திருக் காளத்தி - 0597. பங்கயனார் பெற்றிடும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பங்கயனார் பெற்றிடும் (திருக்காளத்தி)

முருகா!
உனது திருவருளால் தெளிந்த அறிவைத் தந்து காத்து அருள்.

தந்தன தானத் தனந்த தானன
     தந்தன தானத் தனந்த தானன
          தந்தன தானத் தனந்த தானன தனதான


பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர
     அண்டம தாயுற் றிருந்த பார்மிசை
          பஞ்சவர் கூடித் திரண்ட தோர்நர ...... உருவாயே

பந்தம தாகப் பிணிந்த ஆசையில்
     இங்கித மாகத் திரிந்து மாதர்கள்
          பண்பொழி சூதைக் கடந்தி டாதுழல் ...... படிறாயே

சங்கட னாகித் தளர்ந்து நோய்வினை
     வந்துடல் மூடக் கலங்கி டாமதி
          தந்தடி யேனைப் புரந்தி டாயுன ...... தருளாலே

சங்கரர் வாமத் திருந்த நூபுர
     சுந்தரி யாதித் தருஞ்சு தாபத
          தண்டைய னேகுக் குடம்ப தாகையின் ......முருகோனே

திங்களு லாவப் பணிந்த வேணியர்
     பொங்கர வாடப் புனைந்த மார்பினர்
          திண்சிலை சூலத் தழுந்து பாணியர் ...... நெடிதாழ்வார்

சிந்துவி லேயுற் றெழுந்த காளவி
     டங்கள மீதிற் சிறந்த சோதியர்
          திண்புய மீதிற் றவழ்ந்து வீறிய ...... குருநாதா

சிங்கம தாகத் திரிந்த மால்கெரு
     வம்பொடி யாகப் பறந்து சீறிய
          சிம்புள தாகச் சிறந்த காவென ...... வருகோமுன்

செங்கதி ரோனைக் கடிந்த தீவினை
     துஞ்சிட வேநற் றவஞ்செய் தேறிய
          தென்கயி லாயத் தமர்ந்து வாழ்வருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பங்கயனார் பெற்றிடும் சராசர
     அண்டம் அதுஆய் உற்று இருந்த பார்மிசை
          பஞ்சவர் கூடித் திரண்டது ஓர் நர ...... உருவாயே,

பந்தம் அதாகப் பிணிந்த ஆசையில்,
     இங்கிதமாகத் திரிந்து, மாதர்கள்
          பண்பு ஒழி சூதைக் கடந்திடாது உழல் ...... படிறுஆயே,

சங்கடன் ஆகித் தளர்ந்து, நோய் வினை
     வந்து, டல் மூட, கலங்கிடா மதி
          தந்து, அடியேனைப் புரந்திடாய் உனது ...... அருளாலே

சங்கரர் வாமத்து இருந்த நூபுர
     சுந்தரி, ஆதித் தரும் சுதா! பத
          தண்டையனே! குக்குடம் பதாகையின் ......முருகோனே!

திங்கள் உலா அப்பு அணிந்த வேணியர்,
     பொங்கு அரவு ஆடப் புனைந்த மார்பினர்,
          திண்சிலை சூலத்து அழுந்து பாணியர், ......நெடிது ஆழ்வார்

சிந்துவிலே உற்று எழுந்த காள வி-
     டம் கள மீதில் சிறந்த சோதியர்,
          திண்புய மீதில் தவழ்ந்து வீறிய ...... குருநாதா!

சிங்கம் அதாகத் திரிந்த மால்,கெரு-
     வம் பொடி ஆகப் பறந்து, சீறிய
          சிம்புள் அதாகச் சிறந்து, அ கா என ...... வருகோமுன்,

செங் கதிரோனைக் கடிந்த தீவினை
     துஞ்சிடவே, நல் தவம் செய்து ஏறிய
          தென் கயிலாயத்து அமர்ந்து வாழ்வு அருள்..... பெருமாளே.


