சிதம்பரம் - 0652. மச்ச மெச்சு
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மச்ச மெச்சு (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
இந்த பொய் உடம்பைப் பொன் உடம்பு ஆக்கி,
திருவடியில் சேர்த்து அருள்.


தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த
     தத்த தத்த தாத்த ...... தனதான


மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம்
     வைச்சி றைச்ச பாத்ர ...... மநுபோகம்

மட்க விட்ட சேக்கை உட்பு ழுத்த வாழ்க்கை
     மட்டு லப்ப தார்த்த ...... மிடிபாறை

எய்ச்சி ளைச்ச பேய்க்கு மெய்ச்சி ளைச்ச நாய்க்கு
     மெய்ச்சி ளைச்ச ஈக்கு ...... மிரையாகும்

இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி
     இப்படிக்கு மோட்ச ...... மருள்வாயே

பொய்ச்சி னத்தை மாற்றி மெய்ச்சி னத்தை யேற்றி
     பொற்ப தத்து ளாக்கு ...... புலியூரா

பொக்க ணத்து நீற்றை யிட்டொ ருத்த னார்க்கு
     புத்தி மெத்த காட்டு ...... புனவேடன்

பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்கு
     பைச்சி லைக்கு மாட்கொ ...... ளரன்வாழ்வே

பத்தி சித்தி காட்டி அத்தர் சித்த மீட்ட
     பத்த ருக்கு வாய்த்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மச்சம் மெச்சு சூத்ரம், ரத்த பித்த மூத்ரம்
     வைச்சு இறைச்ச பாத்ரம், ...... அநுபோகம்

மட்க விட்ட சேக்கை, உள் புழுத்த வாழ்க்கை,
     மண் குலப் பதார்த்தம், ...... இடிபாறை,

எய்ச்சு இளைச்ச பேய்க்கும், எய்ச்சு இளைச்ச நாய்க்கும்,
     எய்ச்சு இளைச்ச ஈக்கும் ...... இரை ஆகும்

இக் கடத்தை நீக்கி, அக் கடத்து உள் ஆக்கி,
     இப்படிக்கு மோட்சம் ...... அருள்வாயே.

பொய்ச் சினத்தை மாற்றி, மெய்ச் சினத்தை ஏற்றி
     பொன் பதத்து உள்ஆக்கு ...... புலியூரா!

பொக்கணத்து நீற்றை இட்ட ஒருத்தனார்க்கு
     புத்தி மெத்த காட்டு ...... புனவேடன்

பச்சிலைக்கும், வாய்க்குள் எச்சிலுக்கும், வீக்கு
     பைச் சிலைக்கும் ஆட்கொள் ...... அரன்வாழ்வே!

பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட
     பத்தருக்கு வாய்த்த ...... பெருமாளே.


பதவுரை

        பொய்ச் சின்னத்தை மாற்றி --- உலகில் உள்ள பொய்யாகிய அடையாளங்களை மாற்றி,

     மெய்ச் சின்னத்தை ஏற்றி --- உண்மை அடையாளங்களை நிலை நிறுத்தி,

       பொன் பதத்துள் ஆக்கு புலியூரா --- பக்குவப்பட்ட ஆன்மாக்களை பொன்மயமான திருவடிக்குள் சேர்த்துக் கொள்ளும் சிதம்பர நாதரே!

       பொக்கணத்து நீற்றை இட்ட ஒருத்தனார்க்கு --- ஒருவகையான திருநீற்றுப் பையில் உள்ள திருநீற்றை அணிந்து கொள்ளும் ஒப்பற்றவராகிய சிவகோசரியாருக்கு

      புத்தி மெத்த காட்டு புனவேடன் --- அன்பு நெறி இதுவே என்று காட்டி மிகவும் அறிவை விளக்கிய, காட்டிலே வாழும் வேடராகிய கண்ணப்பர்

      பச்சிலைக்கும் --- அன்புடன் இட்ட பச்சிலைக்கும்,

     வாய்க்குள் எச்சிலுக்கும் --- வாயில் இருந்து உமிழ்ந்த எச்சில் நீருக்கும்,

      வீக்கு பைச் சிலைக்கும் --- நாண் கட்டிய வலிமை மிக்க வில்லுக்கும் உவந்து,

     ஆட்கொள் அரன் வாழ்வே --- அவரை அடிமை கொண்டு அருள் புரிந்த சிவபெருமானுடைய திருக்குமாரரே!

      பத்தி சித்தி காட்டி --- அன்பையும் அதனால் வரும் பயனையும் தெரிவித்து,

     அத்தர் சித்தம் மீட்ட --- சிவபெருமானுடைய திருவுள்ளத்தை மீட்டுக் கொண்ட,

      பத்தருக்கு வாய்த்த பெருமாளே --- அன்பர்களுக்கு அருமையாகக் கிட்டிய பெருமையின் மிக்கவரே!

      மச்சம் மெச்சு சூத்ரம் --- அலங்கரித்த கட்டில் மெச்சுகின்ற இயந்திரமும்,

     ரத்த பித்த மூத்ரம் --- உதிரமும் பித்த நீரும் சிறுநீரும்

     வைச்சு இறைச்ச பாத்ரம் --- வைத்து வெளிப்படுத்துகின்ற பாண்டமும்.

       அநுபோகம் --- தொடர்ந்து வினைப் பயன்களைத் துய்ப்பதும்,

     மட்க விட்ட சேக்கை --- நாள் செல்லச் செல்ல ஒளியும் ஒலியும் குன்றுகின்ற கூடும்,

     உள் புழுத்த வாழ்க்கை --- உள்ளே புழுக்களோடு கூடியதும்,

      மண் குல பதார்த்தம் --- மண்ணினால் செய்த பொருளும்,

     இடி பாறை --- இடிக்கின்ற பாறை போன்றதும்,

      எய்ச்சு இளைச்ச பேய்க்கும் --- சோம்பி இளைத்த பேய்களுக்கும்,

     எய்ச்சு இளைச்ச நாய்க்கும் --- சோம்பி இளைத்த நாய்களுக்கும்,

     எய்ச்சு இளைச்ச ஈக்கும் --- சோம்பி இளைத்த ஈக்களுக்கும்

     இரையாகும் --- உணவாகி அழிவதும் ஆகிய

      இக்கடத்தை நீக்கி --- இந்த அசுத்த உடம்பை நீக்கி,

     அக்கடத்துள் ஆக்கி --- அந்த சுத்த தேகத்தைத் தந்து,

     இப்படிக்கு மோட்சம் அருள்வாயே --- இந்த வண்ணமாக மோட்சத்தை அருள் புரிவீர்.

பொழிப்புரை

         உலகில் உள்ள பொய்யாகிய அடையாளங்களை மாற்றி, உண்மை அடையாளங்களை நிலை நிறுத்தி, பக்குவப்பட்ட ஆன்மாக்களை பொன்மயமான திருவடிக்குள் சேர்த்துக் கொள்ளும் சிதம்பர நாதரே!

