அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கட்டி முண்டக
(சிதம்பரம்)
தில்லை முருகா!
சிவயோக நிலையை இந்தப்
பிறவிலேயே தந்து,
உனது திருப்புகழ் பாட அருள்.
தத்த
தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன ...... தனதான
கட்டி
முண்டகர பாலி யங்கிதனை
முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி
கத்த மந்திரவ தான வெண்புரவி ...... மிசையேறிக்
கற்ப
கந்தெருவில் வீதி கொண்டுசுடர்
பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு
கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ
....டசையாமற்
கட்டு
வெம்புரநி றாக விஞ்சைகொடு
தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர்
சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத
...... முறமேவித்
துக்கம்
வெந்துவிழ ஞான முண்டுகுடில்
வச்சி ரங்களென மேனி தங்கமுற
சுத்த கம்புகுத வேத விந்தையொடு ......
புகழ்வேனோ
எட்டி
ரண்டுமறி யாத என்செவியி
லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென
எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு
......முருகோனே
எட்டி
ரண்டுதிசை யோட செங்குருதி
யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ
லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில்
...... விடுவோனே
செட்டி
யென்றுசிவ காமி தன்பதியில்
கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட
சித்த முங்குளிர நாதி வண்பொருளை ....நவில்வோனே
செட்டி
யென்றுவன மேவி யின்பரச
சத்தி யின்செயலி னாளை யன்புருக
தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர்
......பெருமாளே.
பதம் பிரித்தல்
கட்டி
முண்டக அர பாலி அங்கிதனை
முட்டி, அண்டமொடு தாவி, விந்துஒலி
கத்த, மந்திர அவதான வெண்புரவி ...... மிசைஏறிக்
கற்பகம்
தெருவில் வீதி கொண்டு,சுடர்
பட்டி மண்டபம் ஊடாடி, இந்துவொடு
கட்டி விந்து பிசகாமல், வெண்பொடிகொடு ......அசையாமல்
கட்டு
வெம்புர நிறாக. விஞ்சை கொடு
தத்துவங்கள் விழ சாடி, எண்குணவர்
சொர்க்கம் வந்து கையுள் ஆக, எந்தை பதம் ...... உற மேவித்
துக்கம்
வெந்துவிழ, ஞானன் உண்டு, குடில்
வச்சிரங்கள் என, மேனி தங்கம்உற,
சுத்த அகம் புகுத, வேத விந்தையொடு ...... புகழ்வேனோ?
எட்டு
இண்டும் அறியாத என்செவியில்,
எட்டு இரண்டும் இது ஆம் இலிங்கம்என,
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு!
......முருகோனே!
எட்டு
இண்டு திசை ஓட செங்குருதி,
எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல்
எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற,அயில் ......விடுவோனே!
செட்டி
என்று சிவகாமி தன் பதியில்
கட்டு செங்கை வளை கூறும் எந்தைஇட
சித்தமும் குளிர அநாதி வண்பொருளை ......நவில்வோனே!
செட்டி
என்று வன மேவி, இன்ப ரச
சத்தியின் செயலினாளை அன்பு உருக
தெட்டி வந்து, புலியூரின் மன்றுள் வளர்
......பெருமாளே.
பதவுரை
எட்டு இரண்டும்
அறியாத என் செவியில் --- தச காரியங்களின் உண்மைப் பொருளை
அறிந்து கொள்ளதா என் காதுகளில்
எட்டும் இரண்டும் இது
ஆம் இலிங்கம் என --- எட்டும் இரண்டும் பத்து - "ய" இதுவே ஆகும் நாட்டத்தை வைப்பதற்கு ஏற்ற
அடையாளமென்று,
எட்டு இரண்டும்
வெளியா மொழிந்த குரு முருகோனே --- அகார உகாரங்களின் உட்பொருளைத் தெளிவாக
உபதேசித்து அருளிய குருநாதரே!
முருகோனே --- முருகப்
பெருமானே!
செம் குருதி --- சிவந்த இரத்தமானது,
எட்டு இரண்டு திசை ஓட --- எட்டுத்
திசைகளிலும், இந்த அண்டத்தின்
கீழும் மேலுமாக, பத்து திக்குகளிலும்
ஓடும்படி
எட்டு இரண்டு உருவாகி --- பதினாறு வகையான
உருவத் திருமேனிகள் விளங்க
எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற ---பத்துத்
திக்குகளிலும் இருந்து வந்த அசுரர்கள் இறந்துபடுமாறு
வஞ்சகர் மெல் --- தாரகாசூரன், சூரபதுமன் என்ற வல்லரக்கர்கள் மீது,
அயில் விடுவோனே --- வேலாயுத்ததை
விடுத்தருளியவரே!
செட்டி என்று சிவகாமி
தன் பதியில்
--- வளையல்காரச் செட்டியாப் வடிவில் சென்று, உமாதேவியார் அங்கயற் கண்ணியாய்
வீற்றிருக்கும் மதுரையில்,
கட்டு செம் கை வளை
கூறும்
--- பிணிக்கும்படியான சிவந்த கைகளில், வளையல்களை
அடுக்கி விலை கூறியருளிய
எந்தை இட --- எமது தந்தையாகிய
சிவபெருமானுடைய
சித்தமும் குளிர --- உள்ளமும் திருச் செவிகளும் குளிருமாறு,
அநாதி வண் பொருளை நவில்வோனே ---
ஆதியற்றதும், வளமையானதுமான பிரணவப் பொருளை உபதேசித்தவரே!
செட்டி என்று வனம்
மேவி ---
வளையல் செட்டியின் வேடத்துடன் வள்ளிமலைச் சாரலில் உள்ள தினை வனத்துக்குச் சென்று,
இன்ப ரசச் சத்தியின்
செயலினாளை அன்பு உருக --- இச்சா சக்தி ஆகிய வள்ளி நாயகியை
அன்பினால் உள்ளம் உருக,
தெட்டி வந்து --- அபகரித்துக்
கொண்டு வந்து,
புலியூரில் மன்றுள் வளர் பெருமாளே ---
சிதம்பரத்தில் பொன் அம்பலத்தில்
விளங்கும் பெருமையில் மிக்கவரே!
கட்டி --- பிராண வாயுவை
பாழில் ஓட ஒட்டாமல் அதன் நிலையில் பிடித்துக் கட்டி
முண்டக அரபாலி
அங்கிதனை முட்டி --- மூலாதார
கமலத்திலுள்ள அருள் பாலிக்கும் சிவாக்கினியை மூண்டு எழச் செய்து,
அண்டமொடு தாவி --- அண்டமாகிய கபால
பரியந்தம் தாவச் செய்து,
விந்து ஒலி கத்த --- விந்து நாதம் தோன்றி
முழங்க,
மந்திர அவதான வெண்
புரவி மிசை ஏறி --- மேன்மை பொருந்திய மந்திரமாகிய தூய குதிரையின் மீது ஏறி,
கற்பக அம் தெருவில்
வீதி கொண்டு
--- கற்பகத் தருவைப் போல் விரும்பியதை அளிக்க வல்ல அழகிய மேலைச் சிவ வீதியில்
நேராக ஓடச் செலுத்தி,
சுடர் பட்டி மண்டபம் --- எல்லா
தத்துவங்களும் ஒன்றுபடும் ஒளிமயமான லலாட தானமாகிய மண்டபத்தில்
ஊடாடி --- (தியானம், பிரத்யாகரணம், தாரணை முதலிய) யோகப் பயிற்சிகளைப் பழகி
இந்துவொடு விந்து
பிசகாமல் கட்டி --- சந்திர கலை சலியாமலும், விந்து கழலாமலும் உறுதி பெறக் கட்டி,
சுட்டு வெம் புரம் நீறு ஆக ---
முப்புரமாகிய மும்மலங்களும் வெந்து நீறு ஆகும்படி சுட்டு,
வெண் பொடி கொடு
அசையாமல்
--- அந்த வெண்ணீற்றை அணிந்துகொண்டு அசையாமல் நின்று,
விஞ்சை கொடு --- அட்டமாசித்து
வித்தைகள் எல்லாம் கைவரப் பெற்று,
தத்துவங்கள் விழச்
சாடி
--- தத்துவ சேட்டைகள் எல்லாம் வேரற்று விழும்படி அழித்து,
எண் குணவர் சொர்க்கம் வந்து கையுள் ஆக --- எண்குணவராகிய சிவபெருமானுடைய பதவி
கை கூடி வந்து சித்திக்க,
எந்தை பதம் உற மேவி --- அச் சிவ பதவியில்
நிலை பெற்றுப் பொருந்தி,
துக்கம் வெந்து விழ
ஞானம் உண்டு
--- பிறவித் துன்பம் வெந்து நீறாகி ஒழிய, ஞானாமிர்த
பானம் குடித்து,
குடில் வச்சிரங்கள்
என மேனி தங்கம் உற --- தேகம் வஜ்ர காயமாகவும், நிறம் தங்கம் போலவும் மாற்றி,
சுத்த அகம் புகுத வேத விந்தையொடு
புகழ்வேனோ --- தூய முக்தி கூட,
விசித்திரமான
வேதச் சந்தத்துடன் உனது திருப்புகழை எடுத்துப் பாடுவேனோ?
