மெலியவனை அடித்த கோலே வலியவனை அடிக்கும்





முடவனை மூர்க்கன் கொன்றால்,
     மூர்க்கனை முனிதான் கொல்லும்;
மடவனை வலியான் கொன்றால்,
     மறலிதான் அவனைக் கொல்லும்;
தடவரை முலைமாதே! இத்
     தரணியில் செருக்கினாலே,
மடவனை அடித்த கோலும்
     வலியனை அடிக்கும் கண்டாய்.


     இதன் பொருள் ---

     தடவரை முலைமாதே --- விசாலமாகிய மலை போன்ற முலைகளை உடைய அழகிய பெண்ணே!

     இத் தரணியில் --- இந்த உலகத்தில்,

     முடவனை மூர்க்கன் கொன்றால் --- கைகள் கால்கள் முதலியன முடங்கிச் செயல்பாடு இழந்த ஒருவனை முரடன் ஒருவன் கொன்றான் ஆனால்,

     மூர்க்கனை முனிதான் கொல்லும் --- இந்த முரடனை அவனிலும் வலிமை பொருந்திய ஒருவன் (அல்லது பேய் அல்லது கடவுள்) பின் ஒரு காலத்தில் கொல்லுவான்.

     மடவனை வலியான் கொன்றால் --- அறிவு அற்ற ஓர் ஏழையை, வலிமை பொருந்திய ஒருவன் கொன்றான் ஆனால்,

     மறலி தான் அவனைக் கொல்லும் --- அவனை எமன் ஒரு காலத்தில் கொல்லுவான்.

     செருக்கினாலே மடவனை அடித்த கோலும் --- செல்வச் செருக்கு காரணமா, ஏழை ஒருவனை வலியவன் ஒருவன் தனது கைக் கொண்டு அடித்த கோல் ஆனது,

     வலியனை அடிக்கும் கண்டாய் --- பின் ஒரு காலத்தில் அவனிலும் வலியவன் ஒருவன் கையில் அந்தக் கோல் வந்து பொருந்தி, முன்னே ஏழையை அடித்த வலியவனை அடிக்கும் என்று உலகின் நிகழ்வைக் கண்கூடாகக் கண்டு கொள்வாய்.

     கருத்து --- வலியவர் ஆனாலும், தன்னிலும் மெலியவரைத் துன்புறுத்தக் கூடாது. செய்தால், வேறு ஒருவரால் அத் துன்பம் வந்து பின் அடையும்.

"வலியார் முன் தன்னை நினைக்க, தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து"

என்னும் திருக்குறள் கருத்து இங்கு வைத்து எண்ணத் தக்கது.


No comments:

Post a Comment

திருவொற்றியூர்

  "ஐயும் தொடர்ந்து, விழியும் செருகி, அறிவு அழிந்து, மெய்யும் பொய்யாகி விடுகின்ற போது ஒன்று வேண்டுவன் யான், செய்யும் திருவொற்றியூர் உடைய...