பதவுரை

         சங்கரர் வாமத்து இருந்த நூபுர சுந்தரி ஆதி தரு(ம்) சுதா --- சிவபெருமானுடைய இடப் புறத்தில் விளங்கும் சிலம்பணிந்த அழகியும், ஆதிசத்தியும் ஆகிய உமாதேவியார் தந்த குமாரரே!

         பத தண்டையனே --- தண்டை அணிந்த திருப்பாதங்களை உடையவரே!

         குக்குடம் பதாகையின் முருகோனே --- கோழிக் கொடியைக் கொண்ட முருகக் கடவுளே!

         திங்கள் உலா அப்பு அணிந்த வேணியர் --- திருச்சடையில் நிலவையும், உலாவுகின்ற கங்கை நதியையும் அணிந்தவர்

         பொங்கு அரவு ஆடப் புனைந்த மார்பினர் --- சீறியெழுந்த பாம்பு ஆடும்படி அணிந்துள்ள திருமார்பை உடையவர்,

         திண் சிலை சூலத்து அழுந்து பாணியர் --- வலிமை வாய்ந்த பினாகம் என்னும் வில்லும், சூலாயுதமும் பொருந்தி உள்ள திருக்கரங்களை உடையவர்,

         நெடிது ஆழ் வார் சிந்துவிலே உற்று எழுந்த காள விடம் கள(ம்) மீதில் சிறந்த சோதியர் --- நிரம்ப ஆழமாகவும் நீண்டும் உள்ள பாற்கடலில் இருந்து தோன்றிய கரிய நஞ்சைத் தமது கண்டத்தில் விளங்கும்படி வைத்த பேரொளியினர் ஆகிய சிவபெருமானுடைய

         திண் புயம் மீதில் தவழ்ந்து வீறிய குருநாதா --- வலிய திருத்தோள்களில் தவழ்ந்து பெருமை பெற்ற குருநாதரே!

       சிங்கமதாகத் திரிந்த மால் கெருவம் பொடியாக ---நரசிங்கமாக வடிவம் கொண்டு திரிந்த திருமாலின் அகந்தை பொடிபட்டு அழியும்படியாக,

      பறந்து சீறிய சிம்புளதாகச் சிறந்து அகா என வரு கோ --- பறந்து கோபித்த சரபப் பட்சியாய் விளங்கி ஆஆ என்று ஒலித்துக் கொண்டு வீரபத்திரர் ஆகிய தலைவர்

      முன் செம்கதிரோனைக் கடிந்த தீ வினை துஞ்சிடவே --- முன்னாளில், தட்ச யாகத்தின் போது சிவந்த சூரியனை தண்டித்த தீவினையானது நீங்கும் பொருட்டு,

      நல் தவம் செய்து ஏறிய --- நல்ல தவத்தைச் செய்து சிறப்படைந்த

      தென் கயிலாயத்து அமர்ந்து வாழ்வு அருள் பெருமாளே --- தென் கயிலாயமாகிய திருக்காளத்தியில் வீற்றிருந்து அடியார்களுக்கு வாழ்வு அருளுகின்ற பெருமையில் சிறந்தவரே!

      பங்கயனார் பெற்றிடும் சர அசரம் --- தாமரை மலரில் உள்ள பிரம தேவன் படைத்துள்ள அசைகின்றன, அசையாதனவாய் உள்ள  

      அண்டமதாய் உற்று இருந்த பார் மிசை --- உருண்டை வடிவுடன் பொருந்தியுள்ள இந்தப் பூமி மேல்

      பஞ்சவர் கூடித் திரண்டது ஓர் நர உருவாயே ---ஐம்பூதங்களும் கூடி ஒன்றாகி ஒரு மனித உருவம் அமைந்து,

