திருத் தேவூர்

                                             திருத் தேவூர்
    
     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலை வழியில் கீவளூர் என்று வழங்கப்படும் திருக் கீழ்வேளூரை அடைந்து, அங்கிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் சென்றால் திருத் தேவூரை அடையலாம்.

     திருவாரூர் - வலிவலம் நகரப்பேருந்து தேவூர் வழியாகச் செல்கிறது. தேவூரில் அக்ரகாரம் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோயிலுக்கு எதிரிலேயே இறங்கலாம்.

இறைவர்              : தேவபுரீசுவரர், தேவகுருநாதர்

இறைவியார்           : தேன்மொழியம்மை, மதுரபாஷிணி

தல மரம்               : வெள்வாழை

தீர்த்தம்                : தேவதீர்த்தம்

தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - 1. பண்ணிலாவிய மொழியுமை,
                                                               2. காடுபயில் வீடுமுடை.

         இத்திருத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதால் தேவபுரீசுவரர் என்றும், குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதால் தேவகுருநாதர் என்றும் இங்குள்ள இறைவன் வணங்கப்படுகிறார். கோசெங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில். மூன்று நிலைகளை உடைய கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் தென்புறம் தேவதீர்த்தம் இருக்கிறது. நேரே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியைக் காணலாம். கீழே உள்சுற்றில் அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், அகலிகை வழிபட்ட இலிங்கம், மகாலட்சுமி முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராச சபை தனியே அழகாக உள்ளது. கட்டுமலையின் அடிவாரத்தில் இந்திரன், முருகன், விநாயகர் சந்நிதிகள் அருகருகே உள்ளன. கட்டுமலை ஏறி மேலே சென்றால் கௌதமர் வழிபட்ட இலிங்கம், சோமாஸ்கந்தர், நவக்கிரகம் ஆகியவற்றைக் காணலாம். மூலவர் தேவபுரீசுவரர், இறைவி மதுரபாஷினி ஆகிய இருவரும் கிழக்கு நோக்கி அருள் பாவிக்கின்றனர். தலவிநாயகர் வலம்புரி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் எப்போதும் காணப்படும் லிங்கோத்பவருக்கு பதிலாக திருமால் காட்சி கொடுக்கிறார்.

         இத்தலத்து மரம் கல்லிலேயே வளரும் அதிசய வாழைமரம் ஆகும். இது வெள்வாழை என்ற வகையைச் சார்ந்தது. தேவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டபோது தேவலோகத்தில் உள்ள வெள்வாழையும் இறைவனை இங்கு வழிபட்டு தல விருட்சமாக மூலவர் அருகிலேயே அமைந்துவிட்டது. இந்த வாழை மரத்திற்கு இன்றும் நீர் ஊற்றுவதில்லை. கருங்கல்லால் ஆன கட்டுமலையில் வளர்வது இந்தத் தலமரத்தின் தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. கல்லில் வளர்வதால் இவ்வாழைமரம் கல்வாழை என்று அழைக்கப்படுகிறது.

         இராவணன் குபேரனுடன் போரிட்டு குபேரனுடைய சங்கநிதி, பதுமநிதி என்ற அமிர்த கலசங்களை எடுத்துச் சென்றான். இருநிதிகளையும் இழந்த குபேரன் தேவூர் தலத்து இறைவனை செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டதால் குபேர கலசங்களைத் திரும்பப் பெற்று மீண்டும் குபேர பட்டத்தைப் பெற்றான். குபேரனுக்கு பட்டம் வழங்கபட்ட தலம் இது. செல்வம் வளரவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் இத்தலத்து இறைவனை வழிபட்டால் குபேரனுக்குச் சமமான செல்வத்தைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது.

         இந்திரன் விருத்திராசுரனைக் கொன்ற பாவத்திற்கு இந்திர பட்டத்தை இழந்தபோது, இத்தலத்து இறைவனை வணங்கி சாபம் நீங்கப் பெற்று மீண்டும் இந்திர பட்டத்தைப் பெற்றான். ஆகையால் பதவி வேண்டுவோர், இழந்த பதவியை மீண்டும் பெற விழைவோர், வேலை வேண்டும் என தவிப்போர் இத்தலத்து இறைவன் தேவபுரீசுவரரை வழிபட வேண்டும்.

