சிதம்பரம் - 0640. திருடிகள் இணக்கி
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

திருடிகள் இணக்கி (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
விலைமாதர் உறவு நீங்க அருள்


தனதன தனத்தத் தந்த தந்தன
     தனதன தனத்தத் தந்த தந்தன
          தனதன தனத்தத் தந்த தந்தன ...... தனதான

திருடிக ளிணக்கிச் சம்ப ளம்பறி
     நடுவிகள் மயக்கிச் சங்க முண்கிகள்
          சிதடிகள் முலைக்கச் சும்பல் கண்டிகள் ...... சதிகாரர்

செவிடிகள் மதப்பட் டுங்கு குண்டிகள்
     அசடிகள் பிணக்கிட் டும்பு றம்பிகள்
          செழுமிக ளழைத்திச் சங்கொ ளுஞ்செயர் ...... வெகுமோகக்

குருடிகள் நகைத்திட் டம்பு லம்புக
     ளுதடிகள் கணக்கிட் டும்பி ணங்கிகள்
          குசலிகள் மருத்திட் டுங்கொ டுங்குணர் ......விழியாலே

கொளுவிகள் மினுக்குச் சங்கி ரங்கிகள்
     நடனமு நடித்திட் டொங்கு சண்டிகள்
          குணமதில் முழுச்சுத் தசங்க்ய சங்கிக ...... ளுறவாமோ

இருடிய ரினத்துற் றும்ப தங்கொளு
     மறையவ னிலத்தொக் குஞ்சு கம்பெறு
          மிமையவ ரினக்கட் டுங்கு லைந்திட ...... வருசூரர்

இபமொடு வெதித்தச் சிங்க மும்பல
     இரதமொ டெதத்திக் கும்பி ளந்திட
          இவுளியி ரதத்துற் றங்க மங்கிட ...... விடும்வேலா

அரிகரி யுரித்திட் டங்க சன்புர
     மெரிதர நகைத்துப் பங்க யன்சிர
          மளவொடு மறுத்துப் பண்ட ணிந்தவ ...... ரருள்கோனே

அமரர்த மகட்கிட் டம்பு ரிந்துநல்
     குறவர்த மகட்பக் கஞ்சி றந்துற
          அழகிய திருச்சிற் றம்ப லம்புகு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


திருடிகள், ணக்கிச் சம்பளம் பறி
     நடுவிகள், மயக்கிச் சங்கம் உண்கிகள்,
          சிதடிகள், முலைக் கச்சு உம்பல், கண்டிகள், ......சதிகாரர்,

செவிடிகள், மதப்பட்டு உங்கு குண்டிகள்,
     அசடிகள், பிணக்கிட்டும் புறம்பிகள்,
          செழுமிகள், ழைத்து இச்சம் கொளும்செயர், ......வெகுமோகக்

குருடிகள், நகைத்து இட்டம் புலம்பு கள்
     உதடிகள், கணக்கு இட்டும் பிணங்கிகள்,
          குசலிகள், மருத்து இட்டும் கொடும் குணர், .....விழியாலே

கொளுவிகள், மினுக்குச் சங்கு இரங்கிகள்,
     நடனமும் நடித்திட்டுஒங்கு சண்டிகள்,
          குணமதில் முழுச் சுத்த அசங்க்ய சங்கிகள் ...... உறவு ஆமோ?

இருடியர் இன துற்றும் பதம் கொளும்
     மறையவன் நிலத் தொக்கும், சுகம் பெறும்
          இமையவர் இனக் கட்டும் குலைந்திட ...... வருசூரர்,

இபமொடு வெதித்தச் சிங்கமும் பல
     இரதமொடு எத திக்கும் பிளந்திட,
          இவுளி இரதத்து உற்று அங்கம் மங்கிட ......விடும்வேலா!

அரி கரி உரித்திட்டு, ங்கசன் புரம்
     எரிதர நகைத்து, பங்கயன் சிரம்
          அளவொடும் அறுத்துப் பண்டு அணிந்தவர் ......அருள் கோனே!