         ஒருவகையான திருநீற்றுப் பையில் உள்ள திருநீற்றை அணிந்து கொள்ளும் ஒப்பற்றவராகிய சிவகோசரியாருக்கு அன்பு நெறி இதுவே என்று காட்டி மிகவும் அறிவை விளக்கிய, காட்டிலே வாழும் வேடராகிய கண்ணப்பர் அன்புடன் இட்ட பச்சிலைக்கும், வாயில் இருந்து உமிழ்ந்த எச்சில் நீருக்கும், நாண் கட்டிய வலிமை மிக்க வில்லுக்கும் உவந்து, அவரை அடிமை கொண்டு அருள் புரிந்த சிவபெருமானுடைய திருக்குமாரரே!

         அன்பையும் அதனால் வரும் பயனையும் தெரிவித்து, சிவபெருமானுடைய திருவுள்ளத்தை மீட்டுக் கொண்ட, அன்பர்களுக்கு அருமையாகக் கிட்டிய பெருமையின் மிக்கவரே!

         அலங்கரித்த கட்டில் மெச்சுகின்ற இயந்திரமும், உதிரமும் பித்த நீரும் சிறுநீரும் வைத்து வெளிப்படுத்துகின்ற பாண்டமும். தொடர்ந்து வினைப் பயன்களைத் துய்ப்பதும், நாள் செல்லச் செல்ல ஒளியும் ஒலியும் குன்றுகின்ற கூடும், உள்ளே புழுக்களோடு கூடியதும், மண்ணினால் செய்த பொருளும், இடிக்கின்ற பாறை போன்றதும், சோம்பி இளைத்த பேய்களுக்கும், சோம்பி இளைத்த நாய்களுக்கும், சோம்பி இளைத்த ஈக்களுக்கும் உணவாகி அழிவதும் ஆகிய இந்த அசுத்த உடம்பை நீக்கி, அந்த சுத்த தேகத்தைத் தந்து, இந்த வண்ணமாக மோட்சத்தை அருள் புரிவீர்.

விரிவுரை

மச்ச மெச்சு சூத்ரம் ---

மச்சம் - மஞ்சம்.வலித்தல் விகாரம் பெற்றது. மஞ்சம் - அலங்கரித்த கட்டில். நல்ல பஞ்சணையும், அழகிய பதுமைகளும், சிறந்த கண்ணாடிகளும் அமைத்து நிரம்ப முயற்சியுடன் கட்டிலை அமைத்து, அதையே தமது வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு சிலர் உழலுவர். அங்ஙனம் உழல்வோரை உணர்வு உடையார் ஒருவரும் மெச்சமாட்டார்கள். அந்த அலங்கரித்த கட்டிலே மெச்சும். மெச்சல் - பாராட்டுதல். "பச்சைப் புயல் மெச்சத் தகு பொருள்" என்ற இடத்திலும் இந்தக் கருத்தில் வருவது காண்க.

ரத்த பித்த..........  பாத்ரம் ---

இவ் உடம்பு மிகவும் அருவருப்பானது. இவ் உடம்பினை மிகவும் அழகியதாகக் கருதி உடம்பினால் ஆய பயனைப் பெறுதற்கு முயலாது, வாளாக நாள் கழிக்கும் பேதையருக்கு, இவ் உடம்பின் அசுத்தத்தை எடுத்து நினைவூட்டுதல் ஆன்றோர் மரபு.  உடம்பினால் ஆய பயனாவது இன்னொரு உடம்பை அடையாததே. "எடுத்த யாக்கையால் இனி ஒரு யாக்கையை எடுத்திடா வகை ஏழையேற்கு ஈந்து அருள்" என்றார் ஒரு பெரியார். இவ் உடம்பு மலம் ஜலம் உதிரம் பித்தம் புழு முதலிய நிறைந்த அசுத்த தேகம்.

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர் மயிர் குருதியொடு இவைபல   கசுமாலம்...    ---  திருப்புகழ்.

ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றல் துருத்தியை, சோறுஇடு தோல்பையை, பேசஅரிய
காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே
ஏற்றுத் திரிந்துவிட்டேன், இறைவா கச்சி ஏகம்பனே.   ---   பட்டினத்தார்.

விதிகாணும் உடம்பை விடாவினையேன்
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்..     ---  கந்தர் அநுபூதி.

உள் புழுத்த வாழ்க்கை ---

உடம்புக்குள் கோடிக் கணக்கான புழுக்கள் வாழுகின்றன.  ஒரு பதார்த்தத்தில் புழு நெளியுமானால் அது வெறுக்கத் தக்கது.  பலகோடி புழுக்கள் நெளியும் இவ் உடம்பும் வெறுக்கத் தக்கதே.

ககனமும் அனிலமும் அனல்புனல் நிலம்அமை
கள்ளப் புலால் கிருமி வீடு...                  ---  திருப்புகழ்.

எய்ச்சு இளைச்ச பேய்க்கும்... நாய்க்கும்.....ஈக்கும் இரையாகும் ---

எய்த்தல் - இளைத்தல், சோம்பல். மிகுந்த விரைவைத் தெரிவிக்கும்போது, வல்விரைவு என்பது போலவும், மிகுந்த இளமையைத் தெரிவிக்க, தருணமழ என்பது போலவும், மிகுந்த இளைப்ப என்பதற்காக எய்ச்சிளைச்ச என்று தெரிவிக்கின்றார்.

நாள்தோறும் நாழிகை தவறாமல் மிகுந்த எச்சரிக்கையாக உணவுகளைத் தந்து வளர்த்த இந்த உடம்பு, முடிவில் பேய்க்கும், நாய்க்கும், நரிக்கும் பருந்துக்கும் இரையாகிக் கழிகின்றது.

ஆக்கைக்கை இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே..          

என்கின்றார் அப்பர் அடிகளார்.  இந்த யாக்கையால்,

பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்..

என்று இரங்குகின்றார்.

நம்மால் விரும்பி வளர்க்கப்பட்டு என்னுடைய உடம்பு என்னும்
இந்த உடம்பை, தத்தமக்கு உரியது என்று பல கருதுகின்றன.

எரிஎனக்கு என்னும், புழுவோ எனக்குஎன்னும், இந்தமண்ணும்
சரிஎனக்கு என்னும், பருந்தோ எனக்குஎன்னும், தான்புசிக்க
நரிஎனக்கு என்னும், புல்நாய் எனக்குஎன்னும், இந் நாறுஉடலைப்
பிரியமுடன் வளர்த்தேன், இதனால்என்ன பேறுஎனக்கே.     ---  பட்டினத்தார்.

இக் கடத்தை நீக்கி அக் கடத்துள் ஆக்கி ---

இக் கடம் - இந்த அசுத்த தேகம். அசுத்த தேகத்தைப் பற்றி பட்டினத்து அடிகளார் விளக்குமாறு காண்க.

