சிதம்பரம் - 0616. காய மாய வீடு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

காய மாய வீடு (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
மாதர் ஆசையில் மயங்கி அழியாமல்,
மெய்ஞ்ஞான இன்பத்தைத் தருகின்ற முத்தி வீட்டினை அடியேனுக்கு அருள்.



தான தான தான தானன தான தந்த
     தத்த தந்த தத்த தந்த ...... தந்ததான


காய மாய வீடு மீறிய கூடு நந்து
     புற்பு தந்த னிற்கு ரம்பை ...... கொண்டுநாளுங்

காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி
     யப்ர மந்த டித்த லைந்து ...... சிந்தைவேறாய்

வேயி லாய தோள மாமட வார்கள் பங்க
     யத்து கொங்கை யுற்றி ணங்கி ...... நொந்திடாதே

வேத கீத போத மோனமெய் ஞான நந்த
     முற்றி டின்ப முத்தி யொன்று ...... தந்திடாயோ

மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற
     விக்ர மங்கொள் வெற்பி டந்த ...... செங்கைவேலா

வாகை வேடர் பேதை காதல வேழ மங்கை
     யைப்பு ணர்ந்த வெற்ப கந்த ...... செந்தில்வேளே

ஆயும் வேத கீத மேழிசை பாட வஞ்செ
     ழுத்த ழங்க முட்ட நின்று ...... துன்றுசோதீ

ஆதி நாத ராடு நாடக சாலை யம்ப
     லச்சி தம்ப ரத்த மர்ந்த ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


காய மாய வீடு மீறிய கூடு, நந்து
     புற்புதம் தனில் குரம்பை ...... கொண்டு, நாளும்

காசில் ஆசை தேடி, வாழ்வினை நாடி, இந்த்ரிய
     ப்ரமம் தடித்து அலைந்து, ...... சிந்தை வேறாய்,

வேயில் ஆய தோள மா மடவார்கள் பங்க-
     யத்து கொங்கை உற்று,  இணங்கி, ...... நொந்திடாதே,

வேத கீத போத மோன மெய்ஞானம் நந்த,
     முற்றிடு இன்ப முத்தி ஒன்று ...... தந்திடாயோ?

மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற
     விக்ரமம் கொள் வெற்பு இடந்த ...... செங்கைவேலா!

வாகை வேடர் பேதை காதல! வேழ மங்கை-
     யைப் புணர்ந்த வெற்ப! கந்த! ...... செந்தில்வேளே!

ஆயும் வேத கீதம் ஏழ்இசை பாட, அஞ்செ-
     ழுத் தழங்க, முட்ட நின்று ...... துன்றுசோதீ!

ஆதி நாதர் ஆடு நாடக சாலை, அம்ப-
     லச் சிதம்பரத்து அமர்ந்த ...... தம்பிரானே.

பதவுரை

     மாய வீரதீர சூரர்கள் பாற நின்ற --- மாயத்தில் வல்லமையும், வீரமும் தைரியமும் கொண்ட சூராதி அவுணர்கள் சிதறி அழிய,

         விக்ரமம் கொள் வெற்பு இடந்த செங்கை வேலா --- பேராற்றல் படைத்த  கிரவுஞ்சமலையை பிளந்த வேலாயுதத்தை உடைய சிவந்த திருக் கரத்தினரே! 

         வாகை வேடர் பேதை காதல --- வெற்றியாளர்கள் ஆகிய  வேடர்களிடத்தே வளர்ந்தவரான வள்ளிபிராட்டியார் மீது காதல் கொண்டவரே!

         வேழ மங்கையைப் புணர்ந்த வெற்ப --- ஐராவதம் என்ற வெள்ளை யானையால் வளர்க்கப் பெற்ற தேவயானை அம்மையைத் திருமணம் புணர்ந்த திருப்பரங்கிரியோனே! 

        கந்த --- கந்தக் கடவுளே!

        செந்தில் வேளே --- செந்தி நகரில் திருக்கோயில் கொண்ட முருகவேளே!

