திருக் காளத்தி - 0596. சிரத் தானத்தில்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சிரத் தானத்தில் (திருக்காளத்தி)

முருகா!
ஒப்பற்ற உனது திருவடியை,
எனது சென்னியில் சூட்டி  ஆட்கொள்.


தனத்தா தத்தத் ...... தனதான
     தனத்தா தத்தத் ...... தனதான


சிரத்தா னத்தில் ...... பணியாதே
     செகத்தோர் பற்றைக் ...... குறியாதே

வருத்தா மற்றொப் ...... பிலதான
     மலர்த்தாள் வைத்தெத் ...... தனையாள்வாய்

நிருத்தா கர்த்தத் ...... துவநேசா
     நினைத்தார் சித்தத் ...... துறைவோனே

திருத்தாள் முத்தர்க் ...... கருள்வோனே
     திருக்கா ளத்திப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சிரத் தானத்தில் ...... பணியாதே,
     செகத்தோர் பற்றைக் ...... குறியாதே,

வருத்தா மற்றுஒப்பு ...... இலது ஆன,
     மலர்த்தாள் வைத்து, எத்- ...... தனை ஆள்வாய்

நிருத்தா! கர்த்தத்- ...... துவ நேசா!
     நினைத்தார் சித்தத்து ...... உறைவோனே!

திருத்தாள் முத்தர்க்கு ...... அருள்வோனே!
     திருக்கா ளத்திப் ...... பெருமாளே.


பதவுரை

         நிருத்தா --- திருநடனம் புரிவதில் வல்லவரே!

         கர்த்தத்துவ நேசா --- தலைமைத் தானம் வகிக்கும் நேசம் உடையவரே!

          நினைத்தார் சித்தத்து உறைவோனே ---- நினைந்து உருகும் அடியார்களின் உள்ளக் கோயிலில் உறைபவரே!

         திருத்தாள் முத்தர்க்கு அருள்வோனே --- முத்தான்மாக்கட்குத் திருவடியைத் தருபவரே!
    
         திருக்காளத்திப் பெருமாளே --- திருக்காளத்தி என்னும் திருத்தலத்தில் வாழும் பெருமையில் சிறந்தவரே!

         சிரத்தானத்தில் பணியாதே --- சிரமாகிய இடத்தில் தேவரீரை அன்றிப் பிறரை வணங்காமல்,
    
         செகத்தோர் பற்றைக் குறியாதே --- உலகத்தோர் மீது பாசம் வைத்து வருந்தாமல்,

         வருத்தா மற்று ஒப்பு இலதான --- என்னை வருத்தி (வரவழைத்து), வேறு எதுவும் சமானம் இல்லாத
    
         மலர்த்தாள் வைத்து எத்தனை ஆள்வாய் --- மலர் போன்ற திருவடிகளில் சேர்த்து அடியேனை ஆட்கொள்ளுவீராக.


பொழிப்புரை

         திருநடனம் புரிவதில் வல்லவரே!

         தலைமைத் தானம் வகிக்கும் நேசம் உடையவரே!

          நினைந்து உருகும் அடியார்களின் உள்ளக் கோயிலில் உறைபவரே!

         முத்தான்மாக்கட்குத் திருவடியைத் தருபவரே!
    
         திருக்காளத்தி என்னும் திருத்தலத்தில் வாழும் பெருமையில் சிறந்தவரே!

         சிரமாகிய இடத்தில் தேவரீரை அன்றிப் பிறரை வணங்காமல், உலகத்தோர் மீது பாசம் வைத்து வருந்தாமல், என்னை வருத்தி (வரவழைத்து), வேறு எதுவும் சமானம் இல்லாத மலர் போன்ற திருவடிகளில் சேர்த்து அடியேனை ஆட்கொள்ளுவீராக.

விரிவுரை

சிரத்தானத்தில் பணியாதே ---

சிரத்தில் முருகனை வைத்துப் பணிதல் வேண்டும். அந்த இடத்தில் மற்றொரு தெய்வத்தை அமைத்து வணங்குதல் கூடாது. இது ஏக தேவ வழிபாடு. கற்புடைய மனைவி கணவனையன்றிப் பிறரைக் கனவிலும் கருதாள்.

அதுபோல, உத்தம அடியார்கள், தான் வழிபடும் மூர்த்தியை அன்றி வேறு மூர்த்தியை தலையில் கொண்டு தொழமாட்டார்கள்.

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரை யான்பின் செல்லேன்            --- நக்கீரர்.

பழுதில்தொல் புகழால் பங்க! நீ அல்லால்
     பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய்,
செழுமதி அணிந்தாய்! சிவபுரத்து அரசே!
     திருப்பெருந்துறை உறை சிவனே!
தொழுவனோ? பிறரைத் துதிப்பனோ? எனக்கு ஓர்
     துணை என நினைவனோ? சொல்லாய்,
மழவிடை யானே! வாழ்கிலேன் கண்டாய்,
     வருகஎன்று அருள் புரியாயே.             --- திருவாசகம்.