காது அளவு ஓடிய கலகப் பாதக்
கண்ணியர் மருங்கில் புண்ணுடன் ஆடும்
காதலும் கருத்தும் அல்லால், நின் இருதாள்
கங்கயம் சூடப் பாக்கியம் செய்யாச்
சங்கடம் கூர்ந்த தமியேன் பாங்கு இருந்து
அங்கோடு இங்கோடு அலமரும் கள்வர்;
ஐவர் கலகம் இட்டு அலைக்கும் கானகம்;
சலமலப் பேழை; இருவினைப் பெட்டகம்;
வாத பித்தம் கோழை குடிபுகும் சீறூர்;
ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை;
நாற்றப் பாண்டம், நான்முழத்து ஒன்பது
பீற்றத் துண்டம்; பேய்ச்சுரைத் தோட்டம்;
அடலைப் பெரிய சுடலைத் திடருள்;
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்;
ஓயா நோய்க்கு இடம், ஓடும் மரக்கலம்;
மாயா விகாரம்; மரணப் பஞ்சரம்;
சோற்றுத் துருத்தி; தூற்றும் பத்தம்;
காற்றில் பறக்கும் கானப் பட்டம்;
விதிவழித் தருமன் வெட்டும் கட்டை;
சதுர்முகப் பாணன் தைக்கும் சட்டை;
ஈமக் கனலில் இடு சில விருந்து;
காம்க் கனலில் கருகும் சருகு;
கிருமி கிண்டும் கிழங்கஞ் சருமி;
பவக் கொழுந்து ஏறும் கவைக்கொழு கொம்பு;
மணமாய் நடக்கும் வடிவின் முடிவில்
பிணமாய்க் கிடக்கும் பிண்டம்; பிணமேல்
ஊரில் கிடக்க ஒட்டா உபாதி;
கால் எதிர் குவித்து பூளை; காலைக்
கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்;
அதிரும் மேகத்து உருவின் அருநிழல்;
நீரில் குமிழி; நீர் மேல் எழுத்து;
கண்துயில் கனவில் கண்ட கண்காட்சி;
அதனினும் பொல்லா மாயக் களங்கம்;
அமையும் அமையும் பிரானே! அமையும்,
இமைய வல்லி வாழி என்று ஏத்த,
ஆனந்தத் தாண்டவம் காட்டி
ஆண்டுகொண்டு அருள்கை நின்அருளினுக்கு அழகே.  --- பட்டினத்தார்.

இந்த அசுத்த தேகத்தை நீக்கி, சுத்த தேகமாக ஆக்கும்படி முருகப் பெருமானை அடிகளார் வேண்டுகின்றார்.

அக் கடம் - திருவருளால் கிடைக்கும் சுத்த தேகம்.

எம்பெருமானே, அலங்கரித்த கட்டில் மெச்சுவதும், மல மூத்திரங்கள் நிறைந்ததும், நாளடைவில் பழுதுபட்டு அழிவதும், புழுக்கள் நிறைந்ததும், மண்பானை போன்றதும், பேய்க்கும், நாய்க்கும், ஈக்கும் இரையவதும் ஆகிய இந்த அருவருப்பு உடைய அசுத்த தேகத்தை நீக்கி, அழியாததும், ஞானமயம் ஆனதும், திருவருள் பதிய நிற்பதும், நோய் முதலியன அணுகப் பெறாததும், தூய்மையானதும் ஆகிய அறிவு தேகத்தை அருள் புரிவீர் என்று சுவாமிகள் முருகனை வேண்டுகின்றனர்.  இத்தகைய தூய உடம்பைப் பெற்றவர்கட்கு அழிவு நேராது.  இந்த யாக்கையைப் பெற்றவர்களில் இராமலிங்க அடிகளாரும் ஒருவர்.

கற்றாலே புவியாலே ககனமத னாலே
     கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
     கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
     மெய்அளிக்க வேண்டும்என்றேன் விரைந்தளித்தான்எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
     எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.

காலையிலே நின்தன்னைக் கண்டுகொண்டேன், சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன், - ஞாலமிசைச்
சாகா வரம்பெற்றேன், தத்துவத்தின் மேல்நடிக்கும்
ஏகா நினக்கு அடிமை ஏற்று.              ---  திருவருட்பா.

இப்படிக்கு மோட்சம் அருள்வாயே ---

இந்த விதமாக உடம்பை எரிக்காமலும், புதைக்காமலும், விதேக முத்தியை எனக்கு அருள் புரிவீர் என்று வேண்டுகின்றனர்.  இத்தகைய முத்தியைப் பெற்றவர்கள் மணிவாசகர், திருநாளைப் போவார் முதலியோர்கள்.

தீதுஅணையாக் கற்பூர தீபம்என நான்கண்ட
சோதியுடன் ஒன்றி துரிசுஅறுப்பது எந்நாளோ.. ---  தாயுமானார்.


பொய்ச் சினத்தை மாற்றி, மெய்ச்சினத்தை ஏற்றி, பொற்பதத்துள் ஆக்கும் புலியூரா ---

"சின்னம்" என்ற சொல் னகர மெய் மறைதல் விகாரம் பெற்று "சினம்" என்று வந்தது. சின்னம் - அடையாளம்.

இந்த அடி திருஞானசம்பந்தரைக் குறிப்பிடுகின்றது.  முருகவேளுடைய திருவருள் தாங்கி அபர சுப்ரமண்யருள் ஒருவர் திருஞானசம்பந்தராகத் திருவவதாரம் புரிந்து, மாறுபட்ட சமணர்களுடைய மயில்பீலி, பாய் உடை முதலிய பொய்ச்சின்னங்களை மாற்றி, திருநீறு, உருத்திராக்கம் முதலிய மெய்ச்சின்னங்களை நிலைபெறுமாறு செய்தருளினர்.

சிவச் சின்னங்களாகிய திருநீறும் கண்டிகையும் போற்றி அணிதற்கு உரியனவாம். திருநீறும் உருத்திராக்கமும் அணிவதனால், உயிர் நலம் உறுவதோடு, உடல் நலமும் உண்டாகும்.  ஆதலினால், அனைவரும் அன்புடன் அணிந்து கொள்வார்களாக.

"ஐந்தெழுத்தும் திருநீறும் கண்டிகையும் பொருளாக் கொண்ட
நாயன்மார் திருக்கூட்டம் பணிந்து இறைஞ்சும் பெருவாழ்வு நான் பெற்றேனால்"...

என்கின்றார் மாதவச் சிவஞான சுவாமிகள்.

புலியூர் ---

சிதம்பரம். வியாக்கிரபாதர் என்னும் புலிக்கால் முனிவர் வழிபட்டமையால் அத் திருத்தலத்திற்கு இப் பெயர் உண்டாயிற்று. 

பொக்கணம் ---

ஒரு வகையான திருநீற்றுப் பை.

புத்தி மெத்த காட்டும் புனவேடன் ---

கண்ணப்பருடைய சிறந்த அன்பு நெறியை இதில் விளக்குகின்றனர். கண்ணப்பருடைய அன்பும் அவருடைய புனித வரலாறும் மாற்றம் மனம் கழிய நின்றவையாம். மானுடராகப் பிறந்த ஒவ்வொருவரும் கண்ணப்பருடைய கதையை ஓத வேண்டும். உன்னுதல் வேண்டும். உணருதல் வேண்டும்.  அன்பால் உருகுதல் வேண்டும். அன்புக்குக் கட்டளைக் கல் கண்ணப்பர் ஆவார்.

வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்,
கேளார் கொல், அந்தோ கிறிப்பட்டார், –-- கீளாடை
அண்ணற்கு அணுக்கராய்க் காளத்தி உள்நின்ற
கண்ணப்பர் ஆவார் கதை.

என்கின்றார் தக்கோர் புகழும் நக்கீர தேவர். "கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்" என்பார் அன்புக் களஞ்சியமாகிய மணிவாசகனார்.

விதிமார்க்கமாவது முறையே வேதாகமங்களை ஓதி உணர்ந்து, அவற்றில் கூறியவாறு ஒழுகி, முறைப்படி இறைவனை வழிபட்டு மாறுபாடு இன்றி நிற்றலாம்.

அன்பு மார்க்கமாவது, ஓரே அன்பு மயமாக நிற்றலாம். அன்பு நெறியில் கலைஞானம் கூறும் விலக்குகள் எல்லாம் தீ முன் எரியும் பஞ்சுபோல் பறந்து ஒழியும்.

விதி மார்க்கத்தில் சென்றவர் சிவகோசரியார்.
அன்பு மார்க்கத்தில் நின்றவர் கண்ணப்பர்.

விதிமார்க்கத்தில் செல்பவர் அன்பு மார்க்கத்தினை அடைதல் வேண்டும். அதனாலே தான், சிவபெருமான் கண்ணப்பர் கனவிலே போய், "திண்ணப்பா நீ ஊன் வேதிப்பதும், வாயில் உள்ள நீரை உமிழ்வதும், செருப்பு அணிந்த காலுடன் திருக்கோயிலுக்குள் வருவதும் நமக்கு அருவருப்பை விளைக்கின்றன. அவைகளை இனி செய்யற்க. நமது அன்பன் சிவகோசரியார் வந்து பூசை செய்யும் விதியையும், மதியையும் எனக்குப் பின் ஒளிந்து இருந்து நீ தெரிந்து கொள்" என்று கூறியருளினாரில்லை.  ஏனெனில், அன்பு மார்க்கத்திற்கு விதிமார்க்கத்தைக் காட்ட வேண்டியது இல்லை.

அன்பும் அறிவும் உடைய அருமை நேயர்கள் உற்று நோக்குமின்.  சிவபெருமான் விதிமார்க்கத்திற்கு அன்புநெறியைக் காட்டுவார் ஆகி, சிவகோசரியார் கனவிலே போய் உரைத்தருளுகின்றார்.

அன்றுஇரவு கனவின்கண் அருள்முனிவர் தம்பாலே
மின்திகழும் சடைமவுலி வேதியர்தாம் எழுந்தருளி
"வன்திறல் வேடுவன் என்று மற்றுஅவனை நீ நினையேல்
நன்றுஅவன்தன் செயல்தன்னை நாம்உரைப்பக் கேள்"என்று.

"அவனுடைய வடிவுஎல்லாம் நம்பக்கல் அன்புஎன்றும்
அவனுடைய அறிவுஎல்லாம் நமைஅறியும் அறிவுஎன்றும்
அவனுடைய செயல்எல்லாம் நமக்குஇனிய ஆம் என்றும்
அவனுடைய நிலைஇவ்வாறு அறிநீ" என்று அருள்செய்வார்.

"அன்பனே, திண்ணனாகிய அண்ணல் வேடன் வந்து என்மீது உள்ள பழைய மலர்களைச் செருப்பு அணிந்த காலால் நீக்குகின்றனன்.  அது எனது இளங்குமரன் திருமுருகன் செய்ய திருவடியினும் சிறப்பாக நமக்கு இன்பத்தைத் தருகின்றது”.

"பொருப்பினில் வந்து, அவன் செய்யும்
         பூசனைக்கு முன்பு, என்மேல்
அருப்பு உறும் மென்மலர் முன்னை
         அவை நீக்கும் ஆதரவால்,
விருப்பு உறும் அன்பு என்னும்
         வெள்ளக்கால் பெருகிற்று என வீழ்ந்த
செருப்பு அடி, அவ்விளம்பருவச்
         சேய் அடியின் சிறப்பு உடைத்தால்”,

"அவன் நமக்கு நீராட்டும் பொருட்டு உமிழும் எச்சில் நீரானது, கங்கை முதலிய புண்ணிய நீரினும் புனிதமானது”.

"உருகிய அன்பு, ஒழிவு இன்றி
         நிறைந்த  அவன் உரு என்னும்
பெருகிய கொள்கல முகத்தில்
         பிறங்கி, இனிது ஒழுகுதலால்
ஒருமுனிவன் செவி உமிழும்
         உயர்கங்கை முதல் தீர்த்தப்
பொருபுனலின், எனக்கு அவன்தன்
         வாய்உமிழும் புனல் புனிதம்",

"அவ் வேடர் கோமான் தனது அழுக்கு அடைந்த தலை மயிராகிய குடலையில் கொணர்ந்து நமக்கு அன்புடன் சூட்டும் மலர்களுக்கு மாலயனாதி வானவர்கள் மந்திரத்துடன் சூட்டும் மலர்கள் யாவும் இணையாக மாட்டா”.

"இம்மலை வந்து எனை அடைந்த
         கானவன் தன் இயல்பாலே
மெய்ம்மலரும் அன்புமேல்
         விரிந்தன போல் விழுதலால்,
செம்மலர்மேல் அயனொடு மால்
         முதல்தேவர் வந்து புனை
எம்மலரும் அவன் தலையால்
         இடும் மலர்போல் எனக்கு ஒவ்வா”,

அவன் "வெந்து உளதோ" என்று மெல்ல கடித்தும், "சுவை உளதோ" என்று நாவினால் அதுக்கியும் பார்த்துப் படைத்த ஊனமுது வேள்வியின் அவி அமுதினும் இனியதாகும்.

"வெய்யகனல் பதம்கொள்ள
         வெந்துளதோ எனும் அன்பால்
நையும் மனத்து இனிமையினில்
         நையமிக மென்றிடலால்
செய்யும் மறை வேள்வியோர்
         முன்பு தரும் திருந்து அவியில்
எய்யும் வரிச் சிலையவன்தான்
         இட்ட ஊன் எனக்கு இனிய",

முனிவர்கள் கூறும் வேதாக மந்திரங்களினும், அச் சிலை வேடன் நெக்கு உருகி அன்புடன் கூறும் கொச்சை மொழிகள் மிகவும் நன்றாக என் செவிக்கு இனிக்கின்றன.

"மன்பெருமா மறைமொழிகள்
         மாமுனிவர் மகிழ்ந்து உரைக்கும்
இன்ப மொழித் தோத்திரங்கள்
         மந்திரங்கள் யாவையினும்,
முன்பு இருந்து மற்று அவன்தன்
         முகம் மலர அகம் நெகிழ
அன்பில் நினைந்து என்னைஅல்லால்
         அறிவுறா மொழி நல்ல”.

என்று சிவபெருமான் கூறியருளிய திருமொழிகள் கல் மனத்தையும் கரைத்து உருக்குவனவாம்.