பொழிப்புரை
தச காரியங்களின் உண்மைப் பொருளை அறிந்து கொள்ளதா
என் காதுகளில், எட்டும் இரண்டும்
பத்து - "ய" இதுவே ஆகும்
நாட்டத்தை வைப்பதற்கு ஏற்ற அடையாளமென்று, அகார
உகாரங்களின் உட்பொருளைத் தெளிவாக உபதேசித்தர்ளிய குருநாதரே!
முருகப் பெருமானே!
சிவந்த இரத்தமானது, எட்டுத் திசைகளிலும், இந்த அண்டத்தின் கீழும் மேலுமாக, பத்து திக்குகளிலும் ஓடும்படி, பதினாறு வகையான உருவத் திருமேனிகள்
விளங்க, பத்துத்
திக்குகளிலும் இருந்து வந்த அசுரர்கள் இறந்துபடுமாறு, தாரகாசூரன், சூரபதுமன் என்ற வல்லரக்கர்கள் மீது,வேலாயுத்ததை
விடுத்தருளியவரே!
வளையல்காரச் செட்டியாப் வடிவில் சென்று, உமாதேவியார் அங்கயற் கண்ணியாய்
வீற்றிருக்கும் மதுரையில், பிணிக்கும்படியான
சிவந்த கைகளில், வளையல்களை அடுக்கி
விலை கூறியருளிய எமது தந்தையாகிய சிவபெருமானுடைய உள்ளமும் திருச் செவிகளும்
குளிருமாறு, ஆதியற்றதும், வளமையானதுமான பிரணவப் பொருளை
உபதேசித்தவரே!
வளையல் செட்டியின் வேடத்துடன்
வள்ளிமலைச் சாரலில் உள்ள தினை வனத்துக்குச் சென்று, இச்சா சக்தி ஆகிய வள்ளி நாயகியை அன்பினால்
உள்ளம் உருக, அபகரித்துக் கொண்டு வந்து,
சிதம்பரத்தில் பொன் அம்பலத்தில்
விளங்கும் பெருமையில் மிக்கவரே!
பிராண வாயுவை பாழில் ஓட ஒட்டாமல் அதன்
நிலையில் பிடித்துக் கட்டி, மூலாதார கமலத்திலுள்ள அருள் பாலிக்கும் சிவாக்கினியை
மூண்டு எழச் செய்து, அண்டமாகிய கபால
பரியந்தம் தாவச் செய்து, விந்து நாதம் தோன்றி முழங்க, மேன்மை பொருந்திய மந்திரமாகிய தூய
குதிரையின் மீது ஏறி, கற்பகத் தருவைப் போல் விரும்பியதை அளிக்க வல்ல அழகிய மேலைச் சிவ வீதியில் நேராக ஓடச் செலுத்தி, எல்லா தத்துவங்களும் ஒன்றுபடும்
ஒளிமயமான லலாட தானமாகிய மண்டபத்தில்
(தியானம், பிரத்யாகரணம், தாரணை முதலிய) யோகப் பயிற்சிகளைப் பழகி,
சந்திர கலை சலியாமலும், விந்து கழலாமலும்
உறுதி பெறக் கட்டி, முப்புரமாகிய
மும்மலங்களும் வெந்து நீறு ஆகும்படி சுட்டு, அந்த வெண்ணீற்றை அணிந்து கொண்டு
அசையாமல் நின்று, அட்டமாசித்து
வித்தைகள் எல்லாம் கைவரப் பெற்று,
தத்துவ
சேட்டைகள் எல்லாம் வேரற்று விழும்படி அழித்து, எண்குணவராகிய சிவபெருமானுடைய பதவி கை
கூடி வந்து சித்திக்க, அச் சிவ பதவியில்
நிலை பெற்றுப் பொருந்தி, பிறவித் துன்பம்
வெந்து நீறாகி ஒழிய, ஞானாமிர்த பானம்
குடித்து, தேகம் வச்சிரமாகவும், நிறம் தங்கம் போலவும் மாற்றி, தூய முக்தி கூட, விசித்திரமான வேதச் சந்தத்துடன் உனது
திருப்புகழை எடுத்துப் பாடுவேனோ?
விரிவுரை
கட்டி
முண்டக அர பாலி அங்கிதனை மூட்டி ---
கட்டி
என்பது வீணே கழிகின்ற பிராணவாயுவை அங்ஙனம் கழிய ஒட்டாமல் கட்டவேண்டும் என்பதனைத்
தெரிவிக்கின்றது.
கட்ட
வல்லார்கள் கரந்துஎங்கும் தானவர்,
மட்டுஅவிழ்
தாமரை உள்ளே மணம் செய்து
பொட்டு
எழக் குத்தி, பொளி எழத்
தண்டிட்டு
நட்டிடுவார்க்கு
நமன் இல்லை தானே. --- திருமந்திரம்.
நாள்
ஒன்றுக்கு இருபத்தோராயிரம் சுவாசங்கள் செல்லுகின்றன. அவற்றுள் வெளியே செல்லுவது
பன்னிரண்டு அங்குலங்கள். உள்ளே புகுவது எட்டு அங்குலங்கள். நான்கு அங்குலங்கள்
வீணாகின்றன. அவற்றை வீணாக்காவண்ணம் கட்ட வல்லாரே காலனைக் கட்டவல்லார் ஆவர்.
இருபத்தோ
ராயிரத்து அறுநூறாய்
மருவி
நாள்தோறும் வளர் சுவாசத்தை
சங்ஙென
வாங்கி,
சமனுறக்
கும்பித்து
அங்ஙென்று
எழும்பும் அசபையும் அருளி...
பன்னிரண்டு
அங்குலம் பரிந்திடும் பிராணன்
பின்அதில்
நான்கு பிரிந்து போம், அதனால்
ஆயுளும்
குறைந்திட்டு,
ஆக்கையும்
தளர்ந்து,
சாயும்
என்று உரைத்து,
சாகாது
இருக்க
நாடிஓர்
பத்தும் நாடி நாடிகள் புக்கு
ஓடிய
வாயு ஒருபதும் தேர்ந்து.... --- சிற்றம்பல நாடிகள்.
இனி, தணிந்து
இருக்கின்ற மூலாதாரத்து உள்ள மூலாக்கினியை பிராண வாயுவினால் எழுப்பி, அதனை மேலை வெளி
வரை மூட்டினால்,
அங்கு
மதிமண்டலம் வெதும்பி, அமிர்தம் பொழியும்.
மூலாதாரத்தின்
மூண்டு எழு கனலைக்
காலால்
எழுப்பும் கருத்து அறிவித்து.... ---
ஔவையார்.
நாளும்அதி
வேக கால்கொண்டு தீமண்ட
வாசிஅனல் ஊடு போய்ஒன்றி வானின்கணு
நாமமதி மீதில் ஊறும் கலாஇன்ப ...... அமுதுஊறல்
நாடி,அதன் மீது போய்நின்ற
ஆநந்த
மேலைவெளி ஏறி, நீஇன்றி நான்இன்றி
நாடிஇனும் வேறு தான்இன்றி வாழ்கின்றது
...... ஒருநாளே.
--- (மூளும்வினை)
திருப்புகழ்.
உணர்வு
கீழ் அரணியாகவும், பிரணவம் மேல் அரணியாகவும் பிடித்துக் கடைய, ஞானாக்கினி
பிறக்கும். அவு அக்கினியால் பாசம் எரியும்.
மன்னு
கீழ்அரணி வருத்தம்இல் உணர்வாய்,
பன்னு
மேல்ரணி பிரணவம் ஆக,
கடையவே
சானக் கனல் எழும் அன்றே,
தடைபடாப்
பாச தகனம் செய்தான்,
அருள்
எனும் தலத்தில் அறிந்துகால் மடக்கி
இருள்அற
இருக்கும் இயற்கையை விண்டனன். --- சிற்றம்பல நாடிகள்.