அமரர் தம் மகட்கு இட்டம் புரிந்து, நல்
     குறவர்தம் மகள் பக்கம் சிறந்து உற
          அழகிய திருச்சிற்றம்பலம் புகு ...... பெருமாளே.


பதவுரை

      இருடியர் இனம் துற்றும் --- முனிவர்களின் இனத்தோர் கூட்டமும்,

     பதம் கொளும் மறையவன் நிலத் தொக்கும் --- பதவியில் இருக்கும் பிரமன் படைத்த மண்ணுலகோர் கூட்டமும்,

     சுகம்பெறும் இமையவர் இனக்கட்டும் --- சுகம் பெற்றிருந்த தேவர் கூட்ட மிகுதியும்,

     குலைந்திட வருசூரர் --- எல்லாம் நிலை குலையும்படி வந்த சூரர்கள்,

     இபமொடு வெதித்த --- யானைக் கூட்டங்களுடன் பகைகொள்ளும்

     சிங்கமும் --- சிங்கங்களும்,

     பல இரதமொடு --- சிங்கங்கள் பூட்டிய பல தேர்களும்,

     எதத் திக்கும் பிளந்திட --- எந்தத் திக்குகளிலும் பிளவுபட்டு அழியவும்,

     இவுளி இரதத்து உற்று அங்க மங்கிட --- தேரில் பூட்டப்பட்ட  குதிரைகளின் உடல்கள் நாசம் அடைந்து அழியவும்

     விடும் வேலா --- செலுத்திய வேலாயுதரே!

      அரி --- நரசிங்கத்தையும்

     கரி உரித்திட்டு --- யானையையும் தோல் உரித்து,

     அங்கசன் --- மன்மதனும்

     புரம் --- திரிபுரங்களும்

     எரிதர நகைத்து --- எரிபட்டு அழியச் சிரித்து,

     பங்கயன் சிரம் அளவொடும் அறுத்து --- பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்றை ஒரு கணக்காக அறுத்து,

     பண்டு அணிந்தவர் அருள் கோவே --- முன்பு அந்த பிரம கபாலத்தை அணிந்தவராகிய சிவபெருமான் தந்தருளிய தலைவரே!

      அமரர் தம் மகட்கு இட்டம் புரிந்து --- தேவர்களின் மகளான தேவயானையிடம் விருப்பத்தை வைத்து,

     நல்குறவர் த(ம்) மகள் பக்கம் சிறந்து உற --- நல்ல குறப் பெண்ணாகிய வள்ளிநாயகி வலப் புறத்தில் சிறப்பாக வீற்றிருக்க,

     அழகிய திருச்சிற்றம்பலம் புகு பெருமாளே --- அழகிய திருச்சிற்றம்பலத்திலே புக்கு விளங்கும் பெருமையில் சிறந்தவரே!

      திருடிகள் --- களவு செய்பவர்கள்,

     இணக்கிச் சம்பளம் பறி --- (வந்தவர்களைத் தம் விருப்பப்படி) இணங்க வைத்துப் பொருள் பறிக்கின்ற

     நடுவிகள் --- யார் பக்கமும் சேராது நடுநிலை பூண்டவர்கள்,

     மயக்கிச் சங்கம் உண்கிகள் --- தம் விருப்பப்படி மயங்க வைத்துக் கலவி செய்பவர்கள்,

      சிதடிகள் --- அறிவிலிகள்,

     முலைக் கச்சு உம்பல் --- கச்சு அணிந்த யானை போன்ற மார்பகங்களைக் கொண்டவர்கள்,

     கண்டிகள் ---  கடிந்து கூறும் பேச்சு உடையவர்கள்,

     சதிகாரர்  --- எப்போதும் சதி செய்பவர்கள்,

     செவிடிகள் --- காது கேளாதவர்கள் போல் நடிப்பவர்கள்,

     மதப்பட்டு உங்கும் குண்டிகள் --- அகங்காரம் கொண்டு ஊங்கார ஒலியை எழுப்பி அதட்டும் இழிந்தவர்கள்,

