சிதம்பரம் - 0661. வண்டை ஒத்து





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வண்டை ஒத்து (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
உன் அடியருக்குத் தொண்டு பட்டு வாழ்ந்து,
பிறவிக் கடலில் இருந்து முத்திக் கரை சேர அருள்.

தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன ...... தந்ததான

வண்டையொத் துக்கயல் கண்சுழற் றுப்புரு
வஞ்சிலைக் குத்தொடு அம்பையொத் துத்தொடை
வண்டுசுற் றுக்குழல் கொண்டலொத் துக்கமு ...கென்பக்ரீவம்

மந்தரத் தைக்கட பொங்கிபத் துப்பணை
கொம்பையொத் துத்தன முந்துகுப் பத்தெரு
வந்துஎத் திப்பொரு மங்கையர்க் கைப்பொரு ......ளன்பினாலே

கொண்டழைத் துத்தழு வுங்கைதட் டிற்பொருள்
கொண்டுதெட் டிச்சர சம்புகழ்க் குக்குன
குங்குழற் கிப்படி நொந்துகெட் டுக்குடில் ...... மங்குறாமல்

கொண்டுசத் திக்கட லுண்டுகுப் பத்துனி
னன்பருக் குச்செயல் தொண்டுபட் டுக்கமழ்
    குங்குமத் திற்சர ணம்பிடித் துக்கரை ...... யென்றுசேர்வேன்

அண்டமிட் டிக்குட டிண்டிமிட் டிக்குகு
டந்தகொட் டத்தகு டிங்குதொக் கத்தம
    டஞ்சகட் டைக்குண கொம்புடக் கைக்கிட ...... லென்பதாளம்

அண்டமெட் டுத்திசை யும்பல்சர்ப் பத்திரள்
கொண்டல்பட் டுக்கிரி யும்பொடித் துப்புல
னஞ்சவித் துத்திர ளண்டமுட் டத்துகள் ...... வந்தசூரர்

கண்டமற் றுக்குட லென்புநெக் குத்தச
னங்கடித் துக்குடி லஞ்சிவப் பச்செநிர்
கண்தெறிக் கத்தலை பந்தடித் துக்கையி ...... லங்குவேலால்

கண்களிக் கக்கக னந்துளுக் கப்புக
ழிந்திரற் குப்பதம் வந்தளித் துக்கன
கம்பலத் திற்குற மங்கைபக் கத்துறை ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்
 

வண்டை ஒத்து, கயல் கண் சுழற்று, புரு-
வம் சிலைக் குத்தொடு, அம்பை ஒத்து, தொடை
வண்டு சுற்றுக் குழல் கொண்டல் ஒத்து, கமுகு .....என்ப க்ரீவம்,

மந்தரத்தை, கடம் பொங்கு இபத்துப் பணை
கொம்பை ஒத்து, தனம் உந்து உகுப்ப, தெரு
வந்து எத்திப் பொரு மங்கையர்க் கைப்பொருள்...... அன்பினாலே

கொண்டு அழைத்துத் தழுவும் கை, தட்டில் பொருள்
கொண்டு தெட்டி, சரசம் புகழ்க்கு.  குன-
கும் குழற்கு இப்படி நொந்து கெட்டு, குடில் ...... மங்குறாமல்

கொண்டு சத்திக் கடல் உண்டு, கப்பத்துன், நின்
அன்பருக்குச் செயல் தொண்டு பட்டு, கமழ்
    குங்குமத்தில் சரணம் பிடித்து, கரை ...... என்று சேர்வேன்?

அண்டம் மிட்டிக் குட டிண்டிமிட் டிக்குகு
டந்தகொட் டத்தகு டிங்குதொக்கத் தம-
    டம், சகட்டைக் குண கொம்பு டக்கைக்கு இடல் ...... என்ப தாளம்

அண்டம் எட்டுத் திசையும் பல் சர்ப்பத் திரள்
கொண்டல் பட்டுக் கிரியும் பொடித்து, புலன்
அஞ்சு அவித்துத் திரள் அண்ட முட்டத் துகள் ...... வந்தசூரர்

கண்டம் அற்றுக் குடலெல் என்பு நெக்குத் தச-
னம் கடித்துக் குடிலம் சிவப்ப, செநிர்
கண் தெறிக்க, தலை பந்துஅடித்துக் கை ...... இலங்குவேலால்

கண் களிக்க, ககனம் துளுக்க, புகழ்
இந்திரற்குப் பதம் வந்து அளித்து, கனக
அம்பலத்தில் குறமங்கை பக்கத்து உறை ...... தம்பிரானே.


