வலிமை தருவது

அந்தணர்க்கு உயர்வேத மேபலம், கொற்றவர்க்கு
     அரியசௌ ரியமேபலம்,
ஆனவணி கர்க்குநிதி யேபலம், வேளாளர்க்கு
     ஆயின்ஏர் உழவேபலம்,

மந்திரிக் குச்சதுர் உபாயமே பலம், நீதி
     மானுக்கு நடுவேபலம்,
மாதவர்க் குத்தவசு பலம்,மடவி யர்க்குநிறை
     மானம்மிகு கற்பேபலம்,

தந்திரம் மிகுத்தகன சேவகர் தமக்கெலாம்
     சாமிகா ரியமேபலம்,
சான்றவர்க் குப்பொறுமை யேபலம், புலவோர்
     தமக்குநிறை கல்விபலமாம்,

வந்தனை செயும்பூசை செய்பவர்க் கன்புபலம்,
     வாலவடி வானவேலா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     வால வடிவான வேலா --- அழியாத இளமை உடைய வேலாயுதக் கடவுளே!

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     அந்தணர்க்கு உயர் வேதமே பலம் --- மறையவர்களுக்கு ஆற்றலைத் தருவது அவர்கள் நாளும் ஓதுகின்ற உயர்ந்த வேதமே,

     கொற்றவர்க்கு அரிய சௌரியமே பலம் --- வெற்றியுடைய அரசர்கட்கு ஆற்றலைத் தருவது அவருடைய வீரமே;

     ஆன வணிகர்க்கு நிதியே பலம் --- பொருள் ஆக்கத்தைத் தேடுகின்ற வணிகர்களுக்கு அவர் தேடும் பொருளே வலிமையைத் தருவது;

     வேளாளர்க்கு ஆயின் ஏர் உழவே பலம் --- வேளாண்மைத் தோழில் புரிவோர்க்கு அவர் கொண்டு இருக்கும் ஏர் தான் வலிமையைத் தருவது;

     மந்திரிக்குச் சதுர் உபாயமே பலம் --- அமைச்சுத் தொழிலில் உள்ளோருக்கு சா, தான, பேத, தண்டம் என்னும் நால்வகைச் சூழ்ச்சிகளே வலிமை தருவது;

     நீதிமானுக்கு நடுவே பலம் --- அறத்தலைவனுக்கு நடுநிலையில் நிற்பதே வலிமை;

     மாதவர்க்குத் தவசு பலம் --- பெரிய தவத்தினர்க்கு அவர் புரியும் தவமே வலிமை தருவது;

     மடவியர்க்கு நிறை மானமிகு கற்பே பலம் ---பெண்களுக்கு ஒழுக்கத்திலே நிற்றலாகிய பெருமை மிக்க கற்பே வலிமை தருவது;


     தந்திரம் மிகுத்த கன சேவகர் தமக்கு எலாம் சாமி காரியமே பலம் --- சூழ்ச்சியில் சிறந்த பெருமைமிக்க சேவகர்களுக்குத் தமது தலைவன் இட்ட பணியை முடிப்பதே வலிமையைத் தரும்;  

     சான்றவர்க்குப் பொறுமையே பலம் --- பெரியோர்களுக்குப் பொறுமையே வலிமை;

     புலவோர் தமக்கு நிறைகல்வி பலமாம் --- புலவர்களுக்கு நிறைந்த கல்வியே வலிமை;

     வந்தனை செய்யும் பூசை செய்பவர்க்கு அன்பு பலம் --- வழிபாட்டிலை நிற்போருக்கு அவர் தெயிவத்தின் மீது கொண்டுள்ள அன்பே வலிமை.

          விளக்கம் --- இங்குக் கூறப்பட்டவர்கள் தமக்கு வலிமையெனக் கூறப்பட்ட அவற்றையே கைக்கொள்க.  சிறை எனப்படுவதுபறை பிறர் அறியாமை என்கிறது கலித்தொகை.  தாம் கொண்டதில் இருந்து பிறழாமை என்றும் கொள்ளலாம்.

 

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...