புறம் பேசுவோர்க்கு உதவுவது குற்றம்
தேள் அது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்தபேரை
மீளவே கொடுக்கினாலே மெய்யுறக் கொட்டும், பல்லோர்
ஏளனம் பேசித் தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும்
கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்றமாமே.

இதன் பொருள் ---                                       
    
     தேள் அது தீயில் வீழ்ந்தால் --- தேளானது நெருப்பிலே விழுந்த போது,

     செத்திடாது எடுத்த பேரை --- அது சாகாமல் படிக்குக் காப்பாற்றி எடுத்த பேர்களை,

     மீளவே --- தனது வால் புறத்தை அவர்கள் பக்கம் திருப்பி,

     கொடுக்கினாலே மெய்யுறக் கொட்டும் --- தனது கொடுக்கினாலே, அவர்கள் உடலிலே கொட்டி வேதனைப் படுத்தும்.

அதுபோல,

     பல்லோர் ஏளனம் பேசித் தீங்கு உற்று இருப்பதை எதிர்கண்டாலும் --- பலரும் இகழ்ந்து பேசும்படி, தீய குணங்களைக் கொண்டு இருப்பதைக் கண்கூடாகப் பார்த்து இருந்தும்,

     கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்றமாமே --- கோள் சொல்லும், அதாவது புறம் பேசும் தன்மை உடையவருக்கு நன்மை செய்தால், அந்த நன்மையானது குற்றமாகவே கொள்ளப்படும்.            

     விளக்கம் --- தீயவர்கள் என்று இங்கே கோள் சொல்பவர்களைக் காட்டப்பட்டது. கோள் சோல்லுதல் என்பது, ஒருவரைக் காணாத இடத்து அவரை இகழ்ந்து பேசுதல். இது வாக்கால் செய்யும் பாவம் ஆகும். இது மிகவும் கொடியது என்பதால், திருவள்ளுவ நாயனார் "புறங்கூறாமை" என்று ஒரு அதிகாரத்தையே வைத்தார். புறம் கூறி ஒருவன் பொய்யாக உயிர் வாழ்தலை விட, அவன் செத்துப் போவது அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தை அவனுக்குத் தரும் என்னும் பெருளில், "புறம் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின், சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்" என்றார் நாயனார்.   

பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலேன், ஆதலாலே கொடுமையை விடுமாறு ஓரேன்,
நாச்சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணர மாட்டேன்,
ஏச்சுளே நின்று மெய்யே என்செய்வான் தோன்றினேனே.

பேசும்போதெல்லாம் பிறரைப் புறம் கூறும் செயலில் சிறிதும் நாணம் இல்லாதவனாக இருக்கின்றேன். அந்தக் கொடுமையை விட்டுவிட வேண்டும் என்பதேயும் அறியாதவனாய் இருக்கின்றேன். சிவபெருமானுடைய பெருமையை நாவினாலே சொல்லி அவன் செய்யும் நன்மையை உணரமாட்டாதவனாகவும் இருக்கின்றேன். இகழ்ச்சிக்கு இடமாகிய இந்த உடம்பில் இன்னும் இருந்து கொண்டுள்ளேன். ஏன் பிறந்தேன் நான்? என்கின்றார் அப்பர் பெருமான்.

தீயவர்க்கு உதவி புரிந்தால் அது கேட்டினையே தரும் என்பது, பின் வரும் மூதுரைப் பாடலால் தெளியப்படும்.

வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால் போல் --- பாங்கு அறியாப்
புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்.

செத்துக் கிடந்த, வரிகளை உடைய வேங்கைப் புலியின் விட நோயைத் தன் மந்திர வலியால் போக்கிப் பிழைக்க வைத்து விடகாரி ஆனவன், அப்பொழுதே அந்தப் புலிக்கு இரையானது போல, நன்றி உணர்வு இல்லாத அற்ப அறிவினர்க்குச் செய்த உதவியானது, கல்லின் மேல் போட்ட மண்கலம் போல உடைந்து, செய்தவனுக்கே தீமையை விளைவிக்கும்.

விடகாரி --- நஞ்சு அகற்றும் மருத்துவன்.


No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...