சீவகாருண்ணியம் வேண்டும்.





27.  உயிர் இரக்கம் என்னும் சீவகாருண்ணியம் வேண்டும்.

முன்அரிய மறைவழங்கும் தண்டலையார்
      ஆகமத்தின் மொழிகே ளாமல்
பின்உயிரை வதைத்தவனும், கொன்றவனும்
      குறைத்தவனும், பேர் உளோனும்,
அந்நெறியே சமைத்தவனும், உண்டவனும்
      நரகுஉறுவர்; ஆத லாலே
தன்உயிர்போல் எந்நாளும் மன்உயிருக்கு
      இரங்குவது தக்க தாமே.

            இதன் பொருள் ---

     முன் அரிய மறை வழங்கும் தண்டலையார் ஆகமத்தின் மொழி கேளாமல் --- முன் ஒருகால்  அருமையான வேதங்களைத் தமது திருவாய் மலர்ந்து உலகம் அறிந்து உய்ய அருளிய திருத்தண்டலை இறைவர் அருளிஆகம நூல்களில் கூறப்பட்டு இருப்பதைக் கேட்டு அதன்படி நடவாமல்,

     உயிரை வதைத்தவனும் --- ஓர் உயிருக்குத் துன்பத்தை  விளைவித்தவனும், 

     கொன்றவனும் --- ஓர் உயிரைக் கொன்றவனும், 

     குறைத்தவனும் --- கொன்றல உடலைக் கூறாக்கிக் குறைவு  படுத்தியவனும்,

     பேர் உளோனும் --- கொலையாளி எனப் பெயர் பெற்றவனும்,

     அந்நெறியே சமைத்தவனும் --- கொலை வழியிலே நின்று உயிர் நீங்கிய ஊனைச் சமைத்தவனும்,

     உண்டவனும் --- சமைத்ததை உண்டவனும்,

ஆகிய இவர்கள் எல்லாம்,

      நரகு உறுவர் --- நரகத்தை அடைவர், 

     ஆதலாலே --- ஆகையினாலே,

     எந்நாளும் தன் உயிர்போல் மன் உயிருக்கு இரங்குவது  தக்கது ஆம் --- எப்போதும் தன் உயிரைப் போலப்  பிற உயிரையும் நினைத்து இரக்கம் கொள்ளுவதே தக்கது ஆகும்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...