பதவுரை

      அண்டம் --- அண்டங்களில்

     மிட்டி (மிண்டி) --- நெருங்கி,

     குட --- வளைந்து சூ,

     டிண்டி மிட்டி -- டிண்டி மிட்டி என்று,

     குடந்தம் கொட்ட ---  குடமுழா என்ற வாத்தியம் முழக்கம் செய்து,

     தகு --- அந்த ஒலிக்குத் தகுந்தபடி,

     டிங்கு தொக்க --- டிங்கு என்னும் ஒலி ஒன்று கூ,

     தமடம் --- தமடம் என்ற தம்பட்டமும்,

     சகட்டை --- சகண்டை என்ற வாத்தியமும்,

     குண கொம்பு --- சிறந்த ஊது கொம்பு,

     டக்கைக்கு --- இடக்கையால் கொட்டும் தோல் கருவியும்,

     இடல் என்ப தாளம் --- உதவியாய் தாளம் ஒலிக்கவும்,

      அண்டம் --- அண்டங்களும்,

     எட்டுத் திசை --- எண் திசைகளும்,

     உம்பல் --- அட்ட யானைகளும்,

     சர்ப்பத் திரள் --- பாம்பின் கூட்டங்களும்,

     கொண்டல் பட்டு --- மேகமும் குலை பட்டும்,

     கிரியும் பொடித்து --- மலைகளும் போடியாகியும்,

     புலன் அஞ்சு அவித்து --- ஐந்து புலன்களையும் கெடுத்தும்,

     திரள் அண்டம் முட்டத் துகள் --- திரண்ட அண்டங்களில் முழுமையும் தூசி உண்டாகவும்,

      வந்த சூரர் --- போரிலே எதிர்த்து வந்த அசுரர்களின்

     கண்டம் அற்று --- கழுத்து அறுபட்டுப் போய்,

     குடல் என்பு நெக்கு --- குடலும், எலும்பும் நெகிழ்ந்து தளர்ச்சி உற்று,  

     தசனம் கடித்து --- பற்களைக் கடித்து,

     குடிலம் சிவப்ப ---  வளைந்த தலைமயிர் இரத்தத்தால் சிவக்க,

     செநீர் கண் தெறிக்க --- இரத்தம் கண்களினின்றும் வெளிப்பட்டுச் சிதற,

     தலை பந்து அடித்து --- அசுரர்களின் தலைகளைப் பந்து அடிப்பது போல் அடித்துத் தள்ளி,

     கையில் இலங்கு வேலால் --- திருக்கரத்தில் இலங்கும் வேலாயுதத்தால்

      கண் களிக்க ---  கண் குளிர்ச்சி அடைந்து மகிழ,

     ககனம் துளுக்க --- விண்ணுலகம் இழந்த பொலிவை மீண்டும் வரப் பெற்று செழிப்புற,

     புகழ் இந்திரற்குப் பதம் வந்து அளித்து --- புகழ்கின்ற இந்திரனுக்கு அவனுடைய இந்திர பதவியை அருள் புரிந்து வழங்கி,

     கனக அம்பலத்தில் --- பொன் அம்பலத்தில்

     குற மங்கை பக்கத்து உறை தம்பிரானே --- குற மகள் வள்ளியம்மையின் அருகில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவரே

       வண்டை ஒத்து --- கருவண்டை நிகர்த்த,

     கயல் கண் சுழற்று --- கயல் மீன் அனைய கண்  சுழற்சியால்

     புருவம் சிலைக்குத் தொடு அம்பை ஒத்து --- புருவமாகிய வில்லில் தொடுக்கப்பட்ட அம்பை நிகர்க்கவும்,

     தொடை வண்டு சுற்றுக் குழல் கொண்டல் ஒத்து --- அணிந்துள்ள மாலையில் வண்டு சுற்றுகின்ற கூந்தலானது மேகத்தை நிகர்க்கவும்,

      க்ரீவம் கமுகு என்ப --- கழுத்து கமுகு போன்றது என்று சொல்லும்படியும்,

     மந்தரத்தை --- மந்தர மலையையும்

     கடம் பொங்கு இபத்து --- மதம் பொங்குகின்ற யானையின்

     பணை கொம்பை ஒத்து --- பருத்த தந்தங்களையும் நிகர்த்து

     தனம் முந்து குப்ப (கூப்ப) --- மார்பகங்கள் மின்னிட்டுக் குவிய,

      தெரு வந்து --- தெருவில் வந்து,

     எத்திப் பொரு --- வஞ்சித்து சண்டை செய்யும்

     மங்கையர் --- விலைமாதர்கள்

     கைப்பொருள் அன்பினாலே --- தமது கையில் கிடைத்த பொருளின் பொருட்டுக் காட்டும் அன்பினாலே,

