சிதம்பரம் - 0619. கூந்தல்ஆழ விரிந்து
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கூந்தல்ஆழ விரிந்து (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
பொதுமாதர் உறவினால் அழியாமல் ஆண்டு கொள்.


தாந்த தானன தந்த தனந்தன
தாந்த தானன தந்த தனந்தன
          தாந்த தானன தந்த தனந்தன ...... தந்ததான


கூந்த லாழவி ரிந்து சரிந்திட
காந்து மாலைகு லைந்து பளிங்கிட
கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட ......கொங்கைதானுங்

கூண்க ளாமென பொங்கந லம்பெறு
காந்தள் மேனிம ருங்குது வண்டிட
கூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிர ...... சங்கள்பாயச்

சாந்து வேர்வின ழிந்து மணந்தப
வோங்க வாகில்க லந்து முகங்கொடு
தான்ப லாசுளை யின்சுவை கண்டித ...... ழுண்டுமோகந்

தாம்பு றாமயி லின்குரல் கொஞ்சிட
வாஞ்சை மாதரு டன்புள கங்கொடு
சார்ந்து நாயென ழிந்துவி ழுந்துடல் ...... மங்குவேனோ

தீந்த தோதக தந்தன திந்திமி
ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்குசூரைச்

சேண்சு லாமகு டம்பொடி தம்பட
வோங்க வேழ்கட லுஞ்சுவ றங்கையில்
சேந்த வேலது கொண்டு நடம்பயில் ...... கந்தவேளே

மாந்த ணாருவ னங்குயில் கொஞ்சிட
தேங்கு வாழைக ரும்புகள் விஞ்சிடு
வான்கு லாவுசி தம்பரம் வந்தமர் ...... செங்கைவேலா

மாண்ப்ர காசத னங்கிரி சுந்தர
மேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன்
வார்ந்த ரூபிகு றம்பெண் வணங்கிய ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட,
காந்து மாலை குலைந்து பளிங்கிட,
கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட, ......கொங்கை தானும்

கூண்கள் ஆம்என பொங்க, நலம்பெறு
காந்தள் மேனி மருங்கு துவண்டிட,
கூர்ந்த ஆடை குலைந்து புரண்டு, ர ...... சங்கள்பாயச்

சாந்து வேர்வின் அழிந்து மணம் தப,
ஓங்கு அவாவில் கலந்து, முகம் கொடு
தான் பலா சுளையின் சுவை கண்டு, தழ் ...... உண்டு,மோகம்

தாம் புறா மயிலின் குரல் கொஞ்சிட,
வாஞ்சை மாதருடன் புளகம் கொடு
சார்ந்து, நாயென் அழிந்து விழுந்து, டல் ...... மங்குவேனோ?

தீந்த தோதக தந்தன திந்திமி
ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்குசூரைச்

சேண் சுலா மகுடம் பொடிதம் பட,
ஓங்க ஏழ் கடலும் சுவற, ங்கையில்
சேந்த வேல் அது கொண்டு நடம்பயில் ...... கந்தவேளே!

மாந்தண் ஆரு வனம் குயில் கொஞ்சிட,
தேங்கு வாழை கரும்புகள் விஞ்சிடு
வான் குலாவு சிதம்பரம் வந்து அமர் ...... செங்கைவேலா!

மாண் ப்ரகாச தனம் கிரி, சுந்தரம்
ஏய்ந்த நாயகி சம்பை மருங்கு பொன்
வார்ந்த ரூபி குறம் பெண் வணங்கிய ...... தம்பிரானே!.


பதவுரை


      தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட    --- தீந்த தோதக தந்தன திந்திமி என்ற தாள ஒத்துடன் ஓசையை எழுப்புகின்ற

      பேரிகை துந்துமி சங்கொடு சேர்ந்த --- பேரிகை, துந்துபி, சங்கு இவைகளுடன் கூடி,

     பூரிகை பம்பை தவண்டைகள் பொங்கு சூரை --- ஊதுகுழல், பம்பை என்னும் பறை, பேருடுக்கைகள் இவைகளுடைய ஒலி மிக்கு எழ வந்த சூரபன்மனுடைய

     சேண் சுலா மகுடம் பொடிதம் பட --- உயர்ந்து விளங்கும் மகுடம் பொடிபட,

      ஓங்கு அவ் ஏழ் கடலும் சுவற --- பரந்துள்ள அந்த ஏழு கடல்களும் வற்றிடுமாறு,

     அம் கையில் சேந்த வேல் அது கொண்டு நடம்பயில் கந்தவேளே --- அழகிய திருக்கரத்தில் பொருந்திய வேலாயுதத்தை ஏந்தி, திருநடனம் புரிகின்ற கந்தவேளே!

      மாந் தண் ஆரு வனம் குயில் கொஞ்சிட --- குளிர்ச்சி நிறைந்த மாமரச் சோலையில் குயில் கொஞ்ச,

     தேங்கு வாழை கரும்புகள் விஞ்சிடு --- தென்னை, வாழை, கரும்பு ஆகியவை ஓங்கி வளர்ந்து

     வான் குலாவு சிதம்பரம் வந்து அமர் செங்கை வேலா --- வானை அளாவும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் வேலாயுதத்தைத் தரித்த திருக்கரத்தினரே!