      அசடிகள் --- முட்டாள்கள்,

      பிணக்கிட்டும் புறம்பிகள் --- ஊடல் கொள்ளும் குல ஒழுக்கத்துக்குப் புறம்பானவர்கள்,

     செழுமிகள் --- செழிப்பான அழகு கொண்டவர்கள்,

     அழைத்து இச்சம் கொள்ளும் செய்யர் --- வருபவர்களை அழைத்து தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும் செயல் திறத்தைக் கொண்டவர்கள்,

     வெகு மோகக் குருடிகள் ---  மிக்க காமம் பூண்ட, அறிவுக் கண் இல்லாதவர்கள்,

      நகைத்து இட்டம் புலம்பு கள் உதடிகள் --- சிரித்துக் கொண்டே தமது விருப்பத்தை அடிக்கடி வெளியிடுகின்ற கள்ளுண்ட உதட்டினர்கள்,

     கணக்கிட்டும் பிணங்கிகள் --- பெற்ற பொருளைக் கணக்குப் பார்த்துப் பார்த்துப் பிணக்கம் கொள்ளுபவர்கள்,

     குசலிகள் --- தந்திரவாதிகள்,

     மருத்து இட்டும் கொடும் குணர் --- (வருபவரின் உணவில்) மருந்து வைத்து மயக்கும் கொடிய குணம் படைத்தவர்கள்,

     விழியாலே கொளுவிகள் --- கண் பார்வையைக் கொண்டே தம் பக்கம் இழுத்துக் கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள்,

      மினுக்குச் சங்கு இரங்கிகள் --- மினுக்கப்பட்ட சங்கு வளையல்கள் ஒலித்தலை உடையவர்கள்,

     நடனமு(ம்) நடித்திட்டு ஒங்கு சண்டிகள் --- நடனம் செய்து விளங்கும் பிடிவாத குணம் படைத்தவர்கள்,

     குணம் அதில் முழுச் சுத்த அசங்க்ய சங்கிகள் உறவு ஆமோ --- குணத்தைப் பற்றிக் கூறுங்கால் முழுமையும் கணக்கற்ற பேர்களுடன் சம்பந்தம் உடையவர்கள் ஆகிய விலைமாதர்களின் உறவு ஆகுமோ? ஆகாது.


பொழிப்புரை


         முனிவர்களின் இனத்தோர் கூட்டமும்,  பதவியில் இருக்கும் பிரமன் படைத்த மண்ணுலகோர் கூட்டமும், சுகம் பெற்றிருந்த தேவர் கூட்ட மிகுதியும், எல்லாம் நிலை குலையும்படி வந்த சூரர்கள், யானைக் கூட்டங்களுடன் பகைகொள்ளும் சிங்கங்களும், சிங்கங்கள் பூட்டியபல தேர்களும், எந்தத் திக்குகளிலும் பிளவுபட்டு அழியவும், தேரில் பூட்டப்பட்ட  குதிரைகளின் உடல்கள் நாசம் அடைந்து அழியவும் செலுத்திய வேலாயுதரே!

         நரசிங்கத்தையும் யானையையும் தோல் உரித்து, மன்மதனும் திரிபுரங்களும் எரிபட்டு அழியச் சிரித்து, பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்றை ஒரு கணக்காக அறுத்து, முன்பு அந்த பிரம கபாலத்தை அணிந்தவராகிய சிவபெருமான் தந்தருளிய தலைவரே!

         தேவர்களின் மகளான தேவயானையிடம் விருப்பத்தை வைத்து, நல்ல குறப் பெண்ணாகிய வள்ளிநாயகி வலப் புறத்தில் சிறப்பாக வீற்றிருக்க, அழகிய திருச்சிற்றம்பலத்திலே புக்கு விளங்கும் பெருமையில் சிறந்தவரே!

