அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அடப்பக்கம் பிடித்து
(சிதம்பரம்)
சிதம்பர முருகா!
திருவடி ஞானத்தை அருள்.
தனத்தத்
தந்தனத்தத் தானன தானன
தனத்தத் தந்தனத்தத் தானன தானன
தனத்தத் தந்தனத்தத் தானன தானன ......
தனதான
அடப்பக்
கம்பிடித்துத் தோளொடு தோள்பொர
வளைத்துச்
செங்கரத்திற் சீரொடு பாவொடு
அணுக்கிச் செந்துணுக்கிற் கோவித ழூறல்க
...... ளதுகோதி
அணிப்பொற்
பங்கயத்துப் பூண்முலை மேகலை
நெகிழ்த்துப்
பஞ்சரித்துத் தாபண மேயென
அருட்டிக் கண்சிமிட்டிப் பேசிய மாதர்க
...... ளுறவோடே
படிச்சித்
தங்களித்துத் தான்மிக மாயைகள்
படித்துப்
பண்பயிற்றிக் காதல்கள் மேல்கொள
பசப்பிப் பின்பிணக்கைக் கூறிய வீணிக ......
ளவமாயப்
பரத்தைக்
குண்டுணர்த்துத் தோதக பேதைகள்
பழிக்குட்
சஞ்சரித்துப் போடிடு மூடனை
பரத்துற் றண்பதத்துப் போதக மீதென ......
அருள்தாராய்
தடக்கைத்
தண்டெடுத்துச் சூரரை வீரரை
நொறுக்கிப் பொன்றவிட்டுத் தூளெழ நீறெழ
தகர்த்துப் பந்தடித்துச் சூடிய தோரண ......
கலைவீரா
தகட்டுப் பொன்சுவட்டுப் பூவணை மேடையில்
சமைப்பித்
தங்கொருத்திக் கோதில மாமயில்
தனிப்பொற் பைம்புனத்திற் கோகில மாவளி ......
மணவாளா
திடத்திற்
றிண்பொருப்பைத் தோள்கொடு சாடிய
அரக்கத்
திண்குலத்தைச் சூறைகொள் வீரிய
திருப்பொற் பங்கயத்துக் கேசவர் மாயவர்
...... அறியாமல்
திமித்தத்
திந்திமித்தத் தோவென ஆடிய
சமர்த்தர்ப் பொன்புவிக்குட் டேவர்க ணாயக
திருச்சிற் றம்பலத்துட் கோபுர மேவிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
அடப்
பக்கம் பிடித்து, தோளொடு தோள்பொர
வளைத்து, செங்கரத்தில் சீரொடு பாவொடு
அணுக்கி, செந்துணுக்கில் கோ இதழ் ஊறல்கள்
......அது கோதி,
அணிப் பொன்
பங்கயத்துப் பூண்முலை மேகலை
நெகிழ்த்து, பஞ்சரித்து, தா பணமே என,
அருட்டிக் கண்சிமிட்டிப் பேசிய மாதர்கள்
...... உறவோடே,
படிச்
சித்தம் களித்துத் தான், மிக மாயைகள்
படித்து, பண்பயிற்றி, காதல்கள் மேல்கொள
பசப்பி, பின் பிணக்கைக் கூறிய வீணிகள், ...... அவம்ஆயப்
பரத்தைக்
குண்டு உணர்த்துத் தோதக பேதைகள்,
பழிக்குள்
சஞ்சரித்துப் போடிடு மூடனை,
பரத்துள் தண்பதத்துப் போதகம் ஈது, என ...... அருள்தாராய்.
தடக்கைத்
தண்டு எடுத்து, சூரரை வீரரை
நொறுக்கி, பொன்றவிட்டு, தூள் எழ, நீறு எழ
தகர்த்து, பந்தடித்து, சூடிய தோரண ...... கலைவீரா!
தகட்டு, பொன்சுவட்டுப் பூ அணை மேடையில்,
சமைப்பித்து
அங்கு ஒருத்திக் கோதுஇல மாமயில்,
தனிப்பொன் பைம்புனத்தில் கோகில மாவளி
......மணவாளா!
