சிதம்பரம் - 0613. கரிய மேகம் எனும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கரிய மேகம் எனும் (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
பொதுமாதர் மயலில் சிக்குண்டு அழியாமல்,
திருவருள் புரிவாய்.


தனன தான தனந்தன தானன
தனன தான தனந்தன தானன
     தனன தான தனந்தன தானன ...... தந்ததான


கரிய மேக மெனுங்குழ லார்பிறை
சிலைகொள் வாகு வெனும்புரு வார்விழி
கயல்கள் வாளி யெனுஞ்செய லார்மதி ......துண்டமாதர்

கமுக க்ரீவர் புயங்கழை யார்தன
மலைக ளாஇ ணையுங்குவ டார்கர
கமல வாழை மனுந்தொடை யார்சர ...... சுங்கமாடை

வரிய பாளி தமுந்துடை யாரிடை
துடிகள் நூலி யலுங்கவி னாரல்குல்
    மணமு லாவி யரம்பையி னார்பொருள் ...... சங்கமாதர்

மயில்கள் போல நடம்புரி வாரியல்
குணமி லாத வியன்செய லார்வலை
    மசகி நாயெ னழிந்திட வோவுன ...... தன்புதாராய்

சரியி லாத சயம்பவி யார்முகி
லளக பார பொனின்சடை யாள்சிவை
    சருவ லோக சவுந்தரி யாளருள் ...... கந்தவேளே

சதப ணாம குடம்பொடி யாய்விட
அவுணர் சேனை மடிந்திட வேயொரு
தழல்கொள் வேலை யெறிந்திடு சேவக ...... செம்பொன்வாகா

அரிய மேனி யிலங்கையி ராவணன்
முடிகள் வீழ சரந்தொடு மாயவன்
    அகில மீரெ ழுமுண்டவன் மாமரு ...... கண்டரோதும்

அழகு சோபி தஅங்கொளு மானன
விபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளி
    அருள்கொ டாடி சிதம்பர மேவிய ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


கரிய மேகம் எனும் குழலார், பிறை
சிலைகொள் வாகு எனும் புருவார், விழி
கயல்கள் வாளி எனும் செயலார், மதி ......துண்டமாதர்,

கமுக க்ரீவர், புயம் கழையார், தனம்
மலைகளா இணையும் குவடார், கர
கமல, வாழை மனும் தொடையார், சர ...... சுங்கமாடை

வரிய பாளிதமும் துடையார், டை
துடிகள் நூல் இயலும் கவினார், ல்குல்
    மணம் உலாவிய ரம்பையினார், பொருள் ...... சங்கமாதர்,

மயில்கள் போல நடம் புரிவார், யல்
குணம் இலாத வியன் செயலார், வலை
    மசகி, நாயென் அழிந்திடவோ? உனது ...... அன்புதாராய்.

சரி இலாத சயம்பவியார், முகில்
அளக பார பொனின் சடையாள், சிவை,
    சருவ லோக சவுந்தரியாள் அருள் ...... கந்தவேளே!

சத பணா மகுடம் பொடியாய் விட,
அவுணர் சேனை மடிந்திடவே, ஒரு
தழல் கொள் வேலை எறிந்திடு சேவக! ...... செம்பொன் வாகா!

அரிய மேனி இலங்கை இராவணன்
முடிகள் வீழ, சரம் தொடு மாயவன்,
    அகிலம் ஈரெழும் உண்டவன் மாமருக! ...... அண்டர் ஓதும்

அழகு சோபித அம் கொளும் ஆனன
விபுதை, மோகி, குறிஞ்சியின் வாழ்வளி
    அருள்கொடு ஆடி சிதம்பரம் மேவிய ...... தம்பிரானே.


பதவுரை

      சரி இலாத சயம்பவியார் --- தனக்கு ஒப்பில்லாத தான் தோன்றி ஆனவள்,

     முகில் அளக பார பொனின் சடையாள் --- மேகம் போன்ற நிறமும் ஒளியும் பொருந்திய சடையை உடையவள்,

     சிவை --- உயிர்களுக்கு மங்கலத்தைச் செய்பவள்,

     சருவ லோக சவுந்தரியாள் அருள் கந்த வேளே --- எல்லா உலகங்களையும் ஈன்ற பார்வதி தேவியின் அருளால் வந்த கந்தபெ பெருமானே!