     அழைத்துக் கொண்டு --- தமது வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போய்,

     தழுவும் கை --- தழுவும் கைகளால்

     தட்டில் பொருள் கொண்டு --- தட்டில் பொருளைப் பெற்றவுடன்

     தெட்டி --- வஞ்சனை எண்ணத்துடன்

     சரசம் புகழ்க்கு --- காம லீலைகளைச் செய்தும், புகழ்ந்தும்,

     குனகும் --- கொஞ்சியும் பேசுகின்ற,

     குழற்கு --- அடர்ந்த கூந்தலை உடைய பொது மகளிரின் பொருட்டு

      இப்படி --- இவ்வண்ணம்,

     நொந்து ---  அடியேன் மனம் நொந்து,

     குடில் கெட்டு --- உடல் நலம் குன்றி,

     மங்கு உறாமல் --- வாட்டம் அடையாமல்,

      சத்திக் கொண்டு --- தவ வலிமை கொண்டு,

     கடல் உண்டு உகுப்ப --- கடலை உண்டு உமிழ்ந்து,

     துன் நின் அன்பருக்கு --- உம்மை அடுத்த உமது அன்பராகிய அகத்தியருக்கு  

     செயல் தொண்டு பட்டு --- பணி செய்து தொண்டு பூண்டு,

     கமழ் குங்குமத்தில் --- நறுமணம் வீசும் குங்குமச் செஞ்சாந்துடன் கூடிய

     சரணம் பிடித்து --- திருவடிகளைப் பற்றி

     கரை என்று சேர்வேன் --- முக்திக் கரையை அடியேன் எந்நாள் அடைவேன்?

பொழிப்புரை

         அண்டங்களில் நெருங்கி வளைந்து சூ, டிண்டி மிட்டி என்று, குடமுழா என்ற வாத்தியம் முழக்கம் செய்து, அந்த ஒலிக்குத் தகுந்தபடி, டிங்கு என்னும் ஒலி ஒன்று கூ, தமடம் என்ற தம்பட்டமும், சகண்டை என்ற வாத்தியமும், சிறந்த ஊது கொம்பு,
இடக்கையால் கொட்டும் தோல் கருவியும், உதவியாய் தாளம் ஒலிக்கவும், அண்டங்களும், எண் திசைகளும், எட்டுத் திசை யானைகளும், பாம்பின் கூட்டங்களும், மேகமும் குலை பட்டும், மலைகளும் பொடியாகியும், ஐந்து புலன்களையும் கெடுத்தும்,
திரண்ட அண்டங்களில் முழுமையும் தூசி உண்டாகவும், போரிலே எதிர்த்து வந்த அசுரர்களின் கழுத்து அறுபட்டுப் போய், குடலும், எலும்பும் நெகிழ்ந்து தளர்ச்சி உற்று, பற்களைக் கடித்து, வளைந்த தலைமயிர் இரத்தத்தால் சிவக்க, இரத்தம் கண்களினின்றும் வெளிப்பட்டுச் சிதற, அசுரர்களின் தலைகளைப் பந்து அடிப்பது போல் அடித்துத் தள்ளி, திருக்கரத்தில் இலங்கும் வேலாயுதத்தால், கண் குளிர்ச்சி அடைந்து மகிழ, விண்ணுலகம் இழந்த பொலிவை மீண்டும் வரப் பெற்று செழிப்புற, புகழ்கின்ற இந்திரனுக்கு அவனுடைய இந்திர பதவியை அருள் புரிந்து வழங்கி, பொன் அம்பலத்தில்  குறமகள் வள்ளியம்மையின் அருகில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவரே

         கருவண்டை நிகர்த்த, கயல் மீன் அனைய கண்  சுழற்சியால் புருவமாகிய வில்லில் தொடுக்கப்பட்ட அம்பை நிகர்க்கவும், அணிந்துள்ள மாலையில் வண்டு சுற்றுகின்ற கூந்தலானது மேகத்தை நிகர்க்கவும், கழுத்து கமுகு போன்றது என்று சொல்லும்படியும், மந்தர மலையையும், மதம் பொங்குகின்ற யானையின் பருத்த தந்தங்களையும் நிகர்த்து மார்பகங்கள் மின்னிட்டுக் குவிய, தெருவில் வந்து, வஞ்சித்து சண்டை செய்யும் விலைமாதர்கள்

