சிதம்பரம் - 0635. தத்தைமயில்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தத்தைமயில் (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
விலைமாதர் உறவு நீங்க அருள்.


தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான


தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகை
யிட்டுமுட னாணிமுலை மீதுதுகில் மூடியவர்
சற்றவிடம் வீடுமினி வாருமென வோடிமடி ...... பிடிபோல

தைச்சரச மோடுறவெ யாடியக மேகொடுபொ
யெத்தியணை மீதிலிது காலமெனிர் போவதென
தட்டுபுழு கோடுபனி நீர்பலச வாதையவ ...... ருடல்பூசி

வைத்துமுக மோடிரச வாயிதழி னூறல்பெரு
கக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதற
வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி ......உடைசோர

மச்சவிழி பூசலிட வாய்புலியு லாசமுட
னொப்பியிரு வோருமயல் மூழ்கியபின் ஆபரணம்
வைத்தடகு தேடுபொருள் சூறைகொளு வார்கலவி ......செயலாமோ

சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுக
நித்தியகல் யாணியெனை யீணமலை மாதுசிவை
தற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமை ...... அருள்பாலா

சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபட
ரத்நமயி லேறிவிளை யாடியசு ராரைவிழ
சத்தியினை யேவிஅம ரோர்கள்சிறை மீளநடம் ......இடுவோனே

துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகு
சித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியை
சுத்தஅணை யூடுவட மாமுலைவி டாதகர ...... மணிமார்பா

சுத்தவம காதவசி காமணியெ னோதுமவர்
சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுக
    சுப்ரமணி யாபுலியுர் மேவியுறை தேவர்புகழ் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தத்தை மயில் போலும் இயல் பேசி, பல மோகநகை
இட்டும் உடன் நாணி,முலை மீது துகில் மூடிவர்,
சற்று அவிடம் வீடும் இனி வாரும்என ஓடி, மடி ......பிடிபோல,

தைச் சரசமோடு உறவெ ஆடி, அகமே கொடு பொய்
எத்தி, அணை மீதில்இது காலம், ன்நிர் போவது எ,
தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் ...... உடல்பூசி,

வைத்து முகமோடு, ரச வாய் இதழின் ஊறல் பெரு,
குழல் அளாவ, சுழல் வாள் விழிகளே பதற,
வட்டமுலை மார் புதைய, வேர்வை தர, தோள் இறுகி, ......உடை சோர,

மச்சவிழி பூசல்இட, வாய்புலி, உலாசமுடன்
ஒப்பி, இருவோரும் மயல் மூழ்கிய பின், ஆபரணம்
வைத்து அடகு தேடுபொருள் சூறை கொளுவார், கலவி ......செயல்ஆமோ?

சத்தி, சர சோதி, திரு மாது, வெகு ரூபி, சுக
நித்திய கல்யாணி, னை ஈண மலைமாது, சிவை,
தற்பரனொடு ஆடும் அபிராமி, சிவகாமி. உமை ...... அருள்பாலா!

சக்ரகிரி மூரி, மக மேரு கடல் தூளிபட,
ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ
சத்தியினை ஏவி, அமரோர்கள் சிறை மீள நடம் ......இடுவோனே!

துத்திதன பார, வெகு மோக, சுகவாரி, மிகு
சித்ரமுக ரூபி, எனது ஆயி, வளி நாயகியை
சுத்தஅணை ஊடு, வட மாமுலை விடாத கர! ......மணிமார்பா!

சுத்தவ மகாதவ சிகாமணி என ஓதும்அவர்
சித்தம் அதிலே குடியதா உறையும் ஆறுமுக!
    சுப்ரமணியா! புலியுர் மேவி உறை தேவர் புகழ் ......பெருமாளே.
    
பதவுரை

     சத்தி --- ஆற்றல் படைத்தவள்,

     சர சோதி --- தனிப்பெரும் சுடர்,

     திருமாது --- அருட்செல்வத்தை அருளுபவள்,

     வெகுரூபி --- அநேக வடிவங்களைக் கொள்ளுபவள்,

     சுக நித்திய கல்யாணி --- சுக நிலையில் நாளும் உயிர்களை வைப்பவள்,

     எனை ஈண மலைமாது --- என்னைப் பெற்ற பார்வதி தேவி,

     சிவை --- உயிர்களுக்கு மங்கலத்தை அருள்பவள்,

     தற்பரனொடு ஆடும் அபிராமி --- தானே தனக்கு நிகர் ஆகிய பரம்பொருளோடு அருளாடல் புரிகின்ற பேரழகி,

     சிவகாமி --- சிவத்தை விரும்புபவள்,

     உமை --- உமாதேவியார்

     அருள் பாலா  --- பெற்றருளிய ஞானக் குழந்தையே!