      மாண் ப்ரகாச தனம் கிரி சுந்தரம் ஏய்ந்த நாயகி --- பெருமையும் ஒளியும் கொண்ட மார்பக மலைகளை உடைய, அழகு வாய்ந்த நாயகியாகிய தேவயானையும்,

     சம்பை மருங்கு --- மின்னல் போன்ற இடையையும்,

     பொன் வார்ந்த ரூபி --- பொன்னை உருக்கி வார்த்தது போன்ற உருவத்தையும் கொண்ட

     குறப் பெண் வணங்கிய தம்பிரானே --- குறமகளாகிய வள்ளிநாயகியும் வணங்கும் தனிப்பெரும் தலைவரே!

     கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட --- கூந்தல் தாழ்ந்து சரிந்து விழுந்து விரியவும்,

     காந்து மாலை குலைந்து பளிங்கிட --- ஒளி வீசும் மாலை குலைவுற்று பளிங்கு போல் விளங்க,

     கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட --- கூரிய வாள் போன்றும் கெண்டை மீன் போன்றும் உள்ள கண்கள் கலக்கம் கொள்ள,

      கொங்கை தானும் கூண்கள் ஆம் என பொங்க --- மார்பகங்களும் குன்று போல எழுச்சி கொள்ள,

     நலம் பெறு காந்தள் மேனி மருங்கு துவண்டிட --- செழிப்புள்ள காந்தள் மலர் போன்ற உடலில் இடை துவண்டு போக,

     கூர்ந்த ஆடை குலைந்து புரண்டு --- உடலிலே சுற்றி உடுத்த ஆடையானது குலைந்து புரண்டு

     இரசங்கள் பாய --- இன்ப ஊறல்கள் பாய,

      சாந்து வேர்வின் அழிந்து மணம் த(ப்)ப --- உடம்பில் பூசி உள்ள சாந்து வேர்வையினால் அழிந்து வாசனை கெட,

     ஓங்கு அவாவில் கலந்து --- ஆசை மிக்கு எழும் காதலுடன் சேர்ந்து

     முகம் கொடு தான் --- முகத்தோடு முகம் வைத்து,

     பலா சுளையின் சுவை, கண்டு இதழ் உண்டு --- பலாச் சுளையின் சுவை, கற்கண்டு போன்ற வாயிதழை உண்டு,

      மோகம் தாம் புறா மயிலின் குரல் கொஞ்சிட --- காம ஆசையால் புறா, மயில் ஆகிய பறவைகளின் குரலுடன் கொஞ்ச,

     வாஞ்சை மாதருடன் புளகம் கொடு சார்ந்து --- ஆசை வைத்த விலைமாதர்களுடன் புளகாங்கிதத்துடன் இணங்கி

     நாயேன் அழிந்து விழுந்து உடல் மங்குவேனோ --- நாயைப் போன்றவனாகிய அடியேன் அழிந்து விழுந்து உடல் வாட்டம் அடைவேனோ?


பொழிப்புரை


         தீந்த தோதக தந்தன திந்திமி என்ற தாள ஒத்துடன் ஓசையை எழுப்புகின்ற பேரிகை, துந்துபி, சங்கு இவைகளுடன் கூடி,  ஊதுகுழல், பம்பை என்னும் பறை, பேருடுக்கைகள் இவைகளுடைய ஒலி மிக்கு எழ வந்த சூரபன்மனுடைய  உயர்ந்து விளங்கும் மகுடம் பொடிபட, பரந்துள்ள அந்த ஏழு கடல்களும் வற்றிடுமாறு,  அழகிய திருக்கரத்தில் பொருந்திய வேலாயுதத்தை ஏந்தி, திருநடனம் புரிகின்ற கந்தவேளே!

     குளிர்ச்சி நிறைந்த மாமரச் சோலையில் குயில் கொஞ்ச, தென்னை, வாழை, கரும்பு ஆகியவை ஓங்கி வளர்ந்து வானை அளாவும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் வேலாயுதத்தைத் தரித்த திருக்கரத்தினரே!

     பெருமையும் ஒளியும் கொண்ட மார்பக மலைகளை உடைய, அழகு வாய்ந்த நாயகியாகிய தேவயானையும்,  மின்னல் போன்ற இடையையும், பொன்னை உருக்கி வார்த்தது போன்ற உருவத்தையும் கொண்ட குறமகளாகிய வள்ளிநாயகியும் வணங்கும் தனிப்பெரும் தலைவரே!

         கூந்தல் தாழ்ந்து சரிந்து விழுந்து விரிய, ஒளி வீசும் மாலை குலைவுற்று பளிங்கு போல் விளங்க, கூரிய வாள் போன்றும் கெண்டை மீன் போன்றும் உள்ள கண்கள் கலக்கம் கொள்ள, மார்பகங்களும் குன்று போல எழுச்சி கொள்ள, செழிப்புள்ள காந்தள் மலர் போன்ற உடலில் இடை துவண்டு போக, உடலிலே சுற்றி உடுத்த ஆடையானது குலைந்து புரண்டு இன்ப ஊறல்கள் பாய, உடம்பில் பூசி உள்ள சாந்து வேர்வையினால் அழிந்து வாசனை கெட, மிக்கு எழும் காதலுடன் சேர்ந்து, முகத்தோடு முகம் வைத்து, பலாச் சுளையின் சுவை, கற்கண்டு போன்ற வாயிதழை உண்டு, காம ஆசையால் புறா, மயில் ஆகிய பறவைகளின் குரலுடன் கொஞ்ச, ஆசை வைத்த விலைமாதர்களுடன் புளகாங்கிதத்துடன் இணங்கி  நாயைப் போன்றவனாகிய அடியேன் அழிந்து விழுந்து உடல் வாட்டம் அடைவேனோ?
No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...