         ஆயும் வேத கீதம் ஏழிசை பாட --- ஆய்கின்ற வேதங்களையும், கீதங்களையும் ஏழிசைகளையும் பாட,

         அஞ்செழுத்தழங்க --- திருவைந்தெழுத்து மந்திரம் முழங்க,

        முட்ட நின்று துன்று சோதீ --- அவ்வொலியில் விளங்கும் சோதியே,

         ஆதி நாதர் ஆடு நாடக சாலை அம்பலச் சிதம்பரத்து அமர்ந்த தம்பிரானே --- ஆதிநாதராகிய சிவபெருமான் திருநடனம் புரிகின்ற நாடக சாலையாகிய பொன்னம்பலம் என்னும் ஞான ஆகாயத்தில் விளங்கும் தனிப்பெரும் தலைவரே!

         காய மாய வீடு மீறிய கூடு --- மாயா காரியமாகிய இந்த உடல் ஒரு கூடு போன்றது.

         நந்து புற்புதந்தனில் குரம்பை கொண்டு --- அழியும் நீர்க்குமிழியான இந்தச் சிறு குடிலைக் கொண்டு,

         நாளும் காசில் ஆசை தேடி வாழ்வினை நாடி --- சுக வாழ்க்கையை விரும்பி, நாளும் பொருளிலேயே ஆசை கொண்டு, அதைத் தேடுவதற்குப் பல இடங்களிலும் சென்று,

          இந்த்ரிய ப்ரமம் தடித்து அலைந்து சிந்தை வேறாய் ---  ஐம்பொறிகளால் உண்டான மோக மயக்கம் வலுத்து, அதனால் அலைந்து திரிந்து, மனக் கலக்கம் உற்று,

         வேயில் ஆய தோள மா மடவார்கள் --- மூங்கிலைப் போலும் தோள்களை உடைய அழகிய விலைமாதரின்

         பங்கயத்து கொங்கை உற்று இணங்கி நொந்திடாதே --- தாமரை மொட்டை ஒத்த தனங்களை விரும்பி, அவர்களோடு இணக்கமாக இருந்து, மனம் நொந்து போகாமல்படிக்கு, 

         வேத கீத போத மோன மெய்ஞானம் நந்த --- வேதங்களை மிக ஓதி, கீதங்களை மிகப்பாடி, அறிவும் தெளிந்து, மெளனத்தை உற்று, முடிவில் மெய்ஞ்ஞானம் தழைத்து வளர,

         முற்றிடு இன்ப முத்தி ஒன்று தந்திடாயே --- பரிபூரண நிலையை அடையும் பேரின்ப முக்தி என்னும் ஒப்பற்ற ஒன்றைத் தந்து அருளமாட்டீரா?


பொழிப்புரை


     மாயத்தில் வல்லமையும், வீரமும் தைரியமும் கொண்ட சூராதி அவுணர்கள் சிதறி அழிய, பேராற்றல் படைத்த  கிரவுஞ்சமலையை பிளந்த வேலாயுதத்தை உடைய சிவந்த திருக் கரத்தினரே!

     வெற்றியாளராகிய வேடர்களின் மகள் வள்ளிபிராட்டியார் மீது காதல் கொண்டவரே!

       ஐராவதம் என்ற வெள்ளை யானையால் வளர்க்கப் பெற்ற தேவயானையம்மையைத் திருமணம் புணர்ந்த திருப்பரங்கிரியோனே! 

     கந்தக் கடவுளே!

     செந்தி நகரில் திருக்கோயில் கொண்ட முருகவேளே!

         ஆய்கின்ற வேதங்களையும், கீதங்களையும் ஏழிசைகளையும் பாட,
திருவைந்தெழுத்து மந்திரம் முழங்க, அவ்வொலியில் விளங்கும் சோதியே!

     ஆதிநாதராகிய சிவபெருமான் திருநடனம் புரிகின்ற நாடக சாலையாகிய பொன்னம்பலம் என்னும் ஞானாகாசத்தில் விளங்கும் தனிப்பெரும் தலைவரே!

         மாயா காரியமாகிய இந்த உடல் ஒரு கூடு போன்றது. அழியும் நீர்க்குமிழியான இந்தச் சிறு குடிலைக் கொண்டு,சுக வாழ்க்கையை விரும்பி, நாளும் பொருளிலேயே ஆசை கொண்டு, அதைத் தேடுவதற்குப் பல இடங்களிலும் சென்று, ஐம்பொறிகளாலான மோக மயக்கம் வலுத்து, அதனால் அலைந்து திரிந்து, மனக் கலக்கம் உற்று, மூங்கிலைப் போலும் தோள்களை உடைய அழகிய விலைமாதரின் தாமரை மொட்டை ஒத்த தனங்களை விரும்பி, அவர்களோடு இணக்கமாக இருந்து, மனம் நொந்து போகாமல்படிக்கு,  வேதங்களை மிக ஓதி, கீதங்களை மிகப்பாடி, அறிவும் தெளிந்து, மெளனத்தை உற்று, முடிவில் மெய்ஞ்ஞானம் தழைத்து வளர, பரிபூரண நிலையை அடையும் பேரின்ப முத்தி என்னும் ஒப்பற்ற ஒன்றைத் தந்து அருளமாட்டீரா?