     தமது கையில் கிடைத்த பொருளின் பொருட்டுக் காட்டும் அன்பினாலே, தமது வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போய், தழுவும் கைகளால் தட்டில் பொருளைப் பெற்றவுடன், வஞ்சனை எண்ணத்துடன் காம லீலைகளைச் செய்தும், புகழ்ந்தும், கொஞ்சியும் பேசுகின்ற, அடர்ந்த கூந்தலை உடைய பொது மகளிரின் பொருட்டு இவ்வண்ணம், அடியேன் மனம் நொந்து, உடல் நலம் குன்றி, வாட்டம் அடையாமல், தவ வலிமை கொண்டு, கடலை உண்டு உமிழ்ந்து, உம்மை அடுத்த உமது அன்பராகிய அகத்தியருக்குப் பணி செய்து தொண்டு பூண்டு, நறுமணம் வீசும் குங்குமச் செஞ்சாந்துடன் கூடிய திருவடிகளைப் பற்றி, முக்திக் கரையை அடியேன் எந்நாள் அடைவேன்?

விரிவுரை

வண்டை ஒத்துக் கயல் கண் சுழற்றுப் புருவம், சிலைக் குத்தொடு அம்பை ஒத்து ---

பொதுமாதர்களின் கண்ணை அம்பு என்று புலவர்கள் உருவகம் செய்து கூறுவது மரபு.

அம்பு வேகமாக வந்து இளைஞர்களின் உள்ளத்தைப் பிளக்கும்.  இவ்வாறு கண்ணாகிய அம்பை வில்லில் தொடுத்து விடவேண்டும். புருவத்தை வில்லாக அருணகிரியார் அதிமதுரமாக உருவகம் செய்துள்ள அழகு மிகமிக அழகாக அமைந்துள்ளது. இத்தகைய உவம அழகு வேறு எங்கும் காண இயலாது. உவமைத்திறம் உவகையை ஊட்டுகின்றது.

கட பொங்கு இபத்து ---

கடம் பொங்கு இபம்.  கடம் - மதம்.  மதம் பொஙிக வழிகின்ற யானை.

மாதர்களின் தனம் மந்தர மலை போலவும் யானையின் தந்தம் போலவும் பருத்துப் பணைத்து விளங்குகின்றது.
  
தனம் முந்து குப்ப ---

பொது மாதர்களின் தனங்கள் முற்பட்டுத் தெரியுமாறு குவிந்து காட்சி தரும் இயல்பை உடையது.  தனம் முந்து குப்ப.  கூப்ப என்ற சொல்ல குப்ப எனக் குறுகியது.  கூப்ப – குவிய எனப் பொருள் செய்க.

குனகும் குழற்கு ---

குனகுதல் - கொஞ்சிப் பேசுதல்.  குழற்கு - குழலை உடையார்க்கு.

இத்தகு பொது மாதர் வலைப்பட்டு உள்ளமும் உடலும் வெந்து நொந்து அழிதல் கூடாது என்று இப்பாடலில் அடிகளார் அறவுரை பகர்கின்றார்.
  
கொண்டு சத்தி ---

தவ வலியைக் கொண்டு அகத்தியர் இடையறாது முருகனுடைய ஆறெழுத்தை ஓதுவதால் கடலைக் குடிக்கும் ஆற்றல் பெற்றார்.

கடல் உண்டு குப்பத் துன் நின் அன்பருக்கு ---

கடல் உண்டு உகுப்பத் துன் நின் அன்பர் என்று பதப் பிரிவு செய்க.

துன் - நெருங்குதல். முருகவேளை நெருங்கியவர் அகத்தியர்.  இத்தகைய சிறந்த முருகபக்தராகிய அகத்திய முனிவருக்கு நாம் தொண்டுபடவேண்டும்.  இவ்வாறு அகத்தியருக்கு அடிமை பூண்டால் முத்திக்கரை சேரலாம் என உணர்க.

இத் திருப்புகழில் பிற்பகுதி யுத்தகள வர்ணனையை விளக்குகின்றது.

செநிர் - செம் நீர்.  உதிரம்.  கண்களில் வெளிப்பட்டது.

கனகம்பலம் --- 

கனக அம்பலம் - பொன் அம்பலம்.  பொற்சபை.  சிதம்பரத்தில் குமாரக் கடவுள் குறவள்ளியுடன் எழுந்தருளி அருள் புரிகின்றார்.

பொன் அம்பலம் என்பது அடியவர்களின் இதயத்தைக் குறிக்கும். தன்னை வணங்கும் அடியவர்களின் இதயத்தையே திருக்கோயிலாகக் கொண்டு முருகப் பெருமான், வள்ளி நாயகியுடன் எழுந்தருளி இருப்பார்.

நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே. ---  தாயுமானார்.