     சத பணா மகுடம் பொடியாய் விட --- நூற்றுக் கணக்கான பருத்த மணி முடிகள் பொடியாக,

     அவுணர் சேனை மடிந்திடவே --- சூராதி அவுணர்களின் சேனை மடிய,

     ஒரு தழல் கொள் வேலை எறிந்திடு சேவக --- ஒப்பற்ற நெருப்பைக் கொண்ட வேலாயுதத்தை விடுத்து அருளிய வீரரே!

     செம்பொன் வாகா --- செம் பொன் மேனி அழகரே!

      அரிய மேனி இலங்கை இராவணண் முடிகள் வீழ சரம் தொடு மாயவன் --- அருமையான உடலைக் கொண்ட இலங்கை அரசனாகிய இராவணன் தலைகள் அற்று விழும்படி அம்பைச் செலுத்திய மாயவனும்,

     அகிலம் ஈரெழும் உண்டவன் மா மருக --- பதினான்கு உலகங்களையும் உண்டவனுமாகிய திருமாலின் சிறந்த திருமருகரே!

      அண்டர் ஓதும் அழகு சோபித --- தேவர்கள் ஓதிப் புகழும் அழகு வாய்ந்த ஒளியை உடையவரே!

     அம் கொளும் ஆனன விபுதை --- எழில் வாய்ந்த முகத்தை உடைய தேவதையாகிய தேவயானையம்மை,

     மோகி, குறிஞ்சியின் வாழ் வளி அருள் கொடு ஆடி --- மோகத்தைத்  தந்தவளாகிய குறிஞ்சி நிலமாகி  வள்ளிமலையில் வாழ்ந்த வள்ளிம்மை ஆகிய இருவருக்கும் அருள் புரிந்து லீலைகள் செய்து,

     சிதம்பர மேவிய தம்பிரானே --- சிதம்பரத்தில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவரே!

      கரிய மேகம் எனும் குழலார் --- கருநிறம் பொருந்திய மேகம் போன்ற கூந்தலை உடையவர்.

       பிறை சிலை கொள் வாகு எனும் புருவார் --- பிறை போலவும் வில் போலவும் விளங்கி அழகு கொண்ட புருவங்களை உடையவர்.

       விழி கயல்கள் வாளி எனும் செயலார் --- கயல் மீனைப் போன்றும், அம்பைப் போன்றும் செயல்படும் கண்களை உடையவர்,

      மதி துண்ட மாதர் --- சந்திரன் போன்ற முகம் உடைய விலைமாதர்கள்.

     கமுக க்ரீவர் --- கமுகு போன்ற கழுத்தை உடையவர்.

      புயம் கழையார் --- மூங்கில் போன்ற தோள்களை உடையவர்.

      தனம் மலைகளா இணையும் குவடார் --- மார்பகங்கள் மலைக்கு இணையான திரட்சி உடையவர்.

      கர கமல --- தாமரை போன்ற கைகள்,

      வாழை மனும் தொடையார் --- வாழைத் தண்டு போன்ற தொடைகளை உடையவர்.

       சர சுங்க மாடை வரிய பாளிதம் உந்து உடையார் ---  கள்ளத் தனமான நடையால், கைக் கொண்ட பொன்னால் வாங்கப்பட்ட பட்டாடைகளைத் தரித்தவர்.

      இடை துடிகள் நூல் இயலும் கவினார் --- இடுப்பு உடுக்கை போலவும், நூல் போலவும் உள்ள அழகியர்.

      அல்குல் மணம் உலாவிய ரம்பையினார் --- பெண்குறி நறுமணம் வீசும் அரம்பை போன்றவர்.

      பொருள் சங்க மாதர் ---  பொருளுக்காகக் கூடுகின்ற பொதுமாதர்

      மயில்கள் போல நடம் புரிவார் --- மயிலைப் போன்று நடனம் புரிபவர்.

      இயல் குணம் இலாத வியன் செயலார் --- இயல்பாகவே நல்லகுணம் இல்லாத வியப்பான செயல்களைக் கொண்டவர் ஆகிய விலைமாதர்களின்

     வலை மசகி --- வலையில் மனம் தடுமாறி

     நாயென் அழிந்திடவோ --- அடியேன் அழிவுறல் ஆமோ?

     உனது அன்பு தாராய் --- தேவரீருடைய திருவருள் கருணையைத் தந்தருள வேண்டும்.