திடத்தில்
திண்பொருப்பைத் தோள்கோடு சாடிய
அரக்கத்
திண்குலத்தைச் சூறைகொள் வீரிய
திருப்பொன் பங்கயத்துக் கேசவர், மாயவர் ...... அறியாமல்
திமித்தத்
திந்திமித்தத் தோஎன ஆடிய
சமர்த்தர்ப் பொன் புவிக்குள் தேவர்கள் நாயக!
திருச்சிற் றம்பலத்துள் கோபுரம் மேவிய
...... பெருமாளே.
பதவுரை
தடக்கைத் தண்டு
எடுத்து
--- பெரிய கையில் தண்டாயுதத்தை எடுத்து
சூரரை வீரரை நொறுக்கிப் பொன்றவிட்டு
--- சூரர்கள் ஆன வீரர்களை அழித்து,
தூள் எழ --- கண்ட துண்டமாக்கி,
நீறு எழ --- சாம்பலாகும்படி,
தகர்த்து --- தகர்த்து,
பந்து அடித்து --- பந்து போல் ஆடிய
சூடிய தோரண --- வெற்றி மாலையைச்
சூடியவரே!
கலை வீரா --- சகல கலைகளிலும் வல்லவரே!
தகட்டுப் பொன்
சுவட்டுப் பூ அணை மேடையில் சமைப்பித்து --- மலர்களின் இதழ்களால் அழகுற
விளங்குவது போன்ற மலர் அணை மேடையின் மேல் அலங்காரமாய் அமைந்த
அங்கு ஒருத்தி --- ஒப்பற்றவளும்,
கோது இல மாமயில் --- குற்றம் அற்ற
மயில் போலும் சாயலை உடையவளும்,
தனிப் பொன் பைம் புனத்தில் ---
பசுமையான தினைப் புனத்தில் இருந்த
கோகில மா வளி மணவாளா --- குயில் போன்ற இனிமை வாய்ந்த குரலுடைய வள்ளி
பிராட்டியின் மணவாளரே!
திடத்தில் திண் பொருப்பை
--- வலிமை வாய்ந்த மலைகளை உறுதியோடு,
தோள் கொடு சாடிய அரக்கத் திண் குலத்தை
--- தோள்களைக் கொண்டு மோதிய வலிமை பொருந்திய அரக்கர்களின் கூட்டத்தை
சூறை கொள் வீரிய --- சுழல் காற்று போல
வீசி அழித்த வீரம் நிறைந்தவரே!
திருப் பொன்
பங்கயத்துக் கேசவர் மாயவர் அறியாமல் --- அழகிய தாமரை மலரில் வீற்றிருக்கும்
திருமால் அறிய ஒண்ணாத வகையில்,
திமித்தத் திந்திமித்தத் தோ என ஆடிய
சமர்த்தர் --- திமித்தத் திந்திமித்தத் தோ என்ற தாள ஒத்துக்களுடன் திருநடனம் புரிந்த சமர்த்தரே!
பொன்
புவிக்குள் தேவர்கள் நாயக --- பொன்னம்பலத்தில் வந்து குழுமிய தேவர்களின்
தலைவரே!
