திருவண்ணாமலை - 0587. வடவை அனல் ஊடு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வடவை அனல்ஊடு (திருவருணை)

திருவருணை முருகா!
உன் மீது காதல் கொண்ட இந்தப் பெண்ணின் மீது மனது வைத்து,  
அழகிய மயில் மீது வந்து அருள்.

தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான


வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்கு
     மதுரமொழி யாழி சைக்கு ...... மிருநாலு

வரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்கு
     மடியருவ வேள்க ணைக்கு ...... மறவாடி

நெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத ருக்கு
     நிறையுமிகு காத லுற்ற ...... மயல்தீர

நினைவினொடு பீலி வெற்றி மரகதக லாப சித்ர
     நிலவுமயி லேறி யுற்று ...... வரவேணும்

மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்து
     மவுலியற வாளி தொட்ட ...... அரிராமன்

மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ப டிக்க
     மவுனமறை யோது வித்த ...... குருநாதா

இடையரியு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்கு
     ளினியகுண கோபு ரத்தி ...... லுறைவோனே

எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டு
     மிடையுருவ வேலை விட்ட ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மாமதிக்கும்,
     மதுரமொழி யாழ் இசைக்கும், ...... இருநாலு

வரைதிசை விடாது சுற்றி, அலறு திரை வாரிதிக்கும்,
     மடி அருவ வேள் கணைக்கும், ...... அற வாடி

நெடு கனக மேரு ஒத்த புளகமுலை மாதருக்கு
     நிறையும் மிகு காதல் உற்ற ...... மயல்தீர,

நினைவினொடு பீலி வெற்றி மரகத கலாப சித்ர
     நிலவு மயில் ஏறி உற்று ...... வரவேணும்.

மடல் அவிழும் மாலை சுற்று புயம் இருபதோடு, பத்து
     மவுலி அற வாளி தொட்ட ...... அரி ராமன்

மருக! பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்க
     மவுனமறை ஓதுவித்த ...... குருநாதா!

இடை அரி உலாவும் உக்ர அருணகிரி மாநகர்க்குள்
     இனிய குண கோபுரத்தில் ...... உறைவோனே!

எழு புவி அளாவு வெற்பும், உடலி நெடு நாகம் எட்டும்
     இடை உருவ வேலை விட்ட ...... பெருமாளே.


பதவுரை


      மடல் அவிழும் மாலை சுற்று ---- இதழ் விரிந்த மாலைகளைச் சுற்றியணிந்துள்ள,

     புயம் இருபதோடு --- இருபது தோள்களும்,

     பத்து மவுலி அற –-- பத்துத் தலைகளும் அற்று விழுமாறு,

     வாளி தொட்ட --– கணைகளை விடுத்த,

     அரி ராமன் மருக –-- பாவங்களைப் போக்குகின்ற இராமபிரானுடைய திருமருகரே!

      பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்க --– பல தேவர்களுக்கும் அரியவரான சிவபெருமான் உணர,

     மவுன மறை ஓதுவித்த குருநாதா --- மௌன மந்திரத்தை உபதேசித்து அருளிய குருநாதரே!

      இடை அரி உலாவும் உக்ர அருணகிரி மாநகர்க்குள் --- வழியிலே பாம்புகள் அல்லது குரங்குகள் உலாவுகின்றதனால் அச்சத்தைத் தருகின்ற திருவண்ணாமலை என்னும் திருநகருக்குள்,

     இனிய குண கோபுரத்தில் உறைவோனே --- இனிமையைத் தருகின்ற கிழக்குக் கோபுரத்தின்கண் எழுந்தருளி இருப்பவரே!

      எழு புவி அளாவு வெற்பும் உடலி --- ஏழு உலகளவும் அளாவி நிற்கும் மேரு மலையுடன் மாறுபட்டுப் பொருது,

     நெடும் நாகம் எட்டும் --- எட்டுப் பெரிய மலைகளையும்,

     இடை உருவ வேலை விட்ட பெருமாளே --- ஊடுருவுமாறு வேலாயுதத்தை விட்டருளிய பெருமையில் மிகுந்தவரே!

      வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மாமதிக்கும் --- வடவைத் தீயின் உள்ளே நுழைந்து முழுகி எழுகின்ற முழு நிலாவுக்கும்,

     மதுரமொழி யாழ் இசைக்கும் --- இனிய மொழியை வழங்கும் யாழின் இசையொலிக்கும்,

     இருநாலு வரை திசை விடைது சுற்றி அலறு திரை வாரிதிக்கும் --- எட்டு மலைகள், எட்டு திசைகள் இவை முழுதும் விடாமல் சுற்றி வளைந்து பேரொலி செய்யும் அலை கடலுக்கும்,

     மடி அருவ வேள் கணைக்கும் --- இறந்து உருவம் இழந்து அருவமாய் உள்ள மன்மதனுடைய பாணங்களுக்கும்,

     அற வாடி --- மிகவும் வாடி,

     நெடு கனக மேரு ஒத்த --– நீண்ட பொன் மேரு மலைக்கு நிகரான,

     புளக முலை மாது --- புளகம் கொண்ட கொங்கைகளை உடைய இந்த மாது,

     அருக்கு --- அருமையாக,

     நிறையும் மிகு காதல் உற்ற மயல் தீர --– நிறைந்துள்ள மிக்க காதல் கொண்ட மயக்கம் தீருமாறு,

     நினைவினொடு --- இவள் மீது நினைவு வைத்து,

     பீலி வெற்றி மரகத கலாப --– பீலிகளை உடையதும், வெற்றியை உடையதும் பச்சைத் தோகையை உடையதும்,

     சித்ர நிலவும் --- அழகு பொலிவதும் ஆகிய,

     மயில் ஏறி உற்று வரவேணும் --- மயிலின் மீது ஆரோகணித்து வந்து அருள வேண்டும்.


பொழிப்புரை


         இதழ் விரிந்த மாலைகளைச் சுற்றி அணிந்துள்ள இருபது தோள்களும், பத்துத் தலைகளும் அற்று விழுமாறு கணைகளை விடுத்த, பாவங்களைப் போக்குகின்ற இராமபிரானுடைய திருமருகரே!

         பல தேவர்களுக்கும் அரியவரான சிவபெருமான் உணர, மௌன மந்திரத்தை உபதேசித்து அருளிய குருநாதரே!

         வழியிலே பாம்புகள் அல்லது குரங்குகள் உலாவுகின்றதனால் அச்சத்தைத் தருகின்ற திருவண்ணாமலை என்னும் திருநகருக்குள் இனிமையைத் தருகின்ற கிழக்குக் கோபுரத்தின்கண் எழுந்தருளி இருப்பவரே!

          ஏழு உலகளவும் அளாவி நிற்கும் மேரு மலையுடன் மாறுபட்டுப் பொருது எட்டுப் பெரிய மலைகளையும் ஊடுருவுமாறு வேலாயுதத்தை விட்டருளிய பெருமையில் மிகுந்தவரே!

           வடவைத் தீயின் உள்ளே நுழைந்து முழுகி எழுகின்ற முழு நிலாவுக்கும், இனிய மொழியை வழங்கும் யாழின் இசையொலிக்கும், எட்டு மலைகள், எட்டு திசைகள் இவை முழுதும் விடாமல் சுற்றி வளைந்து பேரொலி செய்யும் அலை கடலுக்கும், இறந்து உருவம் இழந்து அருவமாய் உள்ள மன்மதனுடைய பாணங்களுக்கும் மிகவும் வாடி, நீண்ட பொன் மேரு மலைக்கு நிகரான புளகம் கொண்ட கொங்கைகளை உடைய இந்த மாது, அருமையாக நிறைந்துள்ள மிக்க காதல் கொண்ட மயக்கம் தீருமாறு, இவள் மீது நினைவு வைத்து, பீலிகளை உடையதும், வெற்றியை உடையதும் பச்சைத் தோகையை உடையதும், அழகு பொலிவதும் ஆகிய, மயிலின் மீது ஆரோகணித்து வந்து அருள வேண்டும்.


விரிவுரை


இத் திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது.  தலைவனைப் பிரிந்து இருக்கும் தலைவிக்கு முழுநிலா ஒளி, யாழிசை, கடல் ஒலி, மன்மதனின் மலர் அம்புகள், மாதர் வசைமொழி ஆகிய இவைகள் மிகுந்த வேதனையைத் தரும்.

வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மாமதிக்கு ---

பொதுவாகச் சந்திரன் எல்லோருக்கும் குளிர்ச்சியைத் தருகின்றவன். ஆனால், பிரிவுத் துயரால் வருந்தும் காமுகர்க்கு சந்திரன் நெருப்பை அள்ளிக் கொட்டுவதுபோல் துன்பத்தை விளைவிப்பன்.

எல்லோர்க்கும் இனிய சர்க்கரை, சுர நோய் உடையார்க்குக் கசப்பது போல் என அறிக.

வடவை அனல் என்பது கடல் நீரைச் சமமாக்கும் பொருட்டு குதிரை முகத்துடன் அமைந்த ஒரு பெரிய நெருப்பு.  இதை வடவாமுகாக்கினி என்பர்.

இந்தத் தீயில் முழுகி எழுந்தால் எத்துணைத் துன்பம் உண்டாகுமோ, அத்துணைத் துன்பத்தைத் தருகின்றதாம் முழுநிலா.

மதுரமொழி யாழிசைக்கு ---

இனிமையாக இசைத்தேன் வீசும் யாழ் ஒலியால் இவள் துயருறுகின்றாள்.

அலறு திரை வாரிதிக்கு ---

இனிய கடல் ஓசையால் இவள் கலக்கமுறுகின்றாள்.

         தொல்லை நெடுநீலக் கடலாலே --- (துள்ளுமத)திருப்புகழ்

மாதருக்கு ---

மாது அருக்கு எனப் பதப்பிரிவு செய்துகொள்க.
அருக்கு - அருமையான

இம்மாது நிலவாலும் யாழினாலும் கடலோசையாலும் மதன் கணையாலும் மிகவும் வாடி அயர்ந்து போனாள்.

நிறைய மிகு காதல் உற்ற மயல்தீர ---

"முருகா! உன்மீது இவள் நிரம்பவும் மிகுந்த காதல் கொண்டு மயங்கியுள்ளாள்.  ஆதலால், இவள் மயல் தீருமாறு நீ மயில்மீது வந்தருள்" என்று பாங்கி இறைவனை வேண்டுகின்ற பாவனையில் இத்திருப்புகழ் அமைந்துள்ளது.

நினைவினொடு ---

தேவரீர் தமது திருவுள்ளத்தில் இவளை ஒரு சிறிது நினைவு கொண்டு வந்தருளவேண்டும்.

பீலி வெற்றி மரகத கலாப சித்ர நிலவுமயில் ஏறியுற்று வரவேணும் ---

பீலியையும், வெற்றியையும் பச்சைத் தோகையையும் அழகையும் கொண்டது மயில்.

இத்தகைய இனிய மயில் மீது ஏறி இவளை வந்து காத்தருள் என்று பாங்கி பரமனிடம் பரவுகின்றாள்.

அரி ராமன் ---

இந்த 5-வது அடியில் இராமர் இராவண சங்காரம் புரிந்ததைக் குறிப்பிடுகின்றார்.

அரி - பாவங்களை அழிப்பவர்.

அரி ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே  --- (சிவனார்) திருப்புகழ்

பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்கு மவுனமறை ஓதுவித்த---

சிவபெருமான் தேவர்க்கும் அரியவர்.

கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் --– திருவாசகம்.

தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.

உண்மையிலே சிவபெருமான் உணர முருகன் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்
தனக்குத் தானே ஒருதாவரு குருவுமாய்
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான் தழங்கி நின்றாடினான்.    ---  தணிகைப் புராணம்.

இடை அரி உலாவும் உக்ர ---

அரி - பாம்பு, குரங்கு.  திருவண்ணாமலையில் பாம்புகள் உலாவுவதும், ஊருக்குள் குரங்குகள் உலாவுவதும் இன்றும் கண்கூடு.

         அரிக் குலம் மலிந்த அண்ணாமலை ---  அப்பர் தேவாரம்.

குணம் - கிழக்கு.  திருவண்ணாமலையில் கிழக்குக் கோபுரக் குடவரையில் முருகவேள் இருந்து அன்பர்க்குக் காட்சி தந்து அருள் புரிகின்றார்.

அரவு உமிழ் மணிகொள் சோதி அண்ணாமலை  –--   அப்பர்.

அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலை   --- திருஞானசம்பந்தர்.


கருத்துரை

         அருணை மேவும் அண்ணலே, உன்னை மருவி விரும்பி வாடும் இவளை ஆட்கொள்ள மயிலின் மீது வந்தருள்.   

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...