பொழிப்புரை


      தனக்கு ஒப்பில்லாத தான் தோன்றி ஆனவள்,

     மேகம் போன்ற நிறமும் ஒளியும் பொருந்திய சடையை உடையவள்,

     உயிர்களுக்கு மங்கலத்தைச் செய்பவள்,

     எல்லா உலகங்களையும் ஈன்ற பார்வதி தேவியின் அருளால் வந்த கந்தப் பெருமானே!        

     நூற்றுக் கணக்கான பருத்த மணி முடிகள் பொடியாகி சூராதி அவுணர்களின் சேனை மடிய, ஒப்பற்ற நெருப்பைப் போன்ற தன்மை கொண்ட வேலாயுதத்தை விடுத்து அருளிய வீரரே!

     செம் பொன் மேனி அழகரே!

     அருமையான உடலைக் கொண்ட இலங்கை அரசனாகிய இராவணன் தலைகள் அற்று விழும்படி அம்பைச் செலுத்திய மாயவனும், பதினான்கு உலகங்களையும் உண்டவனுமாகிய திருமாலின் சிறந்த திருமருகரே!

      தேவர்கள் ஓதிப் புகழும் அழகு வாய்ந்த ஒளியை உடையவரே!

     எழில் வாய்ந்த முகத்தை உடைய தேவதையாகிய தேவயானையம்மை, மோகத்தைத்  தந்தவளாகிய குறிஞ்சி நிலமாகி  வள்ளிமலையில் வாழ்ந்த வள்ளிம்மை ஆகிய இருவருக்கும் அருள் புரிந்து லீலைகள் செய்து, சிதம்பம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவரே!

         கருநிறம் பொருந்திய மேகம் போன்ற கூந்தலை உடையவர். பிறை போலவும் வில் போலவும் விளங்கி அழகு கொண்ட புருவங்களை உடையவர். கயல் மீனைப் போன்றும், அம்பைப் போன்றும் செயல்படும் கண்களை உடையவர், சந்திரன் போன்ற முகம் உடைய விலைமாதர்கள். கமுகு போன்ற கழுத்தை உடையவர். மூங்கில் போன்ற தோள்களை உடையவர். மார்பகங்கள் மலைக்கு இணையான திரட்சி உடையவர். தாமரை போன்ற கைகள், வாழைத் தண்டு போன்ற தொடைகளை உடையவர். கள்ளத் தனமான நடை உடையவர், கைக்கொண்ட பொன்னால் வாங்கப்பட்ட பட்டாடைகளைத் தரித்தவர். இடுப்பு உடுக்கை போலவும் நூல் போலவும் உள்ள அழகியர். பெண்குறி நறுமணம் வீசும் அரம்பை போன்றவர். பொருளுக்காகக் கூடுகின்ற பொதுமாதர், மயிலைப் போன்று நடனம் புரிபவர். இயல்பாகவே நல்லகுணம் இல்லாத வியப்பான செயல்களைக் கொண்டவர் ஆகிய விலைமாதர்களின் வலையில் சிக்குண்டு மனம் தடுமாறி அடியேன் அழிவுறலாமோ? தேவரீருடைய திருவருள் கருணையைத் தந்தருள வேண்டும்.

விரிவுரை

இத் திருப்புகழின் முற் பகுதி பொது மாதரின் அங்க அழகைச் சொல்கின்றது. புற அழகு மிகுந்து இருந்தாலும், உள்ளத்தில் அழகு இல்லாதவர்களாகிய அவர்கள் அழகில் மயங்கி, மனம் தடுமாறி அழியாமல் ஆண்டுகொள்ள வேண்டும் என்று முருகப் பெருமானிடம் வேண்டுகின்றார்.

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டு அழகும்
மஞ்சள் அழகும் அழகு அல்ல, - நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.

என்கிறது நாலடியார்.

வாரி விடப்பட்ட கூந்தல் அழகும், நன்கு உடுத்தப்பட்ட வண்ண உடை அழகும், முகத்தில் ஒப்பனைக்காகப் பூசப்படுகின்ற மஞ்சள் அழகும் ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன ஆகமாட்டா.  உள்ளத்தால் நல்லவர்களாய் வாழும், நடுநிலை தவறாத வழியில் செலுத்தும் கல்வி அழகே ஒருவருக்குச் சிறந்த அழகு ஆகும்.


இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடின் வனப்பும்,
நடைவனப்பும், நாணின் வனப்பும், - புடைசால்
கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல, எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு.              

என்கிறது ஏலாதி என்னும் நூல்.

இடுப்பின் அழகும், தோள்களின் அழகும், செல்வத்தின் அழகும், நடையின் அழகும், நாணத்தின் அழகும், பக்கங்கள் தசை கொழுவிய கழுத்தின் அழகும், உண்மை அழகு ஆகா. இலக்கணத்தோடு கூடிய இலக்கியக் கல்வியழகே உண்மை அழகு ஆகும்.

புற அழகு ஒரு நாள் மாறும் தன்மை உடையது. உயிருக்கு அப்போதைக்கு நன்மை தருவது போல் தோன்றி, பின்னர் துன்பத்தையே தருவது. அக அழகு என்றும் மாறாது. உயிருக்கு என்றும் நலம் தருவது.

புற அழகில் ஆசை கொண்டு அறிவு மயங்கும். அந்த மயக்கத்தைக் கெடுத்து அருள் புரிய ஆறுமுகப் பரம் பொருளை வழிபடுதல் வேண்டும்.

உடம்பின் தன்மையை மணிமேகலை என்னும் காப்பியம் காட்டுவதைப் பின்வருமாறு காண்க.

தண் அறல் வண்ணம் திரிந்து வேறு ஆகி,
வெண்மணல் ஆகிய கூந்தல் காணாய்;

பிறைநுதல் வண்ணம் காணாயோ நீ,
நரைமையில் திரைதோல் தகையின்தறு ஆயது;

விறல்வில் புருவம் இவையுங் காணாய் ,         
இறவின் உணங்கல் போன்றுவேறு ஆயின;

கழுநீர்க் கண்காண், வழுநீர் சுமந்தன;
குமிழ்மூக்கு இவைகாண் உமிழ்சீ ஒழுக்குவ;

நிரைமுத்து அனைய நகையும் காணாய்,
சுரைவித்து ஏய்ப்பப் பிறழ்ந்து வேறு ஆயின;

இலவ இதழ்ச் செவ்வாய் காணாயோ நீ,
புலவுப் புண்போல் புலால் புறத்து இடுவது;

வள்ளைத் தாள்போல் வடிகாது இவைகாண்,
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன;

இறும்பூது சான்ற முலையும் காணாய்,            
வெறும் பை போல வீழ்ந்து வேறு ஆயின;

தாழ்ந்து ஒசி தெங்கின் மடல்போல் திரங்கி
வீழ்ந்தன இளவேய்த் தோளும் காணாய்;

நரம்பொடு விடுதோல் உகிர்த்தொடர் கழன்று
திரங்கிய விரல்கள் இவையுங் காணாய் ;         

வாழைத் தண்டே போன்ற குறங்கு இணை
தாழைத் தண்டின் உணங்கல் காணாய்;

ஆவக் கணைக்கால் காணாயோ நீ,
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ;

தளிர் அடி வண்ணம் காணோயோ, நீ,                       
முளிமுதிர் தெங்கின் உதிர்காய் உணங்கல்;

பூவினும் சாந்தினும் புலால்மறைத்து யாத்துத்
தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய் ......

குளிர்ந்த கரு மணல் போன்ற நிறம் திரிந்து வேறுபட்டு வெள்ளிய மணலைப் போல் நரைத்த கூந்தலைக் காண்பாய்,

வெண்மையுடன் திரைந்த தோலினால் அழகின்றி இருக்கும் பிறைபோன்ற நுதலின் இயல்பை நீ காணவில்லையோ,

வெற்றி பொருந்திய வில் படை போன்ற புருவங்களாகிய இவையும் இறால் மீனின் வற்றல் போல் வேறுபட்டன காண்பாய்,

கழு நீர் மலர் அனைய கண்கள் வழுவாகிய நீரைச் சுமந்தன காண்.