      பந்தமது ஆகிப் பிணிந்த ஆசையில் இங்கிதமாகத் திரிந்து --- பாசத்தால் கட்டுண்ட ஆசையால் இன்பமுற்றுத் திரிந்து,

      மாதர்கள் பண்பு ஒழி சூதைக் கடந்திடாது உழல் படிறு ஆயே --- பொதுமாதர்களின் நற்குணம் இல்லாத வஞ்சகச் சூழலைக் கடந்திடாமல் திரிகின்ற, பொய்யன் ஆகி,

      சங்கடன் ஆகித் தளர்ந்து --- வேதனைப் படுபவனாய், சோர்வடைந்து,

     நோய் வினை வந்து உடல் மூட --- நோயும் பழைய வினையும் வந்து உடலை மூட,

      கலங்கிடா மதி தந்து --- --- அதனால், கலக்கம் அடையாத அறிவைத் தந்து,

     உனது அருளாலே --- தேவரீர் திருவருளால்

     அடியேனைப் புரந்திடாய் --- அடியேனைப் பாலித்துக் காப்பாற்றுவீராக.


பொழிப்புரை

         சிவபெருமானுடைய இடப் புறத்தில் விளங்கும் சிலம்பணிந்த அழகியும், ஆதிசத்தியும் ஆகிய உமாதேவியார் தந்த குமாரரே!

         தண்டை அணிந்த திருப்பாதங்களை உடையவரே!

         கோழிக் கொடியைக் கொண்ட முருகக் கடவுளே

         திருச்சடையில் நிலவையும், உலாவுகின்ற கங்கை நதியையும் அணிந்தவர், சீறியெழுந்த பாம்பு ஆடும்படி அணிந்துள்ள திருமார்பை உடையவர்,  வலிமை வாய்ந்த பினாகம் என்னும் வில்லும், சூலாயுதமும் பொருந்தி உள்ள திருக்கரங்களை உடையவர்,  நிரம்ப ஆழமாகவும் நீண்டும் உள்ள பாற்கடலில் இருந்து தோன்றிய கரிய நஞ்சைத் தமது கண்டத்தில் விளங்கும்படி வைத்த பேரொளியினர் ஆகிய சிவபெருமானுடைய வலிய திருத்தோள்களில் தவழ்ந்து பெருமை பெற்ற குருநாதரே!

         நரசிங்கமாக வடிவம் கொண்டு திரிந்த திருமாலின் அகந்தை பொடிபட்டு அழியும்படியாக, பறந்து கோபித்த சரபப் பட்சியாய் விளங்கி ஆஆ என்று ஒலித்துக் கொண்டு வீரபத்திரர் ஆகிய தலைவர், முன்னாளில், தட்ச யாகத்தின் போது சிவந்த சூரியனை தண்டித்த தீவினையானது நீங்கும் பொருட்டு, நல்ல தவத்தைச் செய்து சிறப்படைந்த, தென் கயிலாயமாகிய திருக்காளத்தியில் வீற்றிருந்து அடியார்களுக்கு வாழ்வு அருளுகின்ற பெருமையில் சிறந்தவரே!

         தாமரை மலரில் உள்ள பிரம தேவன் படைத்துள்ள அசைகின்றன, அசையாதனவாய் உள்ள உருண்டை வடிவுடன் பொருந்தியுள்ள இந்தப் பூமி மேல் ஐம்பூதங்களும் கூடி ஒன்றாகி ஒரு மனித உருவம் அமைந்து, பாசத்தால் கட்டுண்ட ஆசையால் இன்பமுற்றுத் திரிந்து, பொதுமாதர்களின் நற்குணம் இல்லாத வஞ்சகச் சூழலைக் கடந்திடாமல் திரிகின்ற, பொய்யன் ஆகி, வேதனைப் படுபவனாய், சோர்வடைந்து, நோயும் பழைய வினையும் வந்து உடலை மூட, அதனால், கலக்கம் அடையாத அறிவைத் தந்து, தேவரீர் திருவருளால் அடியேனைப் பாலித்துக் காப்பாற்றுவீராக.

