சிதம்பரம் - 0629. சாந்துடனே புழுகு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சாந்துடனே புழுகு (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
விலைமாதர் மீது வைத்த இச்சையை மாற்றி,
உனது திருவடியில் அன்பு பொருந்த அருள்


தாந்தன தானதன தாந்தன தானதன
     தாந்தன தானதன ...... தனதான


சாந்துட னேபுழுகு தோய்ந்தழ கார்குழலை
     மோந்துப யோதரம ...... தணையாகச்

சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்தநு ராகசுக
     காந்தமொ டூசியென ...... மடவார்பால்

கூர்ந்தக்ரு பாமனது போந்துன தாள்குறுகி
     ஓர்ந்துண ராவுணர்வி ...... லடிநாயேன்

கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணை
     பூண்டுற வாடுதின ...... முளதோதான்

பாந்தளின் மீதினிதி னோங்குக ணேதுயில்கொள்
     நீண்டிடு மாலொடய ...... னறியாது

பாம்புரு வானமுநி வாம்புலி யானபதன்
     ஏய்ந்தெதிர் காணநட ...... மிடுபாதர்

பூந்துணர் பாதிமதி வேய்ந்தச டாமகுட
     மாங்கன காபுரியி ...... லமர்வாழ்வே

பூங்கமு கார்வுசெறி யூங்கன காபுரிசை
     சூழ்ம்புலி யூரிலுறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சாந்து உடனே புழுகு தோய்ந்த அழகார் குழலை
     மோந்து, பயோதரம் ...... அது அணையாகச்

சாய்ந்து, ப்ரதாபமுடன் வாழ்ந்து, நுராக சுக
     காந்தமொடு ஊசி என, ...... மடவார்பால்

கூர்ந்த க்ருபா மனது போந்து, ன தாள் குறுகி,
     ஓர்ந்து, ணரா உணர்வுஇல் ...... அடிநாயேன்,

கூம்பு அவிழ் கோகநக பூம்பத கோதில் இணை
     பூண்டு, றவாடு தினம் ...... உளதோதான்?

பாந்தளின் மீது இனிதின் ஓங்கு கணே துயில்கொள்
     நீண்டிடு மாலொடு, யன் ...... அறியாது

பாம்பு உருவான முநி, வாம் புலியான பதன்
     ஏய்ந்து எதிர் காண நடம் ...... இடுபாதர்

பூந்துணர் பாதிமதி வேய்ந்த சடாமகுட
     மாம் கனகாபுரியில் ...... அமர்வாழ்வே!

பூங்கமுகு ஆர்வு செறியூம் கனகா புரிசை
     சூழ்ம் புலியூரில் உறை ...... பெருமாளே.
   
பதவுரை

      பாந்தளின் மீது --- பாம்பாகிய ஆதிசேடன் மேல்

     இனிதின் ஓங்கு க(ண்)ணே துயில்கொள் --- இனிது விளங்கி அறிதுயில் கொள்ளுகின்ற

     நீண்டிடும் மாலொடு --- நெடிய வடிவம் கொண்ட திருமாலும்,

     அயன் அறியாது --- பிரமதேவனும் அறிய முடியாது நின்று,

      பாம்பு உருவான முநி --- பாம்பு வடிவத்தைக் கொண்ட பதஞ்சலி முனிவரும்,

     வா(வு)ம் புலியான பதன் --- தாவிச் செல்லும் புலியின் பாதங்களைக் கொண்ட வியாக்ரபாத முனிவரும்

     ஏய்ந்து ---  உள்ளம் பொருந்தி,

     எதிர் காண நடம் இடும் பாதர் --- கண்டு வணங்கும்படி திருநடனம் புரிகின்ற கூத்தப் பெருமான்

      பூந்துணர் பாதிமதி வேய்ந்த சடாமகுடமாம் --- அழகிய பூங்கொத்துக்களையும், பிறைச் சந்திரனையும் சூடியுள்ள சடையை உடையவர்

     கனகா புரியில் அமர் வாழ்வே --- திருநடனம் புரிந்து அருள்கின்ற பொன்னம்பலத்தில் விளங்குகின்றவரே!