குமிழம் பூப்போலும் மூக்காகிய இவை உமிழுகின்ற சீயைச் சொரிவன காண்,

வரிசைப் படுத்திய முத்துக்களைப் போன்ற பற்களும், சுரை விதையைப் போலப் பிறழ்ந்து வேறுபட்டன காண்பாய்,

முருக்கமலர் போன்ற சிவந்த வாய், புலால் நாற்றம் பொருந்திய புண்ணைப்போல் தீ நாற்றத்தை வெளியிடுவதை நீ காணோயா,

வள்ளைத் தண்டுபோல் வடிந்த காதுகளாகிய இவைகள், உள்ளிருந்த ஊன் வாடிய வற்றலைப் போன்று இருப்பன பாராய்,

வியப்பு மிக்க கொங்கைகளும் உள்ளீடு இல்லாத பையைப் போல வீழ்ந்து வேறுபட்டன காண்பாய்,

இளைய மூங்கில் போன்ற தோள்களும், தாழ்ந்து வளைந்த தென்னை மடல்போல் திரைந்து வீழ்ந்தன காணாய்,

நரம்புடன் தோலும் நகத்தின் தொடர்ச்சியைக் கழன்று திரைந்த விரல்களாகிய இவற்றையும் காண்பாய்,

வாழைத் தண்டு போன்ற துடைகள் இரண்டும் தாழைத் தண்டுபோல் வற்றி இருத்தலைக் காண்பாய்,

அம்புப் புட்டிலைப் போன்ற கணைக்கால்கள் தம்மிடம் பொருந்திய நரம்பினையும் என்பினையும் வெளியே காட்டுவனவற்றை நீ காணவில்லையோ,

தளிர்போலும் அடிகளின் வண்ணம் முதிர்ந்த தென்னையில் உலர்ந்து உதிர்ந்த காயின் வற்றல் போன்றிருப்பதை நீ காணாயோ,

மலராலும் சாந்தாலும் புலால் நாற்றத்தை மறைத்து, ஆடையாலும் அணிகலனாலும் முன்னோர் அமைத்த, வஞ்சத்தைத் தெரிந்து கொள்வாய்.


மேலும் இந்த உடம்பானது நாம் செய்த வினையின் காரணமாக வந்தது. மேலும் வினைகளைப் புரிவதற்கு விளை நிலமாக உள்ளது. புனையப்படுவன ஆகிய மணப் பொருள்கள் இல்லாமல் போனால், வெற்று உடம்பானது புலால் நாற்றத்தை வெளிக்குக் காட்டுவது. முதுமை அடைந்து சாகும் தன்மை உடையது. கொடிய நோய்களுக்கு இருப்பிடமாக உள்ளது. பற்றுக்களுக்குப் பற்றும் இடமாக விளங்குவது, குற்றங்களுக்குக் கொள்கலமாய் உள்ளது.  புற்றில் அடங்கியுள்ள பாம்பு போலச் சினம் முதலாகிய உட்பகைஞர்களுக்குத் தங்கும் இடமாக உள்ளது. அவலம், கவலை, துன்பம், கேடு முதலிவை நீங்காத உள்ளத்தைத் தன்னிடத்தில் உடையது. மக்கள் உடம்பின் தன்மை இது என்று உணர்ந்து, இந்த உடம்பை, கைப்பையின் உட்புறத்தை மேற்புறமாகத் திருப்பிப் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டும் என்று உணர்த்துகின்றது மணிமேகலை என்னும் காப்பியம்.


வினையின் வந்தது வினைக்குவிளைவு ஆயது,
புனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது,
மூத்து விளிவு உடையது, தீப்பிணி இருக்கை ,    
பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்,
புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை,
அவலக் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது,
மக்கள் யாக்கை இது என உணர்ந்து         
மிக்கோய்! இதனைப் புறமறிப் பாராய்....

நாலடியாரும் இதனையே வலியுறுத்துகின்றது...

தோல்போர்வை மேலும் தொளை பலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித்து உடம்பு ஆனால், - மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது, மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.                       

உள் இருக்கும் அழுக்குகளை மறைக்கும் மேற்போர்வையாகிய ஆடையின் பெருமையை உடையது இவ்வுடம்பு. என்றால், அந்த உடம்பைக் கொண்டு காமத்தால் மகிழாமல்,  அம்மேற் போர்வையாகிய ஆடையை, அழுக்கு மறைக்கும் திரையாகவும், மற்றொரு போர்வையாகிய தோல் போர்வையை, ஒரு பையின் திருப்பமாகவும், நினைத்துப் பார்த்து விருப்பத்தை நீக்கிக் கொள்ள வேண்டும்.

