திருவண்ணாமலை - 0588. வலிவாத பித்தமொடு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வலிவாத பித்தமொடு (திருவருணை)

திருவருணை முருகா!
பிறவி நோய் தீ, திருப்புகழை ஓத அருள்.

தனதான தத்ததன தனதான தத்ததன
     தனதான தத்ததன ...... தனதான


வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
     
வறல்சூலை குட்டமொடு ...... குளிர்தாகம்

மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை
     
வருநீர டைப்பினுடன் ...... வெகுகோடி

சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை
     
தெளியாவெ னக்குமினி ...... முடியாதே

சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ
     
சிவஞான சித்திதனை ...... யருள்வாயே

தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொரு
     
சுடர்வீசு சக்ரமதை ...... யருள்ஞான

துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
     
சுகவாரி சித்தனருள் ...... முருகோனே

அலை, சூரன் வெற்பும், ரிமுகனானை வத்திரனொ
     
டசுராரி றக்கவிடு ...... மழல்வேலா

அமுதாச னத்திகுற மடவாள்க ரிப்பெணொடும்
     
அருணா சலத்திலுறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வலிவாத பித்தமொடு, களமாலை, விப்புருதி
     வறள், சூலை, குட்டமொடு, ...... குளிர், தாகம்,

மலிநீர் இழிச்சல்,பெரு வயிறு, ஈளை, கக்கு, களை,
     வருநீர் அடைப்பின் உடன், ...... வெகுகோடி

சிலைதோய் அடைத்த உடல் புவிமீது எடுத்து உழல்கை
     தெளியா எனக்கும்இனி ......     முடியாதே.

சிவம்ஆர் திருப்புகழை எனு நாவினில் புகழ
     சிவஞான சித்தி தனை ...... அருள்வாயே!

தொலையாத பத்தி உள திருமால் களிக்க, ஒரு
     சுடர்வீசு சக்ரம் அதை ......       அருள், ஞான

துவர்வேணி அப்பன், மிகு சிவகாமி கர்த்தன், மிகு
     சுகவாரி சித்தன் அருள் ......     முருகோனே!

அலை, சூரன், வெற்பும், அரிமுகன், ஆனை வத்திரனொடு
     அசுரார் இறக்கவிடும் ......       அழல்வேலா!

அமுத அசனத்தி, குற மடவாள், கரிப்பெணொடும்
     அருணாசலத்தில் உறை ......     பெருமாளே.


பதவுரை

      தொலையாத பத்தி உள --- நீங்காத பத்தியை வைத்துள்ள

     திருமால் களிக்க --- நாராயணர் மகிழுமாறு,

     ஒரு சுடர் வீசு சக்ரம் அதை அருள் --- ஒப்பற்ற ஒளி வீசுகின்ற சக்கராயுதத்தைக் கொடுத்து அருளியவரும்,

     ஞான துவர் வேணி அப்பன் --- ஞான மயமானதும் பவள நிறம் உடையதும் ஆன சடைமுடியை உடைய, உலக பிதாவாகிய சிவபெருமான்,

     மிகு சிவகாமி கர்த்தன் --- புகழ் மிகுந்த சிவகாமியின் தலைவர்,

     மிகு சுகவாரி சித்தன் அருள் முருகோனே --- மிகுந்த சுகக் கடலாகிய சித்தமூர்த்தி பெற்ற முருகக் கடவுளே!

      அலை --- கடலும்,

     சூரன் --- சூரபன்மனும்,

     வெற்பும் ---- கிரவுஞ்ச மலையும்,

     அரிமுகன் --- சிங்கமுகனும்,

     ஆனை வத்திரனொடு --- யானைமுகனாகிய தாரகனும்,

     அசுரார் இறக்க விடும் --- அசுரர்களும் மடியுமாறு விடுத்த

     அழல் வேலா --- வெம்மையுடைய வேலாயுதரே!

      அமுத அசனத்தி --- அமுதம் போன்ற தேனும் தினைமாவும் உண்பவராகிய

     குறமடவாள் --- குறக் குலத்தில் வளர்ந்த வள்ளிநாயகியுடனும்,

     கரிப் பெசொடும் --- யானை வளர்த்த தெய்வயானையுடனும்,

     அருணாசலத்தில் உறை பெருமாளே --- திருவண்ணாமலையில் வாழ்கின்ற பெருமையில் சிறந்தவரே!