      பூங்கமுகு ஆர்வு --- அழகிய கமுகு மரங்கள் நிறைந்து வளர்ந்துள்ளதும்,

     செறியூம் கனகாபுரிசை சூழும் புலியூரில் உறை பெருமாளே --- நெருங்கியுள்ள பொன்னிற மதில்கள் சூழ்ந்ததுமான புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் வாழ்கின்ற பெருமையில் மிக்கவரே!

      சாந்துடனே புழுகு தோய்ந்த --- சாந்தும், புனுகும் தோய்ந்துள்ள,

     அழகு ஆர் குழலை மோந்து --- அழகு நிறைந்த கூந்தலை முகர்ந்து பார்த்தும்,

      பயோதரம் அது அணையாக சாய்ந்து --- முலைகளையே அணையாகக் கொண்டு சாய்ந்து,

     ப்ரதாபமுடன் வாழ்ந்து --- பெருமையுடன் வாழ்ந்தும்,

      அநுராக சுக --- காம இச்சை இன்பத்தில்,

     காந்தமொடு ஊசி என --- காந்தமும் ஊசியும் போலப் பொருந்தி,

      மடவார் பால் கூர்ந்த --- விலைமாதர்களிடத்தில் சேர்ந்து

     க்ருபா மனது போந்து --- அன்பு வைத்த மனத்தை மாற்றி,

     உனதாள் குறுகி --- தேவரீருடைய திருவடியை அணுகி,

      ஓர்ந்து உணரா உணர்வுஇல் அடி நாயேன் --- சிந்தித்து உணர்கின்ற உணர்ச்சி இல்லாத நாயேனாகிய நான்,

      கூம்பு அவிழ் கோகநக --- மலர்ந்த தாமரை போன்ற அழகிய

     பூம்பத கோது இல் இணை பூண்டு --- குற்றம் இல்லாத இணையார் திருவடிகளை எனது தலைமிசைப் பொருந்த வைத்து, மனதில் அன்பு பூண்டு,

     உறவாடு தினம் உளதோ தான் --- மகிழுகின்ற நாள் ஒன்று உள்ளதோ?


பொழிப்புரை


         பாம்பாகிய ஆதிசேடன் மேல் இனிது விளங்கி அறிதுயில் கொள்ளுகின்ற நெடிய வடிவம் கொண்ட திருமாலும், பிரமதேவனும் அறிய முடியாது நின்று, பாம்பு வடிவத்தைக் கொண்ட பதஞ்சலி முனிவரும், தாவிச் செல்லும் புலியின் பாதங்களைக் கொண்ட வியாக்ரபாத முனிவரும் உள்ளம் பொருந்தி, கண்டு வணங்கும்படி திருநடனம் புரிகின்ற கூத்தப் பெருமான், அழகிய பூங்கொத்துக்களையும், பிறைச் சந்திரனையும் சூடியுள்ள சடையை உடையவர் திருநடனம் புரிந்து அருள்கின்ற பொன்னம்பலத்தில் விளங்குகின்றவரே!

     அழகிய கமுகு மரங்கள் நிறைந்து வளர்ந்துள்ளதும், நெருங்கியுள்ள பொன்னிற மதில்கள் சூழ்ந்ததுமான புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் வாழ்கின்ற பெருமையில் மிக்கவரே!

     சாந்தும், புனுகும் தோய்ந்துள்ள, அழகு நிறைந்த கூந்தலை முகர்ந்து பார்த்தும், முலைகளையே அணையாகக் கொண்டு சாய்ந்து, பெருமையுடன் வாழ்ந்து, காம இச்சை இன்பத்தில், காந்தமும் ஊசியும் போலப் பொருந்தி, விலைமாதர்களிடத்தில் சேர்ந்து அன்பு வைத்த மனத்தை மாற்றி, தேவரீருடைய திருவடியை அணுகி, சிந்தித்து உணர்கின்ற உணர்ச்சி இல்லாத நாயேனாகிய நான், மலர்ந்த தாமரை போன்ற அழகிய, குற்றம் இல்லாத இணையார் திருவடிகளை எனது தலைமிசைப் பொருந்த வைத்து, மனதில் அன்பு பூண்டு, மகிழுகின்ற நாள் ஒன்று உள்ளதோ?

