தீ நகரில் வாழ்வதற்கு நரகமே மேல்

49. தீ நகர் நரகமாகும்.

ஈனசா திகள்குடி இருப்பதாய், முள்வேலி
     இல்இல் லினுக்கும் உளதாய்,
  இணைமுலை திறந்துதம் தலைவிரித் திடுமாதர்
     எங்கும்நட மாட்டம் உளதாய்,

கானமொடு பக்கமாய், மலையோர மாய், முறைக்
     காய்ச்சல்தப் பாத இடமாய்,
  கள்ளர்பயமாய், நெடிய கயிறிட்டு இறைக்கின்ற
     கற்கேணி நீருண் பதாய்,

மானமில் லாக்கொடிய துர்ச்சனர் தமக்கு ஏற்ற
     மணியம்ஒன்று உண்டா னதாய்,
  மாநிலத் தோர்தலம் இருந்து, தனில் வெகுவாழ்வு
     வாழ்வதிலும், அருந ரகிலே

 ஆனநெடு நாள்கிடந்து அமிழ்தலே சுகமாகும்
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     அமலனே --- குற்றம் அற்றவனே!

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     ஈன சாதிகள் குடியிருப்பதாய் --- இழிந்த சாதியினர் வாழ்வதாய்,

     இல் இல்லினுக்கு முள்வேலி உள்ளதாய் --- வீடுதோறும் முள்ளால் ஆன வேலி இருப்பதாய்,

     இணைமுலை திறந்தும், தலைவிரித்திடும் மாதர் எங்கும் நடமாட்டம் உளதாய் - மார்பிலே உள்ள துணி விலகியவாறும், தலை விரித்தும் திரியும் பெண்கள் எங்கும் உலாவும் நிலையினதாய்,

     ஒரு பக்கம் கானமாய் --- ஒரு பக்கம் காடு உடையதாய்,

     மலை ஓரமாய் --- ஓரத்திலை மலை உள்ளதாய்,

     முறைக் காய்ச்சல் தப்பாத இடமாய் --- முறைக்காய்ச்சல் எப்போதும் வருகின்ற இடமாய்,

     கள்ளர் பயமாய் --- திருடர் பயம் உள்ளதாய்,

     நெடிய கயிறு இட்டு இறைக்கின்ற கல்கேணி நீர் உண்பதாய் --- நீண்ட கயிற்றைக் கட்டி இறைக்கப்படும் கல்லால் அமைந்த கிணற்று நீர் உண்ணும் இடமாய்,

      மானம் இலாக் கொடிய துர்ச்சனர் தமக்கு ஏற்றம் மணியம் ஒன்று உண்டானதாய் --- பெருமை என்பது இல்லாத மிகக் கொடியவருக்கு ஏற்ற தலைவனை உடையதாய்,

     ஓர் தலம் மாநிலத்து இருந்து அதனில் வெகுவாழ்வு வாழ்வதினும் - இப்படிப்பட்ட ஓர் ஊர் இந்த உலகில் அமைந்து, அந்த ஊரிலே பெருக வாழ்வதைக் காட்டிலும்,

     அரு நரகிலே ஆன நெடுநாள் கிடந்து அமிழ்தலே சுகம் ஆகும் --- கொடிய நரகத்தில் நீண்டகாலம் கிடந்து முழுகிப் போவதே இன்பம் ஆகும்.

          விளக்கம் --- இழிந்த சாதியினர் வாழ்வதால் அங்கு ஒழுக்கக் கேடு இருக்கும். பெண்கள் மேலே சொன்னபடி வாழ்தல் முறை தவறி நடப்பற்கு வழி கோலும். ஒரு பக்கம் காடு இருப்பது தீய விலங்குகளால் அச்சத்தை உண்டாக்கும். திருடல்கள் இருந்தால் ஊரில் உள்ளவர்கள் எப்போதும் அச்சத்திலேயே வாழ நேரும். ஒருபக்கம் மலையும், ஒரு பக்கம் காடும் இருந்தால், வெப்பமும், முறைக் காய்ச்சலும் உண்டாகும்.

கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டில்,
கடும்புலி வாழும் காடு நன்றே.       ---  கொன்றை வேந்தன்.

கொடுங்கோல் அரசர் ஆட்சிபுரியும் நாட்டில் இருப்பதைப் பார்க்கிலும், கொடிய புலி வாழும் காட்டில் இருப்பது நல்லது.

சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்
தேன்தேர் குறவர் தேயம் நன்றே. ---  கொன்றை வேந்தன்.

அறிவு ஒழுக்கங்களால் நிறைந்த பெரியோர் இல்லாத பழைமையான நகரத்தில் இருப்பதைப் பார்க்கிலும், குறவர் வசிக்கும் மலைப்பக்கத்தில் இருப்பது நல்லது.

எனவே, இந்நூல் ஆசிரியர், "மானம் இலாக் கொடிய துர்ச்சனர் தமக்கு ஏற்றம் மணியம்" உள்ள ஊரில் வாழ்வதை விடவும் நரகம் இனிமையானது என்றார்.

கல் கேணி என்பது நீர் வளம் அற்ற நிலையைக் குறிக்கும்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...