      வலி --- இழுப்பு நோய்,

     வாதம் --- வாத நோய்,

     பித்தமொடு--- பித்த நோய்,

     களமாலை --- கண்ட மாலை,

     விப்புருதி --- சிலந்தி நோய்,

     வறள் --- உடம்பு மெலிதல்,

     சூலை --- சூலை நோய்,

     குட்டமொடு --- தொழு நோய்,

     குளிர் --- குளிர்க் காய்ச்சல்,

     தாகம் --- தாகம் எடுக்கச் செய்யும் நோய்,

     மலி நீர் இழிச்சல் --- மிக்க நீரிழிவு,

     பெரு வயிறு --- மகோதரம்,

     ஈளை --- கோழை நோய்,

     கக்கு ---வாந்தி,

     களை --- அயர்வு,

     வரு நீர் அடைப்பு --- வருகின்ற நீரடைப்பு,

      உடன் வெகு கோடி --- இவைகளுடன் பல கோடிக் கணக்கான    

     சிலை நோய் அடைத்த உடல் ---கோபித்து எழும் நோய்களை அடைந்துள்ள இந்த உடலை

     புவிமீது எடுத்து உழல்கை --- பூமியின் மீது எடுத்துத் திரிதல்,

     தெளியா எனக்கும் இனி முடியாதே ---- தெளிந்த அறிவில்லாத அடியேனுக்கு இனி முடியாது.

       சிவம் ஆர் திருப்புகழை எனு நாவினில் புகழ --- மங்கலமான திருப்புகழை என்னுடைய நாவினால் புகழ,

     சிவஞான சித்தி தனை அருள்வாயே --- சிவஞான சித்தியைத் தருவீராக.

பொழிப்புரை

        
         நீங்காத பத்தியை வைத்துள்ள நாராயணர் மகிழுமாறு, ஒப்பற்ற ஒளி வீசுகின்ற சக்கராயுதத்தைக் கொடுத்து அருளியவரும், ஞான மயமானதும் பவள நிறம் உடையுதம் ஆன சடைமுடியை உடைய, உலக பிதாவாகிய சிவபெருமான், புகழ் மிகுந்த சிவகாமியின் தலைவர், மிகுந்த சுகக் கடலாகிய சித்தமூர்த்தி பெற்ற முருகக் கடவுளே!

         கடலும், சூரபன்மனும், கிரவுஞ்ச மலையும், சிங்கமுகனும், யானைமுகனாகிய தாரகனும், அசுரர்களும் மடியுமாறு விடுத்த வெம்மையுடைய வேலாயுதரே!

         அமுதம் போன்ற தேனும் தினைமாவும் உண்பவராகிய வள்ளிநாயகியுடனும், யானை வளர்த்த தெய்வயானையுடனும், திருவண்ணாமலையில் வாழ்கின்ற பெருமையில் சிறந்தவரே!

         இழுப்பு நோய், வாதநோய், பித்தநோய், கண்டமாலை, சிலந்தி நோய், உடம்பு மெலிதல், சூலைநோய், தொழுநோய், குளிர்க் காய்ச்சல், தாகம் எடுக்கச் செய்யும் நோய், மிக்க நிரிழிவு, மகோதரம், கோழை நோய், வாந்தி, அயர்வு, வருகின்ற நீரடைப்பு, இவைகளுடன் பல கோடிக் கணக்கான கோபித்து எழும் நோய்களை அடைந்துள்ள இந்த உடலை பூமியின் மீது எடுத்துத் திரிதல், தெளிந்த அறிவில்லாத அடியேனுக்கு இனி முடியாது.

        மங்கலமான திருப்புகழை என்னுடைய நாவினால் புகழ, சிவஞான சித்தியைத் தருவீராக.

விரிவுரை

வலி ---

வலிகள் ஐந்து வகைப்படும்.  குமரகண்டம், அமரகண்டம், பிரமகண்டம், காக்கைவலி, முயல்வலி.

வாதம் ---

வாதநோய் பற்பல.  அண்டவாதம், பட்சவாதம், கீல்வாதம், பாரிசவாதம் முதலியன.

விப்புருதி ---

நரம்புச் சிலந்து, கிரந்திப் புண்கள்.

சிலைநோய் அடைத்தவுடல் ---

சினந்து கிளைத்து வருகின்ற நோய்கள் பல கோடிகட்கு இடமான உடம்பு.  இத்தகைய, பசி, நோய் முதலிய துன்பங்கட்கு இடமான உடம்புடன் இந்தப் பூமியில் பிறந்து இறந்து பல்லூழி காலமாக உழல்வது இனி கூடாது என்று அடிகளார் முருகனிடம் முறையிடுகின்றார்.