கூடம்
எடுத்து குடிபுக்க மங்கையர்,
ஓடுவர்
மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர்
எண்விரல், கண்டிப்பர்
நால்விரல்,
கூடிக்
கொளில் கோல அஞ்செழுத்து ஆமே. --- திருமந்திரம்.
மூலாதாரத்தில்
குண்டலி சத்தி பாம்பு கோல் மண்டலமிட்டு இருக்கும். அதன் வாயில் இருந்து எழுகின்ற காற்றே பிராணன்
ஆகும். இட நாசியிலும் வலநாசியிலும்
மாறிவரும். அதனை மறித்து முதுகெலும்பின்
நடுவில் உள்ள சுழுமுனை வழியே செலுத்தி, ஆறு ஆதாரம் கடந்த அப்பாலைக்குச் சென்று
அமைதல் வேண்டும்.
சொன்ன
நாடிகளில் சுழுமுனை நடுவாம்
இன்னதின்
பக்கத்து இடை பிங்கலையாம்
அக்கினி
திங்கள் ஆதவன் கலைகள்
புக்க
சக்கரமும் போய் மீண்டு இயங்கும்
மூலக்
குண்டலியாம் உரகமூச்சு எறிந்து
வாலது
கீழ்மேல் மண்டலம் இட்டு,
படம்தனைச்
சுருக்கிப் படுத்து உறங்குவது
நடந்து
மேல் நோக்கி ஞானவீடு அளிக்கும்
மண்டல
மூன்று மருவுதூண் புகஅக்
குண்டலி
எழுப்பும் கொள்கை ஈதுஎன்றான். --- சிற்றம்பல நாடிகள்.
அங்ஙனம்
பன்னிரு அங்குல அளவில் ஓடும் பிராணனை அடக்கும் சிவயோக சாதனையை, குருமுகமாக
அறிந்து,
முறையே
பயின்று சாதித்தவர்க்கு உலகமெல்லாம் தலை வணங்கும். அழிவற்ற தன்மையும் உண்டாகும்.
இனி, ரேசகம் என்பது
பிராண வாயுவை வெளியே விடுதல். பூரகம் என்பது பிராண வாயுவை உள்ளை இழுத்தல். கும்பகம்
என்பது பிராண வாயுவை விடாமல் நிறுத்துதல். இதில், தொடக்கத்தில் பூரகம் 16
மாத்திரையும்,
கும்பகம்
64 மாத்திரையும், ரேசகம் 32 மாத்திரையுமாகச் சாதனை செய்து படிப்படியாக
உயர்த்துதல் வேண்டும்.
ஏறுதல்
பூரகம் ஈர்எட்டு வாமத்தால்
ஆறுதல்
கும்பகம் அறுபத்து நால்அதில்
ஊறுதல்
முப்பத்திரண்டுஅதி ரேசகம்
மாறுதல்
ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே. ---
திருமந்திரம்.
முன்னது
இரேசகம் முப்பத்திரண்டு
பின்னது
பூரகம் பேசும் ஈர்எட்டு
கும்பகம்
நாலோடு அறுபதாக் கூறும்
தம்ப
மாத்திரையின் தன்மையும் உணர்த்தி,
மூலமே
முதலா முதல்நடு உச்சி
பால்உளவின்
நீள் படுதுணை நோக்கி
மூலா
தாரத்தின் முச்சுழிச் சுடரை
மேல்ஆதா
ரத்தின் மெல்எனத் தூண்டி
இருவழிக்
காலும் ஒருவழி நடத்தி
கருவழி
அடைத்து.... --- சிற்றம்பல நாடிகள்.
அங்ஙனம்
சாதகம் செய்யும்போது நாட்டத்தை மூக்கில் வைக்க வேண்டும்.
நாட்டம்
இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும்
இல்லை,
மனைக்கும்
அழிவில்லை,
ஓட்டமும்
இல்லை,
உணர்வில்லை, தான்இல்லை,
தேட்டமும்
இல்லை, சிவன் அவன் ஆமே. --- திருமந்திரம்.
அண்டமொடு
தாவி ---
அவ்வாறு
எழுகின்ற பிராணவாயுவை ஆறாதாரத்தின் வழியே மேலைப் பெருவெளிக்குச் செலுத்துதல்
வேண்டும். அவை, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை
என்பனவாம். அவைகள் முறையே நாபிக்குக் கீழே இரண்டும், நாபிழும், இருதயமும், கண்டமும், புருவநடுவும்
ஆம். அதில்,
அகாராதி
க்ஷகஆந்தரம் ஈறாக 51 அக்ஷரங்கள் உள்ளன.
மேலும், மூலாதாரத்தில் உள்ளது ஓ
சுவாதிட்டானத்தில் உள்ளது ந
மணிபூரகத்தில் உள்ளது ம
அநாகதத்தில் உள்ளது சி
விசுத்தியில் உள்ளது வ
ஆக்ஞையில் உள்ளது ய
மூலாதாரத்தில் விநாயகர்.
சுவாதிட்டானத்தில் பிரமன்
மணிபூரகத்தில் திருமால்
அநாகதத்தில் உருத்திரன்
விசுத்தியில் மகேச்சுரன்
ஆக்ஞையில் சதாசிவம்.
இனி, ஆறாதாரத்துள்ள
அந்த ஆறு மூர்த்திகளையும் முருகவேள் அதிட்டித்து நிற்பர். அதனால் அன்றோ ஆறுமுகம்
ஆனார்.
ஆறாதாரமும்
பிரமரந்திரமும் கடந்த இடத்தில் மேலைப் பெருவெளி தோன்றும். ஆயிரத்தெட்டு இதழ்க்
கமலத்துடன் அது விளங்கும். அந்த சகஸ்ரார வெளியில் ஞான ஜோதி ஒப்புவமை இன்றி ஒளி
செய்துகொண்டு இருக்கும்.
அவ்வாறு
பிராணவாயுவை எழுப்பும்போது, ஓம் என்ற பிரணவ ஒலியில், அசபா நலம் சித்திக்கச்
செய்யவேண்டும்.
ஓளியை
ஓளிசெய்து ஓம்என்று எழுப்பி
வளியை
வளிசெய்து வாய்த்திட வாங்கி,
வெளியை
வெளி செய்து மேல்எழவைத்து
தெளியத்
தெளியும் சிவபதம் தானே. --- திருமந்திரம்.
விந்துவொடு
கத்த ---
மேற்
கூறியவாறு சிவயோக சாதனையை முறையே தொடங்கி புரிந்து வரில், அங்கு விந்து சுழித்து ஓர்
இனிய நாதம் எழும். அது பத்து வகையான
கருவிகளை நிகர்த்து பேரானந்தத்தை விளைவிக்கும். அந்த இன்னிசையைக் கேட்ட செவி வேறு
எந்த இசைகளையும் கேட்காது.
மணிக்கடல்
யானை வளர்குழல் மேகம்
அணிவண்டு
தும்பி வளை பேரிகை யாழ்
தணிந்து
எழு நாதங்கள் தாம் இவை பத்தும்,
பணிந்தவர்க்கு
அல்லது பார்க்க ஒண்ணாதே.
கடலொடு
வேகக் களிறொடும் ஓசை
அடவொடும்
அவ்வினை ஆண்டாண் டத்து
சுடர்
மன்னும் வேணு சுரிசங்கின் ஓசை
திடம்
அறி யோகிக்கு அல்லால் தெரியாதே. ---
திருமந்திரம்.
மந்திர
அவதான வெண் புரவி மிசை ஏறி ---
இதற்கு, 'கட்டப்பட்ட
கூடத்தில் சாவதானமாக நிற்கும் சுவேதப் புரவியின் மீது ஆரோகணித்து' என்றும் பொருள்
கூறுவர். மந்திரம் என்பது குதிரைச் சாலை
என்றும் பொருள்படும். இனி, அவதானம் - மேலான செய்கை. வெண்புரவி என்பதற்கு
சுழுமுனை நாடி ஆகிய வெள்ளை நரம்பின் வழியே செல்லுவது எனினும் அமையும்.
கோணா
மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்
தண்டு ஊடே வெளியுறத் தான் நோக்கி
காணாக்கண், கேளாச் செவி
என்று இருப்போர்க்கு
வாழ்நாள்
அடைக்கும் வழிஅது ஆமே. ---
திருமந்திரம்.
கற்பகம்
தெருவில் வீதி கொண்டு ---
புருவ
நடுவே நாட்டத்தை வைத்து, மனதைத் தடுத்து, இருந்தபடி இருந்து
நோக்கில்,
அங்கு
சிவ ஒளி தோன்றி,
அதன்
நடுவே ஒரு வீதி தோன்றும். அந்த வீதி வழியே சென்றால் அங்கே ஒரு பொற்பிரகாசமான
மண்டபம் தோன்றும்.