      சக்ரகிரி மூரி மகமேரு கடல் தூளிபட --- சக்ரவாள கிரியும், வலிமை வாய்ந்த பெரிய மேரு மலையும், கடலும் புழுதிபடுமாறு

     ரத்ந மயில் ஏறி விளையாடி --- இரத்தின மயமான மயிலின் மீது ஏறி விளையாடி

     அசுராரை விழ --- அசுரர்கள் மடியுமாறு

     சத்தியினை ஏவி --- சத்தி வேலாயுதத்தை விடுத்து அருளி,

     அமரோர்கள் சிறை மீள --- தேவர்கள் சிறையினின்றும் மீளுமாறு

     நடம் இடுவோனே --- திருநடம் புரிந்தவரே!

      துத்தி தனபார --- தேமல் பரந்த தனபாரங்களைக் கொண்டவளும்,

     வெகு மோக --- மோகத்தை வெகுவாகத் தர வல்லவளும்,

     சுக வாரி --- சுககத்தைக் கடல் அளவு வழங்குபவளும்,

     மிகு சித்ரமுக ரூபி --- மிக அழகிய முக வடிவைக் கொண்டவளும்,

     எனது ஆயி --- எனக்குத் தாயாகியவளும் ஆகிய

     வளி நாயகியை --- வள்ளி நாயகியை,

     சுத்த அணையூடு --- தூய படுக்கையில்,

     வட மாமுலை விடாத கர --- பெருத்த முலைகளை விடாது அணைத்த திருக்கரத்தினை உடையவரே!

     மணி மார்பா --- அழகிய திருமார்பரே!

      சுத்த மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா(ய்) உறையும் ஆறுமுக ---  பரிசுத்தமான, அழகிய, சிறந்த தவ சீலர்களுக்கு மணிமுடியாய் விளங்குபவர் என்று தேவரீரை ஓதுகின்ற அடியவர்களின் உள்ளத்தில் குடியாக உறைகின்ற ஆறுமுகப் பரம்பொருளே!

     சுப்ரமணியா --- சுப்பிரமணியரே!

     புலியூர் மேவி உறை தேவர் புகழ் பெருமாளே --- பெரும்பற்றப் புலியூர் என்னும் சிதம்பரத்தில் பொருந்தி வீற்றிருக்கும், தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      தத்தை மயில் போலும் இயல் பேசி ---  கிளியைப் போல் இனிமையாகப் பேசி மயில் போல நடித்தும்,

     பல மோக நகை இட்டும்  --- பலவிதமாக காம உணர்வை எழுப்ப வல்ல சிரிப்பைச் சிரித்தும்,

     உடன் நாணி முலை மீது துகில் மூடி --- உடனே நாணப்படுவது போலக் காட்டி, முலைகளை ஆடையால் மூடியும் நின்ற

       அவர் --- அந்தப் பொதுமகளிர்,

     சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி --- எங்கள் வீடு கொஞ்ச தூரத்தில் தான் இருக்கின்றது, இனி நீங்கள் வர வேண்டும் என்று ஓடி,

     மடி பிடி போல --- மடியைப் பிடித்து இழுத்துச் செல்வது போல அழைத்துச் சென்று,

     தைச் சரசமோடு --- உள்ளத்தைத் தைக்கும்படியான காம லீலைகளைச் செய்து,

     உறவெ ஆடி --- உறவு முறை வைத்து விளையாடி,

     அகமே கொடு பொய் --- தமது வீட்டுக்குக் கொண்டு போய் (கொண்டு என்னும் சொல் கொடு எனவும், போய் என்னும் சொல் பொய் எனவும் சந்தத்த்தை நோக்கி, குறுகி வந்தன)

      எத்தி --- வஞ்சனையான உள்ளத்துடன்

     அணை மீதில் --- மெல் அணைமீது இருத்தி,

     இது காலம் என் நிர் போவது என --- இதுவே தக்க சமயம்,  ஏன் நீங்கள் போகவேண்டும் என்று கூறி, ( நீர் என்னும் சொல் இடைக் குறைந்து நிர் என வந்தது)