திருச்சிற்றம்பலத்துள் கோபுர மேவிய பெருமாளே --- திருச்சிற்றம்பலம் அமைந்துள்ள திருக்கோயிலின் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
அடப் பக்கம் பிடித்து
--- தமது
இடத்திலே வந்தவரை நன்றாகப் பிடித்து
தோளொடு தோள் பொர செங்கரத்தில் வளைத்து --- அவருடைய தோளோடு தங்களுடைய தோளை இணைத்துப் பொருந்த கைகளால் வளைத்து,
சீரொடு பாவொடு அணுக்கி ---
சிறப்பாகப் பாடல்களைப் பாடி நெருங்கி,
செந்துணுக்கில் கோ(ப) இதழ் ஊறல்கள் அது கோதி --- சிவந்த பவளத் துண்டை ஒத்த, இந்திர கோபத்தைப் போன்ற வாய் இதழின்
ஊறல்களைத் தொகுத்து அனுபவிக்கத் தந்து,
அணிப் பொன் பங்கயத்து --- அழகிய தாமரை மொட்டு போன்றதும்,
பூண் முலை மேகலை நெகிழ்த்து --- ஆபரணம்
அணிந்ததுமான முலைகளை மூடி இடையில் அணிந்துள்ள மேலாடையை
வேண்டுமென்றே நெகிழ்த்தி,
பஞ்சரித்துத் தா பணமே
என
--- கொஞ்சிப் பேசி நச்சரித்து, பொருள் கொடு என்று
அருட்டிக் கண் சிமிட்டிப் பேசிய ---
மயங்குவது போல் கண்களைச் சிமிட்டிப் பேசுகின்ற
மாதர்கள் உறவோடே படி ---
விலைமாதர்களோடு உறவாகிப் படிந்து
சித்தம் களித்துத் தான் --- உள்ளத்தில்
மிக மகிழ்ந்து,
மிக மாயைகள் படித்து --- பல விதமான மாயாலீலைகளைக்
காட்டி,
பண் பயிற்றி --- இசைப் பாடல்களைப் பாடி,
இக் காதல்கள் மேல் கொள பசப்பி --- காம
ஆசைகள் கொள்ளும்படியாக பாசாங்குகள் செய்து,
பின் பிணக்கைக் கூறிய வீணிகள் ---
பின்னர் தங்களுடைய மாறுபாட்டை எடுத்துப் பேசும் வீணிகள்,
அவம் ஆயப் பரத்தை --- கேட்டினைத் தரும்
பரத்தையர்கள்,
குண்டு உணர்த்து தோதக பேதைகள் --- தாழ்வான
செய்கையை உணர்த்தும் வஞ்சகப் பேதைமார்கள்,
பழிக்குள் சஞ்சரித்துப் போடு இடு மூடனை --- இவர்களின்
பழிக்கு இடமான செயல்களிலேயே சுழன்று திரிகின்ற மூடனாகிய அடியேனுக்கு,
பரத்து உற்று அண் --- மேலான நிலையில்
பொருந்துகின்ற
பதத்துப் போதகம் --- பதத்தைப்
பெறுகின்ற திருவடி ஞானம்
ஈது என அருள் தாராய் --- இதுதான்
என்று உபதேசித்து திருவருள் தாராய்.
பொழிப்புரை
பெரிய கையில் தண்டாயுதத்தை எடுத்து, சூரர்கள் ஆன வீரர்களை அழித்து, கண்ட துண்டமாக்கி, சாம்பலாகும்படி, தகர்த்து, பந்து போல் ஆடி வெற்றி
மாலையைச் சூடியவரே!
சகல கலைகளிலும் வல்லவரே!
மலர்களின் இதழ்களால் அழக்ற விளங்குவது போன்ற
மலர் அணை மேடையின் மேல் அலங்காரமாய் இருந்த ஒப்பற்றவளும், குற்றம் அற்ற மயில் போலும் சாயலை
உடையவளும், பசுமையான தினைப்
புனத்தில் இருந்தவளும் ஆகிய, குயில் போன்ற இனிமை
வாய்ந்த குரலுடைய வள்ளி பிராட்டியின் மணவாளரே!
வலிமை வாய்ந்த மலைகளை உறுதியோடு, தோள்களைக் கொண்டு மோதிய வலிமை பொருந்திய
அரக்கர்களின் கூட்டத்தை, சூறைக் காற்று போல வீசி
அழித்த வீரம் நிறைந்தவரே!
அழகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமால்
அறிய ஒண்ணாத வகையில், திமித்தத் திந்திமித்தத் தோ என்ற தாள ஒத்துக்களுடன் திருநடனம்
புரிந்த சமர்த்தரே!
பொன்னம்பலத்தில்
வந்து குழுமிய தேவர்களின் தலைவரே!