விரிவுரை


பயோதரம் அது அணையாகச் சாய்ந்து ---

பயம் - பால். உதரம் - வயிறு, கருப்பம், கீழ்வயிறு.
பயோதரம் - பாலைக் கொண்ட முலை.
முலையை அணையாக வைத்துச் சாய்ந்து, இன்பத்தில் திளைத்தல்.

கொத்து அர் கூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா....               ---- ஆண்டாள்.

தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால்
மின்ஆரும் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல் தன்
பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வாகப்
பன்னாளும் பயில் யோக பரம்பரையின் விரும்பினார்.     ---  பெரியபுராணம்.

காந்தமொடு ஊசி என, மடவார்பால் கூர்ந்த க்ருபா மனது போந்து, ன தாள் குறுகி, ஓர்ந்து, ணரா உணர்வு இல்  அடி நாயேன் ---

ஊசியானது காந்தத்தைக் கண்ட உடனே சென்று ஒட்டிக் கொள்வது போல, மாதர் மேல் வைத்த இச்சையை மாற்றி, இறைவன் மேல் வைக்க வேண்டும்.

"ஊசி காந்தத்தினைக் கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னி உன்னி, படபட என நெஞ்சம் பதைத்து, உள் நடுக்கு உறப் பாடி ஆடிக் குதித்து, பனிமதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி" என்பார் தாயுமானார்.

நெறிதரு குழலை அறல் என்பர்கள்,
நிழல் எழு மதியம் நுதல் என்பர்கள்,
நிலவினும் வெளிது நகை என்பர்கள்,
நிறம்வரு கலசம் முலை என்பர்கள்,
அறிகுவது அரிது இவ் இடை என்பர்கள்,
அடிஇணை கமல மலர் என்பர்கள்,
அவயவம் இனைய மடமங்கையர்
அழகியர், அமையும், அவர் என் செய?

மறிமழு உடைய கரன் என்கிலர்,
மறலியை முனியும் அரன் என்கிலர்,
மதிபொதி சடில தரன் என்கிலர்,
மலைமகள் மருவு புயன் என்கிலர்,
செறிபொழில் நிலவு தி(ல்)லை என்கிலர்,
திருநடம் நவிலும் இறை என்கிலர்,
சிவகதி அருளும் அரசு என்கிலர்,
சிலர் நரகு உறுவர் அறிவு இன்றியே.      --- கோயில் நான்மணி மாலை.

சொல் பல பேசித் துதித்து, நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்
தோலும் இறைச்சியுந் துதைந்து சீப் பாயும்

காமப் பாழி, கருவிளை கழனி,
தூமைக் கடவழி, தொளைபெறு வாயில்
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி,
மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்,
நச்சிக் காமுகர நாய்தான் என்றும்

இச்சித்து இருக்கும் இடைகழி வாயில்;
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி,
புண் இது என்று புடவையை மூடி
உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண்,

மால்கொண்ட அறியா மாந்தர் புகும் வழி,
நோய்கொண்டு ஒழியா நுண்ணியர் போம்வழி,
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி,
செருக்கிய காமுகர் சேரும் சிறுகுழி,
பெண்ணுமு ஆணும் பிறக்கும் பெருவழி,

மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம் சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்,
இத்தை நீங்கள் இனிது என வேண்டா,
பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச் சிவபத வீடு அருள்பவனை,

முத்தி நாதனை, மூவா முதல்வனை,
அண்டரு அண்டமும் அனைத்து உள புவனமும்
கண்ட அண்ணலை, கச்சியில் கடவுளை,
ஏக நாதனை, இணை அடி இறைஞ்சுமின்,
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!     ---  பட்டினத்தார்.

பாந்தளின் மீது இனிதின் ஓங்கு கணே துயில்கொள் நீண்டிடு மாலொடு, யன் அறியாது ---

திருப்பாற்கடலிலே ஆதிசேடன் ஆகிய பாம்பினை அணையாகக் கொண்டு திருமால் அறிதுயில் கொண்டிருப்பார்.  அவர் வாமன அவதாரம் மேற்கொண்ட போது, நெடிய திருவுருவத்தைத் தாங்கியதால், நீண்டிடு மால் என்றார்.

