சிதம்பரம் - 0608. எலுப்புத் தோல்மயிர்
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

எலுப்புத் தோல் (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
நோயற்ற வாழ்வைத் தந்து, திருவடி இன்பத்தை அருள்.


தனத்தத் தானன தானன தானன
     தனத்தத் தானன தானன தானன
          தனத்தத் தானன தானன தானன ...... தந்ததான


எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை
     இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள்
          இரத்தச் சாகர நீர்மல மேவிய ...... கும்பியோடை

இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி
     உளைப்புச் சூலையொ டேவலு வாகிய
          இரைப்புக் கேவல மூலவி யாதியொ ...... டண்டவாதங்

குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ
     டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை
          குருட்டுக் கால்முட மூமையு ளூடறு ...... கண்டமாலை

குடிப்புக் கூனமி தேசத மாமென
     எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு
          னிடத்துத் தாள்பெற ஞானச தாசிவ ...... அன்புதாராய்

கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமி
     ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்
          கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட ...... கண்டவேலா

கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ
     யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி
          கிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகி ......பங்கின்மேவும்

வலித்துத் தோள்மலை ராவண னானவன்
     எடுத்தப் போதுடல் கீழ்விழ வேசெய்து
          மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅர ...... சம்புபாலா

மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை
     அணைத்துச் சீர்புலி யூர்பர மாகிய
          வடக்குக் கோபுர வாசலில் மேவிய ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


எலுப்புத் தோல்மயிர் நாடி குழாம் மிடை
     இறுக்குச் சீ புழுவோடு அடை மூளைகள்,
          இரத்தச் சாகர, நீர் மலம் மேவிய ...... கும்பிஓடை,

இளைப்பு, சோகைகள், வாதம், விலாவலி,
     உளைப்பு, சூலையொடே, வலு ஆகிய
          இரைப்பு, கேவல மூல வியாதியொடு ......  அண்டவாதம்,

குலைப்பு, காய்கனல், நீரிழிவு, ஈளையொடு
     அளைப்பு, காது அடை, கூனல், விசூசிகை,
          குருட்டு, கால்முடம், ஊமை, உள் உடறு ......கண்டமாலை

குடிப் புக்கு ஊனம் இதே சதமாம் என
     எடுத்து, பாழ்வினையால் உழல் நாயென்உன்
          இடத்துத் தாள்பெற, ஞான சதாசிவ ...... அன்புதாராய்.

கெலிக்கப் போர்பொரு சூரர் குழாம் உமிழ்
     இரத்தச் சேறு எழ, தேர்பரி யாளிகள்
          கெடுத்திட்டே கடல் சூர்கிரி தூள்பட ...... கண்டவேலா!

கிளர்ப்பொன் தோளி, சராசர மேவியெ
     அசைத்துப் பூசைகொள் ஆயி, பராபரி,
          கிழப்பொன் காளைமெல் ஏறும்எம் நாயகி ......பங்கின்மேவும்

வலித்துத் தோள்மலை ராவணன் ஆனவன்
     எடுத்த அப்போது, உடல் கீழ் விழவே செய்து,
          மகிழ்ப்பொன் பாத! சிவாயநமோ!அர! ...... சம்புபாலா!

மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை
     அணைத்துச் சீர் புலியூர் பரம் ஆகிய
          வடக்குக் கோபுர வாசலில் மேவிய ...... தம்பிரானே.


பதவுரை

      கெலிக்கப் போர் பொரு சூரர் குழாம் உமிழ் --- போர் புரிந்து வெற்றி பெற வந்த சூரர்களுடைய கூட்டமானது

     இரத்தச் சேறு எழ --- கக்கும் இரத்தம் போர்க்களத்தைச் சேறு பெருகச் செய்ய,

      தேர் பரி யாளிகள் கெடுத்திட்டே --- தேர்கள், குதிரைகள், யாளிகள் அழிபட்டு,

      கடல் சூர் கிரி தூள்பட கண்ட வேலா --- கடலும் சூரனும், கிரவுஞ்ச மலையுடன் எழு மலைகளும் தூள்படும்படி செய்த வேலவரே!

