இறந்தும் இறவாதவர்

31. இறந்தும் இறவாதவர்

அனைவர்க்கும் உபகாரம் ஆம்வாவி கூபம்உண்
     டாக்கினோர், நீதிமன்னர்,
அழியாத தேவா லயங்கட்டி வைத்துளோர்,
     அகரங்கள் செய்தபெரியோர்,

தனையொப்பி லாப்புதல்வ னைப்பெற்ற பேர்,பொருது
     சமர்வென்ற சுத்தவீரர்,
தரணிதனில் நிலைநிற்க எந்நாளும் மாறாத
     தருமங்கள் செய்தபேர்கள்,

கனவித்தை கொண்டவர்கள், ஓயாத கொடையாளர்,
     காவியம் செய்தகவிஞர்,
கற்பினில் மிகுந்தஒரு பத்தினி மடந்தையைக்
     கடிமணம் செய்தோர்கள்,இம்

மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத
     மனிதர் இவர் ஆகும் அன்றோ!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.
  
        இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     அனைவர்க்கும் உபகாரம் ஆம் வாவி கூபம் உண்டாக்கினோர் --- எல்லோருக்கும் பயன்படுமாறு குளங்களையும் கிணறுகளையும் வெட்டி வைத்தவர்கள்,

     நீதி மன்னர் --- நீதி நெறி தவறாத அரசர்கள்,

     அழியாத தேவ ஆலயம் கட்டி வைத்து உளோர் --- அழியாத திருக்கோயில்களைக் கட்டி வைத்தவர்களும்,

     அகரங்கள் செய்த பெரியோர் --- மறையவர் வாழிடங்களை உண்டாக்கிய பெரியோர்களும்,

     தனை ஒப்பிலாப் புதல்வனைப் பெற்ற பேர் --- தனக்கு உவமையற்ற ஒரு மகனைப் பெற்றவர்களும்,

     பொருது சமர் வென்ற சுத்த வீரர் --- போரிலே சண்டையிட்டு வென்ற தூய வீரர்களும்,

     தரணி தனில் நிலை நிற்க எந்நாளும் மாறாத தருமங்கள் செய்த பேர்கள் --- உலகிலே எப்போதும் நிலைத்திருக்கக் கூடிய மாறாத அறச்செயல்களைச் செய்த சான்றோர்களும்,

     கன வித்தை கொண்டவர்கள் --- பெருமைக்கு உரிய கலைகளைப் பயின்றவர்களும்,

     ஓயாத கொடையாளர் --- இல்லை என்று வந்தவருக்கு எப்போதும் கொடுத்து உதவியவர்களும்,

     காவியம் செய்த கவிஞர் --- காவியங்களை எழுதிய கவிஞர்களும்,

     கற்பினில் மிகுந்த ஒரு பத்தினி மடந்தையைக் கடிமணம் செய்தோர்கள் --- கற்பிலே சிறந்தவளும், கொண்டானைக் கொண்டு ஒழுகுபவளும் ஆகிய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர்களும்,

     இம் மனிதர்கள் --- ஆகிய இந்த மனிதர்கள் யாவரும்,

     சரீரங்கள் போகினும் சாகாத மனிதர் இவர் ஆகும் அன்றோ --- பூத உடல் அழிந்தாலும், அழியாத புகழுடலைப் பெற்றவர்கள் ஆவார்கள் அல்லவா?

     விளக்கம் --- அகரம் என்பது ஊரின் பெயரே, அந்தணர் குடியிருப்பு அல்ல என்பாரும் உளர். ஆயினும்,

அகரம் ஆயிரம் ஆரியர்க்கு ஈயில் என்?
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என்?
பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்கு
நிகர்இலை என்பது நிச்சயம் தானே.  

என்னும் திருமூலர் திருவாக்கால் அகரம் என்பது அந்தணர் குடியிருப்பு என்பது தெளிவாகும். மேலும்,  அந்தணர்களுக்கு இறையிலியாக நிலங்களும், திருக்கோயிலுக்கு அருகிலேயே வீடுகளும், முற்காலத்தில் அரசாண்ட மன்னர்களால் விடப்பட்டதும் வரலாற்றுக் குறிப்புக்களால் அறியலாம். வாவி - குளம். கூபம் - கிணறு. கூவம் என்றும் சொல்லப்படும். "கூவல் ஆமையைக் குரை கடல் ஆமை" என்னும் அப்பர் தேவார வாசகத்தைக் காண்க.

No comments:

Post a Comment

சாதிகள் இல்லையடி பாப்பா!!!!!

  சாதிகள் இல்லையடி பாப்பா!!!! -----        வில்லிபாரதத்தில் ஒரு சுவையான நிகழ்வு.  துரோணரிடம் வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்த அருச்சுனன், அரங...