சோதிமலை
ஒன்று தோன்றிற்று அதில் ஒரு
வீதி
உண்டாச்சுதடி,
அம்மா
வீதி
உண்டாச்சுதடி. ---
திருவருட்பா.
சுடர்
பட்டி மண்டபம் ஊடுஆடி ---
பட்டி
மண்டபம் --- வித்தியா மண்டபம். அது
சிவயோகத்தில் ஆக்ஞாயைக் கடந்து செல்லும்கால் ஆன்மா சிவொளி பெற்று இளைப்பாறும் ஒளி
மண்டபம் ஆகும். இதனைப்பற்றி ஆன்றோர்கள்
கூறும் பொன்மொழிகளைக் காண்க.
கட்டு
அறுத்து எனை ஆண்டு,கண்ஆர நீறு
இட்ட
அன்பரொடு யாவரும் காணவே
பட்டி
மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி
னோடு இரண்டும்அறி யேனையே. ---
திருவாசகம்.
எட்டு
இரண்டு அறிவித்து, எனைத் தனி ஏற்றி
பட்டி
மண்டபத்தில் பதித்த மெய்த் தந்தையே. ---
திருவருட்பா.
பட்டி
மண்டபத்தில் நிற்கும் நிலையில் தாரணை, தியானம், சமாதி என்ற மூன்று அங்கங்கள்
அடங்கும். அந்த நிலைகளை ஆன்றோர் கூறும்
இடங்களில் காண்க. அதனைத் திருமூலர்
பின்வருமாறு கூறுவார்.
தூங்க
வல்லார்க்கும் துணைஏழ் புவனமும்,
வாங்க
வல்லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத்
தேங்க
வல்லார்க்கும் திளைக்கும் அமுதமும்
தாங்க
வல்லார்க்கும் தன்இடம் ஆமே.
இந்துவொடு
கட்டி விந்து பிசகாமல் ---
சந்திர
கலையைத் தடுத்து விந்துகழலாமல் உறுதியுடன் நிற்றல்.
வெண்பொடி
கொடு அசையாமல் சுட்டு வெம்புரம் நீறாக ---
ஆணவம், கன்மம், மாயை என்று
மலங்கள் மூன்றையும் ஞானாக்கினியால் எரித்து நீறாக்குதல். மும்மலத்தை எரித்தலையே சிவபெருமான்
முப்புரம் எரித்தனர் என்ற வரலாறு நுட்பமாகத் தெரிவிக்கின்றது. அங்ஙனம் எரித்தபோது உண்டாகின்ற திருநீற்றை
அணிந்து நிர்மலமாக நிற்றல் வேண்டும்.
அப்புஅணி
செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம்
செற்றனன் என்பர்கள் மூடர்கள்,
முப்புரம்
ஆவது மும்மல காரியம்
அப்புரம்
எய்தமை ஆர்அறிவாரே. ---
திருமந்திரம்.
விஞ்சை
கொடு ---
இவுவாறு
தனக்கு ஒப்பும் உயர்வும் இல்லாத தனிப்பெரும் சிறப்பு உடைய சிவயோக சாதனை கைவந்த
சிவயோகிகட்கு எட்டு சித்திகளும் தாமே வந்து அடிமைகள் ஆகி ஏவல் புரியும். எட்டு சித்திகள்
ஆவன....
1.
அணிமா --- அணுவினும் சிறிய உருவினன் ஆதல்.
2.
மகிமா --- மேருவினும் பெரிய உருவுடன் நிற்றல்.
3.
கரிமா --- வாள், கணை, தீ
முதலியவற்றால் துன்புறாத மேனியை அடைதலும், பரகாயப் பிரவேசம் முதலியவும் ஆம்.
4.
லகிமா --- ஆகாய கமனம் முதலியன.
5.
பிராத்தி --- வேண்டியற்றைத் தடையின்றி அடைதல்.
6.
பிராகாமியம்--- எல்லாவற்றிலும் சலனம்
இன்றி நிறைவடைதல்.
7.
ஈசத்துவம் --- எல்லாவற்றையும் அடக்கி மேலான ஆட்சியை அடைதல்.
8.
வசித்துவம் --- எல்லா உயிர்களும் தன் வசம் ஆக, தான் தலைமை பெறுதல்.
இத்தகைய
அட்ட சித்திகளும் தாமே வந்து அடைந்து பணிசெய்ய நிற்பர் சிவயோகிகள்.
தத்துவங்கள்
விழ சாடி ---
தத்துவச்
சேட்டைகளே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்.
சமாதி நிலையில் இந்தத் தத்துவங்களின் சேட்டைகள் முற்றும் அற்று விடும். அதைத்
தூங்காமல் தூங்கும் நிலை என்பர் திருமூலர்.
தூங்கிக்
கண்டார் சிவலோகமும் தம் உள்ளே
தூங்கிக்
கண்டார் சிவ யோகமும் தம் உள்ளே
தூங்கிக்
கண்டார் சிவ போகமும் தம் உள்ளே
தூங்கிக்
கண்டார் நிலை சொல்வது எவ்வாறே.
தத்துவங்கள்
ஆவன --- ஆன்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5, ஆக 36.
எண்குணவர்
சொர்க்கம் வந்து கையுள் ஆக ---
எண்
குணங்களை உடையவர் சிவபெருமான். அவையாவன --- தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன்
ஆதல்,
இயற்கை
உணர்வினன் ஆதல்,
முற்றும்
உணர்தல்,
இயல்பாகவே
பாசங்களினின்றும் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம்
உடைமை.
கோள்இல்
போறியில் குணம் இலவே, எண்குணத்தான்
தாளை
வணங்காத் தலை. ---
திருக்குறள்.
சிவயோகத்தால்
சிவஞானம் சித்திக்க, அதனால் சிவகதி அங்கை நெல்லிக்கனி போல் கிடைக்கல் ஆயிற்று.
துக்கம்
வெந்து விழ ---
துக்கம்
என்பதை இங்குப் பிறவித் துன்பமாகக் கொள்ளுதல் வேண்டும். ஏனைய துன்பங்கள்
சமதமங்களாலேயே விலகும். பிறவித்துன்பம்
ஒன்றே ஞானாக்கினியால் நீறு ஆகும்.
அன்றியும் ஏனைய எல்லாத் துன்பங்களினும் தலை சிறந்தது பிறவித் துன்பம் ஒன்றே
ஆம். அது ஒழியின் ஏனைய துன்பங்கள் அனைத்தும் தானே நீங்கும் என்க. வீடு பற்றி எரிய, அதனுள் இருந்த
பொருள்களும் அதனுடன் எரிவது போலவாம். இப்
பிறவித் துன்பத்திற்கே பெரியோர்கள் அஞ்சுகின்றனர்.
சிற்சபையும்
பொற்சபையும் சொந்தம்எனது ஆச்சு
தேவர்களும்
மூவர்களும் பேசுவதுஎன் பேச்சு
இற்சமய
வாழ்வில்எனக்கு என்னைஇனி ஏச்சு
என்பிறப்புத்
துன்பமெலாம் இன்றோடே போச்சு.
ஐயர்அருட்
சோதியர சாட்சிஎனது ஆச்சு
ஆரணமும்
ஆகமமும் பேசுவதுஎன் பேச்சு
எய்யுலக
வாழ்வில்எனக்கு என்னைஇனி ஏச்சு
என்பிறவித்
துன்பமெலாம் இன்றோடே போச்சு.
துரியமலை
மேல்உளதோர் சோதிவள நாடு
தோன்றும்அதில்
ஐயர்நடம் செய்யுமணி வீடு
தெரியும்அது
கண்டவர்கள் காணில்உயி ரோடு
செத்தவர்
எழுவார்என்று கைத்தாளம் போடு.
சொல்லால்
அளப்பரிய சோதிவரை மீது
தூயதுரி
யப்பதியில் நேயமறை ஓது
எல்லாம்செய்
வல்லசித்தர் தம்மைஉறும் போது
இறந்தார்
எழுவாரென்று புறந்தாரை ஊது.
சிற்பொதுவும்
பொற்பொதுவும் நான்அறியல் ஆச்சு
சித்தர்களும்
முத்தர்களும் பேசுவதுஎன் பேச்சு
இற்பகரும்
இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு
என்பிறவித்
துன்பமெலாம் இன்றோடே போச்சு.--- திருவருட்பா.
