சிதம்பரம் - 0623. கொந்தளம் புழுகு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கொந்தளம் புழுகு (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
பொதுமாதர் ஆசையால் உடல் நலிந்து அழியாமல்
காத்து, திருவருள் புரிவாய்.


தந்த தந்தன தந்த தந்தன
     தந்த தந்தன தந்த தந்தன
          தந்த தந்தன தந்த தந்தன ...... தனதான


கொந்த ளம்புழு கெந்த வண்பனி
     ரம்ப சம்ப்ரம ணிந்த மந்தர
          கொங்கை வெண்கரி கொம்பி ணங்கிய ...... மடமாதர்

கொந்த ணங்குழ லின்ப மஞ்சள
     ணிந்து சண்பக வஞ்சி ளங்கொடி
          கொஞ்சு பைங்கிளி யன்பெ னுங்குயில் .....மயில்போலே

வந்து பஞ்சணை யின்ப முங்கொடு
     கொங்கை யும்புய முந்த ழும்புற
          மஞ்சு வொண்கலை யுங்கு லைந்தவ ......மயல்மேலாய்

வஞ்சி னங்கள்தி ரண்டு கண்செவி
     யுஞ்சு கங்கள்தி ரும்பி முன்செய்த
          வஞ்சி னங்களு டன்கி டந்துடல் ......     அழிவேனோ

தந்த னந்தன தந்த னந்தன
     திந்தி மிந்திமி திந்தி மிந்திமி
          சங்கு வெண்கல கொம்பு துந்துமி ......         பலபேரி

சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணி
     தங்கு டுண்டுடு டுண்டு டன்பல
          சந்தி ரம்பறை பொங்கு வஞ்சகர் ......          களமீதே

சிந்த வெண்கழு கொங்கு பொங்கெழு
     செம்பு ளங்கரு டன்ப ருந்துகள்
          செங்க ளந்திகை யெங்கு மண்டிட ......    விடும்வேலா

திங்க ளிந்திர னும்ப ரந்தர
     ரும்பு கழ்ந்துரு கும்ப ரன்சபை
          செம்பொ னம்பல மங்கொ ளன்பர்கள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கொந்தளம் புழுகு கெந்த வண் பனிர்,
     ரம்ப சம்ப்ரம் அணிந்த மந்தர
          கொங்கை வெண்கரி கொம்பு இணங்கிய ...... மடமாதர்,

கொந்து அண்அம் குழல் இன்ப மஞ்சள்
     அணிந்து, சண்பக வஞ்சி இளங்கொடி,
          கொஞ்சு பைங்கிளி அன்பு எனும் குயில் ......மயில் போலே

வந்து, பஞ்சணை இன்பமும் கொடு,
     கொங்கையும் புயமும் தழும்புஉற,
          மஞ்சு ஒண்கலையும் குலைந்து அவ ......மயல்மேலாய்,

வஞ்சினங்கள் திரண்டு, கண் செவி-
     யும் சுகங்கள் திரும்பி முன்செய்த
          வஞ்சினங்களுடன் கிடந்து உடல் ......     அழிவேனோ?

தந்த னந்தன தந்த னந்தன
     திந்தி மிந்திமி திந்தி மிந்திமி
          சங்கு வெண்கல கொம்பு துந்துமி ......         பலபேரி

சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணி
     தங்கு டுண்டுடு டுண்டு டன்பல
          சந்திரம் பறை பொங்கு வஞ்சகர் ......          களமீதே,

சிந்த வெண்கழு கொங்கு பொங்கு எழு
     செம்புள் அம் கருடன் பருந்துகள்
          செங்களம் திகை எங்கும் மண்டிட ......    விடும்வேலா!

திங்கள் இந்திரன் உம்பர், ந்தர-
     ரும் புகழ்ந்து உருகும் பரன் சபை
          செம்பொன் அம்பலம் அம்கொள் அன்பர்கள் ...... பெருமாளே.