திருமாலும் பிரமனும் தம்முள் பிணக்கம் கொண்டு, தாமை பரம்பொருள் என்று தருக்கி இருந்தபோது, அவர்களுக்கு நடுவே, சிவபெருமான் நீண்டதொரு தழல் பிழம்பாக நின்றார்.  அதன் திருவடியையும், திருமுடியையும் காண்பார் யாரோ அவரே பரம்பொருள் என்று கொண்டு,  திருமால் பன்றி வடிவம் தாங்கி திருமுடியைத் தேடிச் சென்றார்.  பிரமன் அன்னப்பறவை வடிவம் தாங்கி, திருமுடியைத் தேடிச் சென்றார்.  பலகாலம் தேடியும் காணக் கிடைக்காமல் இருவரும் எய்த்து நின்றனர். சிவபெருமானைத் துதித்து இருவரும் உய்ந்தனர்.


மால் அயன் அடிமுடி தேடியதன் உட்பொருள்.

(1)     கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காண முடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.

(2)     அடி - தாமரை. முடி - சடைக்காடு.  தாமரையில் வாழ்வது அன்னம்.  காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை.  இறைவன் இயற்கை வடிவினன்.  இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.

(3)     திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர்.  இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது.  பத்தி ஒன்றாலேயே காணலாம்.

(4)     நான் எனது என்ற இரண்டினாலும் காண முடியாது.  யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான்.

(5)     "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது.  தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும்.

(6)     புறத்தே தேடுகின்ற வரை இறைவனைக் காண இயலாது.  அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பென்னும் வலை வீசி அகக்கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான்.

(7)     பிரமன் - வாக்கு.  திருமால் - மனம்.  வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது.  "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.

(8) பிரமன் - நினைப்பு.  திருமால் - மறப்பு.  இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும்.  "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.

பாம்பு உருவான முநி, வாம் புலியான பதன் ஏய்ந்து எதிர் காண நடம் இடுபாதர் ---

திருமாலும் பிரமனும் தேடிக் காணக் கிடைக்காத சிவபரம்பொருள், பதஞ்சலி முனிவருக்கும், வியாக்கிர பாத முனிவருக்கும் திருநடனக் காட்சி தந்து அருளினார்.

புறத்தே தில்லையம்பலத்திலும், அகத்தே இதய கமலத்திலும் இறைவன் ஓவாது பஞ்சகிருத்திய ஆனந்தத் திருநடன மயர்கிறான். இறைவன் அருட்கூத்தில் ஐந்தொழிலும் நிகழுமாறு காண்க.

அரன் துடி தோற்றம், அமைத்தல் திதியாம்,
அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம்,
அரன் உற்ப அணைப்பில் அமரும் திரோதாயி,
அரன் அடி என்றும் அனுக்கிரகம் என்னே.         ---திருமந்திரம்.

தோற்றம் துடி அதனில், தோயும் திதி அமைப்பில்,
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம், ---ஊற்றமா
ஊன்றும் மலர்ப்பதத்தில் உற்றற திரோதம், முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.               --- உண்மை விளக்கம்.

உடம்பிற்கு எப்படி இதயதாமரை நடுவோ அப்படியே உலகிற்கு நடு சிதம்பரம்; ஆதலால் சிதம்பரம் அண்ட தகராகாசமாம். இதயதாமரை பிண்ட தகராகாசமாம். அண்டத்தும் பிண்டத்தும் அந் நடேசபிரான் உலகம் இயங்குதற் பொருட்டு ஒழியாது அசைதலே அவனது அருட்கூத்தாகும்.

தவமே தனமாகக் கொண்ட மத்தயந்தன முனிவர் என்பார் ஒருவர் இருந்தனர். அவருக்கு அருமையான புத்திரர் ஒருவர் தோன்றினார். அப்புதல்வர் கலைகள் முழுவதும் கற்று உணர்ந்து மெய்ஞ்ஞானம் பெற்றுச் சிறந்ததோர் இடம் சென்று, சிவபெருமானை வழிபட வேண்டுமென்று விரும்பினார்.