         வந்தவர்களைத் தம் விருப்பப்படி இணங்க வைத்துப் பொருள் பறிக்கின்ற களவு செய்பவர்கள், திருடுவோர். தம் விருப்பப்படி கைப் பொருளைப் பறிக்கும் நீதி பூண்டவர்கள், மயங்க வைத்துக் கலவி செய்பவர்கள், அறிவிலிகள், கச்சு அணிந்த யானை போன்ற மார்பகங்களைக் கொண்டவர்கள், கடிந்து கூறும் பேச்சு உடையவர்கள், எப்போதும் சதி செய்பவர்கள், காது கேளாதவர்கள் போல் நடிப்பவர்கள். அகங்காரம் கொண்டு ஊங்கார ஒலியை எழுப்பும் இழிந்தவர்கள், முட்டாள்கள்,  ஊடல் கொள்ளும் குல ஒழுக்கத்துக்குப் புறம்பானவர்கள், செழிப்பான அழகு கொண்டவர்கள். வருபவர்களை அழைத்து தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும் செயல் திறத்தைக் கொண்டவர்கள், மிக்க காமம் பூண்ட, அறிவுக் கண் இல்லாதவர்கள், சிரித்துக் கொண்டே தமது விருப்பத்தை அடிக்கடி வெளியிடுகின்ற கள்ளுண்ட உதட்டினர்கள், (பெற்ற பொருளைக்) கணக்குப் பார்த்துப் பார்த்துப் பிணக்கம் கொள்ளுபவர்கள், தந்திரவாதிகள், (வருபவரின் உணவில்) மருந்து வைத்து மயக்கும் கொடிய குணம் படைத்தவர்கள், கண் பார்வையைக் கொண்டே தம் பக்கம் இழுத்துக் கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள், மினுக்கப்பட்ட சங்கு வளையல்கள் ஒலித்தலை உடையவர்கள், நடனம் செய்து விளங்கும் பிடிவாத குணம் படைத்தவர்கள், குணத்தைப் பற்றிக் கூறுங்கால் முழுமையும் கணக்கற்ற பேர்களுடன் சம்பந்தம் உடையவர்கள் ஆகிய விலைமாதர்களின் உறவு ஆகுமோ? ஆகாது.

விரிவுரை

இத் திருப்புகழில் முதல் நான்கு அடிகளும் பொதுமாதர்களின் இழிவை இயம்புகின்றன.

நடுவிகள் --- 

எவ்வளவு பணம் தரினும், கீழ் மக்களிடத்தும் சமமாக நடப்பவர்கள்.

நடுவன் - இயமன்.  இதற்குப் பெண்பாலாகக் கொண்டு இயமனைப் போன்றவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

குண்டிகள் ---

குண்டர்கள் என்பதன் பெண்பால் பெயர்.

இருடியர் ….... குலைந்திட வருசூரர் ---

முனிவர்களும், மண்ணகத்தோரும், விண்ணகத்தோரும் நிலைகுலையுமாறு சூராதியவுணர்கள் கொடுமை புரிந்து வந்தனர்.

அரி ---

இது நரசிம்மத்தைக் குறிக்கும். சிவபெருமான் நரசிங்கத்தின் தோலை உரித்துத் தரித்தருளினார்.

அங்கசன் புரம் எரிதர நகைத்து ---

மன்மதனும் திரிபுரமும் எரியுமாறு சிரித்தவர்.

புரம் - உடம்பு. மன்மதனுடைய உடல் எரியுமாறு என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.

"எந்தாய்! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை யான் நோக்கி, மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர்.  அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை, கிரியை, யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, ஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி, தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபன்மன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார்.  இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.

இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய், அருவமும், உருவமும், உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றார், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"

ஆவிகள் அனைத்தும் ஆகி, அருவமாய் உருவமாகி
மூவகை இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்
தேவர்கள் தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,
ஏவர்கள் காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும்நீரார்.

"சிவமூர்த்தியின் பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபன்மனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், சிவபெருமானுடைய பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன் பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாக்கும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால், உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன் மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார்.  இதுவே செய்யத்தக்கது" என்றார்.

அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார்.

திருமால், "பிரதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார். மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை உணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.

கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்
மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,
அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே
எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்.

பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருனாது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா?

மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி, திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.

"அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது".

"சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில், வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".

"திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"

"தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"

"முன் ஒரு நாள், தாங்களும், நாராயணமூர்த்தியும் 'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"

"சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"

"உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"

"திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"

"உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே!"

"தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யனை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள் உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"

"சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ?
இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."

இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெரு மூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு யாராவது  ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமமோ? ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்.

ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,
ஓவில் குறை ஒன்று அளரேல், அது முடித்தற்கு
ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்
பாவம் அலது பழியும் ஒழியாதே.

பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ? பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபன்மனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்ச பாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.

அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான்.

பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு.  ஆராய்ந்து சொல்" என்றார்.

மனமதனை அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான்.

பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம்.  யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.

மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று, நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதனை அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது, தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று நீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்தி தேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோழ" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.

மன்மதன் திருநந்தி தேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன் திருவருள் வழியே ஆகட்டும்.  இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.

இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி, "மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான்.  எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான் மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது. 

திரிபுரம் எரித்த வரலாறு

தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் வாள்வலியாலும் தோள்வலியாலும் தலைசிறந்து ஒப்பாரும் மிக்காரும் இன்றி இருந்தனர். அவர்கள் பிரமனை நோக்கி அநேக காலம் பெருந்தவம் புரிகையில், கலைமகள் நாயகன் அவர்கட்கு முன் தோன்றி "யாது வரம் வேண்டும்?" என்ன, மூவரும் பத்மயோநியைப் பணிந்து நின்று பலவகையாகத் துதித்து “அண்ணலே! அடியேங்களுக்கு அழியா வரம் அருள வேண்டும்?” என, மலரவன், “மைந்தர்களே! அழியாதவர்களும் அழியாதவைகளும் உலகில் ஒருவரும் ஒன்றும் இல்லை. கற்ப காலங்கழியின் யானும் இறப்பேன். எந்தையும் அப்படியே! கங்கைக்கரையிலுள்ள மணல்கள் எத்துணையோ அத்துணை இந்திரர் அழிந்தனர். ஏனைய தேவர்களைப் பற்றிக் கூறுவானேன். ஈறில்லாதவர் ஈசனார் ஒருவரே! தோன்றியது மறையும். மறைந்தது தோன்றும். தோற்றமும் மறைவும் இல்லாதவர் சிவபரஞ்சுடராகிய செஞ்சடைக்கடவுள் ஒருவரே! ஆதலால் அது நீங்க வேறு ஒன்றை வேண்டில் தருதும்” என, தானவர் பொன், வெள்ளி இரும்பினால் அமைந்த மதில்கள் பொருந்திய முப்புரம் பூமி, அந்தரம், சுவர்க்கம் என்னும் மூவுலகங்களிலும் வேண்டும். அவை ஆயிரவருடத்திற்கொரு முறை விரும்பிய இடத்திற்குப் பெயர வேண்டும். அப் புரமூன்றும் ஒன்றுபட்ட பொழுது சிவபெருமானே ஒரு கணையால் அழித்தால் அன்றி வேறொருவராலும் மாளாத வரம் வேண்டும்” என்று கேட்க திசைமுகன் அவர்கள் விரும்பியவாறு வரம் ஈந்து தனது இருக்கை சேர்ந்தனன்.