பச்சிலைக்கும் ---

சிவபெருமானை வழிபடுவதற்கு மலர்களே வேண்டும் என்பது இல்லை. ஏதாவது ஒரு பச்சிலை போதும்.

போதும் பெறாவிடில் பச்சிலை
    உண்டு புனலுண்டெங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சுஉண்டு,ன்
    றே,இணை யாகச் செப்பும்
சூதும் பெறாமுலை பங்கர்தென்
    தோணி புரேசர் வண்டின்
தாதும் பெறாத அடித்தா
    மரை சென்று சார்வதற்கே.      ---  பதினோராம் திருமுறை.

கண்ணுண்டு காண, கருத்துண்டு நோக்க, கசிந்துருகிப்
பண்ணுண்டு பாட, செவியுண்டு கேட்க, பல் பச்சிலையால்
எண்ணுண்டு சாத்த, எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே
மண்ணுண்டு போகுதை யோ! கெடுவீர் இந்த மானுடமே!   ---  பட்டினத்தார்.

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. ---  திருமந்திரம்.

கல்லால் எறிந்தும், கை வில்லால் அடித்தும், கனிமதுரச்
சொல்லால் துதித்தும், நல் பச்சிலை தூவியும், தொண்டர்இனம்
எல்லாம் பிழைத்தனர், அன்பு அற்ற நான் இனி ஏது செய்வேன்,
கொல்லா விரதியர் நேர் நின்ற முக்கண் குருமணியே.    ---  தாயுமானார்.

எல்லாம் உதவும் உனை, ஒன்றில் பாவனையேனும் செய்து,
புல் ஆயினும், ஒரு பச்சிலை ஆயினும் போட்டு இறைஞ்சி
நில்லேன், நல்யோக நெறியும் செயேன், அருள் நீதி ஒன்றும்
கல்லேன், எவ்வாறு பரமே பரகதி காண்பதுவே.             --- தாயுமானார்.

பூவும் இலையும் எடுத்துப் பூசிப்போர் முறைப்படி நீராடி, விடியற்காலையில் குடலையை நாபிக்குக் கீழ் தொங்கவிடாமல் உயர்த்தி, சிறை அளி புகுதா முன்னம் நந்தனவனம் சென்று பத்திர புட்பங்களை எடுக்க வேண்டும்.

அன்பு மார்க்கத்தில் நின்ற கண்ணப்பர், மலர்களையும் இலைகளையும் எடுத்துத் தன் தலைமயிராகிய குடலையில் வைத்துக் கொண்டு போயினார்.

வாய்க்குள் எச்சிலுக்கும் ---

திருமஞ்சனத்திற்கு நீர் கொணர்வோர் எச்சில் தெரிக்குமென்று வாய் கட்டி, குடத்தில் நீர் கொணர்வது மரபு. கண்ணப்பர் வாயில் நீரை முகந்துகொண்டனர். அன்றியும் இறைவனுக்கு ஊனை மென்றும் தின்றும் சுவை பார்த்துக் கொண்டு போயினார்.

கானவர் போனது ஓரார்
         கடிதினில் கல்லை யின்கண்
ஊன்அமுது அமைத்துக் கொண்டு
         மஞ்சனம் ஆட்ட உன்னி
மாநதி நன்னீர் தூய
         வாயினில் கொண்டு கொய்த
தூநறும் பள்ளித் தாமம்
         குஞ்சிமேல் துதையக் கொண்டார்.

தனுஒரு கையில் வெய்ய
         சரத்துடன் தாங்கிக் கல்லைப்
புனிதமெல் இறைச்சி நல்ல
         போனகம் ஒருகை ஏந்தி
இனியஎம் பிரானார் சாலப்
         பசிப்பர் என்று இரங்கி ஏங்கி
நனிவிரைந்து இறைவர் வெற்பை
         நண்ணினார் திண்ணனார்தாம்.

இளைத்தனர் நாய னார்என்று 
         ஈண்டச்சென்று எய்தி வெற்பின்
முளைத்துஎழு முதலைக் கண்டு 
         முடிமிசை மலரைக் காலில்
வளைத்தபொன் செருப்பால் மாற்றி
         வாயில்மஞ் சனநீர் தன்னை
விளைத்தஅன்பு உமிழ்வார் போல
         விமலனார் முடிமேல் விட்டார்.

இந்த உயர்ந்த வழிபாட்டைப் பற்றி அன்பின் கருவூலமாகிய மணிவாசகனார் கூறுமாறு காண்க.

பொருள்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச்
செருப்புஉற்ற சீர்அடி, வாய்க்கலசம், ஊன்அமுதம்
விருப்புஉற்று, வேடனார் சேடுஅறிய, மெய்குளிர்ந்தங்கு
அருள்பெற்று நின்றவா தோள்நோக்கம் ஆடாமோ.

கூசாது வேடன் உமிழ்தரு நீராடி, ஊன்உண் எனும்உரை
     கூறாமன் ஈய அவன்நுகர் ...... தருசேடம்
கோதுஆம் எனாமல் அமுதுசெய் வேதாக மாதி முதல்தரு
     கோலோக நாத குறமகள் ...... பெருமாளே.       ---  (ஆசாரஈனன்) திருப்புகழ்.

அன்பு அதிகப்பட்டு விடுமானால், அன்பு உடையாருடைய எச்சில் அன்பு உடையாருக்கு அமிர்தமாகத் தோன்றும். அதுபோல், அன்பின் வடிவாகிய கண்ணப்பர் கொப்புளித்து உமிழ்ந்த நீர் மிகமிக புனதமாகவும் குளிர்ச்சியாகவும் இறைவனுக்கு இன்பத்தை நல்கியது.

…..             …..             …..             சிலை வேட்டுவன் எச்-
சில் துமிக்கும் அரவுஅணி முடியான் மகன்...

என்று கந்தர் அந்தாதியிலும் எடுத்துப் பாராட்டுகின்றனர்.

வீக்கு பைச்சிலைக்கும் ---

கண்ணப்பர் இரவு வந்ததும் எம்பெருமானுக்கு விலங்குகளால் துன்பம் நேரும் என்று கருதி விடியும் அளவும் கண் இமைக்காது வில்லை வளைத்து இறைவன் அருகில் நின்றார்.

அவ்வழி அந்தி மாலை 
          அணைதலும் இரவு சேரும்
வெவ்விலங்கு உள என்று அஞ்சி
         மெய்ம்மையின் வேறு கொள்ளாச்
செவ்விய அன்பு தாங்கித்
         திருக்கையில் சிலையும் தாங்கி
மைவரை என்ன ஐயர்
         மருங்குநின்று அகலா நின்றார்.

"தொண்டு செய்து நாள் ஆறில் கண் இடந்து அப்பவல்லேன் அல்லன்" என்று பாராட்டுகின்றனர் முற்றத் துறந்த பட்டினத்தடிகள்.

