சிதம்பரம் - 0649. பருவம் பணைத்து
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பருவம் பணைத்து (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
பொதுமாதர் உறவு நீங்க அருள்

தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
     தனனந் தனத்த தந்த ...... தனதான


பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு
     பவளம் பதித்த செம்பொ ...... னிறமார்பிற்

படருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்த
     பலவிஞ் சையைப்பு லம்பி ...... யழகான

புருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந் துதித்த தென்று
     புளகஞ் செலுத்தி ரண்டு ...... கயல்மேவும்

பொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர
     பொடிகொண் டழிக்கும் வஞ்ச ...... ருறவாமோ

உருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்து
     உறவும் பிடித்த ணங்கை ...... வனமீதே

ஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்து
     ஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்த ...... மணிமார்பா

செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க
     சிவமஞ் செழுத்தை முந்த ...... விடுவோனே

தினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சு
     திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு எனத் திரண்டு
     பவளம் பதித்த செம்பொன் ...... நிறமார்பில்

படரும் கனத்த கொங்கை, மினல் கொந்தளித்து சிந்த
     பல விஞ்சையைப் புலம்பி, ...... அழகான

புருவம் சுழற்றி, இந்த்ர தநு வந்து உதித்தது என்று
     புளகம் செலுத்து இரண்டு ...... கயல்மேவும்

பொறிகண் சுழற்றி, ரம்ப பரிசம் பயிற்றி, மந்த்ர
     பொடிகொண்டு அழிக்கும் வஞ்சர் ...... உறவு ஆமோ?

உருவம் தரித்து உகந்து, கரமும் பிடித்து வந்து,
     உறவும் பிடித்து, அணங்கை ...... வனமீதே

ஒளிர்கொம்பினை, சவுந்தரிய உம்பலைக் கொணர்ந்து
     ஒளிர் வஞ்சியைப் புணர்ந்த ...... மணிமார்பா!

செருவெம் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க,
     சிவம் அஞ்செழுத்தை முந்த ...... விடுவோனே!

தினமும் களித்து செம்பொன் உலகம் துதித்து இறைஞ்சு
     திரு அம்பலத்து அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை

      உருவம் தரித்து உகந்து --- வேற்று வடிவங்களான வனவேடன், வளையல் செட்டி, தவ முனிவர் ஆகிய வடிவங்களை மனமகிழ்ச்சியுடன் தரித்துக் கொண்டு

     கரமும் பிடித்து உவந்து --- மகிழ்வோடு வள்ளிநாயகியின் கரங்களைப் பற்றி,

     அணங்கை உறவும் பிடித்து --- தெய்வமகள் போன்ற அந்த வள்ளி பிராட்டியின் நட்பைப் பூண்டு,

       வனம் மீதே --- வள்ளிமலைக் காட்டில்,

     ஒளிர் கொம்பினை சவுந்தரிய உம்பலைக் கொணர்ந்து --- ஒளி பொருந்திய தந்தங்களை உடைய அழகிய கணபதியாகிய யானையை வரவழைத்து,

     ஒளிர் வஞ்சியைப் புணர்ந்த மணி மார்பா --- அழகு விளங்குகின்ற வஞ்சிக்கொடி போன்ற வள்ளிப் கிராட்டியை மணந்து கொண்ட அழகிய திருமார்பரே !

      செரு வெம்களத்தில் வந்த --- போர் நடந்த போர்க்களத்திலே எதிர்த்து வந்,

     அவுணன் தெறிந்து மங்க --- சூரபதுமன் பிளவுபட்டு அழிய.

     சிவம் அஞ்செழுத்தை முந்த விடுவோனே --- நமசிவாய என்ற திருவைந்தெழுத்தின் ஆற்றலைக் கொண்ட வேலாயுதத்தை முற்பட விடுத்து அருளியவரே!

         தினமும் களித்து செம்பொன் உலகம் துதித்து இறைஞ்சு --- செவ்விய பொன்னுலகத்தினரான தேவர்கள் உள்ள மகிழ்வோடு தினமும் வழிபட,

     திருஅம்பலத்து அமர்ந்த பெருமாளே --- திரு அம்பலத்தில் அமர்ந்த பெருமையில் மிக்கவரே!

      பருவம் பணைத்து --- இளம் பருவத்திலை பருத்து வளர்ந்து,

     இரண்டு கரிக் கொம்பு எனத் திரண்டு --- யானையின் இரண்டு தந்தங்கள் என்று சொல்லும்படி திரட்சி உற்று,

     பவளம் பதித்த --- கவளம் பதித்தது போன்ற

     செம்பொன் நிறமார்பில் --- அழகிய பொன் நிறமான திருமார்பில்

     படரும் கனத்த கொங்கை  --- படர்ந்து உள்ள பருத்த கொங்கைகள்,

     மின்னல் கொந்தளித்து சிந்த --- மின்னலைப் போன்று ஒளி வீ,

      பல விஞ்சையைப் புலம்பி --- பலவிதமான மாய வித்தைப் பேச்சுக்களைப் பலமாகப் பேசி,

     இந்த்ர தநு வந்து உதித்தது என்று --- வானவில் வந்து தோன்றியது போன்ற

     அழகான புருவம் சுழற்றி --- தம்முடைய அழகான நெற்றிப் புருவங்களைச் சுழற்றி,

     புளகம் செலுத்து --- புளகாங்கிதத்தை உண்டு கண்ணுகின்,

     இரண்டு கயல் மேவும் பொறிகள் சுழற்றி --- இரண்டு மீன்களைப் போல் உள்ள உறுப்பாகிய கண்களைச் சுழற்றி,