குடில்
வச்சிரங்கள் என, மேனி தங்கம் உற ---
சிவயோகத்தால்
உண்டாகும் பயன்கள் பலவற்றுள் உடம்பு வச்சிர மயமாகவும், பொன் நிறமாகவும்
திகழும். அவர்கள் பால் கூற்றுவனும் போகமாட்டான். விதியை வென்று, ஒரே ஆனந்த
அநுபவத்தில் சதா நிட்டாநுபூதிமான்களாக விளங்குவர். அந்த ஆனந்தம் சொல்லுதற்கும் எழுதுதற்கும்
முடியாதது. இதனை அனுபவிகள் கூறுமாறு காண்க.
போக்கும்
வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும்
வடிவும் முடிவும் இல்லாதது ஒன்று வந்துவந்து
தாக்கும், மனோலயம் தானே தரும், எனைத் தன் வசத்தே
ஆக்கும், அறுமுகவா! சொல்ல
ஒணாது இந்த ஆனந்தமே. ---
கந்தர் அலங்காரம்.
ஏற்றி
இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப்
பிடிக்கும் கணக்குஅறி வாரில்லை
காற்றைப்
பிடிக்குங் கணக்குஅறி வாளர்க்குக்
கூற்றை
உதைக்கும் குறிஅது வாமே.
புறப்பட்டுப்
புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட
உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச்
சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப்
போகான் புரிசடை யோனே. ---
திருமந்திரம்.
சுத்த
அகம் புகுத ---
சுத்த
அகம் --- பரிசுத்தமான மோட்ச வீடு. சிவயோகத்தின் முடிவான பயன் இது. இறுதியிலே
பெறுவதாகிய முத்தி நலத்தை தரவல்லதுவே சிறப்பு உடையது ஆகும். எல்லா உயிர்களும் முடிவில் விரும்புவது முத்தி
நலமே.
வேத
விந்தையொடு புகழ்வேனோ ---
வேதாகமங்களின்
கருத்துக்களை எல்லாம் தன்னகத்தே கொண்ட திருப்புகழ்ப் பாடலால் முருகனைப் பாடிப்
பரவுதல் வேண்டும். அங்ஙனம் பரவுவார்க்குச்
சிவயோகம் கைகூடும்.
எட்டு
இரண்டும் அறியாத ---
எட்டும்
இரண்டும் பத்து. அவை தச காரியம் ஆகும்.
அவையாவன ---
1.
தத்துவ ரூபம்
--- மண் முதல் சிவம் ஊறாக உள்ள 36 தத்துவங்களின் குணங்களை அறிதல்.
2.
தத்துவ தரிசனம் --- மேற் கூறிய தத்துவங்களை சடம் என அறிதல்.
3.
தத்துவ சுத்தி
--- தத்துவங்களை சிவஞானத்தாலே தனக்கு வேறாக அறிதல்.
4.
ஆத்ம ரூபம்
--- ஐந்து மலங்களும் நீங்கி ஆத்ம ஞானம் என்னும் அறிவே வடிவென அறிதல்.
5. ஆத்ம தரிசனம் ---
தத்துவங்களை அறிந்து நீங்கி, இவற்றினின்று நீங்கிய அறிவு நான் என அறிதல்.
6.
ஆத்தும சுத்தி
--- பெத்தத்தினும் முத்தியினும் சிவன் உபகரிக்கின்றார் என்று தன்னுடைய சுதந்திர ஆனியை
அறிதல்.
7.
சிவ ரூபம்
--- தத்துவம் முப்பத்தாறினுக்கும் அப்பாலாய் வாக்கு மனாதீத கோசரமாய் ஞானமே வடிவாய் இருப்பது என அறிதல்.
8.
சிவ தரிசனம்
--- தத்துவம் முப்பத்தாறையும் அறிவித்துத் தரிசிப்பித்து நீங்கி, இவற்றினின்றும்
நீங்கி நிற்கும்
ஆத்மாவையும் தரிசிப்பித்து நிற்கின்ற
ஞானம் என அறிதல்.
9.
சிவயோகம்
--- இந்த ஞானம் தன்னை விட்டு நீங்காது என அறிந்து அதுவாய் நிற்றல்.
10.
சிவபோகம் ---
சிவத்தோடு இரண்டறக் கலந்து, சிவானந்தத்தைப் புசித்து வருதல்.
இந்தத்
தசகாரியங்களை இன்னும் விரிவாக சித்தாந்த சாத்திரங்களைக் கற்றார் வாய்க் கேட்டு
உணர்ந்து உய்வு பெறுக. இவற்றை அறிவது
மிகவும் அவசியம் ஆகும்.
கட்டு
அறுத்து எனை ஆண்டு,கண்ஆர நீறு
இட்ட
அன்பரொடு யாவரும் காணவே
பட்டி
மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி
னோடு இரண்டும்அறி யேனையே. ---
திருவாசகம்.
இந்தத்
திருவாசகப் பாடலுக்கு உரை வரைந்த பண்டிதமணி கதிரேசம் செட்டியார் அவர்கள் வரைந்துள்ள
உரை பின் வருமாறு...
"உலகியலில்
அறிவு இல்லாதவனைக் குறித்து, எட்டும் இரண்டும் எவ்வளவு என்று கேட்டால், சொல்ல அறியாதவன்
என்று இழித்து உரைத்தலைக் கேட்கின்றோம். அதனையே அடிகள் தம்பால் ஏறிட்டு எட்டினோடு இரண்டும்
அறியேனை என்றார். இனி எட்டினோடு என்பதற்கு அகரத்தோடு எனவும், இரண்டும் என்பதற்கு
உகர மகரங்கள் எனவும் பொருள் கொண்டு, அகர உகர மகரங்க்ளின் இயைபு ஆகிய பிரணவ மந்திரம் எனக்
கோடலும் ஒன்று. தமிழில் உள்ள எண்ணைக் குறிக்கும் வடிவங்களில் எட்டு அகர வடிவமாகவும், இரண்டு உகர வடிவமாகவும், 'இரண்டும்' என்புழி, இறுதி மகர ஒற்று
ஆகவும் இருத்தல் அறிக. பிரணவத்தின் இயல்பு அறியாதவன் என்பதற்கு, சிவமந்திரம் ஆகிய
திருவைந்தெழுத்தின் இயல்பு அறியாதவன் என்பது பொருள் ஆகும் என்க. இவ்வுண்மையை, எட்டும் இரண்டும்
இனிது அறிகின்றிலர், எட்டும் இரண்டும் அறியாத ஏழையர், எட்டும் இரண்டும் இருமூன்று
நான்கு எனப்பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே என்று விளக்கிக் கூறுவர் திருமூலர்.
ஈண்டு,
எட்டும்
இரண்டும் பிரணவம் என்று அறியாத ஏழையர், இரு மூன்று நான்கு என இழித்துக் கூறியதும்
அறிக."
எட்டும்
இரண்டும் இது ஆம் இலிங்கம் ---
எட்டும்
இரண்டும் பத்து. "ய".
இதுஆக்ஞாவில் புருவ நடுவில் நிலாப்பிறை போன்ற சக்கரத்தின் நடுவில்
விளங்குவது. சிவயோக சாதனையில் இந்த
இடத்தில் நாட்டத்தைச் செலுத்துதல் வேண்டும்.
நயனம்
இரண்டும் நாசிமேல் வைத்திட்டு
உயர்வெழா
வாயுவை உள்ளே அடக்கித்
துயரற
நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது
காயம் பயமில்லை தானே. ---
திருமந்திரம்.
எட்டு
இரண்டும் வெளியா மொழிந்த குரு ---
அருணகிரி
நாதருக்கு ஆறுமுகப் பெருமான் குருமூர்த்தியாக எழுந்தருளி வந்து, அகார
உகாரங்களின் உட்பொருளை உபதேசித்து அருளினார்.
தானே
பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும்
தானே
அகார உகாரம் அதாய் நிற்கும்
தானே
பரஞ் சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே
தனக்குத் தராதலம் தானே. --- திருமந்திரம்.
எட்டும்
இரண்டும் இதுஎன்று எனக்குச் சுட்டிக் காட்டி யே
எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டி
யே
துட்ட
வினையைத் தீர்த்து ஞானச் சுடர்உள் ஏற்றி யே
தூண்டா தென்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றி
யே.
எட்டும்
இரண்டும் என்றிட்டு வழங்குதல்
எட்டும்
படிசெய்தீர் வாரீர்
எட்டுரு
வாயினீர் வாரீர் வாரீர்.
