39. பிறரிடம் சொல்லத் தக்கவை, தகாதவை.
சென்மித்த
வருடமும், உண்டான அத்தமும்,
தீது இல் கிரகச் சாரமும்,
தின்றுவரும் அவுடதமும், மேலான தேசிகன்
செப்பிய மகாமந்த் ரமும்,
புன்மை
அவமானமும், தானமும், பைம்பொன் அணி
புனையும் மடவார் க லவியும்,
புகழ்மேவும் மானமும், இவை ஒன்பதும் தமது
புந்திக்கு ளேவைப்பதே
தன்மம்
என்று உரை செய்வர்; ஒன்னார் கருத்தையும்,
தன்பிணியையும் பசியையும்,
தான்செய்த பாவமும், இவை எலாம் வேறு ஒருவர்
தம் செவியில் வைப்பது இயல்பாம்!
அல்மருவு
கண்டனே! மூன்று உலகும் ஈன்ற உமை
அன்பனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
அல் மருவு கண்டனே --- ஆலகால விடத்தை
உண்டதால் கருமை பெற்று விளங்கும் கழுத்தை உடைய திருநீலகண்டப் பெருமானே!
மூன்று உலகும் ஈன்ற உமை அன்பனே --- மூன்று
உலகங்களையும் பெற்று அருளிய உமாதேவியார் அன்புக்கு உரியவரே!
அருமை மதவேள் --- அருமை மதவேள்
என்பான்,
அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும்
உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே ---
சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
சென்மித்த வருடமும் --- தான் பிறந்த பிறந்த
ஆண்டும்,
உண்டான அத்தமும் --- தனக்கு வாய்த்திருக்கும்
செல்வமும்,
தீது இல் கிரகச் சாரமும் --- தன்னுடைய
ஜாதகத்தின்படி அமைந்த குற்றமற்ற நல்ல கோள்களின் பலனும்,
தின்று வரும் ஒளடதமும் --- தான் உண்டு
வரும் மருந்தும்,
மேலான தேசிகன் செப்பிய மகாமந்திரமும்
--- மேலான குருநாதர் தனக்கு உபதேசித்து அருளிய மகா மந்திரமும்,
புன்மை அவமானமும் --- தனக்கு நேர்ந்த இழிவும், மானக் கேடும்,
தானமும் --- தன்னால் செய்யப்பட்ட
தானமும்,
பைம்பொன் அணிபுனையும் மடவார் கலவியும்
--- பசிய பொன்னாலான அணிகலன்களை அணிந்த பெண்களுடன் அமைந்த தனது சேர்க்கையும்,
புகழ் மேவும் மானமும் --- தனக்கு உள்ள
புகழோடு கூடிய பெருமையும்,
இவை ஒன்பதும் --- ஆகிய இவை
ஒன்பதினையும்,
தமது புந்திக்குள் வைப்பதே தன்மம் என்று
உரை செய்வர் --- பிறர் யாரிடமும் தெரிவிக்காமல், தம்முடைய மனத்தில் வைத்திருப்பதே அறம் என்று
மேலோர் கூறுவர்.
ஒன்னார் கருத்தையும் --- தனது பகைவர்
எண்ணி இருப்பதையும், பகைவர் பற்றித் தான்
கொண்டுள்ள கருத்தையும்,
தன் பிணியையும் --- தனக்கு வந்துள்ள
நோயையும்,
பசியையும் ---- தனக்கு உண்டான பசியையும்,
தான் செய்த பாவமும் --- தன்னால்
செய்யப்பட்ட பாவத்தையும்,
இவையெலாம் --- ஆகிய இவைகளை எல்லாம்,
வேறு ஒருவர் தம் செவியில் வைப்பது
இயல்பாம் ---
மறைத்து
வைக்காமல், பிறர் ஒருவருக்குத்
தெரிவித்து வைப்பது இயல்பானது ஆகும்.
விளக்கம் --- தான் செய்த தருமங்களைப்
பிறருக்குத் தெரிவித்தால் புகழ்ந்து பேசப்படும். அப் புகழால் செருக்கு உண்டாக வழி ஏற்படும்.
எனவே, செய்த தற்செயல்களைப் பிறருக்கு
அறிவிக்கக் கூடாது என்றனர் பெரியோர். தான் செய்த பாவத்தைக் கூறினால், பின்னர் அவ்வாறு
செய்யக்கூடாது என்னும் எணர்வு தோன்றும். அறிவுடையோர் நெறிப்படுத்துவர்.
சொல்லத் தகாதவைகளைச்
சொல்லுவது கேடு தரும். சொல்ல வேண்டியவைகளை மறைத்து வைப்பதும் கேடு தரும்.
No comments:
Post a Comment