         தாரகாக்ஷன் முதலிய மூவசுரர்களும் அளவில்லாத அவுணர் சேனைகளை உடையவராய், மயன் என்னும் தேவ தச்சனைத் தருவித்து தங்கள் விருப்பின்படி மண்ணுலகில் இரும்பு மதிலும், அந்தரவுலகில் வெள்ளிமதிலும் விண்ணுலகில் பொன் மதிலுமாக, பல வளங்களும் பொருந்திய முப்புரங்களை உண்டாக்கிக் கொண்டு குறைவற வாழ்ந்து சிவபூசையைக் காலம் தவறாது புரிந்து வந்தார்கள். ஆயினும், அசுர குலத்தின் தன்மைப் படி வைகுந்தம் முதலிய தேவ நரகங்களையும், உலகிலுள்ள பலபதிகளையும் திரிபுரத்தோடு சென்று சிதைத்து தேவர் கூட்டங்களுக்கு இடுக்கண் பல விளைத்தனர். அது கண்ட அரவணைச் செல்வராம் நாராயணர், இந்திரன் முதலிய இமையவர் கணங்களுடன் சென்று எதிர்த்து திரிபுரர்களிடம் தோல்வியுற்று மிகவும் களைத்து, சிவபரஞ்சுடரே கதியென்றுன்னி தேவர் குழாங்களுடன் திரும்பி மேருமலையின் வடபாலில் பலகாலம் தவம் செய்தனர். அத் தவத்திற்கு இரங்கிய விரிசடைக் கடவுள் விடையின் மேல் தோன்ற, விண்ணவர்கள் பன்முறை பணிந்து, திரிபுரத்தவர் புரியும் தீமையை விண்ணப்பம் புரிய, கண்ணுதற் கடவுள், “அவர்கள் நமது அடியாராதலின், அவர்களைச் அழித்தல் அடாது” என்றருளி மறைந்தனர்.

         திருமால் தேவர்களே அஞ்சாதீர்கள் என்று புத்த வடிவு கொண்டு, நாரத முனிவர் சீடராக உடன் வரத் திரிபுரம் அடைந்து பிடகாகமம், பிரசங்கித்து அவரை மருட்டிப் பவுத்தராக்கினர். அம்மாயையில் அகப்படாதார் மூவரேயாதலின் திருமால் ஏனையோரைப் பார்த்து “நீங்கள் அம் மூவர்களையும் பாராதொழிமின்கள். அவர்கள் இழிதொழில் பூண்டோர் என்று கூறி, நாரதருடன் மேருமலையடைந்து தேவகூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்து தவத்திருந்தனர். ஆலமுண்ட அண்ணல் அஃதறிந்து அருள்வடிவாகிய திருநந்தி தேவரை விளித்து “அமரற்பாற் சென்று திரிபுரத்தவரைச் செயிக்க இரதமுதலிய யுத்தக் கருவிகளைச் சித்தஞ் செய்யக் கட்டளையிடுக” என, நந்தி யண்ணல் மேருவரை சேர்ந்து சிவாக்ஞையை தேவர்பால் கூறிச்சென்றனர். அதுகேட்ட அமரர் ஆனந்தமுற்று இரதம் சிங்காரிக்கலாயினர்.

