இதனை இதனால் அறியலாம்

38. இதனை இதனால் அறியலாம்

மனத்தில் கடும்பகை முகத்தினால் அறியலாம்;
     மாநிலப் பூடுகள் எலாம்
மழையினால் அறியலாம்; நல்லார் பொலார் தமை
     மக்களால் அறியலாம்;

கனம் மருவு சூரரைச் சமரினால் அறியலாம்;
     கற்றவொரு வித்துவானைக்
கல்வி ப்ரசங்கத்தினால் அறியலாம்; குணங்
     களைநடையினால் அறியலாம்;

தனது அகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம்;
     சாதி சொல்லால் அறியலாம்;
தருநீதி கேள்வியால் அறியலாம்; பிணிகளைத்
     தாதுக்களால் அறியலாம்;

வனசவிக சிதவதன பரிபூர ணானந்த
     வாலவடி வானவேலா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     இதன் பொருள் ---

     வனச விகசித வதன - தாமரை மலர் என ஒளிரும்
திருமுகத்தை உடையவரே!

     பரிபூரண --- எங்கும் நிறைந்த பரம்பொருளே!

     ஆனந்த --- பேரின்ப மயமானவரே!

     வால வடிவான வேலா --- என்றும் அகலாத இளமையும் அழகும் உடைய வேலவரே!

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     மனத்தில் கடும் பகை முகத்தினால் அறியலாம் --- உள்ளத்தில் கொடிய பகைமை உணர்வு உடைமையை முகக் குறிப்பால் உணர்ந்து கொள்ளலாம்.

     மாநிலப் பூடுகள் எலாம் மழையினால் அறியலாம் - பெருநிலத்தில் உண்டாகும் புல் பூண்டுகள் மழை இன்மையால் வாடுவதையும், மழை பொழிந்தால் தழைப்பதையும் அறிந்துக் கொள்ளலாம்.

     நல்லார் பொலார் தமை மக்களால் அறியலாம் ---நல்லவர் பொல்லாதவர் என்பதை அவரது மக்கள் பேற்றினால் அறியலாம்.

     கனம் மருவு சூரரைச் சமரினால் அறியலாம் --- பெருமை பொருந்திய வீரலைப் போரினால் அறிந்து கொள்ளலாம்.

     கற்ற ஒரு வித்துவானைக் கல்விப் பிரசங்கத்தினால் அறியலாம் --- கற்று அறிந்த புலவர் என்பதை, அவையிலே செய்யும் சொற்பொழிவினால் தெரிந்து கொள்ளலாம்.

     குணங்களை நடையினால் அறியலாம் - நல்ல குணம் உடையவர் என்பதை ஒருவரது ஒழுக்கத்தினால் அறிந்து கொள்ளலாம்.

     தனது அகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம் ---பளிங்கினாலே அதன் உள்ளே இருக்கும் பொருளை அறிந்து கொள்ளலாம்.

     சாதி சொல்லால் அறியலாம் --- பிறப்பின் சிறப்பைச் சொல்லாலே தெரிந்து கொள்ளலாம்.

     தரு நீதி கேள்வியால் அறியலாம் --- கேள்விச் செல்வத்தினாலே, அறங்களை அறிந்து கொள்ளலாம்;

     பிணிகளைத் தாதுக்களால் அறியலாம் --- நோய்களை நாடிகளால் உணரலாம்.

      விளக்கம் ---

"அடுத்தது காட்டும் களிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்"

"முகத்தின் முதுக் குறைந்தது உண்டோ, உவப்பினும்
காயினும் தான் முந்து உறும்"

"தக்கார் தகவு இலர் என்பது, அவரவர்
எச்சத்தால் காணப் படும்"

"விசும்பின் துளி வீழின் அல்லால், மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது"

என்றார் திருவள்ளுவ நாயனார்.

வனசம் --- தாமரை விகசிதம் --- மலர்ச்சி. ஒளி. வதனம் --- முகம். பரிபூரணம் --- நிறைவு. ஆனந்தம் --- பேரின்பம்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...