மூவர் கால அளவு
40. மூவர் கால அளவை

சதுர்யுகம் ஓர்இரண் டாயிரம் பிற்படின்
     சதுமுகற்கு ஒருதினம் அதாம்!
  சாற்றும்இத் தினம் ஒன்றிலே யிந்த்ர பட்டங்கள்
     தாமும் ஈரேழ் சென்றிடும்!

மதிமலியும் இத்தொகையின் அயன்ஆயுள் நூறுபோய்
     மாண்டபோது ஒருகற் பம்ஆம்!
  மாறிவரு கற்பம்ஒரு கோடிசென் றால்நெடிய
     மால்தனக்கு ஓர்தினம் அதாம்,

துதிபரவும் இத்தொகையில் ஒருகோடி நெடியமால்
     தோன்றியே போய் மறைந்தால்
  தோகையோர் பாகனே! நீ நகைத்து அணிமுடி
     துளக்கிடும் காலம்என்பர்!

அதிகம்உள பலதேவர் தேவனே! தேவர்கட்கு
     அரசனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

           இதன் பொருள் ---

     தோகை ஓர் பாகனே --- தோகை மயில் போலும் சாயலை உடையவளான உமாதேவியாரை ஒரு பங்கில் கொண்டவரே!

     அதிகம் உள பல தேவர் தேவனே --- மிகுந்து உள்ள பல தேவர்களுக்கும் மேலான தேவர், தேவதேவர் எனப்படும் மகாதேவரே!

     தேவர்கட்கு அரசனே --- தேவர் தலைவனே!

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     சதுர்யுகம் ஓர் இரண்டாயிரம் பின்படின் சதுமுகற்கு ஒருதினம் அதாம் ---- கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்னும் நான்கு யுகங்கள் இரண்டாயிரம் கடந்தால் நான்முகனுக்கு ஒரு நாளாகும்.

     சாற்றும் இத்தினம் ஒன்றிலே இந்திர பட்டங்கள் தாமும் ஈரேழ் சென்றிடும் --- சொல்லப்படும் இந்த ஒரு நாளிலே பதினான்கு இந்திர பதவிகள் கழிந்து விடும்,

     மதி மலியும் இத்தொகையின் அயன் ஆயுள் நூறுபோய் மாண்டபோது ஒரு கற்பம் ஆம் --- அறிவு மிகுந்த இந்தக் கணக்கின்படி பிரமதேன் வயது நூறு கழிந்து இறந்தான் என்றால், அது ஒரு கற்பம் எனப்படும்,

     மாறி வரு கற்பம் ஒரு கோடி சென்றால் நெடியமால் தனக்கு ஓர் தினம் அதாம் --- இவ்வாறு மாறிமாறி வரும் பிரம கற்பம் ஒரு கோடி கழிந்தால் திருமாலுக்கு அது ஒரு நாளாகும்,

     துதி பரவும் இத்தொகையில் ஒருகோடி நெடியமால் தோன்றியே போய் மறைந்தால் --- துதித்துப் போற்றும் இந்த தொகையில் ஒரு கோடி திருமால்கள் பிறந்து மறைந்தால்,

     நீ நகைத்து அணிமுடி துளக்கிடும் காலம் என்பர் --- தேவரீர் புன்னகைத்து, அழகிய திருமுடியை ஒருமுறை அசைக்கும் காலம் ஆகும் என்று மேலோர் கூறுவர்.

     விளக்கம் --- இற் பாடலில் கூறப்பட்டுள்ள கால அளவு வருமாறு....   கிருத யுகம் - 1,728,000 வருடங்கள்
திரேதா யுகம் - 1,296,000 வருடங்கள்
துவாபர யுகம் - 864,000 வருடங்கள்
கலியுகம் - 432,000 வருடங்கள்

60 நொடிகள் கொண்டது ஒரு நிமிடம்.
15 நிமிஷம் ஒரு காஷ்டை,
30 காஷ்டை ஒரு கலை;
30 கலை ஒரு முகூர்த்தம்;
30 முகூர்த்தம் ஒரு நாள்;
15 நாள் ஒரு பட்சம்;
2 பட்சம் ஒரு மாதம்;
2 மாதம் ஒரு ருது;
2 ருது ஓர் அயனம்;
2 அயனம் ஒரு வருடம்; 
இப்படி மனித வருஷம் 360 கொண்டது ஒரு தேவ வருடம்;
தேவ வருடம் 4000 கொண்டது கிருதயுகம்;  17,28,00 வருடங்கள்.
அதன்  ஆதி 400 அந்தம் 400 தேவ வருடம் 3000 திரேதாயுகம்; 12,96,000 வருடங்கள்.
அதன் ஆதி 300 அந்தம் 300 தேவ வருடம் 2000 துவாபரயுகம்; 8,64,000 வருடங்கள்.
அதன் ஆதி்  200 அந்தம் 200 தேவ வருடம் 1000 கலியுகம்; 4,32,000 வருடங்கள்.

அதன் ஆதி் 100  அந்தம் 100  ஆக தேவவருடம் 12000ம் சேர்ந்து சதுர்யுகம்.

கலியுகம் பத்து பிராமணம் கொண்டது ஒரு சதுர்யுகம். இதற்கு 43,20,000 ஆண்டுகள்.

இத்தகைய சதுர்யுகம் ஆயிரம் கொண்டது பிரமதேவருடைய பகல்;

அதற்கு ஆண்டுகள் 4,32,00,00,000 இவ்வளவு கொண்டது ஓர் இரவு.

எனவே பிரமனுடைய ஒரு நாள் 8,64,00,00,000 ஆண்டுகள்.

இப்படி நாள் 30 கொண்டது ஒரு மாதம்.

இந்த மாதம் 12 கொண்டது ஓர் ஆண்டு.

இந்த ஆண்டுகள் 100 கொண்டது பிரமாவுடைய ஆயுள்.

பிரமனுடைய இந்த 100 ஆண்டுகள், 7 கல்பங்களை யுடையது.

அதாவது 7 கல்பம் கொண்டது பிரமாவின் ஆயுள்.

முன் நடந்தது லட்சுமி கல்பம்;
இப்போது நடப்பது சுவேதவராக கல்பம்.

பிரமனுடைய பகலில் 14 மநுவந்தரம் நடக்கும்.
இப்போது ஏழாவது வைவஸ்த மநுவந்தரம்.
ஒரு மநுவந்தரத்திற்கு 71 சதுர்யுகம்.
இதில் இப்போது நடப்பது 28 ஆவது சதுர்யுகம்.

பிரமனுடைய ஒரு நாள் 8,64,00,00,000 ஆண்டுகள். நூறு பிரம ஆயுள் ஒரு கற்பம். இதைப் போல ஒரு கோடி கற்பம் கொண்டது திருமாலின் ஆயுள்.

ஒரு கோடி திருமால் ஆயுள் முடியும் காலமே சிவபெருமான் தனது திருமுடியை அசைக்கும் காலம் எனப்பட்டது.


No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...