         மந்தரகேசரி மலைகள் அச்சாகவும், சந்திர சூரியர் சக்கரங்களாகவும், இருதுக்கள் சந்திகளாகவும், பதினான்கு லோகங்கள் பதினான்கு தட்டுகளாகவும், உதயாஸ்த கிரிகள் கொடிஞ்சியாகவும், நதிகளும், நதங்களும் நாட்டுங் கொடிகளாகவும், நட்சத்திரங்கள் நல்ல விதானமாகவும், மோட்ச லோகம் மேல் விரிவாகவும், மகங்கள் சட்டமாகவும், நாள் முதலியன எண்ணெயூற்றும் இடுக்கு மரமாகவும், அட்டப்பருவதங்கள் தூண்களாகவும், எட்டுத் திக்குயானைகள் இடையிற்றாங்கவும், ஏழு சமுத்திரங்கள் திரைச்சீலையாகவும், ஞானேந்திரிய கண்மேந்திரியங்கள் கலன்களாகவும், கலைகள் முனைகளாகவும், புராணம் வேதாங்கம், சாத்திரம் மனுக்கள் மணிகளாகவும், மருத்துகள் படிகளாகவும், அமைந்த திவ்வியமான ஒரு இரதத்தைச் செய்து, சதுர்முகனை சாரதியாக நிறுத்தி பிரணவ மந்திரத்தையே குதிரை தூண்டுங்கோலாகக் கொண்டு கங்கை அதிதி முதலிய தேவநங்கையர் நாற்புறமுஞ் சாமரை யிரட்டவும், துப்புரு நாரதர் இசை பாடவும், அரம்பை முதலிய அட்சரசுகள் நடனமாடவும் அமைத்து மேருமலையை வில்லாகவும், நாகராஜன் நாணியாகவும், பைந்துழாயலங்கல் பச்சை வண்ணன் பாணமாகவும், சரஸ்வதி வில்லிற்கட்டிய மணியாகவும், அக்கினிதேவன் அம்பின் கூர்வாயாகவும், வாயுதேவன் அற்பிற்கட்டிய இறகாகவும், ஏற்படுத்தி திருக்கைலாய மலையை யடைந்து திருநந்தி தேவரை இறைஞ்சி, “அமரர் அமர்க்கருவிகளை யமைத்துக் கொண்டடைந்திருப்பதாக அரனாரிடம் விண்ணப்பம் புரியுமாறு வேண்டி நின்றனர்.

வண்டிஇரு சுடராக, வையகம் தேராக, மாவாத நாலுமறையும்
வானவர்கள் அனைவரும் பரிவாரமாக,மலர் வாழ்பவன் பாகனாக,
கொண்டுமலை சிலைஆக, அரவுநாணாக, மால் கோலாக அழலாகவாய்
கோல்இறகு காலாக வெந்து முப்புரம் எரி கொளுந்த எய்தவர் குமரனே.
                                       --- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்

நந்தியம்பெருமான் சந்நிதியுட் சென்று தேவர்கள் போர்க் கருவிகளுடன் வந்திருப்பதைக் கூற, இறைவர் இமவரை தருங்கருங் குயிலுடன் *இடப ஆரூடராய் இரதத்தை அடைந்து இமையவர் எண்ணத்தின் படி அதிற் கால் ஊன்ற, அதன் அச்சு முறிந்தது.

தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு முறிந்தததுஎன்றுஉந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற                  --- திருவாசகம்.

உடனே நாராயணர் இடபமாக, அவ் இடபமேல் எம்பெருமான் ஏறுதலும் திருமால் தாக்கும் சக்தி அற்றுத் தரைமேல்விழ, சிவபெருமான் திருவருள்கொண்டு இறங்கி இன்னருள் புரிந்து சக்தியை நல்கினர். திருமால் திரிபுர சம்மாரகாலத்தில் சிவபெருமானை இடபமாய்த் தாங்கினர் என்பதை மணிவாசகனார் மறைமொழியாலும் காண்க.

கடகரியும் பரிமாவும் தேரும்உகந்து ஏறாதே
இடபம்உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பேடி,
தடமதில்கள் அவைமுன்றும் தழல்எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.

விரிஞ்சன் விநாயக பூசனை புரிய அவர் அருளால் இரதம் முன்போல் ஆக, சிவபெருமான் தேவியாருடன் தேர் மேல் எழுந்தருளினார். மூத்தபிள்ளையார், இளையபிள்ளையார், நாராயணர், நான்முகன், அயிராவதன் முதலியோர் தத்தம் ஊர்திகளில் ஊர்ந்து இருமருங்கும் சூழ்ந்து வரவும், இருடிகள் எழுவரும் வாழ்த்தவும், திருநந்திதேவர் பொற்பிரம்பு தாங்கி முன்னே செல்லவும் பானுகம்பன், வாணன் சங்குகன்னன் முதலிய சிவகணநாதர்கள் வாச்சியமிசைக்கவும், கறைமிடற்றண்ணல் இரத ஆரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ர புஷ்ய நக்ஷத்திரத்தில் சமீபித்தனர்.