உள்ளம் பெருங்கோயில், ஊன்உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிலிங்கம்,
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.     ---  திருமந்திரம்.

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யில் பூசி,
         வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்று,
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றும்,
         செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே என்றும்,
துடிஅனைய இடைமடவாள் பங்கா என்றும்,
         சுடலைதனில் நடமாடும் சோதீ என்றும்,
கடிமலர் தூய்த் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.
  
எவரேனும் தாமாக இலாடத்து இட்ட
         திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,
உவராதே அவரவரைக் கண்ட போதே
         உகந்து, அடிமைத் திறம் நினைந்து, அங்கு உவந்து நோக்கி,
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி
         இரண்டு ஆட்டாது ஒழிந்து, ஈசன் திறமே பேணி,
கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

இலம், காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து
         இடையாதே, யாவர்க்கும் பிச்சை இட்டு,
விலங்காதே நெறி நின்று, அங்கு அறிவே மிக்கு,
         மெய்யன்பு புகப்பெய்து, பொய்யை நீக்கி,
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்
         உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம் வைத்து,
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

விருத்தனே! வேலைவிடம் உண்ட கண்டா!
         விரிசடைமேல் வெண்திங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே! உமைகணவா! உலக மூர்த்தீ!
         நுந்தாத ஒண்சுடரே! அடியார் தங்கள்
பொருத்தனே! என்றென்று புலம்பி, நாளும்
         புலன்ஐந்தும் அகத்து அடக்கி, புலம்பி நோக்கி,
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

பொசியினால் மிடைந்து புழுப் பொதிந்த போர்வைப்
         பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று
பசியினால் மீதூரப் பட்டே ஈட்டி,
         பலர்க்கு உதவல் அது ஒழிந்து, பவள வாயார்
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம்,
         வானவர்கோன் திருநாமம் அஞ்சும் சொல்லிக்
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

ஐயினால் மிடறு அடைப்புண்டு, ஆக்கை விட்டு
         ஆவியார் போவதுமே, அகத்தார் கூடி
மையினால் கண்எழுதி, மாலை சூட்டி,
         மயானத்தில் இடுவதன்முன், மதியம் சூடும்
ஐயனார்க்கு ஆளாகி, அன்பு மிக்கு,
         அகம்குழைந்து, மெய்அரும்பி, அடிகள் பாதம்
கையினால் தொழும்அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

திருதிமையால் ஐவரையும் காவல் ஏவித்
         திகையாதே, சிவாயநம என்னும் சிந்தைச்
சுருதி தனைத் துயக்கு அறுத்து, துன்ப வெள்ளக்
         கடல்நீந்திக் கரை ஏறும் கருத்தே மிக்கு,
பருதி தனைப் பல் பறித்த பாவ நாசா!
         பரஞ்சுடரே! என்றென்று பரவி, நாளும்
கருதிமிகத் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

குனிந்த சிலையால் புரமூன்று எரித்தாய் என்றும்,
         கூற்று உதைத்த குரைகழல் சேவடியாய் என்றும்,
தனஞ்சயற்குப் பாசுபதம் ஈந்தாய் என்றும்,
         தசக்கிரிவன் மலைஎடுக்க விரலால் ஊன்றி
முனிந்து, அவன் தன் சிரம் பத்தும் தாளுந் தோளும்
         முரண் அழித்திட்டு அருள்கொடுத்த மூர்த்தீ! என்றும்
கனிந்து, மிகத் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.     --- அப்பர்.

உளன் கண்டாய், நல் நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்,
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்க தான் அளந்த மன்.                       --- பேய் ஆழ்வார்.

உளன் கண்டாய், நல் நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்,
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்.                      --- பொய்கை ஆழ்வார்.       

வானத்தான் என்பாரும் என்க, மற்று உம்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாம்என்க, - ஞானத்தான்
முன் நஞ்சத்தால் இருண்ட மொய் ஒளி சேர் கண்டத்தான்
என் நெஞ்சத்தான் என்பன் யான்.                     --- அற்புதத் திருவந்தாதி.

பிரான்அவனை நோக்கும் பெருநெறியே பேணி,
பிரான்அவன்தன் பேரருளே வேண்டி, - பிரான்அவனை
எங்கு உற்றான் என்பீர்கள், என் போல்வார் சிந்தையினும்
இங்கு உற்றான், காண்பார்க்கு எளிது.              --- அற்புதத் திருவந்தாதி.
       

கருத்துரை

பொன்னம்பலம் மேவிய முருகா, அகத்தியருக்குத் தொண்டு செய்து முத்திக் கரை சேர அருள் புரிவாய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...