புதல்வரது கருமத்தை உணர்ந்த பிதா, ஈசனை வழிபடுவதற்குச் சிறந்த இடம் தில்லை வனமே என்று அறிவுறுத்த, அப்புதல்வர் தந்தை பால் விடைபெற்று தில்லைவனம்எய்தி ஒர் அழகிய பொய்கையும் அதன் தென்புறத்தில் ஓர் ஆலமரத்தின் நிழலில் ஒரு சிவலிங்கமும் இருக்கக்கண்டு அகமிக மகிழ்ந்து, ஆண்டு ஓர் பர்ணசாலை அமைத்து அரனாரை வழிபட்டு வந்தனர். நாள் தோறும் ஈசனை அருச்சிப்பதற்குப் பறிக்கும் நறு மலர்களை ஒரு நாள் ஆராய்ந்து பார்க்கையில், அவற்றுள் பழையனவும் பழுதுபட்டனவுமான பல மலர்கள் கலந்திருக்கக் கண்டு வருந்தி, “கதிரவன் உதித்த பின் மலரெடுக்கில் வண்டுகள் வந்து அம்மலர்களை எச்சில் புரிந்து விடுகின்றன; பொழுது புலராமுன் சென்று மலர் பறிப்போமாயின் மரமடர்ந்த இக்கானகத்தில் வழியறிதல் முடியாது. மரங்களில் ஏறினாலும் பனியால் கால்வழுக்கும்; ஆதலால் இதற்கு என் செய்வது?” என மனங்கவன்று இறைவனைத் துதிக்க, உடனே சிவபெருமான் அந்த இளைய முனிவர் எதிரே தோன்ற, முனிமகனார் அரனாரை வணங்கி, “அரவாபரணா! தேவரீரை வழிபடுதற் பொருட்டு அடியேன் வைகறை எழுந்து சென்று மலர் பறிக்க மரங்களில் வழுக்காமல் ஏறுவதற்கு என் கை கால்களில் வலிய புலி நகங்கள் உண்டாக வேண்டும். வழி தெரிந்து செல்வதற்கும் பழுதற்ற பனிமலரைப் பறிப்பதற்கும் நகங்கள் தோன்றும் கண்களும் உண்டாகவேண்டும்” என்று வரங்கேட்டனர். வேண்டுவோர்க்கு வேண்டிய வண்ணமருளும் விடையூர்தி அவ்வரத்தை நல்கி மறைந்தருளினர். அன்று முதல் அம்முனிச் சிறுவர்க்கு வியாக்ரபாதர் என்று வடமொழியிலும், புலிக்கால் முனிவர் என்று தமிழிலும் பெயர்களுண்டாயின. பின்னர் அவர் தாம் விழைந்தவாறு புதுமலர் கொணர்ந்து புர மெரித்த புராதனனை ஆராதனை புரிந்து மகிழ்ந்திருந்தனர். புலிக்கால் முனிவர் வழிபட்டதனால் தில்லைமாநகர் புலியூர் என்னும் பெயரும் உடைத்தாயிற்று.

         வியாக்ரபாதர் இங்ஙனமிருக்க இவர் தந்தையார் மந்தியந்தன முனிவர் இவர் பால் வந்து இவருக்குத் திருமண முடிக்க வேண்டுமென்னும் தமது கருத்தைத் தெரிவிக்க, புதல்வரும் இசைய, வசிட்ட முனிவரது தங்கையாரை மணம் பேசி புலிப்பாதருக்கு வாழ்க்கைத் துணைவியாக்கினர். அன்னார் செய்த அருந்தவப் பலனாய் உபமன்யு என்னும் அருமந்த புத்திரன் தோன்றினன். அக்குழவியை அருந்ததி தமது இருக்கைக்குக் கொண்டுபோய் காமதேனுவின் பால் தந்து வளர்த்தனள். பின்னர் மகவின் விருப்பத்தால் தாய் தந்தையர் மகனைத் தமது இருப்பிடம் கொண்டு வந்தனர். அம்மகவு பாலுக்கு அழ, மாவு கரைத்த நீரைக் கொடுத்தனள். அம்மகவு அதனை உண்ணாது கதறியழ, தாய் தந்தையர் வருந்தி சிவ சந்நிதியிற் பிள்ளையைக் கிடத்தினர். அக்குழந்தை சிவலிங்கப் பெருமான்பால் பால் வேண்டியழ, அடியவர்க்கருளும் அண்ணல் அருள் சுரந்து இனிய பாற்கடலையே உணவாக, பால் நினைந்தழும் போதெல்லாம் நல்கினர்.