விரிவுரை


காய மாய வீடு மீறிய கூடு ---

இந்த உடம்பானது தோன்றி அழியக் கூடிய தன்மையை உடைய கூடு போன்றது. கூட்டினை ஆக்கலாம். சிறிது காலம் இருக்கும்.  பின்பு பிறரால் சிதைக்கப்படலாம். அல்லது தானாகவே அழிந்தும் போகலாம். இந்த உடம்பு மாயையால் ஆனது. "மாலினால் எடுத்த கந்தல், சோறினால் வளர்த்த பொந்தி" என்று அடிகளார் வேறு ஒரு திருப்புகழில் அருளி இருத்தல் காண்க.

பொள்ளத்த காய மாயப் பொருளினைப் போக மாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்
உள்ளத்த திரிஒன்று ஏற்றி உணருமாறு உணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலும் கடவூர்வீ ரட்ட னாரே.

மாயத்தை அறிய மாட்டேன், மையல்கொள் மனத்தன் ஆகிப்
பேய்ஒத்துக் கூகை ஆனேன், பிஞ்ஞகா! பிறப்புஒன்று இல்லீ!
நேயத்தால் நினைய மாட்டேன், நீதனேன், நீசனன். நான்
காயத்தைக் கழிக்க மாட்டேன், கடவூர்வீ ரட்ட னீரே.

இம்மாயப் பிறப்பு என்னும் கடலாம் துன்பத்து
         இடைச் சுழிப்பட்டு இளைப்பேனை, இளையா வண்ணம்
கைம்மான மனத்து  உதவிக் கருணை செய்து,
         காதலருள் அவைவைத்தாய், காண நில்லாய்,
வெம்மான மதகரியின் உரிவை போர்த்த
         வேதியனே! தென்ஆனைக் காவுள் மேய
அம்மான்! நின் பொற்பாதம் அடையப் பெற்றால்,
         அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய் கேனே.    --- அப்பர்.

எம்மான், எம்அனை, என்தனக்கு எள்தனைச் சார்வுஆகார்,
இம்மாயப் பிறவி பிறந்தே, இறந்து எய்த்து ஒழிந்தேன்,
மைம்மாம் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே!
அம்மான்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே.     --- சுந்தரர்.

நந்து புற்புதம் தனில் குரம்பை கொண்டு ---

புற்புதம் - நீர்க்குமிழி.  குரம்பை - சிறுகுடில், பறவைக்கூடு, உடல், தானியக் கூடு, சேர், பத்தாயம்.

அழியும் நீர்க்குமிழியான இந்தச் சிறு குடிலைக் கொண்டு வாழ்கின்றோம். நீர்க்குமிழி நீரில் தோன்றி, பளபளப்போடு விளங்கும்.மிக வரைவிலேயே அழிந்து போகும். எந்தச் சமயத்தில் அழிந்து போகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. இந்த உடம்பும் நெய்யும் பாலும் உண்டு, மருந்தும் விருந்தும் அருந்தி பளபளப்பாக இருக்கின்றது. பருவம் வந்து விட்டால் புது மெருகு பெற்று விளங்குகின்றது. அதிலும் பெண்கள் உடம்பாக இருந்தால், யாவர் உள்ளதையும் கவரும் தன்மை உடையதாக விளங்குகின்றது. இந்த உடம்பு திடீர் என்று ஒரு நாள் அழிந்து போகின்றது. இயற்கையாக வளர்வதாக இருந்தாலும், நாளடைவில் பொலிவு இழந்து, நரையும் திரையும் வந்து உடம்பு அழகு இழந்து போகின்றது. எல்லோரும் முதுமை வந்து இறப்பது இல்லை. உலக இன்பத்தை எல்லாம் அடைந்து வாழலாம் என்ற நம்பிக்கையோடு உடம்பை வளர்த்து, அழகுக் கலைகளால் தனது உடம்பை அலங்காரம் பண்ணிக் கொண்டு வாழும் இளம் பெண்ணின் இன்பத்தை நுகராமலேயே திடீர் என்று இறந்து போகின்றவர்கள் மிகப் பலர். எனவே, இந்த உடம்பை நீர்க்குமிழிக்கு நிகர் என்று சொல்வது மிகப் பொருத்தமானதே.