         இத்தலத்து இறைவனை சூரியன் வழிபட்டிருப்பதால், சூரியனால் இடர்வரும் என்று எண்ணுபவர்கள் தேவபுரீசுவரரை வழிபட்டால் சூரியன் அருள் கிடைக்கும். கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஒளி இறைவன் மேல் படுவதை தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் இங்கு வருகிறார்கள்.

         திருமணமாகாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் தேவூர் தலத்து இறைவனை திங்கட்கிழமைகளில் வழிபாட்டால் பலன் பெறலாம்.

         காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கல்வெண்பாவில், "நீள் உவகைப் பா ஊர் இசையில் பயன் சுவையில், பாங்கு உடைய தேவூர் வளர் தேவதேவனே" என்று போற்றி உள்ளார்.

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 574
நம்பர்மகிழ் திருஆரூர் வணங்கிப் போந்து,
         நலங்கொள்திருக் காறாயில் நண்ணி ஏத்தி,
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றி,
         பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி,
உம்பர்பிரான் கைச்சினமும் பரவி, தெங்கூர்,
         ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றி,
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தி,
         திருமலிவெண் துறைதொழுவான் சென்று சேர்ந்தார்.

         பொழிப்புரை : சிவபெருமான் மகிழும் திருவாரூரை வணங்கிச் சென்று, நன்மைகொண்ட திருகாறாயிலைச் சேர்ந்து வணங்கி, பசுமையான நீரை உடைய மென்மையான வயல்கள் சூழ்ந்த திருத்தேவூரினை அணைந்து போற்றி, இறைவரின் திருநெல்லிக்காவைப் பணிந்து திருப்பதிகம் பாடிச் சென்று, தேவதேவரின் கைச்சினமும் போற்றி, தெங்கூரும் மிக்க புகழையுடைய திருக்கொள்ளிக்காடும் போற்றி, மேற்சென்று, செம்பொன்னால் அழகுபடுத்தப்பட்ட மதில்களையுடைய திருக்கோட்டூரினை வணங்கிச் சென்று, திருமலிகின்ற திருவெண்துறையினைத் தொழும் பொருட்டுச் சென்று சேர்ந்தார்.

         இத் திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

திருக்காறாயில்            --    நீரானே (தி.2 ப.15)

திருத்தேவூர் -                  --1. பண்ணிலாவிய (தி.2 ப.82)
                                               2. காடுபயில் (தி.3 ப.74)

திருநெல்லிக்கா            --    அறத்தாலுயிர் (தி.2 ப.19)
திருக்கைச்சினம்            --    தையலோர் (தி.2 ப.45) 
திருத்தெங்கூர்              --    புரைசெய் (தி.2 ப.93)
திருக்கொள்ளிக்காடு        --    நிணம்படு (தி.3 ப.16)
திருக்கோட்டூர்              --    நீலமார்தரு (தி.2 ப.109)


2.082 திருத்தேவூர்                    பண் - காந்தாரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பண்நி லாவிய மொழிஉமை பங்கன்,எம் பெருமான்,
விண்ணில் வானவர் கோன்,விம லன்,விடை யூர்தி,
தெள்நி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி அடைந்தனம், அல்லல்ஒன்று இலமே.

         பொழிப்புரை :இனிய மொழியினளாகிய உமையம்மை பங்கனும், எம்தலைவனும், விண்ணுலகில் வாழும் வானவர் தலைவனும், குற்றமற்றவனும், விடையூர்தியும், ஆகிய, தெளிந்த நிலவொளியைத் தரும் மதிதவழும் மாளிகைகளைக் கொண்ட தேவூரில் விளங்கும் அண்ணலின் சேவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் இலராயினோம்.


பாடல் எண் : 2
ஓதி மண்டலத் தோர்முழு துஉய்யவெற்பு ஏறு
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன், தூநீர்த்
தீதுஇல் பங்கயம் தெரிவையர் முகம்மலர் தேவூர்
ஆதி சேவடி அடைந்தனம், அல்லல்ஒன் றுஇலமே.

         பொழிப்புரை :நிலவுலகில் வாழ்வோர் ஓதிஉய்ய, உதயகிரியில் ஏறிவரும் கதிரவனால் வழிபடப்பட்ட வானவர் தலைவனாய் விளங்குவோனும், தன்னைத் துதிப்பாரைக் கண்டு மகிழ்ந்து உடனே அருள் புரிபவனும், ஆகிய குற்றமற்ற தாமரை மலர்கள் மகளிர்முகம் போல மலரும் சிறப்பினதாகிய தேவூரில் விளங்கும் முழுமுதற் கடவுளின் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் சிறிதும் இலராயினோம்.