பதவுரை

         தந்தனந்தன தந்தனந்தன திந்திமிந்திமி திந்திமிந்திமி சங்கு வெண்கல கொம்பு துந்துமி --- தந்தனந்தன தந்தனந்தன திந்திமிந்திமி திந்திமிந்திமி இவ்வாறு ஒலிக்கும் ஓசையுடன் சங்கும், ஊது கொம்பும், துந்துமியும்,

     பல பேரி சஞ்சலஞ் சல கொஞ்சு கிண்கிணி தங்கு --- பலவகையான பேரிகைகளும்  சஞ்சலஞ்சல என்று இனிது ஒலிக்கும் கிண்கிணியும்,

     டுண்டுடு டுண்டுடன் பல --- டுண்டுடு டுண்டு என்ற ஒலி தங்குகின்ற,

     சந்திர அம் பறை பொங்கு --- சந்திரன் போல் வட்ட வடிவமான பல அழகிய பறைகளும் மிகுதியாக முழங்க,

     வஞ்சகர் களம் மீதே சிந்த --- வஞ்சகர்களாகிய அசுரர்கள் போர்க்களத்தில் மடிந்து போக,

      வெண் கழுகு --- வெண்ணிறக் கழுகுகளும்,

     ஒங்கு பொங்கு எழு --- ஓங்கி உயர்ந்து எழுகின்ற

     செம்புள் அம் கருடன் --- செம்மை நிறமான பறவையான அழகிய கருடனும்,

     பருந்துகள் --- பருந்துகளும்

     செம் களம் திகை எங்கும் அண்டிட --- உதிரத்தால் செந்நிறம் கொண்ட போர்க்களத்தில் எல்லாத் திசைகளிலும் நெருங்கி உலாவ,

     விடும் வேலா --- செலுத்திய வேலாயுதரே!

      திங்கள் இந்திரன் உம்பர் அந்தரரும் புகழ்ந்து உருகும் பரன் சபை --- சந்திரனும் இந்திரனும் தேவர்களும் ஏனைய விண்ணுலக வாசிகளும் புகழ்ந்து உள்ளம் உருகும் இறைவனுடைய சபையாகிய

     செம் பொன் அம்பலம் அம்கொள் அன்பர்கள் பெருமாளே --- செவ்விய பொன்னம்பலத்தை அழகாக  இருப்பிடமாகக் கொண்ட, அன்பர்கள் போற்றும் பெருமையில் சிறந்தவரே!

         கொந்தளம் புழுகு கெந்த வண் ப(ன்)னிர் ரம்ப சம்ப்ரம் அணிந்த --- கூந்தலில் புனுகு சட்டமும் வாசனை உள்ள நல்ல பன்னீரும் நிரம்பச் சிறப்பாக அணிந்துள்ளவர்களும்,

     மந்தர கொங்கை --- மந்தர மலை போல் பருத்த கொங்கைகளாகிய,

     வெண் கரி கொம்பு இணங்கிய மட மாதர் ---  யானையின் வெண் தந்தங்கள் பொருந்தியுள்ள அழகிய பெண்கள்

      கொந்து அண் அம் குழல் --- பூங்கொத்துக்கள் சேர்ந்துள்ள அழகிய கூந்தல் உடையவராய்,

     இன்ப மஞ்சள் அணிந்து --- சுகம் தரக் கூடிய மஞ்சளைப் பூசிக் கொண்டு,

     சண்பக வஞ்சி இளம் கொடி --- சண்பக மலர் சூடி, வஞ்சியின் இளமை வாய்ந்த கொடி போல் விளங்கி,

     கொஞ்சு பைங்கிளி --- கொஞ்சுகின்ற பச்சைக் கிளி போலவும்,

     அன்பு எனும் குயில் --- அன்பு வாய்ந்த குயில் போலவும்,

     மயில் போலே வந்து --- மயில் போலவும் வந்து

      பஞ்சணை இன்பமும் கொடு கொங்கையும் புயமும் தழும்பு உற --- பஞ்சு மெத்தையில் இன்பத்தையும் கொடுக்கும் மார்பகமும் தோள்களும் நகக்குறிகளால் வடுப்பட,