      கிளர் பொன் தோளி --- அழகு விளங்கும் தோள்களை உடையவள்,

      சர அசரம் மேவி --- அசையும் பொருள், அசையாப் பொருள் இவை இரண்டிலும் கலந்தும்

     எய் அசைத்துப் பூசைகொள் ஆயி --- அவைகளை ஆட்டுவித்தும் வழிபாடு பெறுகின்ற எங்கள் அன்னை,

         பராபரி --- பரம் பொருளானவள்,

         கிழப் பொன் காளை மேல் ஏறு எம் நாயகி பங்கின் மேவும்  --- உரிமையான அழகிய எருதின் மேலே ஏறி வருபவளும் ஆகிய உமைதேவியைப் பக்கத்தில் உடையவரும்,

         வலித்துத் தோள் மலை ராவணன் ஆனவன் எடுத்த அப்போது --- வன்மையுடன் தனது தோள் வலி முழுவதையும் கொண்டு திருக்கயிலை மலையை இராவணன் என்பவன் எடுத்த அப்பொழுது,

      உடல் கீழ் விழவே செய்து --- அவனுடைய உடலானது கீழே விழுமாறு செய்து

     மகிழ்ப் பொன் பாத --- திருவிரல் ஊன்றி மகிழ்ந்த அழகிய பாதங்களை உடையவரும்,

      சிவாய நமோ --- சிவாயநம என்னும் திருவைந்தெழுத்து வடிவமாக உள்ளவரும்,

     அர --- உயிர்களின் பாவங்களைப் போக்குபவரும்,

     சம்பு ---  இன்பத்தைத் தருபவரும் ஆன சிவபெருமானுடைய

     பாலா --- திருக்குமாரரே!

         மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை அணைத்து --- மலைக்கு ஒப்பான முலைகளை உடைய குறமகளாகிய வள்ளிநாயகியைத் தழுவி,

         சீர் புலியூர் பரமாகிய வடக்குக் கோபுர வாசலில் மேவிய தம்பிரானே --- பெருமை வாய்ந்த பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில் சிறந்து விளங்கும் திருக் கோயிலின் வடக்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவரே!

         எலுப்புத் தோல் மயிர் நாடி குழாம் மிடை --- எலும்பு, தோல், மயிர், நாடி ஆகியவைகள் நெருங்கி,,

         இறுக்குச் சீ புழுவோடு அடை மூளைகள் --- உள்ளே அழுந்தியுள்ள சீழ், புழு இவைகளுடன் பொருந்திய மூளைகள்,

         இரத்தச் சாகர நீர் மலம் மேவிய கும்பி ஓடை --- இரத்தம், நீர், மலம் இவை எல்லாம் நிறைந்த சேற்றுக் குளத்தில்,

         இளைப்புச் சோகைகள் வாதம் விலா வலி --- சோர்வு, இரத்தக் குறைவால் வரும் சோகை, வாயு மிகுதலாகிய பிணி, பக்க வாதம்,

         உளைப்புச் சூலையொடே வலுவாகிய இரைப்பு --- வயிற்று உளைவு, சூலை என்னும் நோயோடு, பலத்த மூச்சு வாங்குதல்,

         கேவல மூல வியாதியொடு அண்டவாதம் --- இழிவான மூல நோயுடன் விரைவாதம்,

         குலைப்புக் காய் கனல் நீரிழிவு ஈளையொடு அளைப்பு --- நடுக்கு வாதம், காய்கின்ற நெருப்புப் போன்ற சுரம், நீரிழிவு, கபம் காரணமாக கோழையின் கலப்பு,