நட்டானை, நட்டஎனை நயந்து கொண்டே
நம்மகன் நீ, அஞ்சல்என நவின்று, என் சென்னி
தொட்டானை, எட்டிரண்டும் சொல்லி
னானை,
துன்பமெலாம் தொலைத்தானை, சோர்ந்து தூங்க
ஒட்டானை, மெய்அறிவே உருவாய்
என்னுள்
உற்றானை, உணர்ந்தார்க்கும் உணர்ந்து
கொள்ள
எட்டானை, என் அளவில் எட்டி
னானை,
எம்மானைக் கண்டுகளித்து இருக்கின் றேனே
பெட்டிஇதில்
உலவாத பெரும்பொருள்உண்டு, இதுநீ
பெறுகஎன, அது திறக்கும் பெருந்திறவுக்
கோலும்,
எட்டுஇரண்டும்
தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்,
இதுதருணம் திறந்து,அதனை எடுக்கமுயல் கின்றேன்,
அட்டிசெய
நினையாதீர்,
அரைக்கணமும்
தரியேன்,
அரைக் கணத்துக்கு ஆயிரம் ஆயிரங்கோடி ஆக
வட்டிஇட்டு
நும்மிடத்தே வாங்குவன், நும் ஆணை.
மணிமன்றில் நடம்புரிவீர்! வந்தருள்வீர் விரைந்தே
எட்டிரண்டும்
என்என்றால் மயங்கியஎன் றனக்கே
எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே!
சுட்டிரண்டுங்
காட்டாதே துரியநிலை நடுவே
சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே!
மட்டுஇதுஎன்று
அறிவதற்கு மாட்டாதே, மறைகள்
மவுனம்உற, பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே!
தட்டு
அறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே!
தாழ்மொழிஎன்று இகழாதே தரித்து மகிழ்ந் தருளே.
எட்டிரண்
டென்பன வியலுமுற் படியென
அட்டநின்
றருளிய வருட்பெருஞ் ஜோதி
எட்டிரண்
டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண்
டபத்திற் பதித்தமெய்த் தந்தையே --- திருவருட்பா.
அகர
எழுத்து படைத்தல் தொழிலையும், உகர எழுத்து காத்தல் தொழிலையும் புரிகின்றன.
எல்லாவற்றையும் தோற்றுவித்து ஒடுக்கும் பரம்பொருளாகிய சிவபெருமானை அரன் என்றும், அம்பிகையை உமை என்றும்
குறிப்பிடும் அழகையும் உய்த்து உணர்க. இன்னும் இதன் உட்பொருளை அருளறிவு துணை
புரிந்தால் ஒழிய உணர்தல் இயலாது. சற்குருமுகமாகக் கேட்டு அறிக.
எட்டு
இரண்டும் உரு ஆகி ---
முருகப்
பெருமானின் திருவுருவ வகை பதினாறு. அவைகளாவன ---
1. சத்திதர சுவாமி --- ஒரு திருமுகமும், இரு
திருக்கரங்களும், இடக் கரத்தில் வச்சிரமும், வலக்கரத்தில் இச்சா ஞான
கிரியா சத்தி வடிவாகிய வேலாயுதமும் ஏந்திக் கொண்டு, அசுர வதம் பொருட்டு
நின்ற வடிவம்.
2. கந்த சுவாமி --- ஒரு திருமுகமும், இரு புயங்களும், அரையில்
கோவணமும் கொண்டு, வலக்கரத்தில் தண்டை ஊன்றி, இடக்கரத்தைத் துடை மீது
வைத்து,
செம்மேனியுடன்
விளங்கும் திருவுருவம்.
3. தேவசேனாபதி சுவாமி --- சூரியப் பிரகாசமும், பன்னிரு
திருக்கண்களும்,
ஆறு
திருமுகங்களும்,
பன்னிரு
திருக்கரங்களும், புன்முறுவலும், வலக்கரத்தில் சத்தி, வாள், அங்குசம், பாணம், தண்டு, அபயமும், இடக் கரத்தில்
வச்சிரம்,
கேடகம், பாசம், சேவல், தாமரை, வரதமும் ஆகிய
இவைகளைத் தாங்கி, தேவர்களையும் மூவர்களையும் தனக்குச் சேனைகளாகக் கொண்டு நின்ற
திருவுருவம்.
4. சுப்ரமண்ய சுவாமி --- சிவந்த நிறமும், சந்திரகாந்திப்
பிரகாசமும்,
ஆர
கேயூரம் முதலிய அணிகலன்களும், ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும், அபய வரதமும், வேலும், சேவல் கொடியும், தாங்குதலும்
கொண்டு,
மிகவும்
வரதராய் விளங்குகின்ற திருவுருவம்.
5. கஜவாகன சுவாமி --- ஒரு திருமுகமும், இரு
திருக்கண்களும்,
நான்கு
திருக்கரங்களும், வலக்கரங்களில் வேலும் அபயமும், இடக்கரங்களில் நேவல்
கொடியும்,
வரதமும்
கொண்டு,
வேண்டியவற்றை
எல்லாம் வழங்குகின்றதாய் நின்ற திருவுருவம்.
6.
சரவணபவ சுவாமி --- ஆறு திருமுகமும், பன்னிரு
திருக்கண்களும்,
பன்னிரு
திருக்கரங்களும் கொண்டு, தேவ கணங்களால் உபாசனை செய்யப்பட்டு, நல்லவர்களால்
பூசிக்கப்பட்டு,
வலக்கரங்களில்
சத்தி,
மணி, வாள், தாமரை, சேவல், அபயமும், இடக்கரங்களில்
பாசம்,
தண்டம், டங்கம், பாணம், வில், வரதம் இவைகளை
ஏந்தி நின்ற திருவுருவம்.
7. கார்த்திகேய சுவாமி --- ஆறு திருமுகங்களும், ஆறு
திருக்கரங்களும், பாலசூரியப் பிரகாசமும், வலக்கரங்களில் சத்தி, வாள், அபயமும், இடக்கரங்களில்
குலிசம்,
கேடகம், வரதமும் தாங்கி, சாதுக்கள் வழிபட
விளங்குகின்ற திருவுருவம்.
8. குமார சுவாமி --- ஒரு திருமுகமும்
நான்கு திருக்கரங்களும், வலக்கரங்களில் சத்தி வாள், இடக்கரங்களில்
கொடி,
கேடகம்
உடையவராய் விளங்குகின்ற திருவுருவம்.
9. சண்முக சுவாமி --- சிந்தூர காந்தி
நிறமும்,
மயில்
வாகனமும்,
ஆறு
திருமுகங்களும்,
தெய்வயானை
சமேதமும்,
பன்னிரு
திருக்கண்களும்,
பன்னிரு
திருக்கரங்களும் கொண்டு, வலக்கரங்களில் சத்தி, பாணம், வாள், தண்டு, அபயமும், இடக்கரங்களில்
வில்,
வச்சிரம், தாமரை, கேடகம், வரதம், சூலம் இவைகளைத்
தாங்கி,
அருள்
வடிவாய் நின்ற திருவுருவம்.
10. தாரகாரி சுவாமி --- பன்னிரு
திருக்கரங்களிலும் இடத்தில் முறையே வரதம், அங்குசம், சேவல்கொடி, கேடகம், வில், வச்சிரம், வலத்தில் அபயம், பாசம், சக்கரம், கட்கம், உலக்கை, சத்தி இவைகளைத்
தாங்கி தாரகனை வதைத்த திருவுருவம்.
11. சேனானி சுவாமி --- ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக்கரங்களும், வலத்தில் அபயம், வாள், சக்கரம், அங்குசம், சத்தி, சூலம், இடத்தில் வரதம்
குலிசம்,
பாசம், தாமரை,தண்டம், கதை இவைகளை
ஏந்திய வடிவம் கொண்டு, தேவர்களைச் சைந்யமாகக் கொண்டு நின்ற திருவுருவம்.
12. ப்ரம்ம சாஸ்த்ரு சுவாமி --- ஒரு
திருமுகமும்,
நான்கு
திருக்கரங்களும், இடக்கரங்களில் வரதமும் குண்டிகையும், வலக்கரங்களில் அபயமும்
உருத்திராக்க மாலையும் உடையவராய், நான்முகக் கடவுளுக்கு உபதேசித்த திருவுருவம்.
13. வல்லீகல்யாண சுந்தர சுவாமி --- உருத்திராக்க
மாலையும்,
குண்டிகையும், வரதாபயமும் உடைய
திருக்கரங்களுடன், வள்ளியம்மையாருடன், திருமால் நீர்க்கலசத்து தாரை வார்க்க ஓமம்
செய்யப்பட்டவராய், எல்லா அமரர்களும் சேவிக்க விளங்கும் திருவுருவம்.