     மஞ்சு ஒண் கலையும் குலைந்து --- அழகிய நல்ல ஆடையும் கலைந்து,

     அவ மயல் மேலாய் --- வீணான காம இச்சை மிகுந்து,

      வஞ்சினங்கள் திரண்டு --- சபத மொழிகள் நிரம்பச் சொல்லி,

     கண் செவியும் சுகங்கள் திரும்பி --- கண்கள், காதுகள் ஆகியவை முன்பு கொடுத்திருந்த சுகங்கள் மாறுபட்டு (குருடாய், செவிடாய்),

     முன் செய்த வஞ்சினங்களுடன் கிடந்து உடல் அழிவேனோ --- முன்பு செய்திருந்த சபத மொழிகள் நிறைவேறாமல், பாயில் படுக்கையாய்க் கிடந்து உடலம் அழிந்து இறப்பேனோ?

பொழிப்புரை

         தந்தனந்தன தந்தனந்தன திந்திமிந்திமி திந்திமிந்திமி இவ்வாறு ஒலிக்கும் ஓசையுடன் சங்கும், ஊது கொம்பும், துந்துமியும், பலவகையான பேரிகைகளும்  சஞ்சலஞ்சல என்று இனிது ஒலிக்கும் கிண்கிணியும்,  டுண்டுடு டுண்டு என்ற ஒலி தங்குகின்ற, சந்திரன் போல் வட்ட வடிவமான பல அழகிய பறைகளும் மிகுதியாக முழங்க, வஞ்சகர்களாகிய அசுரர்கள் போர்க்களத்தில் மடிந்து போக,  வெண்ணிறக் கழுகுகளும், ஓங்கி உயர்ந்து எழுகின்ற செம்மை நிறமான பறவையான அழகிய கருடனும், பருந்துகளும் உதிரத்தால் செந்நிறம் கொண்ட போர்க்களத்தில் எல்லாத் திசைகளிலும் நெருங்கி உலாவ, செலுத்திய வேலாயுதரே!

          சந்திரனும் இந்திரனும் தேவர்களும் ஏனைய விண்ணுலக வாசிகளும் புகழ்ந்து உள்ளம் உருகும் இறைவனுடைய சபையாகிய செவ்விய பொன்னம்பலத்தை அழகாக  இருப்பிடமாகக் கொண்ட, அன்பர்கள் போற்றும் பெருமையில் சிறந்தவரே!

         கூந்தலில் புனுகு சட்டமும் வாசனை உள்ள நல்ல பன்னீரும் நிரம்பச் சிறப்பாக அணிந்துள்ளவர்களும், மந்தர மலை போல் பருத்த கொங்கைகளாகிய,  யானையின் வெண் தந்தங்கள் பொருந்தியுள்ள அழகிய பெண்கள், பூங்கொத்துக்கள் சேர்ந்துள்ள அழகிய கூந்தல் உடையவராய், சுகம் தரக் கூடிய மஞ்சளைப் பூசிக் கொண்டு, சண்பக மலர் சூடி, வஞ்சியின் இளமை வாய்ந்த கொடி போல் விளங்கி, கொஞ்சுகின்ற பச்சைக் கிளி போலவும், அன்பு வாய்ந்த குயில் போலவும், மயில் போலவும், வந்து, பஞ்சு மெத்தையில் இன்பத்தையும் கொடுக்கும் மார்பகமும் தோள்களும் நகக்குறிகளால் வடுப்பட, அழகிய நல்ல ஆடையும் கலைந்து, வீணான காம இச்சை மிகுந்து, சபத மொழிகள் நிரம்பச் சொல்லி, கண்கள், காதுகள் ஆகியவை முன்பு கொடுத்திருந்த சுகங்கள் மாறுபட்டு (குருடாய், செவிடாய்), முன்பு செய்திருந்த சபத மொழிகள் நிறைவேறாமல், பாயில் படுக்கையாய்க் கிடந்து உடலம் அழிந்து இறப்பேனோ?