      ரம்ப பரிசம் பயிற்றி --- நிரம்பவும் தொட்டுப் பயின்று,

     மந்த்ர போடி கொண்டு --- மந்திரப் பொடி என்னும் சொக்குப் பொடி கொண்டு

     அழிக்கும் வஞ்சர் உறவு ஆமோ --- அழிக்கின்ற வஞ்சகர்களாகிய பொது மகளிருடைய உறவு நல்லது ஆகுமோ? (ஆகாது).

பொழிப்புரை

         மாறு வடிவங்களான வேடன், வளையல் செட்டி, தவமுனிவர் ஆகிய வடிவங்களைத் தாங்கி, மனமகிழ்ச்சியுடன், வள்ளிநாயகியின் கைகளைப் பற்றி மகிழ்ந்து, தெய்வமகள் போன்ற அப் பிராட்டியின் நட்பைப் பூண்டு, வள்ளிமலைக் காட்டில், விளங்குகின்ற தந்தத்தினை உடைய, அழகிய கணபதியை யானை வடிவம் கொண்டு வரவழைத்து, விளங்குகின்ற வஞ்சிக்கொடி போன்ற வள்ளியை மணந்து கொண்ட அழகிய திருமார்பரே !

         வெப்பமான போர்க்களத்தில் வந்த சூரபன்மன் பிளவுபட்டு அழிய, நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தின் ஆற்றலைக் கொண்ட வேலாயுதத்தை முற்படச் செலுத்தியவரே!

         நாள்தோறும் மகிழ்ச்சியுடன் செவ்விய பொன்னுலகத்தினரான தேவர்கள் துதி செய்து வணங்கும் தில்லைத் திருவம்பலத்திலே வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         இளம் பருவத்திலே பருத்து,  யானைத் தந்தங்கள் என்று சொல்லும்படி திரட்சியுற்று, பவளம் பதித்தது போன்ற செவ்விய பொன்னிறமான மார்பில் பரந்துள்ள கனம் கொண்ட மார்பகங்கள் மின்னல் மின்னி எழுந்தது போல ஒளி வீச,  பலவிதமான மாய வித்தைப் பேச்சுக்களைப் பலமாகப் பேசி, வானவில் வந்து தோன்றியது போல தமது அழகான புருவங்களைச் சுழற்றி,  புளகம் தருகின்ற இரண்டு கயல் மீன் போல் உள்ள உறுப்பாகிய கண்களைச் சுழற்றி, நிரம்பவும் தொட்டுப் பயின்று, சொக்குப் பொடி கொண்டு அழிக்கின்ற வஞ்சகர்களாகிய பொது மகளிருடைய உறவு நல்லதாகுமோ? (ஆகாது).

விரிவுரை

இத் திருப்புகழில் முதல் நான்கு அடிகள் பொதுமாதரின் அங்க இலக்கணங்களை இலக்கியச் சுவை ததும்பக் கூறுகின்றன.

உம்பலைக் கொணர்ந்து ---

உம்பல் - யானை. விநாயகர் யானை வடிவாக வந்து வள்ளிநாயகியை முருகர் மணந்துகொள்ள அருளினார்.

…..                      …..             …..    இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணம் அருள் பெருமாளே. ---  (கைத்தல) திருப்புகழ்.
  
சிவம் அஞ்செழுத்தை முந்த விடுவோனே ---

வேலாயுதத்தை பஞ்சாட்சரம் என்று அருணகிரிநாதர் இங்கு கூறுகின்றார். ஓர் எழுத்தின் ஆற்றலை உடையது என்று காட்டுகின்றார். அப்பர் பெருமான் திருவைந்தெழுத்தை வினையை அழிக்கும் படைக்கலம் என்கின்றார்.

படைக்கலமாக உன் நாமத்து எழுத்து
அஞ்சு என் நாவில் கொண்டேன்.....            ---  அப்பர்.

பஞ்சாட்சரம் செபித்தோருடைய வினையை அகற்றுவது.

வேல் வழிபட்டோருடைய வினையை விலக்குவது.

திருஞானசம்பந்தர், " வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே" என்கின்றார்.

"சுரர்க்கும், முனிவரர்க்கும், மகபதிக்கும், விதி தனக்கும், அரி தனக்கும், நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினை சாடும்" என்று வேல் வகுப்பில் அருணகிரியார் கூறுகின்றார். "வினை ஓட விடும் கதிர்வேல்" என்றார் கந்தரனுபூதியில்.

ஆகவே, வேலும் பஞ்சாட்சரமும் ஒரு தன்மையன.

கருத்துரை

திருவம்பலத்துறை தேவா, பொதுமாதர் உறவை அகற்றி ஆண்டு அருள்.


No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...