பாடல் எண் : 3
மறைக ளால்மிக வழிபடு மாணியைக் கொல்வான்
கறுவு கொண்டஅக் காலனைக் காய்ந்தஎம் கடவுள்,
செறுவில் வாளைகள் சேல்அவை பொருவயல் தேவூர்
அறவன் சேவடி அடைந்தனம், அல்லல்ஒன்று இலமே.


         பொழிப்புரை :வேதவிதிப்படி மிக்க வழிபாடுகளை இயற்றிய மார்க்கண்டேயரின் உயிரைக் கவர்தற்குச் சினந்து வந்த காலனைக் காய்ந்த கடவுளும், சேற்றில் வாழும் வாளைமீன்களும் சேல்களும் சண்டையிடுகின்ற வயல்களை உடைய தேவூரில் விளங்கும் அறவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் சிறிதும் இலராயினோம்.


பாடல் எண் : 4
முத்தன், சில்பலிக்கு ஊர்தொறும் முறைமுறை திரியும்
பித்தன், செஞ்சடைப் பிஞ்ஞகன், தன்அடி யார்கள்
சித்தன், மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர்
அத்தன் சேவடி அடைந்தனம், அல்லல்ஒன்று இலமே.

         பொழிப்புரை :பாசங்களின் இயல்பாகவே விடுபட்டவனும், சிலவாக இடும் உணவுக்கு ஊர்கள் தோறும் முறையாகப் பலியேற்கும் பித்தனும், சிவந்தசடையைக் கொண்டுள்ள பிஞ்ஞகனும், தன் அடியவர்களின் சித்தத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய மாளிகைகளையும், மதிதவழும் பொழில்களையும் உடைய தேவூர்ப்பெருமான் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.


பாடல் எண் : 5
பாடு வார்இசை, பல்பொருள் பயன்உகந்து அன்பால்
கூடு வார்,துணைக் கொண்டதம் பற்றுஅறப் பற்றித்
தேடு வார்பொருள் ஆனவன், செறிபொழில் தேவூர்
ஆடு வான்அடி அடைந்தனம், அல்லல்ஒன்று இலமே.

         பொழிப்புரை :இசைபாடுபவர்க்கும், பல்பொருள் பயனாக அவன் இருத்தலை அறிந்துணர்ந்து அன்போடு கூடுவார்க்கும், உலகில் துணையாகக் கொண்டுள்ளவர்கள் மேல் செலுத்தும் பற்றுக்களை விட்டு அவனையே பற்றித் தேடுவார்க்கும் பொருளாயிருப்பவனும், செறிந்த பொழில்களை உடைய தேவூரில் நடனம் புரிபவனுமாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம்.


பாடல் எண் : 6
பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
மங்கை பங்கினன், கங்கையை வளர்சடை வைத்தான்,
திங்கள் சூடிய தீநிறக் கடவுள், தென் தேவூர்
அங்க ணன்தனை அடைந்தனம், அல்லல்ஒன்று இலமே.

         பொழிப்புரை :கிளர்ந்து எழுந்த அணிகலன் பூண்டுள்ள தனங்களையும், நெறிந்த கூந்தலையும், வரிவளையல்களையும் கொண்டுள்ள மலைமங்கை பங்கினனும், கங்கையை வளர்ந்த சடைமீது வைத்தவனும், திங்கள் சூடியவனும், தீப்போன்ற செந்நிறமுடைய கடவுளும் ஆகிய, அழகிய தேவூரில் எழுந்தருளிய அழகிய கருணையாளனை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.


பாடல் எண் : 7
வன்பு யத்தஅத் தானவர் புரங்களை எரியத்
தன்பு யத்துஉறத் தடவரை வளைத்தவன்,தக்க
தென்த மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி அடைந்தனம், அல்லல்ஒன்று இலமே.

         பொழிப்புரை :வலியதோள்களை உடைய அவுணர்தம்புரங்கள் எரியுமாறு தன்தோள்களால் பெரிய மேருமலையை வில்லாகப் பொருந்த வளைத்தவனும், தென்தமிழ்க் கலைகளை நன்குணர்ந்தவர் வாழும் தேவூரில் விளங்கும் அன்பனுமாகிய சிவபிரானின் சேவடிகளை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.