         துன்பம் நீங்கி சிவயோக இன்பத்தில் வியாக்கிரபாதர் நிலைத்திருக்குங்கால், இறைவன் தேவதாரு வனத்தில் இருடிகள் பொருட்டு நிகழ்த்திய ஆனந்த நடனத்தின் வரலாறு தமது அகக்கண்களுக்கு வந்து தோன்ற, ஐயன் அருள் நடனம் புரியுங்கால் அத்தேவதாரு வனத்தில் அடியேன் இருக்கப்பெறாமல் இவ்விடத்தில் இருக்கப் பெற்றனனே! ஆண்டவனது திருவருள் நடனத்தை யான் காணுமாறு எவ்விதம்? என்று மிகவும் உள்ளங் கசிந்து உருகி நிற்ப, `இத்தில்லையே இந்நிலவுலகதித்திற்கு நடுநாடியாயிருத்ததால் இதன் கண்ணேதான் ஆண்டவன் என்றும் ஐந்தொழிற் கூத்து நிகழ்த்துவன், ஆதலால் இத்தில்லைத் தலத்தின்கண் யான் புறத்தேயும், அத்திருநடனத்தைக் காணப் பெறுவேன்” என்று தவக் காட்சியாலுணர்ந்து அவிடத்திலேயே வழிபாடு புரிந்து கொண்டிருந்தார்.

         தேவதாரு வனத்தின் கண்ணிருந்த நாற்பத்தெண்ணாயிரம் முனிவரரும் மீமாஞ்சை நூல் கோட்பாட்டின்படி கன்மமே பலனை நல்கும்; பலனை நல்குவதற்கு இறைவன் வேறு ஒருவன் வேண்டுவதில்லை என்பவை முதலிய கொள்கைகளை உடையாராய் நிற்ப, அன்னார் செருக்கை அகற்றி நல்வழி தருமாறு திருவுளங் கொண்டு சிவபெருமான் திருமாலோடு அவ்வனத்திற் சென்று அம்முனிவரது தவத்தையும் அவர் மனைவியரது கற்பையுமழித்தனர். முனிவர் தெளிந்து புலி, யானை, பாம்பு, மழு முதலியவைகளை சிவன் மேல் ஏவ, அவைகளை ஆபரணமாகவும் ஆடையாகவுங் கொண்டார். முயலகனையும் பல மந்திரங்களையும் ஏவ மந்திரங்களைச் சிலம்புகளாக அணிந்து முயலகன் மீது பயங்கர நடனத்தைப் புரிந்தனர். அரனாரது கொடுங்கூத்தைக் கண்ட முனிவரரும் தேவரும் அஞ்சி அபயம்புக இறைவன் அக்கொடிய நடனத்தை மாற்றி ஆனந்தத் தாண்டவஞ் செய்தனர். முனிவரரது ஆணவ வலிகளெல்லாம் தம் திருவடிக் கீழ் கிடக்கும் முயலகன்பால் வந்தொடுங்க அருள் செய்துமறைந்தனர்.