     தட்டு புழுகோடு --- தட்டிலே வைத்த புனுகு சட்டத்துடன்,

     பனி நீர் பல சவாதை --- பன்னீர் சவ்வாது முதலிய பலவிதமான வாசனைத் திரவியங்களை

     அவர் உடல் பூசி வைத்து --- வந்தவருடைய உடலில் பூசி,

     முகமோடு --- முகத்தோடு முகம் வைத்து,

     இரச வாய் இதழின் ஊறல் பெருக --- காம உணர்வு மிகுதியால் இன்ப ரசம் என்று கருதுகின்ற வாய் எச்சில் பெருக,

      குழல் அளாவ --- கூந்தல் கலைய,

     சுழல் வாள் விழிகளே பதற --- ஒளி வீசும் கண்கள் சுழன்று துடிக்க,

     வட்ட முலை மார் புதைய --- வட்டமான முலைகள் மார்பிலே புதை,

     வேர்வை தர --- வேர்வை உண்டா,

     தோள் இறுகி --- தோள் இறுக அணைத்து,

     உடை சோர --- உடை நெகிழ,

     மச்ச விழி பூசலிட வாய் பு(ல்)லி --- மீன் போன்ற விழிகள் காமப் போரை விளைவிக்க, வாயோடு வாய் வைத்து இறுகத் தழுவி, (புல்லி என்னும் சொல் சந்தத்தை நோக்கி, புலி என்று வந்தது)

     உ(ல்)லாசமுடன் ஒப்பி இருவோரு(ம்) மயல் மூழ்கிய பின் --- உல்லாசமாக மனம் ஒப்பி, இருவரும் காம மயக்கில் முழுகிய பின்னர்,(உல்லாசமுடன் என்னும் சொல் சந்தத்தை நோக்கி உலாசமுடன் என்று வந்தது)

      ஆபரணம் வைத்து அடகு --- வந்தவர் நகைகளை அடகு வைத்து,

     தேடு பொருள் சூறை கொளுவார் --- அவர் தேடிய பொருளை எல்லாம் சூறைக் காற்று போல அடித்துக் கொண்டு போகின்ற விலைமகளிருடன்

     கலவி செயல் ஆமோ --- கலவி இன்பம் பெறும் தொழில் நல்லதாகுமா? (ஆகாது).

பொழிப்புரை

     ஆற்றல் மிகப் படைத்தவள், தனிப்பெரும் சுடர், அருட்செல்வத்தை அருளுபவள், அநேக வடிவங்களைக் கொள்ளுபவள், சுக நிலையில் நாளும் உயிர்களை வைப்பவள், என்னைப் பெற்ற பார்வதி தேவி, உயிர்களுக்கு மங்கலத்தை அருள்பவள், தானே தனக்கு நிகர் ஆகிய பரம்பொருளோடு அருளாடல் புரிகின்ற பேரழகி, சிவத்தை விரும்புபவள், உமாதேவியார்  பெற்றருளிய ஞானக் குழந்தையே!

         சக்ரவாள கிரியும், வலிமை வாய்ந்த பெரிய மேரு மலையும், கடலும் புழுதிபடுமாறு  இரத்தின மயமான மயிலின் மீது ஏறி விளையாடி, அசுரர்கள் மடியுமாறு  சத்தி வேலாயுதத்தை விடுத்து அருளி,  தேவர்கள் சிறையினின்றும் மீளுமாறு திருவிளையாடல் புரிந்தவரே!

         தேமல் பரந்த தனபாரங்களைக் கொண்டவளும், மோகத்தை வெகுவாகத் தர வல்லவளும், சுககத்தைக் கடல் அளவு வழங்குபவளும், மிக அழகிய முகவடிவைக் கொண்டவளும், எனக்குத் தாயாகியவளும் ஆகிய வள்ளி நாயகியை, தூய படுக்கையில், அவருடைய பெருத்த முலைகளை விடாது அணைத்த திருக்கரத்தினை உடையவரே!

     அழகிய திருமார்பரே!

         பரிசுத்தமான, அழகிய, சிறந்த தவ சீலர்களுக்கு மணிமுடியாய் விளங்குபவர் என்று தேவரீரை ஓதுகின்ற அடியவர்களின் உள்ளத்தில் குடியாக உறைகின்ற ஆறுமுகப் பரம்பொருளே!

     சுப்பிரமணியரே!

