய்து, முலைகளை விலைக்கு விற்று, உள்ளத்தில் வஞ்சனை வைத்து காமலீலைகளைக் காட்டி ஏமாற்றி, தம்பால் வருபவர்களை விரும்பி, கண்களால் அவர்களை மயக்கி, மயக்கத்தைத் தரும் தூள் மருந்தை இட்டு, உயிரையே பறிப்பவர்கள் ஆகிய பொதுமாதர்களின் உறவு ஆகுமோ? (கூடாது).

 
விரிவுரை

ஆகமத்தி ---

இறைவன் அருளிய நூல்கள் இரண்டு. ஒன்று வேதம்.  மற்றொன்று ஆகமம். வேதம் - பொது. ஆகமம் - சிறப்பு.  ஆகமம் என்ற சொல்லுக்கு வந்தது என்பது பொருள்.  சிவபெருமானுடைய வாக்கில் இருந்து வந்தது. ஆப்த வசனமாகும்.

ஆ – பாசம்,  க – பசு.  ம – மலநாசம்.
ஆ – சிவஞானம்,  க – மோட்சம்,  ம – மலநாசம்.

மலத்தைக் கெடுத்து, சிவஞானத்தைக் கொடுத்து, மோட்சத்தை அருள்வது.

ஆகமம் எண்ணில் கோடிகள் ஆகும். ஆகமங்களில் சிறந்தவை 28.  சிவாகமங்களின் உட்பொருளாக விளங்குபவர் உமாதேவியார்.

பல காரணத்தி –--

காரணங்கள் பலவற்றிற்கும் மூலமாகத் திகழ்பவர் அம்பிகை.

எனை ஈண சத்தி ---

அருணகிரிநாதர் பல இடங்களில் உமாதேவியாரை, என் தாய் எனை ஈன்றவள் என்று கூறுகின்றார்.

எனது தாய் பயந்திடு முருகோனே --- (ஒருவரையும்) திருப்புகழ்.
  
அரி ஆசனத்தி ---

சிங்கத்தின் தலைகள் இருபுறம் அமைத்த பொற்பீடத்தில் இருப்பவர் உமாதேவியார். சிங்கத் தோலின் மீது அமர்ந்திருப்பவர்.

அரி தோல் ஆசனத்தி உமை அருள்பாலா      --- (நாடாபிறப்பு) திருப்புகழ்.

ஆரணற்கு மறை தேடியிட்ட திருமால் ---

சோமுகன் என்ற அசுரன், பிரமதேவரிடம் இருந்த வேத நூல்களைப் பிடுங்கிக் கொண்டுபோய் கடலில் மறைந்தான்.  பிரமா திருமாலிடம் முறையிட்டார். நாராயணர் மச்சாவதாரம் எடுத்து, கடல் நீருக்குள் புகுந்து, சோமுகாசுரனைக் கொன்று, வேதங்களைக் கொணர்ந்து, பிரமதேவருக்கு வழங்கி அருள் புரிந்தார்.

சிறுத்த செலு அதனுள் இருந்து
பெருத்த திரை உததி கரந்து
செறித்த மறை கொணர நிவந்த   ஜெயமாலே..   ---  (கறுத்ததலை) திருப்புகழ்.


கருத்துரை


அருணை மேவிய அண்ணலே, பொதுமாதர் உறவு நீங்க அருள்செய்.


No comments:

Post a Comment

திருவொற்றியூர்

  "ஐயும் தொடர்ந்து, விழியும் செருகி, அறிவு அழிந்து, மெய்யும் பொய்யாகி விடுகின்ற போது ஒன்று வேண்டுவன் யான், செய்யும் திருவொற்றியூர் உடைய...