உண்மையை உணர்த்தும் குறிகள்




52. உண்மையை உணரும் குறி

சோதிடம் பொய்யாது மெய்என்பது அறிவரிய
     சூழ்கிரக ணம்சாட்சி ஆம்!
  சொற்பெரிய வாகடம் நிசம்என்கை பேதிதரு
     தூயமாத் திரைசாட்சி ஆம்!

ஆதியிற் செய்ததவம் உண்டுஇல்லை என்பதற்கு
     ஆள்அடிமை யேசாட்சி ஆம்!
  அரிதேவ தேவனஎன் பதையறிய முதல்நூல்
     அரிச்சுவடி யேசாட்சி ஆம்!

நாதனே மாதேவன் என்பதற் கோருத்ர
     நமகசம கம்சாட்சி ஆம்!
  நாயேனை ரட்சிப்பது உன்பாரம்! அரியயன்
     நாளும் அர்ச் சனைசெய் சரணத்து

ஆதிநா யக! மிக்க வேதநாயகன் ஆன
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

       இதன் பொருள் ---

     அரி அயன் நாளும் அர்ச்சனை செய் சரணத்து ஆதி நாயக --- திருமாலும் பிரமனும் நாளும் மலர் இட்டு வழிபாடு செய்யும் திருவடிகளை உடைய மூலப் பொருளே!

     மிக்க வேத நாயகன் ஆன அண்ணலே --- சிறந்த வேதங்களுக்குத் தலைவன் ஆய் நின்ற பெரியோனே!

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

      சோதிடம் பொய்யாது மெய் என்பது அறிவு அரிய சூழ் கிரகணம் சாட்சி ஆம் --- சோதிட நூல் பொய் ஆகாது. அது உண்மையே என்பதற்கு, அதனை வகுத்த அறிஞர் மட்டும் அல்லாமல், வெற்று அறிவு கொண்டு அறிய முடியாத கிரகண நிகழ்வுகளே சான்று ஆகும்,

     சொல் பெரிய வாகடம் நிசம் என்கை பேதி தரு தூய மாத்திரை சாட்சி ஆம் --- புகழ்ந்து கூறுகின்ற பெருமைமிக்க மருத்துவ நூல் உண்மை என்பதற்குப் பேதிக்குத் தரும் நல்ல மாத்திரைகளே சான்று தரும்,

     ஆதியில் செய்த தவம் உண்டு இல்லை என்பதற்கு ஆள் அடிமையே சாட்சி ஆம் ---- முன்னே செய்த நல்வினை உண்டா இல்லையா என்பதற்கு அடிமையும் அடிமையை ஆளுகின்றவருமே சான்று ஆகும்.

     அரி தேவதேவன் என்பதை அறிய முதல் நூல் அரிச்சுவடியே சாட்சி ஆம் --- திருமால் தேவர் தலைவன் என அறிவதற்குச் சிறுவர்கள் கற்கும் முதல் நூல் அரிச்சுவடியாக இருப்பதே சான்று ஆகும்,

     மா தேவனே நாதன் என்பதற்கோ ருத்ர நமக சமகம் சாட்சி ஆம் --- தேவர்க்கெல்லாம் தேவனான சிவபெருமானே யாவர்க்கும் தலைவன் என்பதை அறிய வேண்டும் என்றால், என்னில் உருத்திர நமகசமகம் என்பவைகளே சான்று ஆகும்,

     நாயேனை ரட்சிப்பது உன் பாரம் --- நாய் போன்று இழிவுற்ற என்னைக் காப்பது உன் பொறுப்பு.
         
     விளக்கம் --- ஆராய்ந்த அறிவு இல்லாமல் எதையும் மறுப்பதோ, மாறுபாடான முடிவுக்கு வருவதோ கூடாது என்பதை விளக்கும் பாடல் இது. சோதிடர் என்பது பொய்யல்ல. உண்மை என்பதற்கு சோதிட நூல் வல்லார் வகுத்தபடியே சூரியசந்திர கிரகணங்கள் நிகழ்வது சான்று. முற்பிறவியில் தவம் செய்தவர், தாம் செய்த தவத்தின் பயனாக, செல்வம் நிறைந்த குடியிலே பிறந்து, பல்லக்கிலே ஊர்ந்து செல்வதும், அவ்வாறு தவம் செய்யாதார், தம் வினைக்கு ஏற்ப பிறவி எடுத்து, வறுமையில் உழன்று, பல்லக்கு சுமந்து பிழைப்பதும் காணப்படும். இது தவம் என்பது உண்மையே எனக் காட்டும். எனவே, கண்ணால் காணப்படும் உலகியல் நிகழ்வுகளைக் கொண்டே,முன்னோர் வகுத்த முறையின் உண்மையை அறியலாம்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...