மக்களில் பதர்
28. மக்களில் பதர்

தன்பெருமை சொல்லியே தன்னைப் புகழ்ந்தபதர்,
     சமர்கண் டொளிக்கும்பதர்,
தக்கபெரி யோர்புத்தி கேளாத பதர்,தோழர்
     தம்மொடு சலிக்கும் பதர்,

பின்புகாணாஇடம் தன்னிலே புறணிபல
     பேசிக்க ளிக்கும்பதர்,
பெற்றதாய் தந்தைதுயர் படவாழ்ந் திருந்தபதர்,
     பெண்புத்தி கேட்கும் பதர்,

பொன்பணம் இருக்கவே போயிரக் கின்றபதர்,
     பொய்ச்சாட்சி சொல்லும்பதர்,
புவியோர் நடத்தையை இகழ்ந்தபதர், தன்மனைவி
     புணர்தல்வெளி யாக்கும்பதர்,

மன்புணரும் வேசையுடன் விபசரிக் கின்றபதர்,
     மனிதரில் பதரென்பர்காண்.
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     தன் பெருமை சொல்லியே தன்னைப் புகழ்ந்த பதர் --- தன்னுடைய பெருமைகளைக் கூறித் தன்னையே புகழ்ந்து கொண்ட பதர்,

     சமர் கண்டு ஒளிக்கும் பதர் --- போரைக் கண்டு பதுங்குகின்ற பதர்,

     தக்க பெரியோர் புத்தி கேளாத பதர் --- நல்ல பெரியோர் சொல்லும் அறிவுரையைக் கேட்காத பதர்,

     தோழர் தம்மொடு சலிக்கும் பதர் --- நண்பரிடம் கோபம் கொள்ளுகின்ற, வெறுத்துப் பேசுகின்ற பதர்,

     பின்பு காணா இடம் தன்னிலே புறணி பல பேசிக் களிக்கும் பதர் --- ஒருவரைப் பற்றி அவர் தம்மிடத்தில் இருந்து சென்ற பிறகும், அவரைக் காணாதபோதும், அவரைப் பற்றிக் புறம் கூறி மகிழ்கின்ற பதர்,

     பெற்ற தாய் தந்தை துயர் பட வாழ்ந்திருந்த பதர் --- தன்னைப் பெற்ற தாய் தந்தையர் துன்பத்தில் இருக்க, தான் மட்டும் இனிமையுடன் வாழ்ந்திருந்த பதர்,

     பெண் புத்தி கேட்கும் பதர் --- பெண்கள் சொல்லும் புத்தியைக் கேட்டு நடக்கின்ற பதர்,

     பொன் பணம் இருக்கவே போய் இரக்கின்ற பதர் ---தன்னிடத்தில் பொன்னையும் பணத்தையும் வைத்துக்கொண்டே, பிறரிடத்தில் சென்று இரந்து நிற்கின்ற பதர்,

     பொய்ச் சாட்சி சொல்லும் பதர் --- பொய்யாக சாட்சி கூறுகின்ற பதர்,

     புவியோர் நடத்தையை இகழ்ந்த பதர் --- உயர்ந்தோரைப் பழிக்கின்ற பதர்,

     தன் மனைவி புணர்தல் வெளியாக்கும் பதர் --- தன் மனைவியோடு அனுபவித்த புணர்ச்சி இன்பத்தை வெளியிலே கூறுகின்ற பதர்,  

     மன் புணரும் வேசையுடன் விபசரிக்கின்ற பதர் --- அரசனைச் சேர்ந்து இருக்கும் பரத்தையுடன் விபசாரம் செய்கின்ற பதர்,

ஆகிய இவர் எல்லாம்,

     மனிதரில் பதர் என்பர் --- மக்களிலே பதர் என்று மதிக்கப்படுவர்.