     பெரும்பற்றப் புலியூர் என்னும் சிதம்பரத்தில் பொருந்தி வீற்றிருக்கும், தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

         கிளியைப் போல் இனிமையாகப் பேசி மயில் போல நடித்தும், பலவிதமாக காம உணர்வை எழுப்ப வல்ல சிரிப்பைச் சிரித்தும், உடனே நாணப்படுவது போலக் காட்டி, முலைகளை ஆடையால் மூடியும் நின்ற  அந்தப் பொதுமகளிர், எங்கள் வீடு கொஞ்ச தூரத்தில் தான் இருக்கின்றது, இனி நீங்கள் வர வேண்டும் என்று ஓடி, மடியைப் பிடித்து இழுத்துச் செல்வது போல அழைத்துச் சென்று, உள்ளத்தைத் தைக்கும்படியான காம லீலைகளைச் செய்து, உறவு முறை வைத்து விளையாடி,  தமது வீட்டுக்குக் கொண்டு போய், வஞ்சனையான உள்ளத்துடன்  மெல் அணைமீது இருத்தி, இதுவே தக்க சமயம்,  ஏன் நீங்கள் போகவேண்டும் என்று கூறி, தட்டிலே வைத்த புனுகு சட்டத்துடன், பன்னீர் சவ்வாது முதலிய பலவிதமான வாசனைத் திரவியங்களை  வந்தவருடைய உடலில் பூசி, முகத்தோடு முகம் வைத்து, காம உணர்வு மிகுதியால் இன்ப ரசம் என்று கருதுகின்ற வாய் எச்சில் பெருக, கூந்தல் கலைய, ஒளி வீசும் கண்கள் சுழன்று துடிக்க, வட்டமான முலைகள் மார்பிலே புதை, வேர்வை உண்டா, தோள் இறுக அணைத்து,  உடை நெகிழ, மீன் போன்ற விழிகள் காமப் போரை விளைவிக்க, வாயோடு வாய் வைத்து இறுகத் தழுவி,  உல்லாசமாக மனம் ஒப்பி, இருவரும் காம மயக்கில் முழுகிய பின்னர், வந்தவர் நகைகளை அடகு வைத்து, அவர் தேடிய பொருளை எல்லாம் சூறைக் காற்று போல அடித்துக் கொண்டு போகின்ற விலைமகளிருடன்  கலவி இன்பம் பெறும் தொழில் நல்லதாகுமா? (ஆகாது).

விரிவுரை

இத் திருப்புகழின் முதற்பகுதி விலைமாதரின் சாகசங்களை எடுத்து உரைக்கின்றது.

சுத்த மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா(ய்) உறையும் ஆறுமுக ---

உள்ளத்தில் தூய்மை உடைய, அழகிய சிறந்த தவத்தினை மேற்கொண்டு உள்ளவர்களுக்கு மணிமுடியாய் விளங்கும் பெருமானே என்று முருகப் பெருமானை ஓதுகின்ற அடியவர்களின் உள்ளத்தில் குடியாக உறைகின்றவர் ஆறுமுகப் பரம்பொருள்.
"மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்து அகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலானை, திருமுதுகுன்று உடையான் தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே" என்பார் அப்பர் அடிகள்.
  
நித்தமும் ஓதுவார்கள் சித்தமெ வீடு அதாக,
நிர்த்தம் அது ஆடும் ஆறு ...... முகவோனே!        --- (எத்தனை கோடி) திருப்புகழ்.

பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருள் அதாக நவில்
     சரவணபவா! ஒன்று வல் கரமும் ஆகிவளர்
          பழநிமலை மேல் நின்ற சுப்ரமணியா! அமரர் ...... பெருமாளே.
                                                                 --- (சுருதிமுடி) திருப்புகழ்.

நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே. ---  தாயுமானார்.

உள்ளம் பெருங்கோயில், ஊன்உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிலிங்கம்,
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.     ---  திருமந்திரம்.

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யில் பூசி,
         வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்று,
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றும்,
         செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே என்றும்,
துடிஅனைய இடைமடவாள் பங்கா என்றும்,
         சுடலைதனில் நடமாடும் சோதீ என்றும்,
கடிமலர் தூய்த் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.
  