கண்ணப்பர் வரலாறு

பொத்தப்பி நாட்டிலே உடுப்பூரிலே நாகன் என்ற வேடர் தலைவன் இருந்தான். அவன் மனைவி தத்தை. நாகன் தனக்கு மகப்பேறு இன்மை குறித்து வருந்தினான். முருகப் பெருமானை வழிபட்டு, "எந்தையே, என் குலம் விளங்க, அரசு நலம் விளங்க ஒரு ஆண்மகவை அருள்வாய்" என்று வேண்டினான்.  அறுமுக வள்ளலின் அருளால் அவனுக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. அக் குழவியை அவன் எடுத்தபோது அது திண்மையாக இருந்தபடியால், அதற்குத் திண்ணன் என்று பேர் சூட்டினான்.  குழந்தையை இனிது வளர்த்தான்.

திண்ணனார் இளம் பருவத்தில் புலிக்குட்டிகளுடனும், சிங்கக்குட்டிகளுடனும் ஓடியாடி விளையாடினார். தாயும் தந்தையும் களிக்க அநேக அற்புத ஆடல்களை அயர்ந்தார். வில் பயிற்சிக்கு உரிய பருவம் வந்தவுடன், நாகன் ஆசிரியர் பால் வில் வித்தையைத் திண்ணனாருக்குக் கற்பித்தான். திண்ணனார் வில் பயிற்சியில் தேர்ந்து வீரராக விளங்கினார். அப்பொழுது அவருக்கு ஆண்டு பதினாறு ஆயிற்று. முதுமையால் மெலிவடைந்த நாகன், வனவேட்டை ஆட இயலாதவன் ஆனான்.  ஒரு நாள் வேடர்கள் நாகனிடம் சென்று, "அரசே! மாதம் தோறும் வேட்டை ஆடுதலைத் தாங்கள் செய்யாமையால் விலங்குகள் எமது புனங்களை அழிக்கின்றன" என்று முறையிட்டார்கள்.  நாகன், "நான் கிழப்பருவத்தால் மெலிந்து விட்டேன். இனி என்னால் வேட்டையாட இயலாது. எனது புதல்வன் திண்ணனை உங்களுக்குத் தலைவனாகச் செய்கின்றேன்" என்று கூறி, தேவராட்டியைத் தருவித்து பூசை செய்யச் சொல்லி, திண்ணனாருக்கு அரசுரிமையைத் தந்தான்.  தேவராட்டி திண்ணனாரை வாழ்த்தினாள்.

திண்ணனார் வில்லும் அம்பும் தாங்கி வேடர்களுடன் வேட்டையாடுதற்குப் புறப்பட்டார். நாய்கள் தொடர்ந்து சென்றன.  பாசவலை அறுக்க வந்த திண்ணனாருடன் வேடர்கள் வலையும் கண்ணியும் ஏந்தி வேட்டையாடினர். திண்ணனார் மிகுந்த முயற்சியுடன் வேட்டையாடிப் பல விலங்குகளைக் கொன்று வீழ்த்தினார். முடிவில் கொழுத்த ஒரு பன்றியைத் தொடர்ந்து பல காதங்கள் ஒடினார். நாணனும் காடனும் இருவினை தொடர்வதுபோல் அவரைத் தொடர்ந்து சென்றனர்.  திண்ணனார் அப் பன்றியைக் கொன்றார். அதுகண்டு நாணனும் காடனும் அவரது ஆற்றலைப் புகழ்ந்து போற்றினர்.

பின்னர் நாணனும் காடனும் அவரே நோக்கி, "ஐயனே! நாம் நெடுந்தூரம் வந்துவிட்டோம். மிகுந்த பசி நம்மை வருத்துகின்றது. இப் பன்றியைச் சுட்டுத் தின்று தண்ணீர் குடித்துப் பசியாறுவோம். பிறகு வேட்டைக் காட்டுக்குப் போவோம்" என்றனர். திண்ணனார், "நல்லது, இக் கானகத்தில் தண்ணீர் எங்குளது?” என்று கேட்டார். நாணன், "ஐயனே! பெரிய தேக்குமரம் அதோ தெரிகிறதல்லவா? அதற்கு அப்பால் நீண்ட மலை ஒன்று இருக்கின்றது. அதற்கு அருகில் பொன்முகலி ஆறு ஓடுகின்றது" என்றான். திண்ணனார், "இப் பன்றியை எடுத்துக் கொண்டு வாருங்கள். நாம் அங்கே போவோம்" என்று கூறி அம் மலையை நோக்கிச் சென்றார். செல்லும்போது அரைக் காதத்திற்கு அப்பால் உள்ள திருக்காளத்தி மலையைக் கண்டார்.  அதனைக் கண்ட திண்ணனார், "நமக்கு முன்னே தோன்றும் இம் மலைக்குப் போவோம்" என்றார். நாணன் நல்வினை. ஆதலின், அவன், "இக் குன்றில் நல்ல காட்சியைக் காண்போம். அங்கே குடுமித் தேவர் இருக்கின்றார். அவரைக் கும்பிடலாம்" என்றான்.

திண்ணனார்,  "நாணா, மலையை நெருங்க நெருங்க என் மேல் உள்ள சுமை குறைகின்றது போல் தோன்றுகின்றது. அன்பு மிகுகின்றது. தேவர் இருக்குமிடம் எங்கே? விரைவில் செல்லுக" என்றார். மூவரும் பொன்முகலியைச் சேர்ந்தனர். அவ் ஆற்றங்கரையில் ஒரு மர நிழலிலே அப் பன்றியை வைத்தனர்.  நெருப்பை" உண்டு பண்ணுமாறு காடனுக்குக் கட்டளை இட்டு, தீவினையாகிய அவனை அங்ஙனமே விடுத்து, நல்வினையாகிய நாணனுடன் திண்ணனார் மலையை நோக்கிச் சென்றார்.  அளவற்ற அன்பு பெருகுகின்றது. உள்ளம் உருகுகின்றது. மலம் அருகுகின்றது.  நாணன் முன்னும் அன்பு பின்னும் செல்ல திண்ணனார் மலைப்படிகள் என்னும் தத்துவப் படிகளில் ஏறிச் செல்லுகின்றார். அங்கு திண்ணனார் தேவதுந்துபி முழக்கம் கேட்டார்.  "நாணா, இது என்ன ஒலி" என்று கேட்டார்.  அவ்வொலி கேட்கும் தவம் செய்யாத நாணன், "தேனீக்களின் ஒலி போலும்" என்றான். திண்ணனார் முன்ப செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பமான அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்க மன்பெரும் காதல் கூர மலை எறினார்.

அங்கோ, இறைவனுடைய திருக்கண் நோக்கம் திண்ணனாருக்குக் கிடைத்தது. அதனால், தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகன்றார். அன்பு வடிவமானார். ஒளி மயமானார். மலை உச்சியில் மலைக்கொழுந்து ஆகிய இறைவனைக் கண்டார்.  விரைந்து சென்று தழுவினார். மோந்தனர். பெருமூச்சு விட்டனர்.  உடல் புளகித்தார். அன்பினால் கண்ணீர் அருவிபோல் சொரிகின்றது.