பாடல் எண் : 8
தருஉ யர்ந்தவெற்பு எடுத்தஅத் தசமுகன் நெரிந்து
வெருவ ஊன்றிய திருவிரல் நெகிழ்த்துவாள் பணித்தான்,
தெருவு தோறும்நல் தென்றல்வந்து உலவிய தேவூர்
அரவு சூடியை அடைந்தனம், அல்லல்ஒன்று இலமே.

         பொழிப்புரை :சிறப்புடைய மரங்கள் உயர்ந்து வளர்ந்த கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த பத்துத் தலைகளை உடைய இராவணன் நெரிந்து வெருவுமாறு ஊன்றிய கால்விரலை, அவன் பாடல் கேட்டு நெகிழச்செய்து அவனுக்கு வாள் முதலியவற்றை வழங்கியவனும், தெருக்கள் தோறும் நல்ல தென்றல் வந்துலவும் தேவூரில் பாம்பணிந்தவனாய் விளங்குவோனுமாகிய சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம்.


பாடல் எண் : 9
முந்திக் கண்ணனும் நான்முகனும் அவர் காணா
எந்தை, திண்திறல் இருங்களிறு உரித்தஎம் பெருமான்,
செந்து இனத்துஇசை அறுபதம் முரல்திருத் தேவூர்
அந்தி வண்ணனை அடைந்தனம், அல்லல்ஒன்று இலமே.

         பொழிப்புரை :திருமால் பிரமர்கள் அடிமுடிகாண்போம் என முற்பட்டுத் தேடிக் காணாது தொழுத எந்தையும், திண்ணிய வலிமை பொருந்திய பெரிய யானையை உரித்த எம்பெருமானும், செந்து என்னும் இசைவகையை இசைத்து வண்டுகள் முரலும் தேவூரில் விளங்கும் அந்திவண்ணனும் ஆகிய சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம்.


பாடல் எண் : 10
பாறு புத்தரும் தவம்அணி சமணரும் பலநாள்
கூறி வைத்ததோர் குறியினைப் பிழைஎனக் கொண்டு
தேறி, மிக்கநம் செஞ்சடைக் கடவுள் தென் தேவூர்
ஆறு சூடியை அடைந்தனம், அல்லல்ஒன்று இலமே.

         பொழிப்புரை :ஓடித் திரியும் புத்தர்களும், தவத்தை மேற்கொண்ட சமணரும் பலநாள்களாகக் கூறிவரும் இலக்குப் பிழையானது எனத் தெளிவுற்று, எங்கும் மிகுந்து தோன்றும் நம் செஞ்சடைக் கடவுள் எழுந்தருளிய தேவூரை அடைந்து கங்கையை அணிந்துள்ள சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.


பாடல் எண் : 11
அல்லல் இன்றிவிண் ஆள்வர்கள், காழியர்க்கு அதிபன்,
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன்,
எல்லை இல்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும்வல் லாரே.

         பொழிப்புரை :காழி வாழ் மக்களுக்குத் தலைவனும், நல்ல செந்தமிழ் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் எல்லையற்ற புகழ் பொருந்திய அழகிய தேவூரில் விளங்கும் பழமையான இறைவனைப் போற்றிப் பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் துன்பங்கள் இன்றி விண்ணுலகை ஆள்வர்.

திருச்சிற்றம்பலம்

  
3. 074  திருத்தேவூர்      திருவிராகம்        பண் - சாதாரி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
காடுபயில் வீடும், உடை யோடுகலன்
         மூடும் உடை ஆடைபுலிதோல்
தேடுபலி ஊண்அது உடை வேடமிகு
         வேதியர் திருந்துபதிதான்,
நாடகம் அதுஆடமஞ்ஞை பாடவரி
         கோடல்கைம் மறிப்பநலம்ஆர்
சேடுமிகு பேடைஅனம் ஊடிமகிழ்
         மாடம் மிடை தேவூர்அதுவே.