எவரேனும் தாமாக இலாடத்து இட்ட
         திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,
உவராதே அவரவரைக் கண்ட போதே
         உகந்து, அடிமைத் திறம் நினைந்து, அங்கு உவந்து நோக்கி,
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி
         இரண்டு ஆட்டாது ஒழிந்து, ஈசன் திறமே பேணி,
கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

இலம், காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து
         இடையாதே, யாவர்க்கும் பிச்சை இட்டு,
விலங்காதே நெறி நின்று, அங்கு அறிவே மிக்கு,
         மெய்யன்பு புகப்பெய்து, பொய்யை நீக்கி,
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்
         உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம் வைத்து,
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

விருத்தனே! வேலைவிடம் உண்ட கண்டா!
         விரிசடைமேல் வெண்திங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே! உமைகணவா! உலக மூர்த்தீ!
         நுந்தாத ஒண்சுடரே! அடியார் தங்கள்
பொருத்தனே! என்றென்று புலம்பி, நாளும்
         புலன்ஐந்தும் அகத்து அடக்கி, புலம்பி நோக்கி,
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

பொசியினால் மிடைந்து புழுப் பொதிந்த போர்வைப்
         பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று
பசியினால் மீதூரப் பட்டே ஈட்டி,
         பலர்க்கு உதவல் அது ஒழிந்து, பவள வாயார்
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம்,
         வானவர்கோன் திருநாமம் அஞ்சும் சொல்லிக்
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

ஐயினால் மிடறு அடைப்புண்டு, ஆக்கை விட்டு
         ஆவியார் போவதுமே, அகத்தார் கூடி
மையினால் கண்எழுதி, மாலை சூட்டி,
         மயானத்தில் இடுவதன்முன், மதியம் சூடும்
ஐயனார்க்கு ஆளாகி, அன்பு மிக்கு,
         அகம்குழைந்து, மெய்அரும்பி, அடிகள் பாதம்
கையினால் தொழும்அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

திருதிமையால் ஐவரையும் காவல் ஏவித்
         திகையாதே, சிவாயநம என்னும் சிந்தைச்
சுருதி தனைத் துயக்கு அறுத்து, துன்ப வெள்ளக்
         கடல்நீந்திக் கரை ஏறும் கருத்தே மிக்கு,
பருதி தனைப் பல் பறித்த பாவ நாசா!
         பரஞ்சுடரே! என்றென்று பரவி, நாளும்
கருதிமிகத் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

குனிந்த சிலையால் புரமூன்று எரித்தாய் என்றும்,
         கூற்று உதைத்த குரைகழல் சேவடியாய் என்றும்,
தனஞ்சயற்குப் பாசுபதம் ஈந்தாய் என்றும்,
         தசக்கிரிவன் மலைஎடுக்க விரலால் ஊன்றி
முனிந்து, அவன் தன் சிரம் பத்தும் தாளுந் தோளும்
         முரண் அழித்திட்டு அருள்கொடுத்த மூர்த்தீ! என்றும்
கனிந்து, மிகத் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.     --- அப்பர்.

நற்பதத்தார் நற்பதமே! ஞான மூர்த்தி!
     நலஞ்சுடரே! நால்வேதத்து அப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற
     சொலற்கு அரிய சூழலாய்! இது உன் தன்மை,
நிற்பது ஒத்து நிலையிலா நெஞ்சம் தன்னுள்
     நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே! யான் உன்னை விடுவேன் அல்லேன்,
     கனகமா மணிநிறத்து எம் கடவுளானே!   --- அப்பர்.


உளன் கண்டாய், நல் நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்,
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்க தான் அளந்த மன்.                         --- பேய் ஆழ்வார்.

உளன் கண்டாய், நல் நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்,
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்.                      --- பொய்கை ஆழ்வார்.       

வானத்தான் என்பாரும் என்க, மற்று உம்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாம்என்க, - ஞானத்தான்
முன் நஞ்சத்தால் இருண்ட மொய் ஒளி சேர் கண்டத்தான்
என் நெஞ்சத்தான் என்பன் யான்.                     --- அற்புதத் திருவந்தாதி.

பிரான்அவனை நோக்கும் பெருநெறியே பேணி,
பிரான்அவன்தன் பேரருளே வேண்டி, - பிரான்அவனை
எங்கு உற்றான் என்பீர்கள், என் போல்வார் சிந்தையினும்
இங்கு உற்றான், காண்பார்க்கு எளிது.               --- அற்புதத் திருவந்தாதி.

கருத்துரை

முருகா! விலைமாதர் உறவு தகாது.










        
                 

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...