இறைவனை வணங்குதற்கென்றே தலை அமைந்துள்ளது என்பதனை "தலையே நீ வணங்காய்”, "வணங்கத் தலை வைத்து”, "தாள் சூடாத சென்னியும்",  "தலையாரக் கும்பிட்டு" என வரும் அமுத வாக்குகளால் காண்க.

திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்கள் என்று எண்ணி
ஒருவரை மதியாது...                         ---  சுந்தரர்.

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க....       ---  திருவாசகம்.


செகத்தோர் பற்றைக் குறியாதே ---

மனைவி, மக்கள், தாய், தமக்குதவிய உலகினர் மீதுள்ள பற்று தொலைந்தால் ஒழிய இறைவனை அடைதல் இயலாது.  பற்று அற்றவரே பரம ஞானிகள் ஆவார். அவரே பரகதி அடைவார்.  "அற்றது பற்று எனில் உற்றது வீடு”. அப்பற்று, அகப்பற்று, புறப்பற்று என இருவகைப்படும். நான், எனது எனப்படும்.

மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின்திருப்
பாதமே மனம் பாவித்தேன்..                  ---  சுந்தரர்.

மற்றுநான் பற்றிலேன் கண்டாய்               ---  மணிவாசகர்.

இக் கருத்தைப் பற்று அற்றவராகிய தாயுமானார் பகருமாறு கண்டு மகிழ்க.

படிப்பு அற்றுக் கேள்வி அற்று பற்று அற்றுச் சிந்தைச்
துடிப்பு அற்றோர்க்கு அன்றோ சுகம்காண் பராபரமே.

பற்று அற்று இருக்கு நெறி பற்றில், கடல்மலையும்
சுற்ற நினைக்கு மனம் சொன்னேன் பராபரமே.

பற்றிய பற்றற்ற உள்ளே - தன்னைப்
பற்றச் சொன்னான் பற்றிப் பார்த்த இடத்தே
பெற்றதை ஏதென்று சொல்வேன் - சற்றும்
பேசாத காரியம் பேசினான் தோழி.

நாம் பற்றெனக் கருதி நிற்போர் எல்லாம் நமக்குப் பேரிடர் வருங்கால் கைவிட்டு ஏகுவர். நமனுடைய பாசக்கயிறு வந்து மரண யாத்திரை செல்லும்போது, யாரே துணை செய்வார்.  சற்று சிந்தித்து நோக்குமின்.

என்பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போஎன்று சொல்லிப் புலம்பி விட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம்உடைத்தார்
உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே.      ---  பட்டினத்தார்.

ஆதலினால், உலகவர் மீதுள்ள பற்றை ஒழித்து, உயிர்க்குத் துணையாய் இறைவனைப் பற்றி நிற்றல் வேண்டும்.  அவ்வாண்டவனே இம்மைக்கும் மறுமைக்கும் பற்றாவான்.

இம்மைக்கும் ஏழேழ் பிறப்புக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி        ---  ஆண்டாள்.

பற்றற்ற கண்ணே பிறப்பு அறுக்கும், மற்று
நிலையாமை காணப் படும்.                   ---  திருக்குறள்.

வருத்தா ---

இறைவனைப் பணியாமலும், உலகப் பற்று கொண்டு அடியேன் அலையாமலும் என்னை வரவழைத்து அருள்செய் என்கின்றார்.

வருத்தை - வருத்தி வரவழைத்து

மற்று ஒப்பு இலதான மலர்த்தாள் ---

இறைவனுடைய திருவடி - ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களையும் புரியும். அது நிகரில்லாதது.

இனி, ஞானத்தையும் சீலத்தையும் வளர்த்தலினால் மலர்த்தாள் என்றனர்.  திருவடிக்கு இணை ஒன்றும் இல்லாததால், மற்றொப்பிலதான மலர்த்தாள் என்றனர்.  இறைவனுடைய திருவடி மலரை சென்னி மீது வைக்குமாறு வேண்டுகின்றனர்.  திருவடி தீட்சையினும் பெரிய சம்பத்து இல்லையாமென்க.  முருகன் திருவடி பட்டதனால், சென்னியிலிருந்த அயன் கையெழுத்து அழிந்தது என்பர் மற்றோரிடத்தில்.

இறைவன் திருவடிக் கீழ் இருக்கும் பேற்றையே வரமாகக் கேட்டனர் காரைக்காலம்மையார்..

அறவா, நீ ஆடும்போது உன் அடியின்
கீழ் இருக்க என்றார்....     

சிறுமான் ஏந்தி தன் சேவடிக்கீழ் சென்று
அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ

என்றார் அப்பமூர்த்திகள்.