திருச்சிற்றம்பலம் அமைந்துள்ள திருக்கோயிலின் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
தமது இடத்திலே வந்தவரை நன்றாகப் பிடித்து
அவருடைய தோளோடு தங்களுடைய தோளை இணைத்துப் பொருந்த கைகளால் வளைத்து, சிறப்பாகப் பாடல்களைப் பாடி நெருங்கி, சிவந்த பவளத்துண்டை
ஒத்த, இந்திர கோபத்தைப் போல் சிவந்துள்ள வாய் இதழின் ஊறல்களைத் தொகுத்து அனுபவிக்கத் தந்து, அழகிய தாமரை மொட்டு போன்றதும், ஆபரணம் அணிந்ததுமான முலைகளை மூடி, இடையில் அணிந்துள்ள மேலாடையை
வேண்டுமென்றே நெகிழ்த்தி, கொஞ்சிப் பேசி பொருள் கொடு என்று நச்சரித்து,
மயங்குவது போல் கண்களைச் சிமிட்டிப் பேசுகின்ற விலைமாதர்களோடு உறவாகிப் படிந்து, உள்ளத்தில் மிக மகிழ்ந்து, பல விதமான மாயாலீலைகளைக் காட்டி, இசைப் பாடல்களைப் பாடி, காம
ஆசைகள் மேலிடும்படியாக பாசாங்குகள் செய்து, பின்னர் தங்களுடைய மாறுபாட்டை எடுத்துப்
பேசும் வீணிகள், கேட்டினைத் தரும்
பரத்தையர்கள், தாழ்வான செய்கையை
உணர்த்தும் வஞ்சகப் பேதைமார்கள்,
இவர்களின்
பழிக்கு இடமான செயல்களிலேயே சுழன்று திரிகின்ற மூடனாகிய அடியேனுக்கு, மேலான நிலையில் பொருந்துகின்ற பதத்தைப்
பெறுகின்ற திருவடி ஞானம் இதுதான் என்று உபதேசித்து
திருவருள் தாராய்.
விரிவுரை
கோகில
மா வளி ---
கோகிலம்
--- குயில். குயில் போலும் இனிமையான மொழியை
உடைய வள்ளி நாயகி.
வள்ளி
என்னும் சொல் பாடல் சந்தததை நோக்கி வளி எனக் குறுகி வந்தது.
அடப்
பக்கம் பிடித்து ---
தமது
பக்கத்தில் வந்தவரை நெருக்கிப் பிடித்து. அட - நெருக்கி.
பஞ்சரித்து, தா பணமே என ---
பஞ்சரித்தல்
- கொஞ்சிப் பேசித் தொந்தரவு செய்தல். தம்மிடத்து வந்தவரிடம் கொஞ்சிப் பேசி மயங்க வைத்து, பணத்தைத் தருமாறு
தொந்தரவு செய்வார்கள் விலைமளிர்.
காதல்கள்
மேல் கொள பசப்பி, பின் பிணக்கைக் கூறிய
வீணிகள்
---
காம
ஆசைகள் மேலிடும்படியாகப் பாசாங்குகள் செய்து, பொருளைப் பறித்தபின், பொருள் அளவுக்கு தமது உடம்பைத்
தந்து,
பின்னர்
மாறுபாடு கொண்டு பேசுவார்கள்.
குண்டு
உணர்த்து தோதக பேதைகள் ---
தமது
தாழ்வான வஞ்சகச் செய்கைகளை உணரச் செய்வார்கள்.
குண்டு
- குழி, பள்ளம். விலைமாதர்கள் தமது தாழ்வான வஞ்சகச்
செய்கைகளால் துயரமாகிய பள்ளத்திலே தள்ளுவார்கள்.
போதகம்
---
அறிவு.
இங்கே ஞானத்தைக் குறித்து நின்றது. திருவடி
ஞானம். திருவடியே ஞானத்தைத் தருவது.
கருத்துரை
முருகா!
திருவடி ஞானத்தை அடியேனுக்கு அருள்.
No comments:
Post a Comment