         பொழிப்புரை : சிவபெருமான் வசிக்கும் வீடு சுடுகாடாகும். முடைநாற்றம் பொருந்திய மண்டையோடு அவன் உண்கலமாகும். அவனது ஆடை புலித்தோலாகும். உணவு தேடியுண்ணும் பிச்சையாகும். இத்தகைய கோலமுடைய, வேதத்தை அருளிச் செய்த வேதப் பொருளாக விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, சோலைகளில் மயில்கள் ஆட, வண்டுகள் பாட, காந்தள்கள் அசைந்து கைத்தாளமிட, அழகிய இளம் பெண்அன்னம் போன்ற பெண்கள் ஆடவர்களோடு ஊடி, பின் ஊடல் நீங்கி மகிழ்கின்ற மாடங்கள் நிறைந்த திருத்தேவூர் என்பதாகும்.


பாடல் எண் : 2
கோள்அரவு, கொன்றை,நகு வெண்தலை
         எருக்கு,வனி, கொக்குஇறகொடும்,
வாள்அரவு, தண்சலம கள்குலவு
         செஞ்சடைவ ரத்து இறைவன்ஊர்,
வேள்அரவு கொங்கைஇள மங்கையர்கள்
         குங்குமம் விரைக்கும் மணம்ஆர்
தேள்அரவு தென்றல் தெரு எங்குநிறை
         ஒன்றிவரு தேவூர்அதுவே.

         பொழிப்புரை : கொல்லும் தன்மையுடைய பாம்பு, கொன்றை, சிரிக்கும் மண்டையோடு, எருக்கு, வன்னி, கொக்கு இறகு, ஒளி பொருந்திய பாம்பு, குளிர்ச்சி பொருந்திய கங்காதேவி, இவை குலவுகின்ற சிவந்த சடையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், மன்மதனும் விரும்பும் கொங்கைகளை உடைய, கணவரோடு கூடிய இள மங்கையர்கட்குக் குங்குமக் குழம்பின் மணத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மையுடையதும், கணவரைப் பிரிந்த மகளிர்கட்குத் தேள் கொட்டுவது போல் துன்பஞ் செய்கின்ற தன்மையுடையதுமான தென்றல் காற்று தெருவெங்கும் நிறைந்து பெருகும் திருத்தேவூர் ஆகும்.


பாடல் எண் : 3
பண்தடவு சொல்லின்மலை வல்லிஉமை
         பங்கன்,எமை ஆளும்இறைவன்,
எண்தடவு வானவர் இறைஞ்சுகழ
         லோன் இனிது இருந்தஇடமாம்,
விண்தடவு வார்பொழில் உகுத்தநறவு
         ஆடிமலர் சூடிவிரையார்
செண்தடவு மாளிகை செறிந்துதிரு
         ஒன்றிவளர் தேவூர்அதுவே.

         பொழிப்புரை : பண்ணிசை போன்ற இனிய மொழிகளைப் பேசுகின்ற மலைமகளான உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு எம்மையாளும் இறைவன் எண்ணற்ற தேவர்கள் தன் திருவடிகளை வணங்க இனிது வீற்றிருந்தருளும் இடம், வானளாவி உயர்ந்த சோலைகள் உகுக்கும் தேன்துளிக்கும் மலர்களைச் சூடி, அதனால் நறுமணம் கமழ, ஆகாயமளாவிய உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருமகள்வாசம் செய்யும் திருத்தேவூர் ஆகும்.


பாடல் எண் : 4
மாசில்மன நேசர்தமது ஆசைவளர்
         சூலதரன், மேலை இமையோர்
ஈசன்,மறை ஓதி, எரி ஆடி,மிகு
         பாசுபதன் மேவுபதிதான்,
வாசமலர் கோதுகுயில் வாசகமும்
         மாதர்அவர் பூவைமொழியும்
தேசஒலி வீணையொடு கீதம்அது
         வீதிநிறை தேவூர் அதுவே.

         பொழிப்புரை : சிவபெருமான் களங்கமற்ற மனமுடைய அடியார்கள் தன்மேல் கொண்ட பக்தி மேன்மேலும் பெருக விளங்குபவன். சூலப்படையை ஏந்தியவன். வானுலகிலுள்ள தேவர்கட்குத் தலைவன். வேதங்களை ஓதியருளி வேதப்பொருளாயும் விளங்குபவன். நெருப்பேந்தி நடனம் ஆடுபவன். வெற்றிதரும் பாசுபத அஸ்திரம் உடையவன். அத்தகைய சிவபெருமான் இனிது வீற்றிருந்தருளும் தலமாவது, நறுமணமிக்க மலர்களை மூக்கால் கோதுகின்ற குயில்களின் கூவலும், நாகணவாய்ப் பறவை போன்று பேசுகின்ற பெண்களின் இனிய மொழியும், அடியவர்கள் இறைவனைப் புகழும் ஒலியும், வீணை மீட்டும் ஒலியும், கீதங்களின் ஒலியும் நிறைந்து விளங்கும் வீதிகளையுடைய திருத்தேவூர் ஆகும்.