         காது அடை, கூனல், விசூசிகை --- செவிட்டுத் தன்மை, கூன், வாந்தி பேதி,

         குருட்டுக் கால்முடம் ஊமை உள் ஊடு அறு கண்டமாலை --- குருட்டுத் தன்மை, கால் முடமாதல், பேச்சு வராமை, உள்ளே அறுத்துச் செல்லுகின்ற கழுத்தைச் சுற்றி வரும் புண்,

      குடிப் புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து --- இன்ன பிற நோய்கள் எல்லாம் குடி புகுந்த, கேடு விளைகின்ற, அழியக் கூடிய இந்த உடம்பை நிலையானது என்று கொண்டு,

      பாழ் வினையால் உழல் நாயேன் --- துன்பத்துக்கு இடமான கொடிய வினையால் திரிகின்ற நாய் போன்ற அடியேன்,

      உன் இடத்துத் தாள் பெற --- உனது திருவடிகளைப் பெற,

     ஞான சதாசிவ அன்பு தாராய் --- ஞான மயமானதும், எப்போதும் மங்களகரமானதும் ஆகிய அன்பைத் தருவாயாக.


பொழிப்புரை

         போர் புரிந்து வெற்றி பெற வந்த சூரர்களுடைய கூட்டமானது கக்கும் இரத்தம் போர்க்களத்தைச் சேறு பெருகச் செய்ய, தேர்கள், குதிரைகள், யாளிகள் அழிபட்டு, கடலும், சூரனும், கிரவுஞ்ச மலையுடன் எழு மலைகளும் தூள்படும்படி செய்த வேலவரே!

         அழகு விளங்கும் தோள்களை உடையவள், அசையும் பொருள், அசையாப் பொருள் இவை இரண்டிலும் கலந்தும் அவைகளை ஆட்டுவித்தும் வழிபாடு பெறுகின்ற எங்கள் அன்னை, பரம் பொருளானவள், உரிமையான அழகிய எருதின் மேலே ஏறி வருபவளும் ஆகிய உமைதேவியைப் பக்கத்தில் உடையவரும், வன்மையுடன் தனது தோள் வலி முழுவதையும் கொண்டு திருக்கயிலை மலையை இராவணன் என்பவன் எடுத்த அப்பொழுது, அவனுடைய உடலானது கீழே விழுமாறு செய்து திருவிரல் ஊன்றி மகிழ்ந்த அழகிய பாதங்களை உடையவரும், சிவாயநம என்னும் திருவைந்தெழுத்து வடிவமாக உள்ளவரும், உயிர்களின் பாவங்களைப் போக்குபவரும், இன்பத்தைத் தருபவரும் ஆன சிவபெருமானுடைய திருக்குமாரரே!

     மலை ஒப்பான முலைகளை உடைய குறமகளாகிய வள்ளிநாயகியை மணந்து, பெருமை வாய்ந்த பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில் சிறந்து விளங்கும் திருக் கோயிலின் வடக்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவரே!

         எலும்பு, தோல், மயிர், நாடி ஆகியவைகள் நெருங்கி,, உள்ளே அழுந்தியுள்ள சீழ், புழு இவைகளுடன் பொருந்திய மூளைகள், இரத்தம், நீர், மலம் இவை எல்லாம் நிறைந்த சேற்றுக் குளத்தில், சோர்வு, இரத்தக் குறைவால் வரும் சோகை, வாயு மிகுதலாகிய பிணி, பக்க வாதம்,

         வயிற்று உளைவு, சூலை என்னும் நோயோடு, பலத்த மூச்சு வாங்குதல், இழிவான மூல நோயுடன் விரைவாதம், நடுக்கு வாதம், காய்கின்ற நெருப்புப் போன்ற சுரம், நீரிழிவு, கபம் காரணமாக கோழையின் கலப்பு, செவிட்டுத் தன்மை, கூன், வாந்தி பேதி, குருட்டுத் தன்மை, கால் முடமாதல், பேச்சு வராமை, உள்ளே அறுத்துச் செல்லுகின்ற கழுத்தைச் சுற்றி வரும் புண், இன்ன பிற நோய்கள் எல்லாம் குடி புகுந்த, கேடு விளைகின்ற, அழியக் கூடிய இந்த உடம்பை நிலையானது என்று கொண்டு, துன்பத்துக்கு இடமான கொடிய வினையால் திரிகின்ற நாய் போன்ற அடியேன், உனது திருவடிகளைப் பெற, ஞான மயமானதும், எப்போதும் மங்களகரமானதும் ஆகிய அன்பைத் தருவாயாக.