        விளக்கம் --- புறங்கூறாமை என்று ஒரு அதிகாரத்தையே திருக்குறள் ஆசிரியர் வைத்து உள்ளார். இதிலிருந்தே புறம் கூறுதல் எவ்வளவு கொடுமையானது, பாவத்திற்கு இடம் தருவது என்பது தெளிவாகும். "புறம் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின், சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்"

     பெண்புத்தி கேட்டல் தவறு என்பது 23-ஆம் பாடலிலும் வந்தது.

     மனைவியாய் இருந்தும், அதற்கேற்ப நடவாதவர்களும் உண்டு என்பதால், இவ்வாறு கூறினார் எனக் கொள்ளல் பொருந்தும்.                         
  
எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி; - அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ் பேய்; - இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.             --- நாலடியார்.

     தவறு செய்துவிட்ட மனைவியைத் தண்டிக்க வரும் கணவன் எதிர் நின்று, அவனை எதிர்த்துப் பேசுபவள் அவனுக்கு மனைவி அல்ல, எமன். காலையில் அவனுக்கு உணவு சமைத்து வைக்காதவள் மனைவி அல்ல, தீராத நோய். சமைத்த உணவை அவன் உண்ண அன்புடன் பரிமாறி உதவாதவள், மனைவி அல்ல, வீட்டில் இருக்கும் பேய். கணவனை உயிரோடு கொல்ல இந்த மூன்று வகைப் பெண்களை போதும். வேறு படைக் கருவி தேவை இல்லை.

     இப்படிப்பட்ட மனைவியிடம் ஒரு வேளை அவள் தரும் இன்பத்தை விழைந்து அவள் சொல்லுவதைக் கேட்டு நடக்கவும் கூடும் என்பாதல் இவ்வாறு ஆசிரியர் காட்டினார் என்று கொள்ளல் பொருந்தும்.

     பொய் சாட்சி கூறுதல் கூடாது என்பதும் அதனால் விளைவது என்ன என்பதும் ஔவைப் பிராட்டியார் பாடலால் அறியலாம்.

வேதாளம் சேருமே, வெள் ருக்குப் பூக்குமே,
பாதாள மூலி படருமே, - மூதேவி
சென்று இருந்து வாழ்வளே, சேடன் குடிபுகுமே,
மன்று ஓம் சொன்னார் மனை.                 --- நல்வழி.

         நியாய சபையிலே நடுவுநிலையிலிருந்து தவறி ஒருதலையாக சாட்சி சொன்னவருடைய வீட்டிலே, பேய்கள் வந்து சேரும். வெள் ருக்கு முளைத்து மலரும். பாதாள மூலி ன்னும் கொடி படரும். மூதேவியானவள் வந்து நிலை பெற்று வாழ்வாள். பாம்புகள் குடியிருக்கும்.

         நீதிமன்றத்திலே பொய்சாட்சி சொன்னவர் குடும்பத்தோடு அழிவதும் அல்லாமல், அவர் குடியிருந்த வீடும் பாழாகும்.

     பதர் என்பது உள்ளீடாக இருக்க வேண்டியது இல்லாத நிலையைக் குறிக்கும். மனிதனாகப் பிறந்தவனுக்கு இருக்க வேண்டிய நற்குணங்கள் அமைந்து இராதவரைப் பதர் என்பர்.


பதர்கள் இன்னார் என்று வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளதும் காண்க.

காலையும் மாலையும் நான்மறை ஓதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே.

குடியலைத்து இரந்துவெங் கோலொடு நின்ற
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே.

முதல்உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து,
அதன்பயன் உண்ணா வணிகரும் பதரே.

வித்தும் ஏரும் உளவாய் இருப்ப
எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே.

தன் மனையாளைத் தாய் மனைக்கு அகற்றி,
பின்பு அவள் பாராப் பேதையும் பதரே. 

தன் மனையாளைத் தனி மனை இருத்தி,
பிறர்மனைக்கு ஏகும் பேதையும் பதரே.

தன் ஆயுதமும் தன் கையில் பொருளும்
பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே.No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...