உண்டான போதுதான் உறவு.




ஏரிநீர் நிறைந்த போது அங்கு இருந்தன பட்சி எல்லாம்,
மாரிநீர் மறுத்த போது வந்து அதில் இருப்பது உண்டோ?
பாரினை ஆளும் வேந்தன் பட்சமும் மறந்தபோதே
யாருமே நிலையில்லாமல் அவரவர் ஏகுவாரே.       

     இதன் பொருள் ---

     ஏரி நீர் நிறைந்த போது --- ஒரு ஏலியில் நீர் நிறைந்து இருந்த போது,

     அங்கு இருந்தன பட்சி எல்லாம் --- பறவைகள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்து இருந்தன,

     மாரி நீர் மறுத்த போது --- மழையானது பெய்யாமல், ஏரியானது வறண்டு கிடக்கும்போது,

     வந்து அதில் இருப்பது உண்டோ ---  முன்பு போலப் பறவைகள் வந்து அங்கு இருப்பது உண்டோ? இல்லை.

அது போலத்தான்,

     பாரினை ஆளும் வேந்தன் பட்சமும் மறந்த போதே ---  இந்தப் பூமியை ஆட்சி புரிகின்ற மன்னனும் (அன்பு உடையவனாக இருந்தால், எல்லோரும் வந்து கூடி இருப்பர்) அன்பு மறந்த காலத்தில்,

     யாருமே நிலை இல்லாமல் அவரவர் ஏகுவாரே --- யாரும் அவனிடத்தில் நிலையாக இல்லாமல், அவனை விட்டு, தங்களுக்கு இனிமை தரும் இடம் தேடிச் சென்று விடுவர்.  

     கருத்து --- ஏரியிலே பறவைகள் வந்து தங்குவது தமக்குத் தேவையான இரை, தண்ணீர் முதலியன தடையின்றிக் கிடைப்பதால். அன்பு பாராட்டிடும் மன்னனிடத்திலும்  எல்லோரும் வந்து மகிழ்ந்திருப்பது அவனால் அடையும் நன்மைகளைக் கருதியே. "கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின், அடுக்கிய சுற்றத்தால் சூழப்படும்" என்னும் திருக்குறள் கருத்தை இங்கு வைத்து எண்ணல் வேண்டும்.

     பட்சம் - அன்பு.  மன்னனிடத்தில் பொருள் கிடைக்காமல் சுருங்கும்போது, அவன் மீது வைத்துள்ள அன்பும் சுருங்கும். அப்போது அவனிடத்தில் முன்பு போல் யாரும் நிலைத்து இருக்கமாட்டார்கள். "பொன்னொடு மணி உண்டாகில்" என்னும் முந்தைய பாடலையும் இங்கு வைத்து எண்ணுக. "ஆலிலை பூவும் காயும்" எனத் தொடங்கும் முந்தைய பாடலையும் இதனுடன் வைத்துச் சிந்திக்கவும்.
 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...