விரிவுரை

இத் திருப்புகழில் மனிதனுக்கு வரும் பல்வேறு நோய்களை எடுத்து அறிவித்து, பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழில் ஆகி இறந்து போகாவண்ணம், முருகப் பெருமானின் திருவருளை வேண்டுகின்றார்.

மருந்து என்னும் அதிகாரம் ஒன்று திருக்குறளில் வருகின்றது. அதிகாரத் தலைப்பிற்குப் பின்வருமாறு பரிமேலழகர் விளக்கம் கூறுகின்றார்..

பழவினையானும், காரணங்களானும் மக்கட்கு வாதம் முதலிய பிணிகள் வரும். அவற்றுள் பழவினையான் வருவன, அதன் அழிவின்கண் அல்லது தீராமையின் அவை ஒழித்து, ஏனைக் காரணங்களான் வருவனவற்றைத் தீர்க்கும் மருந்தின் திறம் கூறுகின்றார். காரணங்கள் ஆவன, உணவு செயல்களது ஒவ்வாமை. ஆகலின், பிணிகளும் காரணத்தால் வருவன ஆயின.

இதனை நன்கு, ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். தீவினையால் வரும் நோய்கள், உணவு செயலால் வரும் நோய்கள் என நோய்களைப் பாகுபாடு செய்து எள்ளனர் நம் முன்னோர்.  உணவு மற்றும் செயலால் வரும் நோய்களை, தகுந்த உணவு மற்றும் மருந்துகளால் தீர்த்துக் கொள்ளலாம். தீவினைகளால் வரும் நோய்களை, பவரோக வயித்தயிநாதப் பெருமாள் ஆகிய இறைவன் அருள் கொண்டே தீர்த்துக் கொள்ள முடியும்.

நோய்க்குக் காரணிகளாக, குமரேச சதகம் என்னும் நூலில் பின்வருமாறு கூறப்பட்டு உள்ளது.

கல்லினால், மயிரினால், மீதூண் விரும்பலால்,
     கருதிய விசாரத்தினால்,
கடுவழி நடக்கையால், மலசலம் அடக்கையால்,
     கனிபழங் கறிஉண்ணலால்,

நெல்லினால், உமியினால், உண்டபின் மூழ்கலால்,
     நித்திரைகள் இல்லாமையால்,
நீர்பகையி னால்,பனிக் காற்றின்உடல் நோதலால்,
     நீடுசரு கிலை ஊறலால்,

மெல்லிநல் லார்கலவி அதிகம்உள் விரும்பலால்,
     வீழ்மலம் சிக்குகையினால்,
மிகுசுமை எடுத்தலால், இளவெயில் காய்தலால்,
     மெய்வாட வேலைசெயலால்,

வல்இரவிலே தயிர்கள் சருகாதி உண்ணலால்,
     வன்பிணிக்கு இடம் என்பர்காண்,
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.


பிறப்பு, நெடுவாழ்க்கை, செல்வம், வனப்பு,
நிலக்கிழமை, மீக்கூற்றம், கல்வி,நோய் இன்மை,
இலக்கணத்தால் இவ் எட்டும் எய்துப, என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.                        

என்பது ஆசாரக் கோவை.

ஒழுக்கம் பிழையாதவர் அடைகின்ற எட்டு வகையான பயன்களைக் கூறுமிடத்து, நோய் இன்மையையும் கூறுகின்றது.
ஆசாரம் என்பவை பற்றி விரிவாக இந்நூலில் காண்க.