         அண்டர்கள் அக்காலை அரனாரைப் பணிந்து “அண்ணலே! வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று பிரார்த்திக்க அழல் உருவாகிய சிவபெருமான் தமது திருக்கரத்தேந்திய மேருமலையாகிய வில்லில் பணியரசாகிய நாணை ஏற்றினர். (அதில் அம்பு பூட்டித் திரிபுரத்தை அழிப்பின் அந்தரர் அந்தமில்லா அகந்தை உறுவர் என்றும், தனக்கு ஓர் ஆயுதமேனும் படையேனும் துணை வேண்டுவதில்லை என்பதை தேவர்கள் தெரிந்து உய்தல் வேண்டுமென்றும், சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய வல்லான் என்பதை உலகம் உணருமாறும்) இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே புரங்கள் மூன்றும் சாம்பராயின. பெருந்தவராயிருந்து சிவனடியே சிந்தித்துவந்த மூவரும் யாதொரு தீமையும் இன்றிப் பெருமான் பால் வந்து பணிய, நீலகண்டர் அவர்களைத் துவாரபாலகராக அருளி, தேவர்களை அரவரிடத்திற்கனுப்பி வெள்ளிமாமலைக்கு எழுந்தருளினார். இமையவர் இடுக்கண் அகன்று இன்புற்றனர்.

சிலையெடுத்து மாநாக நெருப்பு கோத்துத்
  திரிபுரங்கள் தீஇட்ட செல்வர் போலும்”           ---அப்பர்

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
   உளைந்தன முப்புரம் உந்தீபற
   ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற. --- மணிவாசகர்.

ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓர்அம்பே முப்புரம் உந்தீபற,
ஒன்றும் பெருமிகை உந்தீபற.        --- மணிவாசகர்.

உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
     இருகு தையுமுடி தமனிய தனுவுடன்
     உருளை இருசுடர் வலவனும் அயன்என   மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை அடியிட
     நெறுநெ றெனமுறி தலு,நிலை பெறுதவம்
     உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற  ஒருகோடி
தெருவு நகரிய நிசிசரர் முடியொடு
     சடச டெனவெடி படுவன, புகைவன,
திகுதி கெனஎரி வன,அனல் நகையொடு முனிவார்தம் சிறுவ”
                                                                      --- (அருவமிடை) திருப்புகழ்.

மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில்
         இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என்று ஏவிய பின்னை
         ஒருவன் நீகரி காடு அரங் காக
மானை நோக்கிஓர் மாநடம் மகிழ
         மணிமு ழாமுழக் க அருள் செய்த
தேவ தேவநின் திருவடி அடைந்தேன்
         செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.       ---  சுந்தரர்.
   
பங்கயன் சிரம் அளவொடும் அறுத்துப் பண்டு அணிந்தவர் ---

நான் படைப்பவன் என்று பிரமன் தருக்குற்றான். சிவமூர்த்தி அவனுடைய தலையை நகத்தால் கிள்ளியருளினார்.

நல்ல மலரின்மேல் நான்முகனார் தலை
ஒல்லை அரிந்தது என்று உந்தீபற
உகிரால் அரிந்தது என்று உந்தீபற.             --- திருவாசகம்.

அவ்வாறு அரிந்த பிரமன் தலையை தரித்துக் கொண்டார்.

தலையே நீ வணங்காய் 
தலைமாலை தலைக்கு அணிந்து
தலையாலே பலிதேரும் தலைவனை
தலையே நீ வணங்காய்.                      --- அப்பர்.

அமரர் தம் மகட்கு ---

தேவகுமாரியாகிய தேவயானையிடம் அன்பு பூண்டும், வள்ளியை வலப்புறத்தே இருக்குமாறும் அருளிச் சிதம்பரத்தில் எழுந்தருளி இருக்கின்றார் முருகவேள்.

கருத்துரை

திருச்சிற்றம்பலம் மேவிய தேவா, மாதர் ஆசை தீர்த்து அருள்.

No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...