சிவமார் திருப்புகழ் ---

சிவம் - மங்கலம்.  திருப்புகழ் மங்கலகரமானது.  திருப்புகழ் ஓதுகின்ற இடம் மங்கலம் எய்தும்.

எனு நாவினிற் புகல ---

முருகா, உன் மங்களமான திருப்புகழை அடியேனுடைய நாவினால் பாடிப் பரவ வேணும்.

சிவஞான சித்தி ---

பாசஞானம், பசுஞானம் என்ற இருஞானங்கள் நீங்கி, சிவஞானம் சித்திக்க அருள்செய் என்கின்றார்.

தொலையாத பத்தியுள திருமால் களிக்க ஒரு சுடர்வீசு சக்ரமதை அருள் ---

சலந்தரனைத் தடிந்த சக்கராயுதம் சிவமூர்த்தியிடம் இருந்தது.  அதனைப் பெறவேண்டி திருமால் திருவீழிமிழலையினில் வழிபாடு செய்தார். வழிபாட்டுக்குச் சிறந்தது தாமரை மலர்.  தினந்தோறும் ஆயிரம் மலர்களால் அரனாரை அன்புடன் அர்ச்சித்து வந்தார். அவருடைய அன்பின் திறத்தை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டு, ஒரு மலரை சிவமூர்த்தி மறைத்தருளினார். அர்ச்சனை புரிந்து கொண்டிருந்த திருமால், ஒரு மலர் குறைவதை அறிந்து, தாமரை போன்ற தன் கண்ணை எடுத்துச் சிவனார் திருவடியில் அர்ச்சித்தார்.

சிவபெருமான் அவருடைய அன்பின் திறத்தைக் கண்டு மகிழ்ந்து சக்கராயுதத்தை வழங்கி அருளினார்.

நீற்றினை நிறையப்பூசி நித்தல்ஆ யிரம்பூக்கொண்டு
எற்றுழி ஒருநாள்ஒன்று குறையக்கண் நிறையஇட்ட
ஆற்றலுக்கு ஆழிநல்கி, அவன்கொணர்ந்து இழிச்சும்கோயில்
வீற்றிருந்து அளிப்பர், வீழி மிழலையுள் விகிர்தனாரே.    --- அப்பர்.

அரு மலரோன் சிரம் ஒன்று அறுத்தீர்,
         செறுத்தீர்அழல் சூலத்தில் அந்தகனை,
திருமகள் கோன் நெடுமால் பலநாள்
         சிறப்பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத்தில் குறைவா,
         நிறைவுஆக ஓர் கண்மலர் சூட்டலுமே,
பொருவிறல் ஆழி புரிந்து அளித்தீர்,
         பொழில்ஆர்திருப் புத்தூர்ப் புனிதனீரே.  --- சுந்தரர்.

சலம் உடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல் ஆழி,
நலம் உடைய நாரணற்கு அன்று அருளியவாறு என்? ஏடீ!
நலம் உடைய நாரணன் தன் நயனம் இடந்து அரன் அடிக்கீழ்
அலராக இட, ஆழி அருளினன் காண் சாழலோ.     --- திருவாசகம்.

ஞான துவர்வேணி அப்பன் ---

சிவபெருமானுடைய சடை ஞானத்தின் அறிகுறி.  அது பவளம்போல் சிவந்த நிறம் உடையது.

சுகவாரி சித்தன் ---

சிவபெருமான் சுகக் கடலாக விளங்குபவர்.

சுத்தநிர்க் குணமான பரதெய்வமே பரம்
சோதியே சுகவாரியே...                   --- தாயுமானார்.

சிவபெருமான் மதுரைமா நகரில் எல்லாம் வல்ல சித்தராக ஆடல் புரிந்த அருட்செயலை இது குறிக்கின்றது.

அமுதாசனத்தி ---

அமுத அசனத்தி.  அசனம் - உணவு.  அமுதம் போன்ற தேன் தினைமாவு இவைகளை உண்டவள்.  அமுத ஆசனத்தி எனப் பதப்பிரிவு செய்தால், அமுத மயமான பீடத்தில் அமர்ந்திருப்பவள் எனப் பொருள்படும்.

கரிப்பெண் ---

கரி - யானை. கரத்தையுடையது யானை. இது சினையாகுபெயர். ஐராவதம் என்ற வெள்ளை யானை கற்பகச் சோலையில் வளர்த்ததனால் தெய்வயானை என்று பேர் பெற்றனர்.

கருத்துரை


அருணாசலத்தில் மேவும் வேலவரே, பிறப்பு ஒழியச் சிவமார் திருப்புகழை ஓத அருள் செய்க.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...