14. பால சுவாமி --- குழந்தை உருவாய்
மேல் தூக்கிய இரு கரங்களும், அக் கரங்களில் தாமரை மலர் இரண்டு கொண்டு
அம்மையப்பருக்கு இடையில் அமர்ந்து இருக்கும் திருவுருவம்.
15. கிரவுஞ்ச பேதன சுவாமி --- ஆறு
திருமுகங்களும்,
எட்டு
திருக்கரங்களும், அபயம் கிருபாணம் வேல் அம்பு, வரதம் குலிசம், வில்,
கேடகம் என்ற ஆயுதங்களை முறையே வலமும் இடமும் கொண்டு, தேவ சேனைகள் சூழ
கிரவுஞ்சத்தைப் பிளந்த திருவுருவம்.
16. சிகிவாகன சுவாமி --- பவள நிறமும், ஒர் திருமுகமும், நான்மு
திருத்தோள்களும், வச்சிரம் வேல், வரதம் அபயம் இவைகளுடனும், மயில் வாகனத்தில் ஊர்ந்த
வண்ணமாய் அமரர்களுடைய இடரை நீக்கிய திருவுருவம்.
செட்டி
என்று சிவகாமி தன் பதியில் கட்டு செங்கை வளை கூறும் எந்தை ---
அறுபத்து
நான்கு சத்தி பீடங்களில் சாலவும் சிறந்தது மதுரையம்பதி ஆகும்.
சேடு
தாங்கு மூவுலகினுள் சிறந்தன சத்தி
பூடம்
மூவிரு பத்து நான்கு, அவற்றின் முன்பீடம்
மாடம்
ஓங்கிய மதுரையாம், மற்றுஅது போகம்
வீடும்
வேண்டிய சித்தியும் விளைப்பது என்று எண்ணா.
சிவபெருமான் வளையல்
விற்ற வரலாறு
மதுரையை
குலபூடணன் ஆணர்டு வந்த நாளில் இது நிகழ்ந்தது. தாருக வனத்து இருடிகளின் தருக்கை
அடக்குதல் பொருட்டும், அவர்களது பன்னியரது நிறையை அளந்து காட்டும் பொருட்டும், மன்மதனைப்
பொடியாக்கியவரும், காமாதி குணம் உடையவரால் அணுக முடியாதவரும் ஆகிய கண்ணுதல்
கடவுள் அழகே திரண்டு ஓர் உருக் கொண்டால் என்னக் காபாலியாகி பிட்சாடனராய்ச்
சென்றனர்.
வேதம்
அசைக்கும் கோவணமும், மெய்யில் நீறும், உள்ளாளக்
கீதம்
இசைக்கும் கனிவாயும் உள்ளை நகையும், கிண்கிணி சூழ்
பாத
மலரும் பாதுகையும் பலிகொள் கலனும் கொண்டு இரதி
மாதர்
கணவன் தவவேடம் எடுத்தால் ஒத்து வரும் எல்லை.
அவ்
அழகிய திருமேனியைக் கண்ட இருடியர்களின் தேவியர் தத்தம் நிறை அவிழ்ந்து, அன்னம் இட
வந்தவர்களது வளைகள் கழன்று வீழ்ந்தன. "பெருமானே! எமது கணவர் முனிவதன் முன்
கழன்ற வளைகள் எடுத்திடுவீர்" என்று வேண்டினர். வேதாகமங்கட்கும் எட்டாத விமலன் "நாளை
இடுதும்" என்று நீங்கினர்.
மனைவியரது
மன வேறுபாடு அறிந்த மாதவர்கள், நிகழ்ந்ததனை அறிந்து, "நீவிர்
மதுரையில் தூய்மை மிக்க வணிகர் குலத்து பிறந்து, சோமசுந்தரக் கடவுள் வந்து
உம்மைக் கை தீண்டும் அளவும் இச் சாபத்துடன் இருப்பீராக" என்றனர்.
விரும்பிய
மடவார் நெஞ்ச
வேறுபாடு அறிந்து கேள்வர்
போருந்தல்
இன்றுஎமக்கு இங்கு ஆகீர்,
பொழில் திகழ் முதரை மன்னும்
திருந்திய
வணிகர் தூய்மை
சேர்குலத்து உதித்து அங்கு எல்லாம்
தரும்பரன்
தன்னைச் சாரும்
என்று உவர் தம்மைச் சபித்தார்.
அவு
வண்ணமே அம் மடந்தையர் அனைவரும் மதுரையம் பதியில் சிறந்த வணிகர் குலத்தில் பிறந்து, இணை அற்ற
எழிலும் கொண்டு,
கண்டார்
அதிசயிக்கும்படி வளர்ந்து, மங்கைப் பருவம் உற்று விளங்கினர். அவ் வணிகர்கள்
வேறு ஆண் சந்ததி இன்றி வருந்தி, அச் செல்வப் புதல்வியரை வளர்த்தனர். அவர்கள்
செய்த நல்வினைப் பயனால் மூவரும் தேவரும் காணாத முழுமுதல் கடவுள்,
கங்கை
கரந்து,மணி கண்டம்
கரந்து, நுதல்கண் கரந்து, ஒருபால்
மங்ளை
வடிவம் கரந்து,
உழையும்
மழுவும் கரந்து, மழவிடை ஊர்
அங்கண்
அழகர் வளை வணிகர் ஆகி, ஏனம் அளந்து அறியாச்
செங்கமலச்
சேவடி இரண்டும் திரைநீர் ஞாலமகள் சூட,
(கங்கையையும், காள
கண்டத்தையும்,
நெற்றிக்
கண்ணையும் உமாதேவியாரையும் மறைத்து, தபது திருவடிகள் நிலம் சூட) வளையல் செட்டியாராய், தோள்களில்
வளையல் சுமந்து,
"வளையல்
கொள்ளும்,
வளையல்
கொள்ளும்" என்று கூறி வந்து அருளினார்.
பண்டு
கவர்ந்த வளையல்களையே சுமந்து, வளையால் வளைக்க வந்த வள்ளலைக் கண்ட மடநல்லார்
உள்ளம் உருகி,
உரை
குழறி,
உடல்
பதறி நின்றனர். அனைவரும் ஒருங்கு கூடி, "எனக்கு வளையல் இடும், எனக்கு முந்தி
இடும்" என்று தத்தம் கரமலர்களை நீட்டுவார். இறைவன் அவர்களது கரங்களைப்
பிடித்து வளையல் இடுபவரைப் போலப் பிசைந்தும், வருடியும் உள்ளம்
கவர்ந்தனர். அவர்கள் உருகிய உள்ளத்தராய் "ஐயா! எமக்கு வளையல் இடும்"
என்பார். சிலர் வளையல் இட்டுக் கொண்டு மீண்டும் வந்து, அவரது திருக்கரத்தைத்
தொடும் பொருட்டு, உள்ளே போய், இட்ட வளையலை உடைத்து விட்டு வந்து, "ஐயா! எனக்கு
வளையல் இடவில்லை. விரைவில் இடும்" என்று கொஞ்சிக் கெஞ்சுவார்.
சிலர்
முன் இட்டதைக் கழற்றிவிட்டு, "ஐயா முன் இட்ட வளையல் மிகவும் பெரிது.
இன்னும் சிறிதாக இடும்" என்பர். இட்டபின், ஐயையோ சிறியதாக இட்டீர்.
வேண்டா,
பெரிதாக
இடும் என்பார். சிலர், "இதுபோன்ற வளையலை
இதுகாறும் யாங்கள் எவ்விடத்தும் கண்டதே இல்லை. அம்மம்மா! இவைகள் அத்துணை அழகாக
இருக்கின்றன!" என்பார். சிலர், "இவர் வளை இட
வந்தவர் அல்லர். நம்மை மயக்கித் தளையிட வந்தவர்" என்பர். லர் "நாளைக்கும் வருவீரா" சொல்லும்
என்பார். சிலர் "இவரை இதுகாறும் கண்டதே இல்லையே! நம்மை உய்விக்க வந்த தெய்வம்"
என்பார். சிலர்,
"காமனே
இவ்வுருவுடன் வந்தனன் போலும்" என்பார். சிலர் அவிழ்ந்த கூந்தலை முடிக்காமல்
பெருமானைப் பார்த்துப் பார்த்து உருகி நின்றனர். சிலர் "இவ் வளை என்ன விலை"
என்று வினவுவர். வளையல் விற்கும் வள்ளல், "ஒரு வளை ஆயிரம்
பொன்" என்பர். "எம்மையும்
இதற்கு விலையாகத் தருவோம்; தாங்கள் எந்த ஊர்? என்ன பேர்? கூறுவீர்"
என்று அம் மகளிர் கரும்பினும் இனிமையாகக் கேட்டனர்.