பாடல் எண் : 5
கானம்உறு மான்மறியன், ஆனைஉரி
         போர்வை,கனல் ஆடல்புரிவோன்,
ஏனஎயிறு ஆமைஇள நாகம்வளர்
         மார்பின்இமை யோர்தலைவன்ஊர்,
வான்அணவு சூதம்இள வாழைமகிழ்
         மாதவி பலாநிலவிவார்
தேன்அமுது உண்டுவரி வண்டுமருள்
         பாடிவரு தேவூர் அதுவே.

         பொழிப்புரை : சிவபெருமான் காட்டில் வாழ்கின்ற மான்கன்றைக் கரத்தில் ஏந்தியவன். யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்தியவன். நெருப்பேந்தித் திருநடனம் செய்பவன். பன்றியின் கொம்பு, ஆமை ஓடு, இளம் பாம்பு, இவற்றை மார்பில் அணிந்தவன். தேவர்களின் தலைவன். அவன் உகந்தருளிய திருத்தலம் வானளாவிய மா, வாழை, மகிழ், மாதவி, பலா முதலிய மரங்கள் தழைத்து, சொரிகின்ற தேனை உண்டு, வரிகளையுடைய வண்டுகள் தேனுண்ட மயக்கத்தில் பாடும் திருத்தேவூர் ஆகும்.


பாடல் எண் : 6
ஆறினொடு கீறுமதி ஏறுசடை
         ஏறன்,அடை யார்நகர்கள் தான்
சீறும்அவை வேறுபட நீறுசெய்த
         நீறன்,நமை ஆளும்அரன்ஊர்,
வீறுமலர் ஊறுமது ஏறிவளர்
         வாயவிளை கின்றகழனிச்
சேறுபடு செங்கயல் விளிப்பஇள
         வாளைவரு தேவூர் அதுவே.

         பொழிப்புரை : சிவபெருமான் சடையிலே கங்கையோடு, பிறைச்சந்திரனையும் அணிந்தவன். இடபவாகனம் ஏறியவன். கோபம்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தும் பகையசுரர்களின் முப்புரங்களை எரித்துச் சாம்பலாகும்படி செய்தவன். திருமேனியில் திருநீற்றைப் பூசியவன். நம்மையாட்கொள்ளும் அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், செழிப்பான மலர்களிலிருந்து ஊறும் தேன் வயல்களில் பாய்ந்து சேறுபடுத்த, கயல்மீன்கள் விளையாட அழைக்க இள வாளைமீன்கள் வருகின்ற திருத்தேவூர் என்பதாகும்.


பாடல் எண் : 7
கன்றிஎழ வென்றிநிகழ் துன்றுபுரம்
         அன்றுஅவிய நின்றுநகைசெய்
என்தனது சென்றுநிலை எந்தைதன
         தந்தைஅமர் இன்பநகர்தான்,
முன்றில்மிசை நின்றபல வின்கனிகள்
         தின்றுகற வைக்குருளைகள்
சென்றுஇசைய நின்றுதுளி ஒன்றவிளை
         யாடிவளர் தேவூர் அதுவே.

         பொழிப்புரை : கோபித்து உலகையழிக்க எண்ணி வெற்றிபெற்ற பகையசுரர்களின் நெருங்கிய மூன்றுபுரங்களையும், சிவபெருமான் சிரித்துச் சாம்பலாகுமாறு செய்தவன். நான் சென்றடையக் கூடிய பற்றுக்கோடாக விளங்குபவன். என் தந்தைக்குத் தந்தையாகிய அச்சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இனிய தலமாவது, வீட்டின் முன்னால் நின்ற பலாக்கனிகளைத் தின்று கறவைப் பசுக்களின் கன்றுகள் துள்ளி விளையாடி வளர்கின்ற திருத்தேவூர் ஆகும்.


