திருவண்ணாமலை - 0594. வீறு புழுகுஆன





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வீறுபுழுகு ஆனபனி (திருவருணை)

திருவருணை முருகா!
சிவஞான மயமாகிய திருவடியைத் தந்து அருள்

தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன ...... தனதான


வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு
     மேருகிரி யானகொடு ...... தனபார

மீதுபுர ளாபரண சோதிவித மானநகை
     மேகமனு காடுகட ...... லிருள்மேவி

நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேதுவள
     நாணமழி வார்களுட ...... னுறவாடி

நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்
     ஞானசிவ மானபத ...... மருள்வாயே

கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய
     கோலமயி லானபத ...... மருள்வோனே

கூடஅர னோடுநட மாடரிய காளியருள்
     கூருசிவ காமியுமை ...... யருள்பாலா

ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன
     மாரவிளை யாடிமண ...... மருள்வோனே

ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய
     ஆதியரு ணாபுரியில் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வீறு புழுகு, னபனி நீர்கள், மல தோயல்விடு,
     மேருகிரி ஆன கொடு ...... தனபார

மீது புரள் ஆபரண சோதி விதம் ஆன நகை
     மேகம் அனுகாடு கடல் ...... இருள்மேவி,

நாறுமலர் வாசமயிர், நூல் இடையதே துவள,
     நாணம் அழிவார்கள் உடன் ...... உறவாடி,

நாடி அதுவே கதி ஏனா சுழலும் மோடனை, நின்
     ஞான சிவமான பதம் ...... அருள்வாயே

கூறும் அடியார்கள் வினை நீறு படவே, அரிய
     கோல மயில் ஆனபதம் ...... அருள்வோனே!

கூட அரனோடு நடம் ஆட அரிய காளிஅருள்
     கூரு சிவகாமி உமை ...... அருள்பாலா!

ஆறுமுகம் ஆன நதி பால! குற மாது தனம்
     ஆர விளையாடி மணம் ...... அருள்வோனே!

ஆதி ரகுராம ஜய மாலின் மருகா! பெரிய
     ஆதி அருணாபுரியில் ...... பெருமாளே.

பதவுரை

         கூறும் அடியார்கள் வினை நீறுபடவே அரிய கோலமயில் ஆன பதம் அருள்வோனே --- சதா இறைவனுடைய திருநாமங்களையே கூறுகின்ற அடியார்களின் வினைகள் பொடியாகுமாறு, அந்த அடியார்க்கு அருமையான அழகிய மயிலான பதவியை அருள்பவரே!

         கூட அரனோடு நடமாட அரிய காளி அருள்கூரு சிவகாமி உமை அருள்பாலா --- சிவபெருமானுடன் நடனம் ஆடிய அரிய காளி தேவியும், அருள் மிகுந்த சிவகாமியும், உமாதேவியும் ஆகிய பார்வதி தேவி அருளிய குழந்தையே!

      ஆறுமுகமான நதி பால --– ஆறு திருமுகங்களைக் கொண்ட, கங்கா நதியின் புதல்வரே!

      குறமாது தனம் ஆர விளையாடி மணம் அருள்வோனே --- வள்ளநாயகியின் தனங்கள் மகிழ்ச்சி நிறைய விளையாடல் புரிந்து மணம் செய்துகொண்டவரே!

      ஆதி ரகுராம ஜயமாலின் மருகா --- ஆதி ரகுராமராகிய, வெற்றியுடைய திருமாலின் திருமருகரே!

      பெரிய ஆதி அருணாபுரியில் பெருமாளே --- பெரிய ஆதித் தலமான திருவருணையம்பதியில் வீற்றிருக்கின்ற பெருமையில் சிறந்தவரே!

      வீறு புழுகு ஆன பனி நீர்கள் --- மேம்பட்ட புனுகு சட்டம், பனிநீர்கள் இவைகளை,

     மல தோயல் விடு --- மலம் தோய்ந்த இந்த உடம்பின் மீது விட்டுப் பூசி,

     மேருகிரி ஆன கொடு தனபார மீது புரள் --- மேருமலை போன்ற கொடுமை விளைக்கின்ற கொங்கைப் பாரங்களின் மேல் புரளுகின்ற

     ஆபரண சோதி, விதமான நகை, மேகம் அனுகாடு கடல் இருள்மேவி --- அணிகலன்களின் ஒளியும், பலவிதமான சிரிப்பும், மேகம் காடு கடல் இவைகளின் கருநிறத்தைக் கொண்டு, 

      நாறுமலர் வாசமயிர் --- மணம் வீசும் மலர்களின் மணம் கொண்ட கூந்தலும்,

     நூல் இடை அதே துவள --- நூல் போன்ற நுண்ணிய இடை துவள்வதும் கொண்டு,

     நாணம் அழிவார்களுடன் உறவாடி --- நாணமே இன்றி அழியும் வேசையர்களுடன் நட்புக் கொண்டு,

       நாடி அதுவே கதியெனா சுழலும் மோடனை --- விரும்பி, அவர்களுடன் வாழ்வதுவே கதியாகிச் சுழலுகின்ற மூடனாகிய அடியேனுக்கு,

     நின் ஞானசிவம் ஆன பதம் அருள்வாயே --- தேவரீருடைய ஞானமும், சிவமயமுமாகிய திருவடியைத் தந்து அருளுவீராக.