பெருமான்
"மடந்தையீர்! எமக்கு உறைவிடம் இவ்வூர் தான்.
என் பெயர் சொக்கன். என் மைந்தன் ஆறுமுகச் செட்டி. குபேரக் கோனுக்கு என்னை
நன்றாகத் தெரியும். கங்கை ஆடினேன் (கங்கையைச் சூடி உள்ளேன்), குமரி ஆட
வந்தனன். (சிலேடை --- 1. கன்னியாகுமரித் துறை ஆட வந்தேன். 2. குமரிப் பெண்களாகிய உம்முடன் ஆட வந்தேன்)
கிழவன் - எல்லாவற்றிற்கும் உரியவன். பிறப்பு இல்லாதவன். அதனால் சுற்றமும் இல்லை.
இவ் வளைகளின் விலையை நாளை வந்து பெற்றுக் கொள்வோம் என்று சதுரப் பாடாக இனிமையாகக்
கூறி திருவுரு மறைந்து அருளினார். இறைவன்
திருக்கரம் பட்ட அளவில் அத்துணை மாதரும் கருக் கொண்டனர். ஒன்றும் உணராது திகைத்து
வருந்தினர்.
அதுகண்ட
வணிகர்கள் மானமும் சீலமும் தங்களை அலைப்ப, இத்துடன் எமது குலம்
முடிவுற்றது. இனி நாம் வாழ்வது இயல்பு அன்று என்று கூறி தழல் மூட்டி, அதில் விழுந்து
இறக்க முயன்றனர்.
அத்
தருணத்தில்,
ஆலமுண்ட
நீலகண்டர் அருள்மழை பொழிந்து, வான வெளியில் கணங்கள் சூழ விடையின் மீது பச்சைக்
கொடியுடன் நின்ற பவள மலைபோல் அம்பிகையுடன் தோன்றினார். அமரர் மலர் பொழிந்தனர். முனிவர்
மறைகளை மொழிந்தனர். அரம்பையர் ஆடினர். நாரதாதியர் பாடினர். "வணிகர்களே! வருந்தன்மின்.
இம் மகளிர் முந்திய பிறப்பில் இருடிமாதர். சாபத்தால் வந்து நும்பால் பிறந்தனர். அப்போது கழன்ற வளைகளை யாமே வந்து இட்டோம். நமது
பரிசத்தாலும்,
உமது
ஒப்பற்ற தவத்தாலும் கருவுற்றனர். எல்லாக் குலத்தினும் உமது குலம்
உயர்வுற்றது" என்று கூறி மறைந்தனர்.
அருளுடைச்
சொக்கன் அஞ்சி அவ்வயின் விடையில் தோன்றி,
பொருவரும்
இருடிமாதர் சாபத்தால் போந்தார் நும்பால்,
பரிவொடும்
வளையல் இட்டுப் பரிசித்தோம் நாமே, சாதல்
ஒருவரும்
வேண்டா,
மற்று
எக் குலத்தினும் உயர்ந்தீர் என்ன.
அதுகேட்ட
நாய்கர்கள் அற்புதம் உற்று, ஆனந்த வெள்ளத்து அழுந்தி, ஆடியும் பாடியும், "எம் பெருமானே வந்து
எம்மை ஆட்கொண்டு அருளினர். எமது புதல்வியரது கரங்களையும் தீண்டி உய்வித்தனர். எம்
குலம் புரிந்த தவமே தவம். எந்த உலகிலும், எக்குலத்திலும், ஏவரும், தேவரும் எய்தாத
பாக்கியத்தை யாம் எய்தினோம்" என்று உள்ளம் குழைந்து உருகினர். அன்பு
பெருகினர். இறைவன் திருவிளையாடலை எண்ணி எண்ணி உவந்தனர்.
பின்னர், அம்மகளிர் உரிய
காலத்தில் அரிய மைந்தர்களைப் பெற்றனர். அளவிலாத மகிழ்ச்சி உற்றனர். பிறந்த
மைந்தர்கள் மிகுந்த பெருமையுடன், சீரும் சிறப்பும் எய்தி, இனிது வாழ்ந்தனர்.
சிறிது காலத்திற்குப் பின் அம் மகளிர் இரும்பு உண்ட நீர் எனத் திரும்பாத சிவகதி
பெற்றனர்.
வளையல்
விற்று அம் மகளிருக்கு அருள் புரிந்ததை நமது அப்பமூர்த்திகள், "வளைவிலியாய்
எல்லார்க்கும் அருள் செய்வானை" என்று பாராட்டுவாராயினர்.
இதழியும்
தும்பையும் மதியமும் கரந்து
வளைவிலை
மாக்கள் வடிவு எடுத்து அருளி,
முத்தமிழ்
நான்மறை முளைத்து அருள் வாக்கால்
வீதி
கூறி,
விதித்தமுன்
வரத்தால்
கருமுகில்
விளர்ப்ப,
வறனீர்
குளிப்பக்
கண்புதை
யாப்புத் திணஇருள் விடிய,
உடல்தொறும்
பிணித்த பாவமும் புலர,
கண்டநீள்
கதுப்பினர் கைகுவி விடித்துக்
குருகணி
செறித்த தனிமுதல் நாயகன்.. --- கல்லாடம்.
செட்டி
என்று வனம் மேவி ---
முருகப்
பெருமான் தினைவனம் போந்து, இச்சா சத்தியாகிய வள்ளியம்மையாரை மணந்து கொண்ட
வரலாற்றை இது குறிக்கின்றது. 'சிரேட்டி' என்ற சொல் 'செட்டி' என வந்தது
என்பாரும், செட்டு
உடைமையால் செட்டி என வந்தது என்பாரும் உளர். சிறந்த வடிவம் கொண்டு
வள்ளியம்மையாபிடம் போய் இரவில் நம்பி அறியாமல் கரவு செய்து, பின் அவன் வேண்ட
குறிச்சியில் வனவல்லியை மணந்து கொண்டு அருளினர்.
இனி
வளையல் செட்டியாராகப் போய், ஒரு திருவிளையாடல் புரிந்தார் என்றும் வழக்கில்
உள்ளது. கந்த புராணத்தில் இல்லை. அண்மையில் இருந்த கந்தப்பதேசிகர் தணிகை உலாவில்
குறிப்பாகக் கூறி உள்ளார். அதையும் அன்பர்கள் கண்டு மகிழ்க.
----------பட்டி வள்ளி
கைவளையல்
ஏற்றி,
இரு
காலில் வளைந்து ஏற்றி,
மைவளையும்
நெஞ்ச மயல் ஏற்றி --- வெய்ய
இருட்டு
விடியாமுன் இனத்தவர் காணாமல்
திருட்டு
வியாபாரம் செய் செட்டி --- வெருட்டிஒரு
வேடுவனாய்
ஓர் புலவன் வெண்பாவைக் கைக்கொண்டு
கோடு
திரியும் குறச் செட்டி --- பாடா நல்
கீரனைப்
பூதத்தால் கிரிக் குகையுள் கல்சிறை செய்து
ஓர்
அறிய பாவை உகந்து அணைந்து --- கீரனுக்கு
விட்டுவழி
காட்டிஇடும் வேளைண்மையாம் செட்டி,
ஆட்டில்
உவந்து ஏறும் அன்னதான செட்டி --- ஈட்டுபுகழ்
தேவேந்திரன்
மகள்பால் சிந்தைகுடி கொண்ட செட்டி
நா
வேந்தர்க்கே இன்பம் நல்குசெட்டி --- பூ ஏந்திக்
கண்டு
பணிபவர்தம் காசு பறிக்கும் செட்டி
பண்டு
அறுவர் ஊட்டு தனபால செட்டி --- தொண்டர்
மதுரையில்
சொக்கப்ப செட்டி மைந்தன் இளம் செட்டி,
குதிரை
மயிலாம் குமர செட்டி --- சதிருடனே
சீவபர
ஐக்கியம் செய்திடு கந்தப்ப செட்டி
மூவர்
வணங்கும் முருகப்ப செட்டி --- பாவனைக்கும்
அப்பாலுக்கு
அப்பால் ஆம் ஆறுமுகச் செட்டி... --- தணிகை
சந்நிதிமுறை.
கருத்துரை
குமர
குருவே! அசுரகுலாந்தகரே! சிவகுருநாதரே! சிதம்பரேசரே! சிவயோக நிலையைத் தந்து, அடியேனுக்கு உமது
திருப்புகழைப் பாட அருள் புரிவீர்.
No comments:
Post a Comment