செவிடன் காதினில் சங்கு




26. செவிடன் காதினில் சங்கு குறித்தல்

பரியாமல் இடும்சோறும், ஊமைகண்ட
     கனவும், ஒன்றும் பரிசில் ஈயான்
அரிதான செந்தமிழின் அருள்சிறிதும்
     இல்லாதான் அறிவுமே தான்,
கரிகாலன் பூசைபுரி தண்டலைநீள்
     நெறியாரே! கதித்த ஓசை
தெரியாத செவிடன் காதினில் சங்கு
     குறித்தது எனச் செப்ப லாமே.

        இதன் பொருள் ---

     கரிகாலன் பூசைபுரி தண்டலைநீள் நெறியாரே --- கரிகால் சோழன் வழிபாடு செய்த திருத்தண்டலை நீள்நெறியில் எழுந்தருளிய இறைவரே!,

     பரியாமல் இடும் சோறும் --- உள்ளத்தில் பரிவு இல்லாமல் ஒருவன் இடுகின்ற சோறும்,

      ஊமை கண்ட கனவும் --- ஊமையன் ஒருவன் கண்ட கனவும்,

     பரிசில் ஒன்றும் ஈயான் --- பாடும் புலவருக்குப் பரிசு ஒன்றும் கொடுத்து உதவாமல்,

     அரிது ஆன செந்தமிழின் அருள் சிறிதும் இல்லாதான் அறிவும் --- அருமையான செந்தமிழின் அருளைச் சற்றும் பெறாதவனுடைய அறிவும்,

     கதித்த ஓசை தெரியாத செவிடன் காதினில் --- பேரொலியை அறியாத செவிடனுடைய காதில்,

     சங்கு குறித்தது எனச் செப்பலாம் --- சங்கு முழங்கியது போல் பயன் தராதது ஆகும் என்று கூறலாம்.

       விளக்கம் ---- பரிவு - அன்பு. விருந்தினருக்கு உள்ளன்போடு உணவு அளிக்கவேண்டும்.  அப்படிக்கு இல்லாத உணவு பசியைத் தணிக்காது.

ஒப்புடன் முகம் மலர்ந்து, உபசரித்து, உண்மைபேசி,
உப்பு இல்லாக் கூழ் இட்டாலும் உண்பதே அமுதம்ஆகும்,
முப்பழமொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவரேனும்
கப்பிய பசியினோடு கடும் பசிஆகும் அன்றே.

என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.

எனவே, அன்பு இல்லாமல் இடுகின்ற உணவும், வாய் பேச முடியாத ஒருவன் கண்ட கனவும், புலவர் பாடும் அருந்தமிழ்ப் பாடலை அதன் சுவை அறிந்து மெச்சி, புலவர்க்கு வேண்டுவன கொடுத்து அறியாதவன், தமிழைப் பற்றி அறிந்து வைத்து இருக்கும் அறிவும், செவிடன் காதில் ஊதிய சங்கின் ஒலி எப்படிப் பயன் அற்றதாகிப் போகுமோ, அது போலப் பயனற்றது என்கின்றது இந்தப் பாடல். உண்மையிலேயே தமிழின் சுவையை அறிந்தவனாக இருந்தால், பாடும் பாடலுக்கு மகிழ்ந்து, பரிசில் கொடுத்து உதவுவான்.

     ‘ஊமை கண்ட கனவு' ‘செவிடன் காதினில் சங்கு' என்பவை பழமொழிகள்.


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...