பொழிப்புரை

         சதா இறைவனுடைய திருநாமங்களையே கூறுகின்ற அடியார்களின் வினைகள் பொடியாகுமாறு, அந்த அடியார்க்கு அருமையான அழகிய மயிலான பதவியை அருள்பவரே!

         சிவபெருமானுடன் நடனம் ஆடிய அரிய காளி தேவியும், அருள் மிகுந்த சிவகாமியும், உமாதேவியும் ஆகிய பார்வதி தேவி அருளிய குழந்தையே!

         ஆறு திருமுகங்களைக் கொண்ட, கங்கா நதியின் புதல்வரே!

          வள்ளநாயகியின் தனங்கள் மகிழ்ச்சி நிறைய விளையாடல் புரிந்து மணம் செய்துகொண்டவரே!

         ஆதி ரகுராமராகிய, வெற்றியுடைய திருமாலின் திருமருகரே!

         பெரிய ஆதித் தலமான திருவருணையம்பதியில் வீற்றிருக்கின்ற பெருமையில் சிறந்தவரே!

         மேம்பட்ட புனுகு சட்டம், பனிநீர்கள் இவைகளை, மலம் தோய்ந்த இந்த உடம்பின் மீது விட்டுப் பூசி, மேருமலை போன்ற கொடுமை விளைக்கின்ற கொங்கைப் பாரங்களின் மேல் புரளுகின்ற அணிகலன்களின் ஒளியும், பலவிதமான சிரிப்பும், மேகம் காடு கடல் இவைகளின் கருநிறத்தைக் கொண்டு,  மணம் வீசும் மலர்களின் மணம் கொண்ட கூந்தலும், நூல் போன்ற நுண்ணிய இடை துவள்வதும் கொண்டு, நாணமே இன்றி அழியும் வேசையர்களுடன் நட்புக் கொண்டு, விரும்பி, அவர்களுடன் வாழ்வதுவே கதியாகிச் சுழலுகின்ற மூடனாகிய அடியேனுக்கு, தேவரீருடைய ஞானமும், சிவமயமுமாகிய திருவடியைத் தந்து அருளுவீராக.

   
விரிவுரை


வீறு புழுகான பனிநீர் ---

வாசனைகளில் மேம்பட்டது புனுகு சட்டம்.  மற்றொன்று பன்னீர்.

மலதோயல் விடு ---

மல தோயல் - உடம்பு. மலம் தோய்ந்து இருப்பதனால் உடம்பு இப் பெயர் பெற்றது.

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை       ---  திருவாசகம்.

மேகமனுகாடு கடலிருள் மேவி ---

அனு - தொடர்வது.

மேகம், காடு, கடல் இவைகள் இருண்டு, கருமையாகக் காட்சியளிக்கும்.  இவைகள் கூந்தலுக்கு உவமைகள் ஆயின.

நாணம் அழி மடவார்கள் உடன் உறவாடி ---

ஒருவனுக்கு நாணம் இருப்பது அவசியம்.  செய்யவேண்டிய கருமங்களைச் செய்யாமல் இருப்பதற்கும், செய்யத்தகாத கருமங்களைச் செய்வதற்கும் நாணுதல் வேண்டும்.

பேதையின் தொழில்கள் இவை என்று திருவள்ளுவர் கூறுகின்றார்....

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

நாணாமையை முன்னணியில் வைத்துக் கூறியைதைச் சிந்தியுங்கள்.

காலையில் எழுந்தவுடந் நீராடி, நீறாடி, இறைவணக்கம் செய்தல் வேண்டும்.  அவ்வாறு செய்ய இயலாதபோது நாணுதல் வேண்டும்.

மேலும் பெண்கட்கு நாணம் மிகமிக உரியது.  நாணம் சிறிதும் இல்லாதவர் பொதுமகளிர் என்று இங்கே புலப்படுத்துகின்றார்.
  
ஞானசிவம் ஆனபதம் ---

முருகன் திருவடி ஞானம் ஆகும்.

வள்ளல்தொழு ஞானக் கழலோனே ---  துள்ளுமத திருப்புகழ்.

கூறுமடியார்கள் வினை நீறுபடவே ---

சதா முருகன் திருநாமங்களைக் கூறுபவர்கள் வினைகள் நீறுபடும்.

கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே ---  திருப்புகழ்.

கோலமயிலான பதம் ---

மயிலாவது ஒரு பதம்.  இப் பதம் பெற்றவன் சூரபன்மன்.  மிகச் சிறந்த பதம்.  பெறுதற்கரியது.
  
ஆதிரகு ராமஜெயமால் ---

இராமர் ஜெயராமர்.  தோல்வியே அறியாதவர் இராமர்.  இராமஜெயம்.
  
ஆதி அருணாபுரி ---

முதன்மையான திருத்தலம் திருவண்ணாமலை.

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே     ---  திருப்புகழ்.


கருத்துரை

அருணை மேவிய அரசே, ஞான சிவபதம் அருள்வாய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...