கைப் பை ஒன்றிலே பொருள்களை வாங்கித் திணித்து வைக்கின்றோம்.  வைத்துள்ள பொருள்களால் பையின் உட்புறம் அழுக்கு அடைந்து இருக்கும். ஆனால் பையின் வெளிப்புறம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பையின் உட்புறம் மேற்புறமாகத் திருப்பிப் பார்த்தால் அதில் உள்ள அழுக்கு விளங்கும். அதுபோல, இந்த உடம்பிலே, பல அழுக்குகள் நிறைந்து உள்ளன. "சீ வார்ந்து, ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில்" என்பார் மணிவாசகப் பெருமான். "புன்புலால் உடம்பின் அசுத்தமும், இதில் பொருந்தி நான் இருக்கின்ற புணர்ப்பும்" என்பார் வள்ளல் பெருமான்.

இந்த உடம்பின் தன்மையை பட்டினத்து அடிகள், "கோயில் திரு அகவல்" என்னும் பாடலில் விளக்குமாறு காண்க...

விழுப் பொருள் அறியா வழுக்கு உறு மனனும்,
ஆணவ மலத்து உதித்து அளைந்து, அதின் ஊடு
நிணவைப் புழு என நெளிந்திடு சிந்தையும்;
படிறும், பாவமும், பழிப்பு உறு நினைப்பும்,
தவறும், அழுக்காறும், இவறு பொய்ச்சாப்பும்,
கவடும், பொய்யும், சுவடும், பெரும் சினம்,
இகலும், கொலையும், இழிப்புறு புன்மையும்,
பகையும், அச்சமும், துணிவும், பனிப்பும்,
முக்குண மடமையும், ஐம்பொறி முயக்கமும்,
இடும்பையும், பிணியும் இடுக்கிய ஆக்கையை;
உயிர் எனும் குருகு விட்டு ஓடும் குரம்பையை;
எலும்பொடு நரம்பு கொண்டு இடையில் பிணித்து,
கொழும் தசை மேய்ந்தும் ஒழுக்கும் விழும் குடிலை;
செம்பு எழு உதிரச் சிறுகுழுக் குரம்பையை;
மல உடல் குடத்தை, பல உடல் புட்டிலை;
தொலைவு இலாச் சோற்றுத் துன்பக் குழியை;
கொலை படைக்கலம் பல கிடக்கும் கூட்டை;
சலிப்பு உறு வினைப் பலசரக்குக் குப்பையை;
கோள்சரக்கு ஒழுகும் பீறல் கோணியை;
கோபத் தீ மூட்டும் கொல்லன் துருத்தியை;
ஐம்புலப் பறவை அடையும் பஞ்சரத்தை;
புலராக் கவலை விளை மரப் பொதும்பை;
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தை;
காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை;
மக்கள் வினையின் மயங்கும் திகிரியை;
கடுவெளி உருட்டிய சகடக் காலை;
பாவச் சரக்கொடு பவக்கடல் புக்கு
காமக் காற்று எடுத்து அலைப்ப,
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை;
இருவினை விலங்கொடும் இயங்கு புன்கலனை,
நடுவன் வந்து அழைத்திட நடுங்கிடும் யாக்கையை,
பிணம் எனப் படுத்து, யான் புறப்படும் பொழுது
அடிமலர்க் கமலத்துக்கு அபயம், நின் அடைக்கலம்....

எனவே, இந்த உடம்பின் மேல் வைக்குப் பற்றினை விட்டு, அதிலே உள்ளிட்டு இருக்கும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் சரக்குகளைத் தூக்கி எறிந்து விட்டு, இறைவன் குடியிருக்கும் கோயிலாக உள்ளத்தை மாற்ற வேண்டும்.

அப்பர் பெருமான் அருளியுள்ள, சரக்கு அறைத் திருவிருத்தத் திருப்பதிகத்தை ஓதி உணர்ந்து, இறைவன் திருவருளைப் பெற முயலுதல் வேண்டும். சரக்கு இறைத் திருவிருத்தப் பாடல் ஒன்று இதோ.....

விண்டார் புரம்மூன்றும் எய்தாய்! என் விண்ணப்பம், மேல் இலங்கு
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும், தொழுது பாதம்
கண்டார்கள் கண்டு இருக்கும் கயிலாயமும், காமர் கொன்றைத்
தண் தார் இருக்கும் சரக்கு அறையோ என் தனிநெஞ்சமே.        --- அப்பர்.

கருத்துரை

முருகா! பொதுமாதர் மயலில் சிக்குண்டு அழியாமல், திருவருள் புரிவாய்.

        





No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...