இனத்தில் உயர்ந்தவை





24. இனத்தில் உயர்ந்தவை

தாருவில் சந்தனம், நதியினில் கங்கை,விர
     தத்தினில் சோமவாரம்,
தகைபெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம்,
     தலத்தினில்சி தம்பரதலம்,

சீர்உலவு ரிஷிகளில் வசிட்டர்,பசு வில்காம
     தேனு,முனி வரில்நாரதன்,
செல்வநவ மணிகளில் திகழ்பதும ராகமணி,
     தேமலரில் அம்போருகம்,

பேருலவு கற்பினில் அருந்ததி, கதித்திடு
     பெலத்தில்மா ருதம்,யானையில்
பேசில்ஐ ராவதம், தமிழினில் அகத்தியம்,
     பிரணவம் மந்திரத்தில்,

வாரிதியி லேதிருப் பாற்கடல், குவட்டினில்
     மாமேரு ஆகும் அன்றோ?
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

      தாருவில் சந்தனம் --- மரங்களிலே சந்தன மரம்,

     நதியினில் கங்கை --- ஆறுகளிலே கங்கையாறு,

     விரதத்தினில் சோமவாரம் --- நோன்புகளிலே திங்கட்கிழமை நோன்பு,

     தகைபெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம் --- பெருமை மிக்க நாடுகளிலே காஷ்மீரம்,

     தலத்தில் சிதம்பர தலம் --- திருத்தலங்களிலே சிதம்பரம்,

     சீர் உலவு ரிஷிகளில் வசிட்டர் --- சிறப்புடைய இருடிகளிலே வசிட்டர்,

     பசுவில் காமதேனு --- பசுக்களிலே காமதேனு,

     முனிவரில் நாரதன் --- முனிவர்களிலே நாரதர்,

     செல்வ நவமணிகளில் திகழ் பதுமராக மணி --- செல்வம் ஆகிய ஒன்பது மணிகளில் விளக்கமான பதுமராகம்,

     தேன் மலரில் அம்போருகம் --- தேனை உடைய மலர்களில் தாமரை மலர்,

     பேர் உலவு கற்பினில் அருந்ததி --- புகழ்பெற்ற கற்பரசிகளில் அருந்ததி,

     கதித்திடு பெலத்தில் மாருதம் --- மோதி வரும் ஆற்றலிலே காற்று,

     யானையில் பேசில் ஐராவதம் --- யானைகளில் சிறப்பித்துக் கூறப்படும் ஐராவதம்,

     தமிழினில் அகத்தியம் --- தமிழ் நூல்களில் அகத்தியம்,

     மந்திரத்தில் பிரணவம் --- மந்திரங்களிலே பிரணவம்,

     வாரிதியிலே திருப்பாற்கடல் --- கடல்களிலே திருப்பாற்கடல்,

     குவட்டினில் மாமேரு --- மலைகளில் மாமேரு மலை,

     ஆகும் அன்றோ --- சிறப்பு உடையன ஆகும் அல்லவா?

      விளக்கம் --- தரு - மரம். சோமவார விரதம் குறித்து, திருவிளையாடல் புராணத்தில் விரிவாகச் சொல்லப்பட்டு உள்ளது. காமதேனு --- விரும்பியவற்றை அளிக்கும் பசு. இது தேவலோகத்தில் உள்ளது. அம்போருகம் --- தாமரை,  (அம்பு - நீர். நீரில் தோன்றுவதால் அது அம்போருகம் எனப்பட்டது)

     அருந்ததி பிரமரிஷி என்று சொல்லப்படும் வசிட்டரின் மனைவி. புராதன காலத்தில் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் மிகச் சிறந்த பிரம்ம ரிஷிகள் ஏழு பேரும் (சப்தரிஷிகள், சப்த - ஏழு) வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசுகிறார்கள். அந்த பிரம்மரிஷிகள் கிரது, புலஹ, புலஸ்த்ய, அத்திரி, அங்கிரஸ, வசிட்டர், மரீசி என்பவர் ஆகும். இந்த சப்தரிஷி மண்டலத்தில் ஏழு நட்சத்திரத்தில் ஒரு நட்சத்திரத்திற்கு அருகில் எட்டாவதாக இன்னும் ஒரு நட்சத்திரம் உண்டு. அந்த இரண்டு நட்சத்திரங்கள் வசிட்டரும் அவர் மனைவி அருந்ததியும் என்றும் ஐதீகம் உண்டு.

     ஏனைய ஆறு ரிஷிகள் சபலத்தால் வான தேவதைகளிடம் நிலை தடுமாறி இருந்தவர்கள். இவர்களின் மனைவிமார்களும் இந்திரனைப் பார்த்து தன்னிலை மறந்தவர்கள்.

     ஆனால் வசிட்டரும், அருந்ததியும் விதிவிலக்கானவர்கள். எனவே, அவர்கள் எப்போதும் இணைந்தே இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து வாழ்க்கையில் இணை பிரியாது வாழவேண்டும் என்பதற்காய் திருமணங்களின் போது புதுமணத் தம்பதிகளுக்கு வானில் அருந்ததி பார்த்து ஆசி பெறும் விழுமிய நிகழ்வு நடைபெறுகின்றது.

     எனவே, ரிஷிகளில் வசிட்டர் என்றும், கற்பினில் அருந்ததி என்றும் ஆசிரியர் காட்டினார்.

     அகத்தியம் தமிழிலே முற்காலத்தில் இருந்ததாகக் கருதப் பெறும் முத்தமிழிலக்கணம்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...