நோயுற்று அடராமல், நொந்து மனம் வாடாமல்,
பாயில் கிடவாமல், பாவியேன் - காயத்தை
ஓர்நொடிக்குள் நீக்கி, ஒண் போரூர் ஐயா! நின்
சீரடிக் கீழ் வைப்பாய் தெரிந்து.           --- சிதம்பர சுவாமிகள்.

வைத்தெத்தனை ஆள்வாய் ---

எந்தனை என்ற சொல் சந்தம் நோக்கி எத்தனை என வந்தது.

அல்லது எத்துகின்ற – ஏமாற்றுகின்ற எத்தன் ஆகிய என்னை ஆள்வாய் என்று கூறினும் பொருந்தும்.
  
நிருத்தா ---

முருகன் நடனம் செய்வதில் வல்லவர். அவருடைய நடனத்தைப் பற்றி அருணகிரியார் பல பாடல்களில் கூறியிருக்கின்றார்.

இனி, ஆன்மாக்களுடைய இதயத் தாமரையாகிய தகராகாசத்தில் அனவரதமும் தாண்டவம் புரிவதால் குகனாகிய குமரவேளை நிருத்தா என்றனர்.  அவன் ஆடுவதால் உலகங்கள் எல்லாம் ஆடுகின்றன.  ஆதியும் முடிவும் இல்லாத அற்புதத் தனிக்கூத்து ஆடும் நாதன் அவனே. ஆடுகின்ற அமலன் ஆதலின், தனது வாகனத்தையும் ஆடுகின்ற மயிலாக அமைத்துக் கொண்டனன் போலும்.

கர்த்தத்துவ நேசா ---

கர்த்தத்துவம் - தலைமை.

எல்லா உலகங்கட்கும், எல்லாத் தேவர்கட்கும், முருகப் பெருமான் ஒருவரே தனிப்பெரும் தலைவர்.

நினைத்தார் சித்தத்து உறைவோனே ---

உள்ளம் உருகி நினைப்பவர் உள்ளக் கோயிலில் இறைவன் உறைகின்றான்.

நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்.      ---  அப்பர்.

நினைப்பவர் மனத்துளான்                --- திருஞானசம்பந்தர்.

ஒயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை --- மணிவாசகர்.

இறைவனையே நினைப்பதால் ஏனைய நினைப்புகள் தானே நீங்குகின்றன. அதனால் அமைதியும் ஆறுதலும் உண்டாகின்றன.  ஓயாத உலக நினைவன்றோ நம்மை அல்லல் படுத்துகின்றது.  மற்றைய நினைப்பற மயில்வாகனனை நினைந்து உய்வு பெறவேண்டும்.

திருத்தாள் முத்தர்க்கு அருள்வோனே ---

முத்தர் - பந்தத்தினின்றும் விடுபட்டவர்கள்.
முத்தர்கள் நான்கு வகையினர்.

பிரமவித்து, பிரமவரர், பிரமவரியர், பிரமவரிஷ்டர் எனப் படுவர்.

பிரமவித்துக்கள் ---  பிரமஞானம் அடைந்தும் உலக உபகாரமாகத் தமக்கு, முன் விதிக்கப்பட்ட விதிகளின் படி ஒழுகும் ஞானிகள்.

பிரமவரர் --- சமாதியினின்றும் தாமே உணர்பவராகிய ஞானிகள்.

பிரமவரியர் --- சமாதியினின்றும் பிறர் கலைக்க எழுகின்ற ஞானிகள்.

பிரமவரிஷ்டர் --- தாமேயாகவும், பிறர் கலைத்தாலும், சமாதியினின்றும் எழாத ஞானிகள். 

இந்த நால்வரும் சீவன்முத்தர்கள்.

திருக்காளத்திப் பெருமாளே ---

பாம்பும் யானையும் முத்தி பெற்ற தலம் ஆதலின் காளத்தி எனப் பெற்றது. ஐம்பெரும் தலங்களுள் ஆது வாயுத்தலம். மிகப் புனிதமானது. நக்கீரதேவர் திருவருள் பெற்ற புண்ணியத் தலம்.  கண்ணப்பர் ஆறு நாட்களில் திருவருள் பெற்ற திருத்தலம்.  என்னின், அதன் பெருமையை அளக்க வல்லார் யாவர்?

காளத்தி அப்பரை வணங்கும் அடியார்களைக் கண்டால், பணிந்து மிகத் தொலைவில் செல்லுங்கள் என்று நமன், தனது தூதர்க்குத் தொழுது கூறுவான்.

தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும்
வழிவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்
பத்தர்களைக் கண்டால் பணிந்துஅகலப் போமின்கள்
எத்தனையும் சேய்த்தாக என்று.

கருத்துரை

அடியார் சித்தத்து உறைபவரே, திருக்காளத்தியில் நின்ற திருமுருகரே, அடியேன் பற்றற்று ஏகதேவ வழிபாட்டில் நிற்குமாறு அருளி, உமது திருவடியை என் சென்னிமேல் சூட்டுவீராக.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...