விரிவுரை

இத் திருப்புகழ்ப் பாடலின் முற்பகுதி பொது மகளிரது இயல்புகளைப் பற்றிப் பேசுகின்றது.

கொந்தளம் ---

கொந்தளம் - கூந்தல்..

புழுகெந்த வண்பனிர் ---

புழுகு கந்த வண் பன்னீர்.  புழுகு - புனுகு சட்டம். தெளிந்த பன்னீர்.

ரம்ப ---

நிரம்ப என்ற சொல் ரம்ப என வந்தது.

கொந்தணங்குழல் ---

கொந்து அண் அம் குழல்.  கொந்து - பூங்கொத்து.  அண் - நெருங்கிய.  அம் - அழகிய.  குழல் - கூந்தல்.

பஞ்சணை ---

பஞ்சு அணை - பஞ்சணை.  பஞ்ச அணை என்று பிரித்தால் பஞ்ச சயனம் ஆகும்.

அன்னத்தின் தூவி, மயில் தூவி, இலவம் பஞ்சு, வெண்பஞ்சு, செம்பஞ்சு என்ற ஐந்தால் அமைந்தது பஞ்ச சயனம்.

வஞ்சினங்கள் திரண்டு ---

மாதர் மீது வைத்த மயக்கத்தால், "உனக்குப் புலிப்பால் தருவேன்”, "சிந்தாமணி தருவேன்" என்பனவாதி சபத மொழி கூறுவர்.  பின்னர் அவைகளை நிறைவேற்ற முடியாமல் வருந்துவர்.

பிற்பகுதியான மூன்று அடிகள் போர்க்கள வருணனையாகும்.

வெண்கழுகு கொங்கு பொங்கெழு ---

கழுகு ஓங்கு பொங்கு எழு எனப் பதப்பிரிவு செய்க.

"ஓங்கு" என்ற சொல் "ஒங்கு" என வந்தது.


செம் பொன் அம்பலம் அம் கொள் அன்பர்கள் பெருமாளே ---

பொன் அம்பலம் - அன்பு வெளி.  வெள்ளி அம்பலம் - அறிவு வெளி.

ஆன்நேயமும், சீவகாருண்ணியமும் உடைய அன்பர்கள் உள்ளத்தை, இறைவன் தனக்கு அம்பலமாகக் கொண்டு, அனவரதமும் அவர்க்கு அழியாத இன்பமானது ஊற்றெடுக்க, அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிந்து அருள்கின்றான் என்பதைக் காட்டவே, பொன்னம்பலம் அமைந்தது.

"சிவாயநம எனச் செம்பு பொன் ஆயிடும்" என்பது திருமூலர் ஆருள் வாக்கு. செம்பு என்பது ஆணவ மலத்தைக் குறிக்கும். ஆன்மாவுக்கு இயல்பாகவே ஆணவமலம் உள்ளது. ஆணவ இருள் நீங்கி, ஆன்மா அருள் ஒளியைப் பெறும்போது, செம்பு ஆக இருந்த உள்ளம், களிம்பு நீங்கி, பொன்னாக மாறும், அதற்கு உற்ற மருந்து சிவாயநம என்னும் திருமந்திரம் என்பதைக் குறிக்கவே நாயனார் இவ்வாறு காட்டினார் என்று கொள்ள வேண்டும். திருவைந்தெழுத்தைப் பொருள் உணர்ந்து ஓதி ஒழுகினால், ஆன்மா செம்புத் தன்மை நீங்கி, பொன்னாக மாறும்.

"அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். உள்ளத்தில் அன்பு இருந்தால் தான், இறைவன் அருள் சித்திக்கும்.

உயிர் அனுபவமாகிய அன்பு இருந்தால், அருள் அனுபவம் வாய்க்கும். அந்த அனுபவத்திலே சுத்த சிவ அனுபவம் விளங்கும்.