     தீவினை செய்தார் திருவருள் அற்றவர்கள். செய்த தீவினைக்கு ஏற்ப நோய் வரும். அவர்கள் பிறந்து,செத்து உழலுவார்கள். பிறவி நோய் தீராது.

திருநாமம் அஞ்சுஎழுத்தும் செப்பார் ஆகில்
         தீவண்ணர் திறம் ஒருகால் பேசார் ஆகில்
ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில்
         உண்பதன் முன் மலர்பறித்து இட்டு உண்ணார் ஆகில்
அருநோய்கள் கெடவெண்ணீறு அணியார் ஆகில்
         அளிஅற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்,
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும்
         பிறப்பதற்கே தொழில்ஆகி இறக்கின்றாரே. --- அப்பர்.

         திருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் செப்பாராயின், தீவண்ணருடைய இயல்பை ஒருகாலும் பேசாராயின், திருக்கோயிலினை ஒருகாலம் வலம் வாராராயின், உண்பதற்குமுன் பல மலரைப் பேர் அரும்பாய் உள்ள நிலையில் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாராயின், கொடுநோய்கள் கெட வெண்ணீற்றை அணியாராயின், அங்ஙனம் செய்யாதார் எல்லாரும் இறைவனது திருவருளை இழந்தவர் ஆவர். அவர்கள் பிறந்த முறைமை தான் யாதோ எனின், தீராத கொடுநோய்கள் மிகத் துன்புறுத்தச் செத்து, வரும் பிறப்பிலும் பயனின்றி வாளா இறந்து மீளவும் பிறப்பதற்கு அதுவே தொழிலாகி இறக்கின்றார் ஆதலேதான்.

கை இலங்குமறி ஏந்துவர், காந்தள்அம் மெல்விரல்
தையல் பாகம் உடையார், அடையார் புரம் செற்றவர்,
செய்ய மேனிக் கரிய மிடற்றார், திரு வாஞ்சியத்து
ஐயர் பாதம் அடைவார்க்கு அடையா அருநோய்களே.    --- திருஞானசம்பந்தர்.
  
செடிகொள் நோயின் அடையார், திறம்பார் செறு தீவினை,
கடிய கூற்றமும் கண்டு அகலும், புகல் தான் வரும்,
நெடிய மாலொடுஅயன் ஏத்த நின்றார், திருவாஞ்சியத்து
அடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே.   --- திருஞானசம்பந்தர்.

பிணியும்இலர், கேடும்இலர், தோற்றம்இலர் என்றுஉலகு பேணிப்
பணியும் அடியார்கள் அன பாவம்அற, இன்னருள் பயந்து,
துணிஉடைய தோலும்உடை கோவணமும் நாகம்உடல் தொங்க
அணியும் அழகாக உடையான் உறைவது அவளிவண லூரே.    --- திருஞானசம்பந்தர்.

குழலின்வரி வண்டுமுரல் மெல்லியன பொன்மலர்கள்கொண்டு
கழலின்மிசை இண்டை புனைவார் கடவுள் என்று அமரர் கூடித்
தொழலும் வழிபாடும் உடையார், துயரும் நோயும் இலர்ஆவர்,
அழலும் மழுஏந்து கையினான் உறைவது அவளிவண லூரே.   --- திருஞானசம்பந்தர்.

ஆக, இறை வழிபாட்டிலை நின்றோருடைய தீவினைகள் அகலும் என்பதால், அவர்கட்கு தீவினையால் வரும் நோய்கள் இல்லை ஆகும்.  ஒழுக்க நெறியிலே நிற்போர் அவராதலின், அவர்க்கு உணவு, செயல் முதலியவற்றால் வரும் நோயும் இல்லை ஆகும்.

கருத்துரை

முருகா! நோயற்ற வாழ்வைத் தந்து உனது திருவடியில் சேர்த்துக் கொள்.
No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...