"அச்சோ! அடியேனுக்கு இவர் இங்கு அகப்பட்டார்" என்று ஆனந்தக் கூத்து ஆடுகின்றார். "இக் கொடிய விலங்குகள் திரியும் காட்டில் ஐயன் தனித்து இருக்கின்றாரே, துணை இல்லையே, கெட்டேன்" என்று துள்ளித் துடித்தார். உள்ளம் நொந்து உருகினார். வில் கையில் இருந்து நழுவி விழுந்தது. அதுவும் அவருக்குத் தெரியவில்லை. "இவருடைய முடிமீது நீர் வார்த்துப் பூவும் பச்சிலையும் இட்டு மச்சிது புரிந்தார் யாரோ" என்றார்.

நாணன், "இது எனக்குத் தெரியும். முன்னொரு நாள் உனது தந்தையாருடன் வேட்டையாடி இங்கே வந்தோம். அப்பொழுது ஒரு பார்ப்பான், இவர் மீது நீர் வார்த்து, பூவும் இலையும் போட்டு, உணவை ஊட்டி, ஏதோ பேசிவிட்டுப் போனான். அவனே இதைச் செய்து இருப்பான்" என்றான். அது கேட்ட அன்பர், இவைகளே இறைவனாருக்கு இனியவை போலும் என்று கருதிக் கடைப்பிடித்தார். "அந்தோ! இவர் இங்கு தனியாக இருக்கின்றார்.  இவர் உண்ண இறைச்சியை அளிப்பாரும் இல்லை.  இவரைப் பிரியவும் மனம் இசையவில்லை. என் செய்வேன். இவர் பட்டினியாக இருப்பதால் இறைச்சி கொணர்ந்தே ஆகவேண்டும்" என்று துணிந்தார்.

கன்றை விட்டு அகலும் பசுவைப்போல் புறப்படுவார். மீண்டும் போக மனம் இன்றித் திரும்புவார். தழுவிக் கொள்வார்.  திரும்பவும் போவார். காதலால் நோக்கி நிற்பார். "ஐயனே! நீர் பசியோடு இருக்கின்றீர். அமுது செய்ய நல்ல இறைச்சி நானே கொண்டு வருவேன். இங்கு உனக்கு சுற்றமாக ஒருவரும் இல்லை. உன்னைப் பிரிய மனம் எழவில்லை. நீர் பசியோடு இருத்தலையும் மனம் விரும்பவில்லை. ஆதலால், போய் வருகிறேன்" என்று கூறி கண்ணீர் மல்கி, வில்லை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். மலையினின்றும் இரங்கிச் சோலையை அடைந்தார். நாணனும் தொடர்ந்து வந்தான்.

காடன் எதிர்கொண்டு தொழுது, "தீக்கடைந்து வைத்துள்ளேன். பன்றியின் உறுப்புக்களை எல்லாம் பார்த்துக் கொள்ளும். ஏன் இவ்வளவு நேரம்?” என்றான். நாணன் காடனுக்கு நிகழ்ந்ததைக் கூறி, "குடுமித் தேவருக்கு இறைச்சி கொண்டுபோக வந்திருக்கின்றார். நமது குலத் தலைமையை விட்டுவிட்டார்.  உடும்புபோல் குடுமித் தேவரைப் பற்றிக் கொண்டார்" என்றான். காடன், "திண்ணனாரே, நீர் எமது தலைவர் அன்றோ? என் செய்தீர்? ஏன் இந்தப் பித்துக் கொண்டீர்?” என்று கேட்டான்.

அன்பு உருவாய அவர் அதனைக் கேளாது பன்றியை நெருப்பில் காய்ச்சிப் பதம் செய்தார். வெந்தவைகளைச் சுவை பார்த்து, தேக்கிலைக் கல்லையில் வைத்துக் கொண்டார்.  மற்றவைகளைத் துப்பி விட்டார். இதனைக் கண்ட நாணனும் காடனும், "இவருக்குப் பித்தம் பிடித்துவிட்டது. பசித்திருந்தும் இறைச்சி உண்கின்றாரில்லை. கலத்தில் இடுகின்றார். கீழே உமிழ்கின்றார். நமக்கும் தருகின்றாரில்லை. தேவுமால் கொண்டுவிட்டார். தேவராட்டியையும் நாகனையும் அழைத்து வருவோம்" என்று நீங்கினர்.

சிவமயமாய்த் திகழும் திண்ணனார் அவர்கள் சென்றதை அறிந்தாரில்லை. இலையும் பூவும் தலையில் செருகிக்கொண்டு, ஒரு கையில் ஊனமுதும், ஒரு கையில் வில்லும் ஏந்தி, பொன்முகலி நீரை வாயில் முகந்துகொண்டார்.  'பரமன் பசித்து இருப்பார்' என்று வருந்தி விரைந்து மலையை அடைந்தார்.  முன் இருந்த மலரை செருப்பணிந்த காலால் மாற்றினார்.  வாய் நீரை முடிமேல் அன்புடன் உமிழ்ந்தார். குடுமியில் செருகி வந்த புனிதமான பூக்களைச் சூட்டினார். ஊனமுதை எதிரே வைத்து, "அப்பனே, இவ் இறைச்சிகள் இனியன. நானே சுவை பார்த்தேன்.  உண்க" என்று திருவமுது செய்வித்தார். விலங்குகளால் துன்பம் நேரும் என்று இரவு முழுவதும் வில்லம்புடன் காவல் புரிந்தார்.  வானவரும் முனிவரும் காணாத கடவுளை அன்பினில் கண்டார்.  பொழுது புலர்ந்ததும் ஊனமுது கொணரும்பொருட்டு வேட்டைக்குப் புறப்பட்டுப் போயினார்.

திருக்காளத்தி நாதரை நாள்தோறும் சிவாகம விதிப்படி அருச்சிப்பவராகிய சிவகோசரியார் அங்கு வழக்கம் போல பூசிக்க வந்தார்.  வெந்த இறைச்சியும், எலும்பும் சந்நிதியில் இருக்கக் கண்டு ஒடினார். "அந்தோ, இந்த அநுசிதத்தைச் செய்தவர் யாவர்?  வேடர்களாகத் தான் இருக்கும். எம்பெருமான் எவ்வாறு இதைக் கண்டு பொறுத்தனர்" என்று வருந்தினார். திரு அலகு இட்டு இறைச்சி எலும்பு செருப்படி நாயடி முதலியவைகளை நீக்கி, மெழுகி, மீளவும் நீராடி, பிராயச்சித்தம் செய்து, முறைப்படி பூசித்துத் தமது தபோவனம் போனார்.

திண்ணனார், வேட்டையாடி விலங்குகளைக் கொன்று, பதம் செய்து, தேன் கலந்து, கல்லையில் வைத்துக்கொண்டு, முன்போலவே நீரும் பூவும் கொண்டு, மலைமீது வந்து, சிவகோசரியார் இட்ட பூவை மாற்றி, தமது பூசையைச் செய்து, இறைச்சியை இறைவன் திருமுன் வைத்து, "எம்பெருமானே! இது முன்னையினும் இனியது.  அடியேனும் சுவை பார்த்தேன்.  தேன் கலந்தது. தித்திக்கும்" என்று கூறித் திருவமுது செய்வித்தார்.  இவ்வாறு பகலில் தொண்டு செய்வதும், இரவில் உறக்கமின்றி காவல் செய்வதுமாக இருந்தார்.  சிவகோசரியாரும் நாள்தோறும் ஆகம முறைப்படி வழிபாடு செய்து வந்தார்.