நீரில் குமிழி இளமை, நிறைசெல்வம்  
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள், - நீரில்  
எழுத்தாகும் யாக்கை, நமரங்காள்! என்னே  
வழுத்தாதது எம்பிரான் மன்று.                        --- நீதிநெறி விளக்கம்.


படுமழை மொக்குகளின் பல்காலும் தோன்றிக்
கெடும் இது ஓர் யாக்கை என்று எண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண்அறி வாளரை
நேர்ப்பார் யார்? நீணிலத்தின் மேல்.                  --- நாலடியார்.     


புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்று எண்ணி
இன் இனியே செய்க அறவினை ; - இன் இனியே
நின்றான் இருந்தான் கிடந்தான், தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.                             --- நாலடியார்.    

மணமாய் நடக்கும் வடிவின் முடிவில்
பிணமாய்க் கிடக்கும் பிண்டம்; பிணமேல்
ஊரில் கிடக்க ஒட்டா உபாதி;
கால் எதிர் குவித்து பூளை; காலைக்
கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்;
அதிரும் மேகத்து உருவின் அருநிழல்;
நீரில் குமிழி; நீர் மேல் எழுத்து;
கண்துயில் கனவில் கண்ட கண்காட்சி;
அதனினும் பொல்லா மாயக் களங்கம்;
அமையும் அமையும் பிரானே! அமையும்,
இமைய வல்லி வாழி என்று ஏத்த,
ஆனந்தத் தாண்டவம் காட்டி
ஆண்டுகொண்டு அருள்கை நின்அருளினுக்கு அழகே.     --- பட்டினத்தார்.

ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால்
ஆகின்ற ஆக்கை, நீர் மேல்
அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன, நான்
அறியாத காலம் எல்லாம்,
புந்தி மகிழ்வுற உண்டு உடுத்து, இன்பம் ஆவதே
போந்த நெறிஎன்று இருந்தேன்...               --- தாயுமானார்.

நீர்க்குமிழி போன்ற உடல் நிற்கையிலே, சாசுவதம்
சேர்க்க அறியாமல் திகைப்பேனோ பைங்கிளியே.   --- தாயுமானார்.

நீர்க்குமிழி பூண் அமைத்து நின்றாலும் நில்லா மெய்,
பார்க்கும் இடத்து இதன்மேல் பற்று அறுவது எந்நாளோ. --- தாயுமானார்.

காயம்ஒரு புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும்
     காட்டில்ஆற் றின்பெ ருக்காம்!
  கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்
     கானல்காட் டும்ப்ர வாகம்!        --- அறப்பளீசுர சதகம்.

நீர்க் குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை, நில்லாது செல்வம்,
பார்க்கும் இடத்து அந்த மின் போலும் என்பர் பசித்து வந்தே
ஏற்கும் அவர்க்கிட என்னின், எங்கேனும் எழுந்திருப்பார்,
வேல் குமரற்கு அன்பு இலாதவர் ஞானம் மிகவும் நன்றே.    --- கந்தர் அலங்காரம்.

நாளும் காசில் ஆசை தேடி வாழ்வினை நாடி ---

இந்த உடம்பின் மேல் ஆசை வைத்து, உடலை வளர்க்க உண்பதில் ஆசை கொண்டு, ஆடை அணிகள் முதலானவற்றால் அழகு படுத்த வேண்டி, பொருளைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகின்றோம். அதற்காகவே அல்லும் பகலும் பல இடங்களிலும் அலைந்து திரிந்து பொருளைத் தேடுகின்றோம்.