         பின்னர் நாராயணர் தம் இருக்கை சேர்ந்து இறைவன் செய்தருளிய ஆனந்தக் கூத்தை நினைந்து பெருங்களிப்பால் கண் துயிலாதிருந்து தமது அணையான ஆதிசேடர்க்கு அத்திருநடனத்தின் திறத்தை விளம்ப, ஆதிசேடர் அதனைக் கேட்டு இறைவன் திருநடனத்தைக் காணும் விழைவு மேற்பட்டு கண்ணீர் ததும்பி நிற்க, அது கண்ட மதுசூதனர் “நீர் இறைவனுக்கு அன்பராய் இன்மையின் இனி நீர் தவம் புரிதலே இயல்பு” என்று விடை தந்து அனுப்ப, ஆதிசேடர் கயிலைமலைச் சார்ந்து அம்மலைக்கு அருகில் சிவபெருமானை நினைத்துப் பெருந்தவம் ஆற்றினர். அவர் முன் முக்கண் மூர்த்தி தோன்றி, “அன்ப! யாம் தேவதாரு வனத்தின் கண் திருநடனம் புரிகையில் அவ்விடம் நிலத்திற்கு நடு அன்மையின் அஃது அசைந்தது. ஆதலால் அருட் கூத்தை ஆங்கு இயற்றாது விடுத்தோம். இப்போது இங்கு அதனை இயற்றுதற்கும் இது தக்க இடமன்று. அதனைச் செய்தற்குரிய தில்லை மன்றத்தின் கண்ணே நமது ஐந்தொழில் ஆனந்த நடனம் என்றும் நடைபெறா நிற்கும். அஃது ஏனெனில் உடம்பும் உலகமும் அமைப்பில் ஒப்பனவாம். உடம்பினுள் ஓடும் இடை பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று நாடிகளில் சுழுமுனை நாடி உடம்பின் நடுவில் ஓடும். அங்ஙனமே இந்நிலத்திற்குச் சுழுமுனை நாடியும் தில்லைக்கு நேரே ஓடும். உடம்பின்கண் அந்நடு நாடியின் நடுவே விளங்கும் இதயதாமரையினுள் ஞான ஆகாசத்திலே யாம் ஓவாது அருள் நடனம் புரிவது போலவே, புறத்தே தில்லைத் தலத்தில் சிவலிங்கத்திற்குத் தெற்கேயுள்ள அருள் அம்பலத்தின் கண் என்றும் இடையறாது திருநடனம் இயற்றுவோம். அதனை அங்கே காணும் ஞானக்கண்ணுடையார் பிறவிப் பெருங்கடலைத் தாண்டுவர். ஆதலால் நீ இவ்வுருவை யொழித்து, அத்திரி முனிவர் மனைவியிடத்தே முன்னொருகால் ஐந்தலைச் சிறு பாம்பாய் வந்தனையன்றோ? அவ்வுருவத்தினையே எடுத்து தில்லைத் தலத்தின்கண் சென்று இருப்பாயாக. அங்கு நின்னைப் போல் திருநடன தரிசனங் காண விழைந்து தவமியற்றும் வியாக்ரபாத முனிவனுக்கும் நினக்கும் தைப்பூசத்தன்று சிற்சபையில் திருநடனத்தைக் காட்டி அருள்வோம்” என்று உரைத்து மறைந்தருளினர். பதஞ்சலியார் இறைவன் திருமொழிப்படியே தில்லவனம் சேர்ந்து புலிப்பாதருடன் அளவளாவி அருந்தவமியற்றி நின்றனர். குன்றவில்லி அவ்விரு முனிவரருக்கும் குறித்த நாளில் திருநடனம் புரிந்தருளினர்.
   
கனகா புரியில் அமர்வாழ்வே!..கனகா புரிசை சூழ்ம் புலியூரில் உறை பெருமாளே ---

பொன்னம்பலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமானே என்றும், புலியூர் என்னும் திருத்தலத்திலே திருக்கோயில் கொண்டிருக்கும் பெருமானே என்றும் முருகப்பெருமானைப் போற்றுகின்றார் அடிகளார். ஐம்முகச் சிவனும், ஆறுமுகப் பரம்பொருளும் ஒருவரே என்பது கருத்து. "கனகசபை மேவும் எனது குருநாத, கருணை முருகேசப் பெருமாள்" என்றார் வேறு ஒரு திருப்புகழில்.

கருத்துரை

முருகா! விலைமாதர் மீது வைத்த இச்சையை மாற்றி, தேவரீரது இணையார் திருவடிகளை எனது தலைமிசைப் பொருந்த வைத்து, மனதில் அன்பு பூண்டு, மகிழுகின்ற நாள் ஒன்று விடிய வேண்டும்.





    


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...