நாகனிடம் போய் நாணனும் காடனும் நிகழ்ந்ததைக் கூறினர்.  நாகன் வருந்தி தேவராட்டியுடன் திண்ணனாரை எத்தனையோ விதங்களில் அழைத்தும், அவரைத் தன் வழிப்பட முயன்றும், பயன் விளையாமல் மனம் நொந்து மீண்டு தன் வீடு சென்றான்.

சிவகோசரியார் மிகவும் வருந்தி, "ஆண்டவனே, நாள்தோறும் உமது திருக்கோயிலில் இப்படி அசுத்தம் புரிபவர் இன்னார் என்று தெரியவில்லையே; இதை நீர் பொறுத்திருக்கலாமா? நீரே இதனை மாற்றி அருளும்" என்று வேண்டி உறங்கினார். கண்ணுதற் கடவுள் அவரது கனவில் தோன்றி, "அன்பனே! நமக்கு வழிபாடு செய்பவன் சிறந்த அன்பன். அவனை வேடன் என்று கருதாதே.  அன்பின் வடிவமாகிய அவனுடைய செயல்கள் நமக்கு இனியனவே. அவனுடைய வடிவமெல்லாம் நம்பக்கல் அன்பு.  அவனுடைய அறிவு நம்மை அறியும் அறிவே. நாளை நீ நமது பின்புறமாக ஒளித்திருந்து காண்பாயாக. அவனுடைய அன்பச் செயலைக் காட்டுதும். கவலற்க" என்று அருள் புரிந்தார்.  விடிந்ததும் நீராடி பெருமானைப் பூசித்துப் பின்புறம் ஒளிந்திருந்தார்.

ஆறு நாட்கள் சென்றன. திண்ணனார் வழக்கம்போல் வேட்டையாடி, இறைச்சி முதலியவற்றை எடுத்துக்கொம்டு வந்தார். வழியில் தீய சகுனங்களைக் கண்டார். 'இவைகள் எல்லாம் உதிரம் காட்டும் குறிகள். என் அப்பனுக்கு என்ன நேர்ந்ததோ?' என்று கலங்கினார். ஓடி வந்தார். காளத்தியப்பர் அவருடைய அன்பை உலகறியச் செய்யும்பொருட்டு, தமது வலக் கண்ணினின்றும் உதிரம் பெருகச் செய்தார். அதனைக் கண்ட திண்ணனார் ஓடோடி வந்தார். உதிரத்தைக் கண்டு மயங்கி விழுந்தார்.  உணர்ச்சி பெற்று எழுந்தார்.  'இவ்வாறு செய்தவர் யாரோ' என்று எட்டுத் திசைகளிலும் ஓடிப் பார்க்கின்றார்.  "எனக்கு மாறாக வேடர்கள் இதனைச் செய்யார். விலங்குகள் செய்தன போலும்" என்று நெடுந்தூரம் வரையும் ஓடிப் பார்த்தார்.  வேடரையோ, விலங்குகளையோ காணவில்லை. மீண்டும் வந்து இறைவனைத் தழுவி, "ஐயனே! உனக்கு வந்தது என்னோ? என்னோ?” என்று அழுகின்றார். இது என் செய்தால் தீரும் என்று யோசித்தார். பச்சிலை மருந்துகளைக் கொணர்ந்து பிழிந்து இறைவன் கண்ணில் விட்டார்.  உதிரம் நிற்கவில்லை.  என்ன செய்வது என்று வருந்தி ஏங்கினார். அப்பொழுது, "ஊனுக்கு ஊன்" என்ற பழமொழி அவருக்கு நினைவு வந்தது. உடனே அம்பினால், தனது வலக்கண்ணை அகழ்ந்து எடுத்து இறைவன் கண்ணில் அப்பினார். அது பொருந்தியது. உதிரம் நின்றுவிட்டது. அகம் களித்தார். ஆடினார் குதித்தார் தோள் கொட்டினார்.  "நான் செய்தது நன்று நன்று" என்று மகிழ்ந்தார்.

மேலும் அவருடைய அன்பின் உயர்வையும் உண்மையையும் வெளிப்படுத்தக் கருதிய பெருமான், இடக்கண்ணிலும் உதிரம் பெருகச் செய்தார். அது கண்ட திண்ணனார்,  "இதற்கு யான் அஞ்சேன், மருந்து என் கைவசம் உள்ளது. இன்னும் எனக்கு ஒரு கண் இருக்கின்றது. அதை எடுத்து அப்பி, அப்பண் கண் நோயைத் தீர்ப்பேன்" என்று உறுதி செய்தார். அடையாளத்திற்காக காளத்தியப்பருடைய திருக்கண்ணில் தமது இடக்காலை ஊன்றிக்கொண்டு, உன் நிறைந்த அன்பினால் தமது இடக்கண்ணைத் தோண்ட அம்பை ஊன்றலானார்.  அருட்பெருங் கடலாகிய அம்பலக் கூத்தர் மனம் தாளாதவராய், "நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப! என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப!” என்று அருளிக்கொண்டே திண்ணனார் கரத்தைத் தமது திருக்கரத்தால் பிடித்துத் தடுத்தருளினார்.  அமரர் அலர்மழை பொழிந்தனர். சிவகோசரியார் அவ் அருட்காட்சியைக் கண்டு ஆனந்தக் கடலில் மூழ்கினார். கண்ணப்பர் கையைப் பிடித்த நெற்றிக்கண்ணப்பர், "மாறிலா அன்பனே என் வலப்புரத்தில் இருப்பாயாக" என்று அவருக்குப் பேரருள் புரிந்தார்.  கண்ணப்பர் காளத்தியப்பர் அருகில் என்றும் நின்று நிலவுவார் ஆயினார்.

பத்தி சித்தி காட்டி அத்தர் சித்த மீட்ட ---

முருகப் பெருமான் சிவபெருமானுக்கு பிரணவ உபதேசம் செய்து அதன் உட்பொருளான அன்பையும் அதன் பயனையும் காட்டி அவரது திருவுள்ளத்தைத் தனது வசமாக மீட்டனர்.

பத்தருக்கு வாய்த்த பெருமாளே ---

பத்தியே முத்தி வீட்டிற்குத் திறவுகோல்.  ஆதலால், பத்தருக்கு வாய்த்த பெருமாள் என்றார்.

ஆனபயபத்தி வழிபாடு பெறுமுத்தியது
ஆகநிகழ் பத்தசன வாரக்காரனும்...         --- திருவேளைக்காரன் வகுப்பு.

கருத்துரை

மெய்ம்மை நிறுவிய சிதம்பரேசா, கண்ணப்பருக்கு அருளிய காளத்தியப்பருடைய புதல்வரே, பரமனுக்கு உபதேசித்த பக்தசகாயரே, இந்த அசுத்த தேகத்தை நீக்கி, சுத்த தேகத்தைத் தந்து, முத்தி நலம் தருவீர்.
No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...