இந்த அற்புத வாய்மையை வள்ளல் பெருமான் பின் வரும் பாடல்களால் இனிதே விளக்குமாறு தெளிந்து இன்புறுக...

உயிர் அனுபவம் உற்றிடில், அதன்இடத்தே
     ஓங்கு அருள் அனுபவம் உறும்,அச்
செயிர் இல்நல் அனுபவத்திலே, சுத்த
     சிவ அனுபவம் உறும் என்றாய்,
பயிலும் மூவாண்டில், சிவை தரு ஞானப்
     பால் மகிழ்ந்து உண்டு,மெய்ந் நெறியாம்
பயிர் தழைந்து உற வைத்து அருளிய ஞான
     பந்தன் என்று ஓங்கு சற்குருவே.

தத்துவ நிலைகள் தனித்தனி ஏறி,
     தனிப் பர நாதமாம் தலத்தே,
ஒத்து அதன் மயமாம் நின்னை நீ இன்றி
     உற்றிடல் உயிர்அனுபவம் என்று
இத்துணை வெளியின் என்னை என் இடத்தே
     இருந்தவாறு அளித்தனை அன்றோ?
சித்தநல் காழி ஞானசம்பந்தச்
     செல்வமே எனது சற் குருவே.

தனிப்பர நாத வெளியின் மேல் நினது
     தன்மயம் தன்மயம் ஆக்கி,
பனிப்பு இலாது என்றும் உள்ளதாய் விளங்கி,
     பரம்பரத்து உட்புறம் ஆகி,
இனிப்பு உற ஒன்றும் இயம்புறா இயல்பாய்
     இருந்ததே அருள் அனுபவம் என்று
எனக்கு அருள் புரிந்தாய், ஞான சம்பந்தன்
     என்னும் என் சற்குரு மணியே.

உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல்
     உள்ளதாய், முற்றும் உள்ளதுவாய்,
நள்அதாய், எனதுஆய், நான்அதுஆய், தனதாய்,
     நவிற்ற அரும் தான் அதுஆய், இன்ன
விள் ஒணா அப்பால், அப்படிக்கு அப்பால்
     வெறுவெளி சிவ அனுபவம் என்று
உள்ளுற அளித்த ஞானசம் பந்த
     உத்தம சுத்த சற்குருவே.

பொத்திய மூல மலப்பிணி தவிர்க்கும்
     பொருள் அருள் அனுபவம், அதற்குப்
பத்தியம் உயிரின் அனுபவம், இதனைப்
     பற்று அறப் பற்றுதி, இதுவே
சத்தியம் என, என் தனக்கு அருள் புரிந்த
     தனிப்பெருங் கருணை என் புகல்வேன்
முத்து இயற் சிவிகை இவர்ந்து, ருள் நெறியின்
     முதல் அரசு இயற்றிய துரையே.

உயிரைப் பொத்தி உள்ள மூலமலப் பிணி ஆகிய ஆணவம் நீங்க வேண்டுமானால் அருள் அனுபவம் வேண்டும். அந்த அருள் அனுபவம் எளிதில் வாய்க்காது. அதற்குப் பத்தியம் இருத்தல் வேண்டும். அந்தப் பத்தியம் என்பது உயிர் அனுபவமே என்று வள்ளல் பெருமான் காட்டித் தெளிவித்து இருப்பது எண்ணி எண்ணி,  இன்புற்று, அனுபவித்துத் தெளிய வேண்டியதாகும்.

இதன் பொருளை மேலும் இங்கே விரிக்கில், பல்கிப் பெருகும்.
வேறு ஒரு தலைப்பில் இதனை விரிவாகச் சிந்திக்கத் திருவருள் கூட்டுவதாக.


கருத்துரை

பொன்னம்பலத்து உறையும் வேலவரே, வீணே உடல் அழியாது உய்ய அருள் செய்.

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...