விரிவுரை

பங்கயனார் பெற்றிடு சராசர ---

பங்கஜம் என்ற வடசொல் தமிழில் பங்கயம் என்று வந்தது.  பங்கம் - சேறு. ஜம் - தோன்றுவது. சேற்றில் பிறப்பதனால் பங்கஜம் எனப் பேர் பெற்றது.

தாமரை மலரில் வாழ்வதனால், பிரமதேவர் பங்கயன் எனப் பேர் பெற்றார்.

உலகம் அசையும் உயிர்களாகவும், அசையாத உயிர்களாகவும் இருக்கின்றது. அதனால் சராசரப் பிரபஞ்சம் எனப்படும்.

இல்லது தோன்றாது. உள்ளது சிதையாது என்பது சற்காரிய வாதம். சராசரப் பிரபஞ்சங்களை பிரமதேவர் சூட்சுமத்தில் இருந்து தூலத்துக்குக் கொண்டு வருகின்றார். அதனால் பிரமதேவன் படைப்புத் தொழிலுக்குக் கர்த்தராக விளங்குகின்றார்.

அண்டமதா யுற்றிருந்த பார் ---

உலகம் உருண்டை வடிவாக இருப்பதனால் அண்டம் என்று பேர் பெற்றது.  உலகம் உருண்டை என்பதை நமது முன்னோர்கள் முன்னரேயே கண்டுள்ளார்கள்.


பஞ்சவர் கூடித் திரண்டதோர் நரவுருவாயே ---

மண், நீர், கனல், காற்று, விண் என்ற ஐம்பூதங்களின் பரிணாமத்தால் இந்த மனித உடம்பு உண்டாயிற்று.  அதனால், இந்த உடம்பு பூத பரிணாம தநு என்று பேர் பெற்றது.

ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால்
ஆகின்ற யாக்கை....                      ---  தாயுமானார்.

நரை என்ற ஒரு தன்மை உண்டாவதால், நரர் என்ற பேர் உண்டாயிற்று. மனிதனைத் தவிர வேறு எந்த பிராணிக்கும் நரை கிடையாது. பன்றி, காக்கை, யானை, எருமை இவைகட்கு எப்போதும் கருமயிர் தான்.

மனிதனுக்கு மட்டும்தான் நரையுண்டு.

நரை என்பது மனிதனுக்குக் கூற்றுவன் விடுகின்ற ஓர் எச்சரிக்கை.

நரை கண்டதும் மனிதன் ஆசாபாசங்களினின்றும் கழன்று உய்யும் நெறி தேடவேண்டும்.

தயரதச் சக்கரவர்த்தி, தன் தலையில் காதின் ஓரம் ஒரு நரை மயிர் இருக்கக் கண்டவுடன், மகனுக்கு முடி சூட்டி துறவறம் மேற்கொள்ளத் துணிந்தார்.

ஆதலால், ஒவ்வொரு மயிர் வெளுக்கும் தோறும் ஒவ்வொரு ஆசையினின்றும் மனிதன் விலகி, விடுதலை பெறவேண்டும்.

பந்தமதாகப் பிணிந்த ஆசையில் ---

பந்தம் - கட்டு.  ஆசையாகிய சங்கிலியால் மனிதன் கட்டுண்டு கவல்கின்றான்.  ஆசா நிகளம் என்கின்றார் அநுபூதியில்.

துன்பங்கள் ஆசையினால் விளைகின்றன.  ஆசையில்லையேல் அல்லல் இல்லை.  அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் என்கின்றார் திருவள்ளுவர்.

இங்கிதமாகத் திரிந்து ---

மயக்க உணர்வினால் துன்பத்தை இன்பமெனக் கருதி மூடர்கள் திரிகின்றார்கள்.  விளக்கில் விழும் விட்டில் பூச்சியைப் போல்.