பாடல் எண் : 8
ஓதமலி கின்றதென் இலங்கைஅரை
         யன்மலி புயங்கள் நெரியப்
பாதமலி கின்றவிரல் ஒன்றினில்
         அடர்த்த பரமன் தனதுஇடம்,
போதமலி கின்றமட வார்கள் நடம்
         ஆடலொடு பொங்கு முரவம்
சேதம்மலி கின்றகரம் வென்றிதொழி
         லாளர்புரி தேவூர் அதுவே.

         பொழிப்புரை : கடல் அலைகள் மோதுகின்ற தென்னிலங்கை மன்னனான இராவணனின் வலிமை மிகுந்த புயங்கள் நெரிபடத் தன் காற்பெருவிரலை ஊன்றி அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற தலமாவது, மகிழ்ச்சி மிகுந்த பெண்கள் நடனமாடவும், முழவு ஒலிக்கவும், சேற்றில் பயில்கின்ற கையினால் உழவுத் தொழில் செய்து வறுமைப் பிணியையும், பசிப்பிணியையும் ஓட்டி வெற்றிகாணும் வேளாளர்கள் நிறைந்த திருத்தேவூர் ஆகும்.


பாடல் எண் : 9
வண்ணமுகில் அன்னஎழில் அண்ணலொடு
         சுண்ணமலி வண்ணமலர்மேல்
நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள்
         கண்ணவன் நலங்கொள்பதிதான்,
வண்ணவன நுண்இடையின் எண்ணரிய
         அன்னநடை இன்மொழியினார்
திண்ணவண மாளிகை செறிந்தஇசை
         யாழ்மருவு தேவூர் அதுவே.

         பொழிப்புரை : கருநிற மேகத்தையொத்த அழகிய திருமாலும், மகரந்தப்பொடி நிறைந்த தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், அளவற்ற தேவர்களும் `இவர் நிலைமையை அறியும்வழி என்ன` என்று யோசிக்கும்படி நெருப்புப்பிழம்பாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், அழகிய நிறமும், சிறிய இடையும், அன்ன நடையும், அளவற்ற இனிய மொழிகளுமுடைய பெண்கள், உறுதியாக அமைந்த மாளிகைகளில் யாழிசைக்க விளங்கும் திருத்தேவூர் ஆகும்.


பாடல் எண் : 10
பொச்சம்அமர் பிச்சைபயில் அச்சமணும்
         எச்சம்அறு போதியருமா
மொச்சைபயில் இச்சைகடி பிச்சன்மிகு
         நச்சுஅரவன் மொச்சநகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில்
* * * * * *

         பொழிப்புரை : பொய்யான துறவு வேடம்கொண்டு பிச்சை யெடுக்கும் சமணர்களும், புகழற்ற புத்தர்களும் கூறும் விருப்பமான உபதேச மொழிகளை விலக்கி, பித்தன் எனப்படுபவனும், விடமுடைய பாம்பை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானுடைய, மொய்த்த மெய்யடியார்கள் நெருங்கிய தலமாவது, மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருத்தேவூர் ஆகும்.

  
பாடல் எண் : 11
துங்கமிகு பொங்குஅரவு தங்குசடை
         நங்கள்இறை, துன்றுகுழலார்
செங்கயல்கண் மங்கைஉமை நங்கையொரு
         பங்கன்அமர் தேவூர்அதன்மேல்,
பைங்கமலம் அங்குஅணிகொள் திண்புகலி
         ஞானசம் பந்தன் உரைசெய்
சங்கம்மலி செந்தமிழ்கள் பத்தும்இவை
         வல்லவர்கள் சங்கை இலரே.

         பொழிப்புரை : நீண்டு வளர்ந்து படமெடுக்கும் பாம்பைச் சிவந்த சடையில் அணிந்தவர் நம் தலைவரான சிவபெருமான். அவர் அடர்ந்த கூந்தலையும், செவ்விய கயல்மீன் போன்ற கண்களையுமுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். அவர் வீற்றிருந்தருளும் தலம் திருத்தேவூர், அதைப் போற்றிப் பசிய தாமரை மலர்கள் அழகு செய்கின்ற வலிய திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப்பாக்கள் ` அடியார் கூட்டங்களில் ஓத வல்லவர்கள் குற்றமற்றவர் ஆவர்.

                                             திருச்சிற்றம்பலம்No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...