இந்த்ரிய ப்ரமம் தடித்து அலைந்து சிந்தை வேறாய் --- 

ஐம்பொறிகளால் உண்டான மோக மயக்கம் வலுத்து, அதனால் அலைந்து திரிந்து, மனக் கலக்கம் உறுகின்றது. ஐம்புல இன்பத்தைத் துய்க்க மனம் அலைகின்றது. இறைவனை வணங்கி உய்தி பெறுவதற்காக வந்தது இந்த உடம்பு என்னும் சிந்தனை இல்லாமல், உண்டு உடுத்து இன்பத்தைத் துய்ப்பதற்கே ஆசைப்பட்டு, நீதிநெறிகளை எல்லாம் மறக்கின்றோம். அற்ப இன்பத்தைத் தரும் அற்பர்களை நாடி அலைகின்றோம்.

பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது, பதிஏது,
                  பசுஏது, பாசம்ஏது,
         பத்திஏது, அடைகின்ற முத்திஏது, அருள்ஏது,
                  பாவபுண் ணியங்கள் ஏது,
வரம்ஏது, தவம்ஏது, விரதம்ஏது, ஒன்றும்இலை,
                  மனம்விரும்பு உணவு உண்டு, நல்
         வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி,நறு
                  மலர்சூடி, விளையாடி,மேல்
கரம்மேவ விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு
                  கலந்து மகிழ்கின்ற சுகமே
         கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும்
                  கயவரைக் கூடாது அருள்,
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
                  தலம் ஓங்கு கந்தவேளே!
         தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
                  சண்முகத் தெய்வமணியே!     --- திருவருட்பா.

வேயில் ஆய தோள மா மடவார்கள் பங்கயத்து கொங்கை உற்று இணங்கி நொந்திடாதே ---

மூங்கிலைப் போலும் தோள்களை உடைய அழகிய விலைமாதரின் தாமரை மொட்டை ஒத்த தனங்களை விரும்பி, அவர்களோடு இணக்கமாக இருந்து, மனம் நொந்து போகாமல்படிக்கு திருவருளைத் தர வேண்டும் என்று அடிகளார் நமக்காக விண்ணப்பம் செய்கின்றார்.

பூவினும் சாந்தினும் புலால்மறைத்து யாத்துத்
தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய் ......

மலராலும் சாந்தாலும் புலால் நாற்றத்தை மறைத்து, ஆடையாலும் அணிகலனாலும் முன்னோர் அமைத்த, வஞ்சத்தைத் தெரிந்து கொள்வாய் என்கிறது மணிமேகலை.

முள்ளும் கல்லும் முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சு என உரைத்தும்,
வெள் எலும்பாலே மேவிய கணைக்கால்
துள்ளும் வரால் எனச் சொல்லித் திரிந்தும்,
தசையும் எலும்பும் தக்க புன் குறங்கை
இசையும் கதலித் தண்டு என இயம்பியும்,
நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத்
துடிபிடி என்று சொல்லித் துதித்தும்,
மலமும், சலமும், வழும்பும், திரையும்
அலையும் வயிற்றை ஆல் இலை என்றும்,
சிலந்தி போலக் கிளைத்து முன் எழுந்து
திரண்டு விம்மிச் சீ பாய்ந்து ஏறி,
உகிரால் கீற உலர்ந்து உள் உருகி,
நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரி மொட்டு என்றும்
குலையும், காமக் குருடர்க்கு ஒன்று உரைப்பேன்,
நீட்டவும் முடங்கவும் நெடும் பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவும் உதவி இங்கு இயற்றும்
அம் கையைப் பார்த்துக் காந்தள் என்று உரைத்தும்,
வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தை
பாரினில் இனிய கமுகு எனப் பகர்ந்தும்,
வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மலர் என்றும்,
அன்னமும் கறியும் அசைவு இட்டு இறக்கும்
முன்னிய பல்லை முத்து என மொழிந்தும்,
நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும்
கூரிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும்,
தண்ணீர் பீளை தவிராது ஒழுகும்
கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும்,
உள்ளும் குறும்பியும் ஒழுகும் காதை
வள்ளத் தண்டின் வளம் என வாழ்த்தியும்,
கையும் எண்ணெயும் கலவாது ஒழியில்
வெய்ய வதரும் பேனும் விளையத்
தக்க தலை ஓட்டின் முளைத்து எழுந்த
சிக்கின் மயிரைத் திரள் முகில் என்றும்,
சொல்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்;
தோலும் இறைச்சியும் துதைந்து சீ பாயும்
காமப் பாழி, கருவிளை கழனி,
தூமைக் கட வழி, தொளை பெறு வாயில்,
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி;
மண்பால் காமம் கழிக்கும் மறைவு இடம்,
நச்சிக் காமுக நாய்தான் என்றும்
இச்சித்து இருக்கும் இடை கழி வாயில்,

திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி,
புண் இது என்று புடவையை மூடி
உள்நீர் பாயும் ஓசைச் செழும்புண்
மால் கொண்டு அறியா மாந்தர் புகும் வழி,
நோய் கொண்டு ஓழியா நுண்ணியர் போம்வழி,
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி,
செருக்கிய காமுகர் சேரும் சிறுகுழி,
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி,
மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம் சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்,
இத்தை நீங்கள் இனிது என வேண்டா,

பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி,
மெச்சிச் சிவபத வீடு அருள்பவனை,
முத்தி நாதனை, மூவா முதல்வனை,
அண்டர் அண்டமும் அனைத்து உள புவனமும்
கண்ட அண்ணலை, கச்சியில் கடவுளை,
ஏக நாதனை, இணைஅடி இறைஞ்சுமின்,
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே.

என்று மாதர் மேல் வைத்த ஆசையை மாற்றி, இறைவன் மேல்
ஆசை வைக்குமாறு பட்டினத்தடிகள் வேண்டுகின்றார்.

வேத கீத போத மோன மெய்ஞானம் நந்த முற்றிடு இன்ப முத்தி ஒன்று தந்திடாயே --- வேதங்களை மிக ஓதி, கீதங்களை மிகப்பாடி, அறிவும் தெளிந்து, மெளனத்தை உற்று, முடிவில் மெய்ஞ்ஞானம் தழைத்து வளர, பரிபூரண நிலையை அடையும் பேரின்ப முக்தி என்னும் ஒப்பற்ற ஒன்றைத் தந்து அருளுமாறு வேண்டுகின்றார் அருணை வள்ளல்.

இதனை, "வேத கீத போத மோன மெய்ஞான ஆனந்தம் உற்றிடு இன்ப முத்தி" என்று பாடம் கொண்டு, மெய்ஞான ஆனந்தத்தை அனுபவிக்கின்ற இன்பத்தைத் தருகின்ற முத்தியை அருள் என்பதாகவும் கொள்ளலாம்.

மாய வீரதீர சூரர்கள் பாற நின்ற விக்ரமம் கொள் வெற்பு இடந்த செங்கை வேலா ---

பாறுதல் - அழிந்து ஒழிதல்.  விக்கிரமம் - பேராற்றல், திறமை, மிகுந்த பலம்.

மாயத்தில் வல்லமையும், வீரமும் தைரியமும் கொண்ட சூராதி அவுணர்கள் சிதறி அழிய பேராற்றல் படைத்த  கிரவுஞ்சமலையை பிளந்த வேலாயுதத்தை உடைய சிவந்த திருக் கரத்தினை உடையவர் முருகப் பெருமான். 

வேல் ஞானத்தைக் குறிப்பது.  வேலின் முன்னர் மாயை, ஆணவம் நில்லாது அழிந்து போகும்.

காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப்
பாயப் படர் புன் சடையில் பதித்த பரமேட்டி
மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை; தன்
மீயச் சூரைத் தொழுது, வினையை வீட்டுமே!         ---  திருஞானசம்பந்தர்.

வேழ மங்கையைப் புணர்ந்த வெற்ப ---

இந்திர லோகத்தில் உள்ள ஐராவதம் என்ற வெள்ளை யானையால் வளர்க்கப் பெற்றவள் தேவயானை அம்மை.

திருப்பங்குன்றத்திலே தேவயானை அம்மையை முருகப் பெருமான் திருமணம் புரிந்து காண்டார். அதனால், இங்கே வெற்பு என்பது திருப்பரங்குன்றத்தைக் குறிக்கும்.

அஞ்செழுத்தழங்க ---

அஞ்செழுத்துத் தழங்க என்பது அஞ்செழுத்தழங்க என வந்தது.

தழங்க - முழங்க.

திருவைந்தெழுத்து மந்திரம் முழங்குகின்றது.

கருத்துரை

முருகா! மாதர் ஆசையில் மயங்கி அழியாமல், மெய்ஞ்ஞான இன்பத்தைத் தருகின்ற முத்தி வீட்டினை அடியேனுக்கு அருள்.















        

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...