சங்கடனாகித் தளர்ந்து ---

மாதர்களின் வசப்பட்டுத் திரிந்தவர்கள் முடவில் பலப்பல துன்பங்களை நுகர்வார்கள்.

நேய்வினை வந்துடல் மூட ---

நோயும் பழவினைகளும் வந்து உடலை மூடிக்கொண்டு வேதனையைச் செய்யும்.

கலங்கிடா மதி தந்து அடியேனைப் புரந்திடாய்
உனதருளாலே ---

எதற்கும் கலங்காத அறிவைப் பெறவேண்டும். இடுக்கண் வருங்கால் அதைக்கண்டு கலங்காது புன்னகை புரிய வேண்டும். துன்பங்களை வரவேற்று நுகர்தல் அறிவுடையார் துணிவு.  இந்தக் கலங்காத அறிவை அடிகளார் முருகனிடம் யாசிக்கின்றார்.

பெருமானே, உமது திருவருளால் சலியாத வலிவுள்ள அறிவைத் தந்து அடியேனைக் காத்தருள் என்று வேண்டுகின்றார்.

சங்கரர் வாமத்து இருந்த நூபுர சுந்தரி ---

சம் - சுகம்.  கரம் - செய்வது.  சுகத்தைச் செய்கின்றவர் சங்கரர்.  சங்கரரின் இடப்புறத்தில் எழுந்தருளிய சிலம்பணிந்த பேரழகி பார்வதி தேவியார்.

பத தண்டையனே ---

முருகன் என்றும் அகலாத இளம் பூரணன்.  அதனால் திருவடியில் தண்டை விளங்குகின்றது.  குழந்தைகள் அணியும் அணி தண்டை.

குக்குட பதாகையின் முருகோனே ---

கு - பூமி.  குடம் - பேதிப்பது.

பூமியைக் காலினால் பேதிப்பதால் கோழி, குக்குடம் என்று பேர் பெற்றது.  சேவல் வீரம் மிக்கது.  போரில் சளைக்காதது.  அதனால் முருகனுக்கு சேவல் கொடி வீறுபெற்று விளங்குகின்றது.

திங்கள் உலா அப்பு அணிந்த வேணியர் ---

திங்கள் உலா அப்பு அணிந்த வேணியர்.  உலாவுகின்ற அப்பு - கங்கை.   அல்லது திங்கள் உலாவப் பணித்த வேணியர் என்றும் பொருள் கொள்ளலாம். பணித்த என்ற சொல் பணிந்த என்று வந்தது.

சிங்கமதாகத் திரிந்தமால் கெருவம் பொடியாக ---

இரணியனை வதைக்கும் பொருட்டு திருமால் நரசிங்கமாகத் தோன்றினார்.  இரணியன் உதிரத்தைக் குடித்து வெறி கொண்டு, தருக்குற்று உலகங்களைக் கலக்கித் துன்பத்தை உண்டாக்கினார்.

அப்போது, சிவபெருமானுடைய ஆணையினால் வீரபத்திரர் சரபப் பறவையாக வந்து, நரசிங்கத்தை அடக்கியருளினார்.

பறந்து சீரிய சிம்புளதாக சிறந்தகாவென ---

சிம்புள் - சரபம்.  இது சிங்கத்தை அடக்கும் எட்டுக் கால்களை உடைய வலிமையில் நிகரற்ற பறவை.

சரபேசுரர் என்று பேர் பெற்ற திருமூர்த்தி.  திருவிடைமருதூருக்கு அடுத்துள்ள திருப்புவனம் என்ற திருத்தலத்தில் காட்சி தருகின்றார்.

சிறந்து அகா என - எனப் பதப்பரிவு செய்க.
  
கருத்துரை

தென் கயிலாயமாகிய திருக்காளத்தியில் வாழும் திருமுருகா, கலங்காத அறிவைத் தந்து அருள் செய்வீர்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...